Category: கருத்து


”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கையில், ஒருவர் தொண்டையை செருமினார்.

நல்லது.. யாரோ பேசப் போகிறார்கள். மரணவீட்டில் ஓலத்தைக் கூட சகித்துக் கொள்ளலாம். அதற்காகவே வந்து அழும் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களின் மவுனங்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சாமியானா கட்டிக் கொண்டிருப்பவனை மேற்பார்வை பார்ப்பது போல, கேனில் இருந்து ஆறிப் போன காபியை கப்பில் எடுத்து ஊதி ஊதி குடிப்பதைப் போல ஏதோ ஒரு வகையில், பேசுவதை தவிர்க்கிறார்கள். புதிதாக மரணவீட்டிற்கு செல்கையில் சில பேர் நம் கையைப் பிடித்து, என்னப்பா இப்படி ஆகிடுச்சு என கேட்பர். என்னவோ நாம் தான் காலத்திடம் சொல்லி சுவிட்ச் ஆப் செய்ய சொன்னது போல. சில நேரங்களில் இவ்வாறான வரவேற்புக்கு மவுனம் எவ்வளவோ பரவாயில்லை.

“நம்ம ஏம்ல கிருஷ்ணா ராமாங்கோம். இறந்தது ஐயர்லா” சொன்ன மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. இறந்தவர் என் மாமா.. அவரையே நான் 10 முறைக்கு மேல் பார்த்ததில்லை.

“கொஞ்சம் பேசாம இருக்கீறா? இன்னும் சித்த நேரத்துல காட்டுக்கு போயிருவோம்” குத்த வைத்த மனிதர் பேசினார்.

“அப்போ இவர் வைகுண்டத்துக்குப் போனா பரவாயில்லைங்கீங்க?”

“இப்படி வெட்டிப் பேச்சு பேசதுக்கு சாமி பேரு சொல்றது எம்புட்டோ புண்ணியம்” இறந்தவரின் மகன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அவனும் அழவில்லை. பேசவில்லை. மவுனத்திற்கும் மரணத்திற்கும் என்ன தொடர்போ? பின்னால் தெருப்பையன்கள் சிலர் வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தம்பியும் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இரண்டொரு நிமிடங்களாக அவரைக் காணொம். வேனில் ”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஜீவா படம் எந்தத் தியேட்டர்லலே போட்ருக்கான்?” இந்தக் கேள்வி கேட்ட நபரையும் எனக்குத் தெரியவில்லை.

“ரத்னானு நினைக்கேன்”

”படம் பாக்கப் போறியளோ?” இன்னொருவர் கேட்டார்.

”தெரியலை. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன இருக்கு? கரண்டும் கட் பண்ணிப்புட்டானுவோ பேப்பயலுக. அதான்..”

“மெட்ராசு படம் நல்லாயிருக்குனு பயலுவோ சொன்னானுவோ” சொல்லி முடிக்கையில் காடு வந்திருந்தது. பெரும் பிரயத்தனத்துக்குபின் இறந்தவரை இறக்கி உள்ளே கொண்டு சென்றோம். பல கட்டுப்பாடுகள் விதிகளை சொல்லி எங்களை உள்ளே விடவில்லை. இறந்தவரின் தம்பி இரண்டு பாட்டில் செவன் அப்புடன் வந்து சேர்ந்தார். கொடூரமாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. காட்டுக்குள் போக முடியாமல், மர நிழலில் அமர்ந்திருந்தேன். செவன் அப் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து வந்த இன்னொரு குடும்பத்தினர் வாடகைக் காரில் வந்திருந்தனர். அவர்களுடைய டிரைவர் என்னருகில் வந்தமர்ந்தார். கையில் செவன் அப்பைப் பார்த்ததும், நான் அமர்ந்திருந்த இடத்தை முன்னும் பின்னும் பார்த்தார். வேறு பாட்டில்கள் கண்ணில் படாத துக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

”எல்லாம் அவ்வளவுதான் இல்லை!” மரண வீட்டில் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சில வாக்கியங்கள். வாதம் பண்ண திராணியில்லாததால் அமைதியாக தலையசைத்தேன்.

“என்னாத்துக்கு காசு காசுனு ஓடுறோம். கடைசில சாம்பலாத்தான் போகப் போறோம். என்ன வாழ்க்கையிது?”

“சென்னையில எங்க?”

“பெரியமேடு. சாருக்கு?”

“கொரட்டூர்”

சிறிது நேரம் அமைதியாக இருந்தார். மறுபடி என்ன தோன்றியதோ

“சார்.. நானும் காலைல இருந்து யோசிச்சு பாத்தேன். ஒரு அர்த்தமும் இல்லை சார். கார்ல வந்தவங்க உங்களுக்கு என்ன வேணும்?”

“உங்க கார்ல யார் வந்தானு எனக்கு எப்படித் தெரியும்?”

