இப்பல்லாம் சில பேருக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியுறதில்லை. தமிழ்நாட்டுல மட்டும் ஏழு வள்ளல்கள் இருந்தாங்களாம். நம்பவே கஷ்டமா இருக்கு. பாட்டி கர்ணன் கதை சொல்லி வளர்த்தப்ப எல்லாம் நம்ம கிட்ட இருக்கும்பொழுது மத்தவங்களுக்கு தேவைப்பட்டா குடுக்குறது ஒரு கெத்துனு சொல்லியே வளர்த்துட்டாங்க. இன்னிக்கு இருக்குற நிலமைல குழந்தைகளுக்கு இந்த மாதிரியான கதைகள சொல்லி வளக்குறாங்களானே சந்தேகமா இருக்கு. சின்ன குழந்தைங்க மனசுல கூட ஒரு சுயநலம். என் மிட்டாய். என் பொம்மைனு குழந்தைகளோட உலகம் கூட ரொம்ப சுருங்கிப் போச்சு.

போன வாரம் எங்க அலுவலகத்துல இருந்த ஒருத்தருக்கு கொஞ்சம் பணமுடை. அவசரமா குழந்தைக்கு பீஸ் கட்ட பணம் வேணும்னு எங்கெல்லாமோ முயற்சி பண்ணிட்டு இருந்தார். அவரோட நண்பர் ஒருத்தர், இந்தா தாரேன்.. அந்தா தாரேன்னு இழுத்தடிச்சுட்டே இருந்தார். இவரும் அவரைப் போய் பாத்துட்டே இருந்தார். கடைசில ஒரு நாள் உடனே வா நான் உனக்குத் தேவையானத வெச்சிருக்கேன்னு சொல்ல, நம்மாளும் ஆர்வமா கிளம்பி போயிருக்கார். அங்கப் போய் காசு கிடைக்கும்னு பாத்தா, அவரோட நண்பர் ஒரு பெரிய சிரிக்கும் புத்தர் சிலைய வெச்சிருந்திருக்கார்.

”இது என்னத்துக்கு?” நண்பர் கேட்டுருக்கார்.

“சைனால கடை கண்ணில எல்லாம் இந்த சிலையத்தான் வெச்சிருக்காங்களாம். இது வீட்டுல இருந்தா காசு கூரையப் பிச்சுட்டுக் கொட்டுமாம். அதான் உனக்காக வாங்கினேன்” அவரு சொல்லிருக்காப்புல.

”அப்ப காசு?”

“இந்த மாசம் கொஞ்சம் சிரமம் தான்பா”

நம்மாளு பேசாம அந்தப் பொம்மையத் தூக்கிப் போட்டு உடைச்சுட்டு வந்துட்டார். கடனுக்கே இந்த நிலமை. இதுல ஈகை எல்லாம் நடக்கவே நடக்காது.