Latest Entries »

இன்றெல்லாம் கண்ணீர் கட்டுக்கடங்காமல்
கன்னத்தை நனைக்கிறது.
ஆங்கிலப் படத்தில் வருவது போல்
உனைச் சார்ந்த நினைவுகளை மட்டும்
அழிக்க முடிந்தால்
அழித்திருப்பேனா என்பது ஐயமே.

சில நாட்களில் தாயாய்,
எப்பொழுதும் தோழியாய்
சிணுங்குகையில் சிறுமியாய்
தலையில் குட்டித் திருத்துகையில்
ஆசிரியையாய்
இப்படிப் பலவாகவும் இருந்த
உன் நினைவுகளை
எந்த அளவை கொண்டு அழிப்பேன்

ஒரு கோப்பை மது தரும்
ஒரு வித மயக்கமும்
சில நிமிட மறத்தலும்
நிரந்தரமாய் இருந்தால்
நானும் இருப்பேன்.
நான்கு வருட நினைவுகளை
மொத்தமாய் அழித்து
மனதிற்குள் புதைத்து
கண்ணாடி பார்க்கிறேன்.

வெற்று அறை என்னைப் பார்த்து
ஏளன சிரிப்பொன்றை உதிர்த்தது
“உனக்கு யாரும் இருக்கப் போவதில்லை
என்று சொன்னேனே.
எனைக் கடிந்து எனைப் பார்க்காமல்
திரிந்தாயே
இப்பொழுது புரிந்ததா, உனக்காக
நீ கூட இல்லை.
தீயினில் உன்னைச் சுடும் பொழுதேனும்
யாராவது வரக் கூடும்.
பாசத்தால் அல்ல, பரிதாபத்தால்”

கண்கள் துடைத்து, முகமூடி அணிந்து
வெயிலில் புகையிலை பற்ற வைத்தவுடன்
மனதில் வரும் பாடலின் வழி மதி புகுந்து
விடுகிறாய் நீ

உலகத்தின் மிகப் பெரிய பாவியாய் நான்.

Advertisements

tap-repairவீடு மாத்துனப்போ இந்த பிரச்சினை வந்துச்சு.

வீட்டு நிலைமை அவ்வளவு நல்லா இல்லை. அப்பாவோட வியாபாரம் படுத்திடுச்சு. சொந்த வீட்டை வித்து பைசல் பண்ணியும் கடன் குறையல. காசு போயிடுச்சேனு கூட அப்பா அவ்வளவு கவலைப்படலை. ஆனா நல்லா போயிருக்க வேண்டிய வியாபரம் நஷ்டமாயிடுச்சேங்குற கவலை அவரை வேற எந்த வேலையயும் செய்ய விடலை. ஒவ்வொரு நாளும் உக்காந்து எந்த நிமிஷத்துல எங்க தப்பு விட்டோம்னு யோசிச்சு யோசிச்சு அவரோட காலம் செலவழிஞ்சது. அவர் கூட உக்காந்து பழசை அசை போட எனக்கு விருப்பம் இல்லை, நேரமும் இல்லை.

ஆனா ஒரு சின்ன வீட்டுல ஒருத்தரை மட்டும் தனியா விடுறது கஷ்டம். எங்க சொந்த வீடு எட்டு கட்டு வீடு. புது வீட்டுல மூணு ரூம் அப்புறம் ஒரு அடுக்களை. நினைச்சாக் கூட ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம இருக்க முடியாது. இவ்வளவு கஷ்டத்துலயும் எனக்கு எங்க வாடகை வீட்டுல பைப் தண்ணி இருந்ததுதான் ஒரே ஆறுதல். பழைய வீட்டுல பைப் தண்ணி கிடையாது. மோட்டர் கிடையாது. குளிக்கவும், பாத்திரம் கழுவவும் கிணத்துல இருந்துதான் தண்ணி இறைக்கணும். வீட்டுக்கு வெளில இருந்த முனிசிபாலிட்டு குழாய்லதான் குடிக்கவும், சமைக்கவும் தண்ணி பிடிக்கணும். ஷவர்ல குளிக்குறதெல்லாம் கனவுல மட்டும்தான். குடிக்கவும் சமைக்கவும் தண்ணிய பாத்து பாத்து செலவு பண்ணனும்.

அப்பா கவலைப்பட்டுட்டேதான் இருந்தார். ஆனா வீட்டுல உலை பொங்கணுமே!! அதனால நான் ஒரு பிரஸ்ல வேலைக்கு சேர்ந்தேன். பள்ளிக்கூடம் மாதிரியோ காலேஜ் மாதிரியோ வாழ்க்கை சுலபமா இல்லை. பன்னிரெண்டு மணி நேரம் குறுக்குடைய வேலை பாத்தாதான், 75 ரூவா சம்பளம் கிடைக்கும். வளர்ந்தது எவ்வளவு பெரிய தப்புனு அப்போ தான் தெரிஞ்சது. லீவ் கிடயாது. நாலு மணி நேரத்துக்கு ஒருக்க 20 நிமிஷம் ஓய்வு. ஆனா ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நைட் சம்பளம் குடுத்துருவாங்க. ஒரு வாரம் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போயிரும். அதை விட அம்மா கைல அந்தக் காசை குடுக்கும்போது அவங்க பெருமையா சிரிப்பாங்க, அது போதும். பிரியாணி சாப்பிட்ட நிம்மதி கிடைக்கும். பால்காரன், காய்கறிக்காரன் எல்லாருக்கும் கடன் பாக்கி கட்டிட்டு ஞாயித்துகிழமை மட்டும் பயங்கர சாப்பாடு. வாழ்க்கை ஒரு மாதிரி பிடிபட ஆரம்பிச்சுது. ஞாயித்துக்கிழமை மதியம் மட்டும் பாத்திரம் விளக்குறது நம்ம டூட்டி. வேலை மேல, கூட வேலை செய்யுறவங்க மேல இருக்குற கோவத்த எல்லாம் பாத்திரத்து மேல காட்டி முடிச்சா, மனசு லேசாயிடும்.

அப்படித்தான் அன்னிக்கு பாத்திரம் விளக்கி முடிச்சிட்டு, அக்கடானு உக்காந்திருந்தேன்.

