தி டெர்ரர் லைவ்

மன்னிக்குறவன் மனுஷன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்னு விருமாண்டில கமல் ரெண்டு மூணு தடவை சொல்லிடுவார். அதை வெச்சு எடுக்கப்பட்ட படம் தான் தி டெர்ரர் லைவ். முன்னாடி ஆங்கிலத்துல தி போன் பூத்னு ஒரு படம் வந்து சக்கைப் போடு போட்டுச்சு. அதே டெம்ப்ளேட்ல எடுக்கப்பட்ட கொரியன் படம்தான் தி டெர்ரர் லைவ்.

ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல காலைல நிகழ்ச்சி பண்றார் நம்ம ஹீரோ. அப்ப வர்ற ஒரு போன் கால், தான் கட்டுமானத் தொழில் செய்றதாகவும், ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொல்லுது. இது என்னடா வம்பா போச்சுனு நிகழ்ச்சி நடத்துறவர் பேச்சை மாத்த, என்கிட்ட பாம் இருக்கு, பக்கத்துல இருக்குற பாலம் இப்ப வெடிக்கப் போகுதுனு சொல்லுறார் போன்ல வர்றவர். நம்ம ரேடியோ ஸ்டேஷன்காரர் இதை நம்பாம கால் கட் பண்ண அடுத்த நிமிஷம் பாலத்துல பாம் வெடிக்குது.

ஏற்கனவே ராத்திரி அர்னாப் மாதிரி டிவி ஷோ பண்ணிட்டு இருந்தவர்தான் நம்ம ரேடியோ நிகழ்ச்சி நடத்துறவர். நியூஸ் ரிப்போர்ட் பண்ண காசு வாங்கினதா சொல்லித்தான் அவரை ரேடியோக்கு அனுப்பியிருப்பாங்க. இப்படி ஒரு போன்கால் தான் தன் வாழ்க்கைய மாத்த போகுதுனு பழைய பாஸுக்கு போனைப் போட்டு ரேடியோ ஷோவை டீவி ஷோவா மாத்துறாங்க. மறுபடியும் கால் வருது. அந்தப் பாலம் கட்டும்போது மூணு பேர் தவறி விழுந்து இறந்துட்டாங்க, அவங்களுக்கு நிதியும் வரலை, யாரும் ஆறுதலும் சொல்லலை. அதனால நாட்டோட அதிபர் வந்து மன்னிப்புக் கேக்கணும்னு சொல்லுது அந்தக் குரல். பத்தாக்குறைக்கு நம்ம ஹீரோ காதுல வைக்குற ஹெட்செட்ல பாம் வெச்சிடுறாங்க. 90 நிமிஷத்துல என்ன நடக்குது. மறுபடி குண்டு வெடிக்குதா? அதிபர் வந்து மன்னிப்பு கேட்டாரா? இதுதான் கதை.

மேலோட்டமா பாத்தா ஒண்ணுமேயில்லாத கதை தான். ஒரு ஸ்டூடியோ மட்டும்தான் லொக்கேஷன். ஆனா படம் முதல் நிமிஷத்துல இருந்து துவங்கிடுது. எப்படி ஒரு குண்டு வெடிப்போ, இல்லை உயிரிழப்போ ஊடகங்களுக்கு வெறும் டி.ஆர்.பியா மாறிடுச்சுனு முகத்துல அடிக்குற மாதிரி சொல்லிருக்காங்க. ஒரு கட்டத்துல அதிபர் மன்னிப்புக் கேக்க வரப்போறதில்லைனு தெரியுது. ஆனா போன் பேசுறவர் இன்னொரு குண்டை வெடிக்க வைக்கப் போறதா சொல்றாரு. டி.ஆர்.பி ரேட்டிங் நினைச்ச அளவு வரலை. இன்னொரு குண்டு வெடிச்சு மக்கள் இறந்தா பாப்பாங்கனு ஹீரோவோட பாஸ் கொலைகாரனை டெம்ப்ட் பண்ற மாதிரி பேசச் சொல்லுவார். சில விளம்பரத்துக்காகவும் ஒரு பதவிக்காகவும் இப்படி எல்லாமா பண்ணுவாங்கனு தலையே சுத்திடும். படத்தோட பலமே நடிகர்கள் மற்றும் எடிட்டிங்தான். ஒரு டி.வி. ஸ்டேஷன்ல என்ன நடக்கும், எப்படி எல்லாம் நடக்கும். தனக்கு வாய்ப்பு கிடைக்கலைனா அடுத்த ஸ்டேஷனுக்கு எவ்வள்வு சுலபமா மக்கள் தாவிடுறாங்கனு எல்லா ஏரியாலயும் டைரக்டர் புகுந்து வந்துடுறார். இன்னிக்கு நிலமைல நம்ம நாட்ல மட்டுமில்லாம எல்லா நாட்டிலயும் மீடியா ஆளும்கட்சி கைல தான் இருக்கு. அதுல மேல்மட்ட, நடுமட்ட, அடிமட்ட பொடிகள் எல்லாம் நம்ம என்ன பாக்கணும், கேக்கணும்னு முடிவு பண்ணுறாங்கனு நினைக்கும் பொழுது ராமயண, மகாபாரதத்தை தவிர இவங்க டி.வி.ல போடுற எதையும் நம்பக் கூடாது போல இருக்கு.

பல குண்டுவெடிப்புகள் நடக்குது. ஆனா சம்பவத்துக்கு பொறுப்பேத்துகிட்டு ஒரு அதிகாரியோ, இல்லை அதிபரோ வருத்தம் தெரிவிச்சா எல்லா உயிரையும் பொருளையும் காப்பாத்தி இருக்கலாம். செஞ்ச தப்பை ஒத்துக்ககூடாது. இதனால என் பேரனுக்கு பேரன் எலக்‌ஷன்ல நிக்கும் போது பிரச்சினை வரும்னு சுயநலமா சிந்திக்கிற அரசியல்வாதி, அவருக்கு சொம்பு தூக்குற அதிகாரிகள், இதனால ஏற்படுற இழப்புகளைத் தான் படத்துல சொல்லி இருக்காங்க.

ஒரு 90 நிமிஷம் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் நகராம நகம் கடிச்சுட்டே படம் பாக்குறது உங்களுக்கு இஷ்டம்னா இந்தப் படத்தை விட்டுடாதீங்க. முக்கியமா படம் முடிஞ்சப்புறம் நம்ம நாட்டுல இருக்குற பல ஊடகங்களோட இந்தப் படம் ஒத்துப் போறதுனால இதை சீக்கிரமே ரீமேக் பண்ணலாம். ஆனா எந்தக் கட்சி ஆட்சில இருந்தாலும் தடை பண்ணிடுவாங்க. அதனால் நம்ம சப்டைட்டில்ல கொரிய மொழியிலயே பாக்குறதுதான் உசிதம்.