“ஏலே”னு அடுக்களைல இருந்து ஒரு சத்தம். அம்மாதான் கூப்பிட்டாங்க. அங்க போனா, குழாயில தண்ணி நூலைப் போல விழுந்திட்டு இருந்தது.

“எப்பவுமே குழாயை இருக்கமா மூடணும், சரியா. ஒழுகுறது தண்ணி இல்லலே.. நம்ம பணம்” போற போக்குல அம்மா சொல்லிட்டு போயிட்டாங்க. அதுல இருந்து என் கண்ணு பூரா குழாய் மேல தான். கிடைக்குறது மாசம் 450 ரூவா. அதுவும் இப்படி ஒழுகிடுச்சுன்னா. நெல்லையப்பர் கோயில்ல இருக்குற ஜோசியக்காரி என்ன ‘ஓட்டகைக்காரா’னு தான் கூப்பிடுவா. எவ்வளவு இறுக்கமா வெச்சாலும் விரலுக்கு நடுவுல ஓட்டை வரத்தான் செய்யுது. அதுல விழுற காசு பத்தாதுன்னு குழாய் வழியாவும் போச்சுன்னா, என்னதான் மிஞ்சும்? அம்மா சொன்னதும் சரிதான். திடீர்னாப்புல கோயில்ல ஒரு திருவிழா வரும், தீர்வை கட்ட வேண்டி வரும். எதுவுமே இல்லைனா சொந்தக்காரன் எவனாச்சும் எறும்பு கடிச்சு செத்துருவான். குழாய் ஒழுகுறதும் நிக்கலை; காசும் கைல நிக்கலை.

காலம் ஓடிச்சு. டிஜிட்டல் பிரிண்டர்ஸ் வந்து எனக்கு பிரஸ் வேலை போச்சு. ஆனா இன்னும் நல்ல சம்பளத்துல வேற வேலை கிடைச்சது. வீடு மாறினோம். ஒவ்வொரு வாட்டி வீடு மாறும் போதும் நாந்தான் முதல்ல போய் பாப்பேன். முக்கியமா குழாய். ஒரு பத்து வாட்டி திருப்பி தண்ணி ஒழுகுதானு பாக்குறது. அப்படியே ஒழுகாம இருந்தாலும், சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டு ஓணர்ட எல்லா குழாயையும் ஒரு தடவை மாத்த சொல்லிருவேன். சில சமயம் கைல இருந்து நானே காசு போட்டிருக்கேன். பையம் இப்படி அரை லூசாயிட்டானேனு அம்மாக்கு கவலை. படட்டும். எங்க அப்பா எந்த இடத்துல எத்தன குழாயை மூட மறந்தாரோ, நான் சம்பாதிச்சதெல்லாம் கடன் அடைக்கவே சரியா போச்சு. ஆனா அம்மா சொன்னது சரிதான். இது வெறும் மூட நம்பிக்கை இல்லை.

எப்பல்லாம் குழாயில தண்ணி ஒழுகுச்சோ, அப்பொல்லாம் எதுனா செலவு. கடைசி வாரம் வரைக்கும் நம்மள சீந்த நாய் இருக்காது, குழாய் ஒழுக ஆரம்பிச்ச உடனே ஒரு சொக்காரன் கல்யாண காசு வாங்க வந்து நிப்பான். வீட்டுக்கு விருந்தாள் வருதானு நான் காக்கா கத்துற வரைக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. காலைல பல்லு விளக்கும் போதே தெரிஞ்சுரும். கடன் கூடயே வளந்ததால தண்ணிய மிச்சம்பிடிக்கவும் காச மிச்சம்பிடிக்கவும் இயல்பாவே வரும். அப்பா அம்மாக்கு தான் சிரமம். அவங்களால நான் டைட்டா மூடின குழாய டக்குனு திறக்க முடியாது. என்னை மாதிரியே டைட்டா மூடலைனா நான் திட்டுவேன். ஒரு வழியா எட்டு வருஷம் உழைச்சு அப்பா பட்ட கடனை எல்லாம் அடைச்சு நிமிர்ந்தா, எனக்கு வயசாயிடுச்சு. கல்யாணம் பண்ணனும். வீடு வாங்கணும். அதுக்கு… லோன் வாங்கணும். செலவே இல்லைனா கூட குழாய் ஒழுகுதானு பாத்தே வயசாயிடுச்சு. எட்டு வருஷ வாழ்க்கையை திரும்பிப் பாத்தா ஒவ்வொரு வீட்டு குழாயும்தான் நினைப்பிருக்கே தவிர அங்க எப்படி வாழ்ந்தோம்னு சுத்தமா நினைவில்லை.

நம்மூரு பொண்ணைத்தான் கட்டினேன். எல்லா கடன் விவரம், சம்பள விவரம் எல்லாம் சொன்ன பின்னாடி “நம்ம வாழ்ந்துடலாம்ங்கனு” நம்பிக்கையோட சொல்லிச்சு. உண்மைய சொல்லணும்னா அது என்னை நம்பி கல்யாணம் கட்டலை. நாந்தான் அவளை நம்பி கட்டினேன். அவங்க பூர்வீக கிராமத்துலதான் கல்யாணம் நடந்தது. பெருசா ஒரு சத்தமும் வராது. காலைல குயில் கூவுறது, மாடு கத்துறது தான். டி.வி சத்தம் கூட பஞ்சாயத்து ஆபீஸ்ல மட்டும்தான். கல்யாணம் முடிஞ்சு சாந்திமுகூர்த்தம்னு சொன்னாங்க. அடுத்த நாள் காலைல கொவிலுக்கு வேற போகணும். சினிமால காட்டுற மாதிரி பட்டுப் புடவைல இவ ரூமுக்கு வருவானு பாத்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்ல. பருத்தி கட்டிட்டுதான் வந்தா. அப்படி இப்படி பேசிட்டு வெக்கமெல்லாம் விட்டுப் போயி வேர்வைல இயங்க ஆரம்பிக்கும் போது தான் அந்த சத்தம் கேட்டுச்சு.. நிப்பாட்டுன உடனே என் பொண்டாட்டி வேற பயந்துட்டா…

“என்னங்க ஆச்சு”

“என்னடி சத்தம் அங்க… எங்கயாச்சும் குழாய் ஒழுகுதோ?”

paarthu

 

நாம் இணைந்திருந்த பொழுது சன்னலின் வெளியே பெய்த மழையோசையை
இன்றைய மழையோசையுடன் என் மனம் ஒப்பிடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

நாம் நடந்து வந்த பாதையில் இருந்த தெருவோர குழந்தைகள் சிரிக்கையில்
என் உதடுகள் என்னையறியாமல் சிரிக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

நாம் சேர்ந்து சென்ற இடங்கள் என் பாதையில் என்றும் குறுக்கிடாமல்
பார்த்துக் கொள்கிறேன்.

நாம் அந்தப் பூங்காவில் நட்டு வைத்த சின்னச் செடி இன்று மரமான பின் கூட
அதன் வேர்கள் தாகத்தில் தவிக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

அன்றும் இன்றும் என்றும் பல நேரங்களில்
சில பெண்களால்.. சில வற்புறுத்தல்களால்
மனம் சலனமடையாமல்
.
.
.
.
பார்த்துக் கொள்கிறேன்

”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கையில், ஒருவர் தொண்டையை செருமினார்.

நல்லது.. யாரோ பேசப் போகிறார்கள். மரணவீட்டில் ஓலத்தைக் கூட சகித்துக் கொள்ளலாம். அதற்காகவே வந்து அழும் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களின் மவுனங்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சாமியானா கட்டிக் கொண்டிருப்பவனை மேற்பார்வை பார்ப்பது போல, கேனில் இருந்து ஆறிப் போன காபியை கப்பில் எடுத்து ஊதி ஊதி குடிப்பதைப் போல ஏதோ ஒரு வகையில், பேசுவதை தவிர்க்கிறார்கள். புதிதாக மரணவீட்டிற்கு செல்கையில் சில பேர் நம் கையைப் பிடித்து, என்னப்பா இப்படி ஆகிடுச்சு என கேட்பர். என்னவோ நாம் தான் காலத்திடம் சொல்லி சுவிட்ச் ஆப் செய்ய சொன்னது போல. சில நேரங்களில் இவ்வாறான வரவேற்புக்கு மவுனம் எவ்வளவோ பரவாயில்லை.

“நம்ம ஏம்ல கிருஷ்ணா ராமாங்கோம். இறந்தது ஐயர்லா” சொன்ன மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. இறந்தவர் என் மாமா.. அவரையே நான் 10 முறைக்கு மேல் பார்த்ததில்லை.

“கொஞ்சம் பேசாம இருக்கீறா? இன்னும் சித்த நேரத்துல காட்டுக்கு போயிருவோம்” குத்த வைத்த மனிதர் பேசினார்.

“அப்போ இவர் வைகுண்டத்துக்குப் போனா பரவாயில்லைங்கீங்க?”

“இப்படி வெட்டிப் பேச்சு பேசதுக்கு சாமி பேரு சொல்றது எம்புட்டோ புண்ணியம்” இறந்தவரின் மகன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அவனும் அழவில்லை. பேசவில்லை. மவுனத்திற்கும் மரணத்திற்கும் என்ன தொடர்போ? பின்னால் தெருப்பையன்கள் சிலர் வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தம்பியும் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இரண்டொரு நிமிடங்களாக அவரைக் காணொம். வேனில் ”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஜீவா படம் எந்தத் தியேட்டர்லலே போட்ருக்கான்?” இந்தக் கேள்வி கேட்ட நபரையும் எனக்குத் தெரியவில்லை.

“ரத்னானு நினைக்கேன்”

”படம் பாக்கப் போறியளோ?” இன்னொருவர் கேட்டார்.

”தெரியலை. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன இருக்கு? கரண்டும் கட் பண்ணிப்புட்டானுவோ பேப்பயலுக. அதான்..”

“மெட்ராசு படம் நல்லாயிருக்குனு பயலுவோ சொன்னானுவோ” சொல்லி முடிக்கையில் காடு வந்திருந்தது. பெரும் பிரயத்தனத்துக்குபின் இறந்தவரை இறக்கி உள்ளே கொண்டு சென்றோம். பல கட்டுப்பாடுகள் விதிகளை சொல்லி எங்களை உள்ளே விடவில்லை. இறந்தவரின் தம்பி இரண்டு பாட்டில் செவன் அப்புடன் வந்து சேர்ந்தார். கொடூரமாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. காட்டுக்குள் போக முடியாமல், மர நிழலில் அமர்ந்திருந்தேன். செவன் அப் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து வந்த இன்னொரு குடும்பத்தினர் வாடகைக் காரில் வந்திருந்தனர். அவர்களுடைய டிரைவர் என்னருகில் வந்தமர்ந்தார். கையில் செவன் அப்பைப் பார்த்ததும், நான் அமர்ந்திருந்த இடத்தை முன்னும் பின்னும் பார்த்தார். வேறு பாட்டில்கள் கண்ணில் படாத துக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

”எல்லாம் அவ்வளவுதான் இல்லை!” மரண வீட்டில் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சில வாக்கியங்கள். வாதம் பண்ண திராணியில்லாததால் அமைதியாக தலையசைத்தேன்.

“என்னாத்துக்கு காசு காசுனு ஓடுறோம். கடைசில சாம்பலாத்தான் போகப் போறோம். என்ன வாழ்க்கையிது?”

“சென்னையில எங்க?”

“பெரியமேடு. சாருக்கு?”

“கொரட்டூர்”

சிறிது நேரம் அமைதியாக இருந்தார். மறுபடி என்ன தோன்றியதோ

“சார்.. நானும் காலைல இருந்து யோசிச்சு பாத்தேன். ஒரு அர்த்தமும் இல்லை சார். கார்ல வந்தவங்க உங்களுக்கு என்ன வேணும்?”

“உங்க கார்ல யார் வந்தானு எனக்கு எப்படித் தெரியும்?”

“கயத்தாறு வர்ற வரைக்கும் சினிமா பாத்துட்டுத்தான் சார் வந்தாங்க. இங்க தெரு திரும்பின உடனே “உன்னை மாதிரி யாரு, எப்படி வரும்”னு ஒரே அழுகை. பெரிய மனுஷன் நிறைய நல்லது பண்ணிருக்காருனு சொல்றாங்க.. ஆனா பாருங்க சொந்தக் காரங்க கூட தெரு முக்குக்கு வந்தாத்தான் அழுவுறாங்க. அவ்வளவுதான் சார். இதுக்குத்தான் நான் சாவு வீட்டு சவாரி எடுக்குறதே இல்லை. பேஜாரு. இப்ப போனாலும் அவ்வளவுதான் அப்புறமா போனாலும் அவ்வளவுதான்”

மீண்டும் தலையை மட்டும் அசைத்தேன்.

“செவன் அப்ல மிக்ஸ் பண்ணிட்டீங்களா சார்? பேசவே மாட்றீங்கோ?”

“சரக்கெல்லாம் வாங்கலை பாஸ். குளிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல”

“அதுவும் சரிதான். எங்க குளிப்பாங்க.?”

“பக்கத்துல குறுக்குத்துறைனு ஒரு இடம் இருக்கு. அங்க போய் குளிச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்”

ஆக வேண்டியவை முடிந்து அனைவரும் திரும்பி வந்தார்கள். மேகம் மெதுவாக இருட்டிக் கொண்டு வந்தது. ஒரு ஷேர் ஆட்டோ போன்ற வாகனத்தின் பின் கதவைத் திறந்து காலைத் தொங்கப் போட்டுக்கொண்டே குறுக்குத்துறை சென்றேன். ரொம்ப நாள் ஆச்சு.

சிறிது சிறிதாக தூறல் போட ஆரம்பித்தது. அனைவரும் ஆற்றை நோக்கி ஓடினோம். டிரைவர் சற்று பின்னால் வந்தார். ஆழம் அதிகம் எனத் தெரிந்ததால் நான் படியில் அமர்ந்து உடல் நனைத்துக் கொண்டிருந்தேன். ஆற்றைப் பார்த்ததும் டிரைவருக்கு ஆவல் பொறுக்க முடியவில்லை போல. துண்டுடன் தண்ணீரில் பாய்ந்தார். ஆனந்தக் கூச்சல் எல்லாம் வந்தது. எங்களுக்கு ஆற்றுக் குளியல் பழகிய ஒன்று. அவருக்கு எப்பொழுதாவது ஒரு முறை கிடைப்பது. சற்று நேரத்தில் கூச்சல் மட்டுமே கேட்டது.

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க”

பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த பீடி வியாபாரி பாய்ந்து சென்று டிரைவரைத் தூக்கி வந்து மண்டபத்தில் கிடத்தினார். மயக்கமெல்லாம் இல்லை. கண்ணில் பயம் மட்டும் இருந்தது.

“என்னாச்சுன்னே தெரியலை. மூச்சே விட முடியலை.”

“எப்பவுமே ஓடுற ஆத்துல நெஞ்சுல அடி விழுற மாதிரி விழுவக்கூடாது. இது உங்க ஊர் ஸ்விம்மிங் இடம் இல்லை கேட்டியளா” பீடி வியாபாரி தலையைத் துவட்டிக்கொண்டு நடையைக் கட்டினார். மெதுவாக நாங்களும், கார், ஆட்டோ நிற்கும் இடத்திற்கு நடக்கத் துவங்கினோம்.

டிரைவர் என்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். உடம்பில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

“பயந்துட்டீங்களா?” நான் கேட்டேன்.

“ஆமா சார்”

“எதை நினைச்சு?”

பேசாமல் படி ஏறிக் காரில் ஏறி அமர்ந்து கொண்டார். நான் மீண்டும் ஆட்டோவின் பின்னால் அமர்ந்து கொண்டேன். மழை வலுப்பெறத் துவங்கியது.

ஆய்தம் மிக முக்கியமான ஒரு தமிழ் எழுத்து. பிற மொழிகளில் இதை இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இதன் மாறுபட்ட உபயோகங்கள் தமிழ் எவ்வளவு முழுமையான ஒரு மொழி என்பதை அழுத்திச் சொல்லும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில், ”ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” அப்படின்னு சொல்லிருக்கு. அதாவது இந்த எழுத்துக்கு பின்னாடி வர்ற வல்லினத்தை மேற்கண்ட ஒலியமைப்புகளில் நுணுக்க ஆய்தம் பயன்பட்டிருக்கணும். 

இதை கேடயத்தில் இருக்கும் மூணு புள்ளிகளுக்கு நேராய் சொல்லுவாங்க. சில தமிழ் பாடப் புத்தகங்கள்லயும் அப்படித்தான் இருக்கு. ஆனா இந்த எழுத்து சங்க காலத்துல இருந்து இருக்கு. சங்க காலத்துல ஆயுதம் என்னும் வார்த்தை வரவே இல்லை. ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் போன்ற வார்த்தைகள்தான் இருக்கே தவிர ஆயுதம்னு எங்கேயும் இல்லை. வேணும்னா இந்த எழுத்து மேல ஆசை இருக்குற யாரோ கேடயம் செஞ்சிருக்கலாம். அதே மாதிரிதான் தாலியும்.

இன்னைக்கு தமிழ் கலாசாரம், பண்பாடு அப்படி இப்படினு கத்துறவங்க கொஞ்சம் அகநானூறு படிச்சா நலம். அகநானூறுனா என்னன்னா “உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்” மேல எங்கேயுமே தாலி, மங்கல நாண்னு எதுவுமே இல்லை. ஆனால் ஊழினால் ஒன்று கூடிருக்காங்க.. ஆனா இந்த தமிழ் வழி வந்த மக்கள் நாம, ரொம்பத்தான் சீன் போடுறோம். 

சில நேரங்கள்ல, ஒரு காலத்துல நம்ம கலாசாரத்துல எவ்வளவு முன்னேறியிருந்தோம்னு நினைக்கு பெருமையா இருக்கு. அதே நேரம் இதெல்லாம் சரியாத் தெரியாம இப்படி பேசுறாங்களேனு கவலையாவும் இருக்கு. தமிழுக்கு ரென் அண்டு மார்ட்டின் போல ஒரு எளிய இலக்கண முறை வேணும்னு சொல்லுறாங்க. அவசியமில்லைங்குறது என் கருத்து. நம்ம குழந்தைகளுக்கு இதை நம்மளே சொல்லித் தரலாம்.

தமிழ் மொழிக்கு எதுக்கு செம்மொழி அந்தஸ்து குடுத்தாங்கனே பாதி பேருக்குத் தெரியலை. 2000 வருஷத்துக்கு முன்னால் எழுதின சங்கப் பாடல்ல “ஏற்றுக உலையை; ஆக்குக சோறை”னு இருக்கு. இப்பவும் அதே வார்த்தையைத் தான் நாம பயன்படுத்துறோம். மெல்லத் தமிழ் இனி சாகும்னு எல்லோரும் சொல்லி பயப்படுறாங்க. எனக்கு அந்தக் கவலை இல்லை சார். அழிக்க வல்ல எல்லாத்தையும் விட தமிழ் மிகப் பெரியது.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

முகலாய மன்னர்களிலேயே எனக்கு பிடித்த பிடிக்காதவர் இவர்தான். காந்தியைப் போல ஹிட்லரைப் போல, ஒரு வரைமுறைக்குள் உட்படாதவர். லவ் ஃபெயிலியர் பார்ட்டி. அதுக்கப்புறம் ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்காம கடமைக்காக பண்ணியவர். மது அருந்தாதவர். இந்தியாவில் முதன் முதலா மூக்கு கண்ணாடி போட்டப் பெருமைக்குரியவர். முகலாயப் பேரரசின் கடைசி சொல்லிக் கொள்ளும்படியான ராஜா.

என்னதான் இருந்தாலும் கலை மேலயும் கலைஞர்கள் மேலயும் தலைவருக்கு இருந்த வெறுப்பு தான் ஹைலைட். மனுஷனுக்கு சுத்தமா பிடிக்காது. பாட்டு பாடினவன், சிலை செதுக்குனவன எல்லாம் செதுக்கி எடுத்துட்டாப்புல. கலை மேல நாட்டமே இல்லாம ஒரு மனுஷனால இருக்க முடியுமா? ஒரு வேளை அப்படி இருந்தா என்ன காரணமா இருக்கும்? எந்தக் கலையுமே சலனம் ஏற்படுத்தாத அந்த மனசு எவ்வளவு ரணப்பட்டு இருக்கும்?

சில நேரங்கள்ல முகலாய சாம்ராஜ்யம் மாதிரி சாபம் வாங்கின சாம்ராஜ்யம் எதுவுமே இல்லைனு தோணும். அப்புறம் கிரேக்க புராணங்கள் படிச்சா அந்த எண்ணம் போயிரும். அம்மாவையும், அப்பாவையும் தம்பியையும் நம்பி கட்டிப்பிடிக்க முடியாட்டி, உலகமே சொந்தமா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? சாபம் வாங்கின ஒரு பிறவி. ஆனா வரலாற்றுல அழிக்க முடியாத பல தடங்களை பதிச்சவர் இந்த ஔரங்ககீப்.

சில நேரங்கள்ல, நம்ம வரலாற்றுப் பாடங்கள் வெறும் வருஷங்களைப் பட்டியலிடும் ஒரு புத்தகமாயிடுச்சோனு எனக்கு ரொம்ப கவலையாயிருக்கு. இந்த மாதிரி மனுஷங்க எல்லாம் நம்ம நாட்டுல இருந்திருக்காங்க. இவனே இங்கிலாந்துல பொறந்திருந்தா ஷேக்ஸ்பியர் இவனைப் பத்தி ஒரு சோக நாடகம் எழுதியிருப்பார். நம்ம நாட்டுல சில நாயகர்களை மட்டுமில்ல பல வில்லன்களையும் மதிக்குறதில்லை. நமக்குத் தேவை ஒரு பொழுதுபோக்கு. அதுக்கு இருக்கவே இருக்கார் துக்ளக்.

என்னமோ போங்க மக்களே.

காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷோட படக்கம்பெனி பேர் இது. படம் எடுக்குறோம் எடுக்குறோம்னு சொல்லுவாரு கடைசி வரைக்கும் படம் எடுக்கவே மாட்டார். ஆனா அவர் பண்ணுற தமாஷ் எல்லாம் ரொம்ப பிரபலம். எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். இப்போ எதுக்கு இதை சொல்றேன்னா… எனக்கும் தெரிஞ்சு ஏகப்பட்ட ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் இருக்கு.

எல்லாம் இந்த நாளைய இயக்குனர் பண்ணுற வேலை. என் கூட சுத்துற பல பேர் குறும்படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு திரியுறாங்க. ரெண்டு மூணு பேர் எடுக்கவும் செஞ்சுட்டாங்க. என்னோட முயற்சி தான் பாதியிலேயே நிக்குது.. எப்பவும் போல. அதுலயும் நான் எழுதின ஒரு கதை படுற பாடு இருக்கே. அந்தக் கதைய எழுதி மூணு வருஷம் ஆச்சு, அப்போல இருந்து இப்போ வரைக்கும் நானும் எடுக்கணும் எடுக்கணும்னு பாக்குறேன் முடிய மாட்டேங்குது.

என்ன பிரச்சினைனா, கதையில ஒரு அழகான பொண்ணு வரணும். ரொம்ப கஷ்டம். அதுலயும் நமக்குத் தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு நடிக்க விருப்பமில்லை. நடிக்கத் தெரிஞ்ச பொண்ணுங்களை நமக்குத் தெரியலை. காசு குடுத்து யாரையாச்சும் நடிக்க வைக்கலாம்னு பாத்தா காசில்லை. கேமராவும் மற்ற உபகரணங்களையும் நமக்கு ஒரு அளவுக்குத் தான் கையாளத் தெரியும். தெரிஞ்ச வரைக்கும் சொதப்பி நடிக்க வந்தப் பொண்ணைத் திரும்பத் திரும்ப வரச் சொல்றதும் அவ்வளவு நல்லா இருக்காது.

அதோட கொடுமை என்னன்னா, என்னால கதைல தெளிவா சொல்ல முடிஞ்ச அளவுக்கு நடிக்குறவங்ககிட்ட சொல்ல முடியுமானும் தெரியலை. ஆனா இந்த வருஷத்துக்குள்ள கண்டிப்பா அந்தக் கதைய எடுக்கணும்னு மட்டும் தோணுது.

வாழ்த்துக்கள் சொல்லுங்க மக்களே.. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.

சின்ன வயசுல ஒருமைப்பாட பத்தி ஒரு பாடு கிளாஸ் எடுப்பாங்க. அதோட உண்மையான அர்த்தம் தமிழ்நாட்டுல ரெண்டு இடத்துல மட்டும்தான் இருக்கு. ஒண்ணு சினிமா தியேட்டர்.. இன்னொண்ணு டாஸ்மாக். டாஸ்மாக் பத்தி எல்லாம் எழுதி தீர்த்துட்டதால, நம்ம சினிமா தியேட்டர் பத்தி பாப்போம். கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. நான் கெட்டா திருநெல்வேலிதான்.

தடுக்கி விழுந்தா தியேட்டர் அப்படிங்குறதுக்கு எங்க ஊர் ஒரு உதாரணமா சொல்லலாம். சில தியேட்டரெல்லாம் எங்கப்பா ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து இருக்கு. பசங்க எல்லாம் வெளில போனோம்னா, ஒண்ணு தின்னுட்டு வருவோம் இல்ல படம் பாத்துட்டு வருவோம்.

திருநெல்வேலி டவுண்ல பஸ் ஸ்டாப் பேரே ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தது. சிவசக்தி தியேட்டர் ஸ்டாப், செண்ட்ரல் தியேட்டர் ஸ்டாப், ரத்னா தியேட்டர் ஸ்டாப், ராயல் தியேட்டர் ஸ்டாப், அருணகிரி தியேட்டர் ஸ்டாப் கடைசில கணேஷ் தியேட்டர் ஸ்டாப். இப்படி ஸ்டாப்கு ஸ்டாப் தியேட்டர் தான். அதனால படம் பாக்குறதுக்கு மட்டும் குறையே கிடையாது. அதுலயும் லீவுக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்கன்னா அவ்வளவுதான், படத்துக்கு போறது ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.

சில படங்கள மறக்க முடியாது, அதே மாதிரி சில தியேட்டர்களை மறக்கவே முடியாது. முருகன்குறிச்சில செல்வம் தியேட்டர்னு ஒண்ணு இருந்தது. அங்க தான் நான் முதன் முதல்ல தனியா படம் பாக்க ஆரம்பிச்சேன். கார்த்திக் நடிச்ச பிஸ்தானு ஒரு படம். அதைதான் தனியா முதன் முதல்ல பாத்தேன். அதுக்கு முன்னாடி படத்துக்கு போகணும்னா அண்ணனுக்காகவோ இல்லை அப்பாவுக்காகவோ காத்திருக்கணும்.

முன்னெல்லாம் இண்டெர்வெல் அப்போ உள்ளயே முறுக்கு, கடலைமிட்டாய் எல்லாம் கொண்டு வந்து விப்பாங்க. இப்ப ஏன் அந்த விஷயமெல்லாம் இல்லைனு தெரியலை. ரத்னா தியேட்டர்லதான் எல்லா ரஜினி படமும் ரிலீஸ் ஆகும். மெஸ்ல வேலை பாக்கும்போது தமிழ் புத்தாண்டுக்கு காலைல டவுண் மார்க்கெட்டுல காய்கறி வாங்கிட்டு வந்துகிட்டிருந்தோம். காலைல மூணு மணி இருக்கும். ரத்னா தியேட்டர் வாசல்ல சரியான கூட்டம். நின்னு நின்னு களைப்பாகி எல்லாரும் அங்கேயே பேப்பர் துண்டு எல்லாம் விரிச்சு படுத்திருந்தாங்க. நாங்க சும்மா ஒரு நிமிஷம் வண்டிய நிப்பாட்ட, கூட வந்த பய சத்தமா “சூப்பர் ஸ்டார்”னு கத்திட்டான். தூங்கிட்டு இருந்தவங்க எல்லாம் சுச் போட்டா மாதிரி எந்திரிச்சு “வாழ்க! வாழ்க”னு கத்த ஆரம்பிச்சுட்டானுங்க. அதுல பாதி பேர் டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாச்சுனு கவுண்டருக்குத் தாவ அங்க ஒரே தள்ளு முள்ளு. நாங்க மாட்டிகிட கூடாதேனு அங்க இருந்து ஒரே ஓட்டம் எடுத்துட்டோம்.

Rathna Theater, Tirunelveli

Rathna Theater, Tirunelveli

இப்போ எப்படினு தெரியலை. 2004 ல பாம்பே தியேட்டர்ல 10 ரூவா டிக்கட் உண்டு. செவ்வாய்கிழமை மட்டும் மின்சார வாரியம் பாளையங்கோட்டைல மதியம் கரண்ட் கட் பண்ணிடுவாங்க. பாம்பே தியேட்டர் 10 ரூவா டிக்கட் கவுண்டர்ல போய் நிக்க, பயங்கர சைக்கிள் பந்தயமே நடக்கும். 10 ரூவா டிக்கட், ரெண்டு ரூவா சைக்கிள் பாஸ், 3 ரூவா சம்சா, சந்தோஷமா ஒரு மதியம் கழிஞ்சுடும். இப்படி சினிமா தியேட்டர் பத்தி பலப் பல நினைவுகள்.

Bombay

முதல்ல எங்க ஊர்ல மூடின சினிமா தியேட்டர் செல்வம். சேது, பாரதி, எட்டுப்பட்டி ராசா எல்லாம் முதல் ரவுண்ட்ல நல்லாவே போகலை. செகண்ட் ரவுண்ட் செல்வம் தியேட்டர்ல எடுத்துதான் அந்தப் படம் எல்லாம் பயங்க ஹிட் ஆகி ஓடிச்சு. அங்க கார்த்திக் படம் எல்லாமே எடுப்பாங்க. உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, கோகுலத்தில் சீதை எல்லாம் அங்கதான் பாத்தேன். மூடினப்போ ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு. இப்போ ஊர்க்கு போகும்போது ராயல் டாக்கீஸ் மூடிட்டதா சொன்னாங்க. ராயல் டாக்கீஸ் மறக்க முடியாத ஒரு தியேட்டர்.

நாங்க பதினொண்ணாம் கிளாஸ் படிக்கும் போது பல கல்சுரல்ஸ் அப்படி இப்படினு கலந்துகிட்டு, பல ஸ்கூல் பசங்க கூட பழக்கமாச்சு. இப்ப மாதிரி அப்போ செல் போனெல்லாம் கிடையாதுல்ல. பஸ் ஸ்டாப்ல பாத்துகிட்டாதான் உண்டு. ஆனா அந்த குறிப்பிட்ட வருஷம் மட்டும், எந்த ஸ்கூல் பையன வேணும்னா ராயல் தியேட்டர்ல பாக்கலாம். அங்கத்தான் “துள்ளுவதோ இளமை” படம் ரிலீஸ் ஆச்சு. டைரக்டர், நடிகர் எல்லாம் யாருன்னே தெரியாது.. பாட்டெல்லாம் சரியான ஹிட். அதனால பசங்க முதல் நாளே படத்துக்கு போயாச்சு. போயிட்டு வந்தவங்க முகத்துல ஈயாடலை.. முக்கியமா அங்க காலைல ஷோவுக்கும் மதியம் ஷோவுக்கும், அந்தப் படத்துக்கு பொண்ணுங்களுக்கு டிக்கட் குடுக்க மாட்டாங்க. அதனால தியேட்டர் பூரா எங்க அராஜகம் தான். ஒரு காலத்துல ஹரிதாஸ் படம் 3 வருஷம் ஓடின தியேட்டர் அது. போஸ்டர் அடிச்சு ஓய்ஞ்சு போயி சிமெண்டுல செதுக்கியே வெச்சுட்டாங்க. இப்போ தியேட்டரே இல்லை.

இதையெல்லாம் மனசுல வெச்சு, ஒன்பது குழி சம்பத் படக்குழுவினர், திரையரங்க தினம்னு ஏப்ரல் 18அ கொண்டாடுறாங்க. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். உங்களுக்கும் திரையரங்கம் சம்பந்தமா எதுனா நினைவுகள் இருந்தா 16ம் தேதிக்குள்ள எழுதி இங்க பதிவு பண்ணுங்க. பரிசுகள் காத்திருக்கு.

9780670087013

 

ரொம்ப நாளா இந்த மாதிரி புத்தகம் வாங்கணும்னு ஆசை. புத்தகம் வர்றதுக்கு முன்னாடியே அவுட்லுக் ட்ராவலர்ல இந்தப் புத்தகத்தோட ஒரு பகுதி வந்துடுச்சு. படிச்சுப் பாத்து அன்னிக்கே முடிவு பண்ணது வாங்கணும்னு. இப்போதான் அமைஞ்சது. ஸ்கூல்ல வாத்தியாருங்க கூட பிக்னிக் போன அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். அங்க போகாத, இங்கப் போகாத, அங்க நிக்காதனு அவங்க பண்ணுற அலப்பறையே ஒரு தினுசா இருக்கும். படிச்சு முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சு, அடுத்த ஊருக்கு பஸ் இத்தனை மணிக்கு, அதுக்குள்ள அங்க போகணும்னெல்லாம் டென்ஷனே இல்லாம ஊர் சுத்துவோம் பாருங்க அதுதான் சுகம்.

ஆனா இந்த புத்தகத்தை எழுதின ஸ்ரீநாத் பெரூர் கொஞ்சம் வித்தியாசமானவர் போல இருக்கு. இந்தியா பூரா பேக்கேஜ் டூர்ல சுத்தியிருக்கார். அதுதான் “If it’s Monday It must be Madurai” அருமையான வகையான டிராவல். பேக்கேஜ் டூர்னா நமக்கு மட்டும் திட்டம் போட்டும் டிராவல் கம்பெனில அனுப்புவாங்களே அது மாதிரி இல்லை. ஒரு குருப்போட சேர்ந்து ஊர சுத்திப் பாக்குறது.

முதல் அத்தியாயமே நம்ம ஊர் தான். சென்னை டு கன்னியாகுமரி பத்து நாள் டூர். எப்படி நம்ம ஊர்க்காரங்க மட்டுமில்லாம, பல மாநிலத்துக்காரங்களும் இந்த டூரை எடுக்குறாங்க, அதிகமா யார் வர்றாங்க. அவங்க மத்தவங்களை எப்படி நடத்துறாங்க, அவங்க எப்படி நடந்துக்குறாங்கனு எல்லாம் ரொம்ப சுவையா எழுதியிருக்கார். தஞ்சாவூர்ல ஒரு மாளிகைய ஹோட்டலா மாத்தி வெச்சிருக்காங்க. அங்க தங்கினா பாத்ரூம்லயே கபடி விளையாடலாம் போன்ற அதிமுக்கியமான் விஷயங்களைப் போற போக்கில சொல்லிட்டு போயிடுறாப்புல. சில சம்பவங்களைப் படிக்கும் போது நானும் தலை ஆட்டிகிட்டேதான் படிச்சேன்.

அடுத்து ஐரோப்பிய பயணம். இங்கயும் கூட்டத்தோடதான். பல மாநிலங்கள்ல இருந்து வந்த மக்கள் முதல் முறையா ஐரோப்பாவை எப்படிப் பாக்குறாங்க. அவங்களுக்கு எதெல்லாம் ஒத்துப் போச்சு, எதெல்லாம் ஒத்துப் போகலை. எப்படி 40 ரூபா கட்டி பாத்ரூம் போக மனசில்லாம 10 மைலுக்கு கால் மேல கால் போட்டு உக்காந்திருந்தாங்க, எப்படி சில ஆர்வகோளாறு, டூருக்கு முன்னாடியே விக்கிப்பீடியால எல்லாத்தயும் படிச்சுட்டு கைடுக்கு மொக்கை குடுப்பாங்க. ஐரோப்பாவோட கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட முக்கியமான இடங்களை எல்லாம் விட்டுட்டு சும்மா போட்டோ எடுக்கக் கூடிய இடத்துக்கு மட்டும் போயிட்டு வந்தாங்கனு ரொம்ப விலாவரியான விவரணைகள்.

இவரோட உஸ்பெகிஸ்தான் பத்திய கட்டுரை ரொம்ப முக்கியமானது. நாளொரு சாதா ரேப் பொழுதொரு கேங் ரேப்னு போயிட்டிருக்குற நம்ம ஊர்ல, யாராவது தாய்லாந்து போறேன்னு சொன்னாலே ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்குறாங்க. ஆனா விவரம் தெரிஞ்சவங்க இப்போ தாய்லாந்தெல்லாம் போறதில்லை. உஸ்பெகிஸ்தான் தான் போறாங்க. அங்க இதை ஒரு மிகப்பெரிய தொழிலா அங்க இருக்குற மாபியாவும், டூர் ஆப்பரேட்டர்களும் பயன்படுத்திகுறாங்க. சில சமயங்கள இந்திய ஆண்களோட மனநிலைய புரிஞ்சுக்கவே முடியுறதில்லை. தன் நாட்டுல கூட தன்னை சேர்ந்த பொண்ணுங்க மட்டும் உருப்படியா இருக்கணும், மத்தவங்க எல்லாம் தாசியா இருக்கணும்னு நினைக்குற சில பேர், உஸ்பெகிஸ்தான் போனா என்னவாகும்? பெண்களை மதிக்குறத பத்தியும், நம்மாட்கள்க்கு வெளிநாட்டுல இருக்குற கெட்ட பேர் பத்தியும் படிக்க படிக்க ரொம்ப கோவம் வருது. எனக்கு உஸ்பெகிஸ்தானைப் பத்தி தெரிஞ்சதெல்லாம் தஷ்கண்ட் அக்ரிமெண்ட் தான். அங்க இருக்குற சாஸ்திரி மெமோரியலுக்கு போகக் கூட நம்மாள்கள் டைம் வேஸ்ட்னு நினைக்குறாங்கங்குறதைப் படிக்கும் போது.. விடுங்க என்னத்தை சொல்லி என்னாகப் பொகுது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுவாரசியமா முடிக்குறார் ஸ்ரீநாத். அங்கதான் அவர் ஒரு பயண எழுத்தாளர்/பத்திரிக்கையாளர்னு பளிச்சினு தெரியுது. இந்த மாதிரி சொகுசுப் பயணத்துக்கு மட்டும் தான் இவர் போவாரானு பாத்தா இல்லை, தாராவி குப்பத்து டூர், கபீர் நினைவு இசைபயணங்கள்னு பக்கத்துக்கு பக்கம் சுவாரசியம்.

முக்கியமா, இவர் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றதைப் பத்தியான ஒரு அத்தியாயம் வருது. அதைப் பத்தி அதிகம் சொல்ல விரும்பலை. எப்படி பல சமயங்கள்ல பிரயாணம் பண்ணும் போது, போட்டோ எடுக்கவும், முக்கியமான விஷயங்களைக் குறிச்சு வைக்கவும், அடுத்த இடத்துக்குப் போக பஸ்ஸோ டிரெயினோ பிடிக்க ஓடுறதையுமே நம்ம பண்ணுறோம்னு இந்தப் புத்தகம் ரொம்ப சிந்திக்க வைக்குது. அதுவா பயணம். நம்ம நாமளே தொலைக்கணுமில்லையா, நாம யாரு, நமக்கு என்ன வேணும்னு கண்டுபிடிக்கணுமில்லையா, இதையெல்லாம் நம்ம பண்ணுறோமா? ஏன் பண்ணுறதில்லை? பண்ணா வாழ்க்கை எப்படி மாறலாம்னு ரொம்ப அழகா சொல்லியிருக்கார்.

இப்பல்லாம் நான் பாக்குற ரெஸ்யூம்கள்ல பாடல் கேட்பது, புத்தகம் படிப்பதைத் தவிர பொழுதுபோக்குகள் கட்டத்துல பயணமும் சேர்ந்திருக்கு. உண்மையான பயணம் செல்ல விரும்புறவங்க இதை ஒரு தடவை படிச்சுக்குறது நலம். ஒரே இடத்தை ரெண்டு தடவை பாக்க முடியும்னா வேண்டாம்னா இருக்கு?

சில நாட்கள் நான் உன் கண்களில் தொலைந்திருந்தேன்.

அந்த அழகிய கரு உலகத்தில் எனக்கான வெளிச்சங்கள்

எனக்கே எனக்கு மட்டுமான உலகம்

நமக்கே நமக்கு மட்டுமான கனவுகளுடன்.

 

நீ சிரிக்கையில் உன் இதழுக்கு முன் உன் கண்கள் சிரிக்கும்

நீ என் கண் பார்த்துப் பேசுவது எனக்கு பிடிக்கிறது என்றாய்

யசோதைக்குப் பின் உலகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால்

அதைத் தவிர வேறு எதைப் பார்க்கத் தோன்றும்.

 

என் பிறந்தநாளுக்கு  திடீரென சென்னை வந்து

தூங்காத கண்களுடன் காலையில் முதல் முத்தம் தந்தாய்

குறும்பும் தூக்கமும் கலந்த உன் கண்கள்

அந்தப் பெர்முடா முக்கோணத்தைவிட ஆழமானது, ஆபத்தானது.

 

காதலில் மிதந்து, கலவியில கலந்த முதல் நாளில்

உன் கண்களில் சங்கடத்தைப் பார்க்க வேண்டுமோ என பயந்து திரும்பிப் படுத்தேன்

எல்லாம் உனக்குத்தானடா எனச் சொன்ன பொழுது

உன் கண்களை என் கண்ணீர் மறைத்து விட்டது.

 

அம்மா தற்கொலை பண்ணிப்பாங்க

தங்கைக்கு வரன் கிடைக்காது

அப்பாவால தெருவுல நடக்க முடியாது

எனக்கு வேற வழி தெரியலை; சரி சொல்லிட்டேன் என நீ சொல்ல

உன் கண்களில் ஒரே ஒரு துளி கண்ணீர் தானடி எதிர்பார்த்தேன்.

 

கடைசி வரை அதை நான் பார்க்கவில்லை.

கண்களில் கனவைத்தான் காண முடியும்

உலகத்தை அல்ல என சொல்லி சென்று விட்டாய்.