“கயத்தாறு வர்ற வரைக்கும் சினிமா பாத்துட்டுத்தான் சார் வந்தாங்க. இங்க தெரு திரும்பின உடனே “உன்னை மாதிரி யாரு, எப்படி வரும்”னு ஒரே அழுகை. பெரிய மனுஷன் நிறைய நல்லது பண்ணிருக்காருனு சொல்றாங்க.. ஆனா பாருங்க சொந்தக் காரங்க கூட தெரு முக்குக்கு வந்தாத்தான் அழுவுறாங்க. அவ்வளவுதான் சார். இதுக்குத்தான் நான் சாவு வீட்டு சவாரி எடுக்குறதே இல்லை. பேஜாரு. இப்ப போனாலும் அவ்வளவுதான் அப்புறமா போனாலும் அவ்வளவுதான்”

மீண்டும் தலையை மட்டும் அசைத்தேன்.

“செவன் அப்ல மிக்ஸ் பண்ணிட்டீங்களா சார்? பேசவே மாட்றீங்கோ?”

“சரக்கெல்லாம் வாங்கலை பாஸ். குளிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல”

“அதுவும் சரிதான். எங்க குளிப்பாங்க.?”

“பக்கத்துல குறுக்குத்துறைனு ஒரு இடம் இருக்கு. அங்க போய் குளிச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்”

ஆக வேண்டியவை முடிந்து அனைவரும் திரும்பி வந்தார்கள். மேகம் மெதுவாக இருட்டிக் கொண்டு வந்தது. ஒரு ஷேர் ஆட்டோ போன்ற வாகனத்தின் பின் கதவைத் திறந்து காலைத் தொங்கப் போட்டுக்கொண்டே குறுக்குத்துறை சென்றேன். ரொம்ப நாள் ஆச்சு.

சிறிது சிறிதாக தூறல் போட ஆரம்பித்தது. அனைவரும் ஆற்றை நோக்கி ஓடினோம். டிரைவர் சற்று பின்னால் வந்தார். ஆழம் அதிகம் எனத் தெரிந்ததால் நான் படியில் அமர்ந்து உடல் நனைத்துக் கொண்டிருந்தேன். ஆற்றைப் பார்த்ததும் டிரைவருக்கு ஆவல் பொறுக்க முடியவில்லை போல. துண்டுடன் தண்ணீரில் பாய்ந்தார். ஆனந்தக் கூச்சல் எல்லாம் வந்தது. எங்களுக்கு ஆற்றுக் குளியல் பழகிய ஒன்று. அவருக்கு எப்பொழுதாவது ஒரு முறை கிடைப்பது. சற்று நேரத்தில் கூச்சல் மட்டுமே கேட்டது.

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க”

பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த பீடி வியாபாரி பாய்ந்து சென்று டிரைவரைத் தூக்கி வந்து மண்டபத்தில் கிடத்தினார். மயக்கமெல்லாம் இல்லை. கண்ணில் பயம் மட்டும் இருந்தது.

“என்னாச்சுன்னே தெரியலை. மூச்சே விட முடியலை.”

“எப்பவுமே ஓடுற ஆத்துல நெஞ்சுல அடி விழுற மாதிரி விழுவக்கூடாது. இது உங்க ஊர் ஸ்விம்மிங் இடம் இல்லை கேட்டியளா” பீடி வியாபாரி தலையைத் துவட்டிக்கொண்டு நடையைக் கட்டினார். மெதுவாக நாங்களும், கார், ஆட்டோ நிற்கும் இடத்திற்கு நடக்கத் துவங்கினோம்.

டிரைவர் என்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். உடம்பில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

“பயந்துட்டீங்களா?” நான் கேட்டேன்.

“ஆமா சார்”

“எதை நினைச்சு?”

பேசாமல் படி ஏறிக் காரில் ஏறி அமர்ந்து கொண்டார். நான் மீண்டும் ஆட்டோவின் பின்னால் அமர்ந்து கொண்டேன். மழை வலுப்பெறத் துவங்கியது.

Advertisements

காரின் குளிரில் பாதங்கள் விரைத்து விட்டன. பயணத்தில் படிக்க எனக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரியே இருந்தன. ஒரு பக்கம் கூட புரட்டவில்லை. காரில் ஏறியவுடன் அப்படி ஒரு தூக்கம். இப்படிப்பட்ட காரில் எல்லாம் நம்மையும் ஏற்றிக் கொள்வார்களா என பள்ளிக் காலத்தில் காரின் பின் ஓடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ”அதெல்லாம் மறந்துடு. சாதிச்சாச்சு” மனசு சொல்லியது. இல்லை.. இன்னும் ஒரே ஒரு படி.

புன்னைவயல் கிராமத்தில் கார் திரும்பிய பொழுது பத்து சிறுவர்கள் பின்னால் ஓடி வந்தனர். டி.வி. எல்லாம் வந்த பிறகும் காரைப் பார்க்காதது போல ஒடி வருவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சென்ற வாரம் நாக்கு தள்ள பணம் கட்டி ஐ10 வீட்டிற்கு கொண்டு சென்ற போது மகன் தஷ்வந்த் “என்னப்பா வண்டி இது?? ஆடி இல்லையா?” என சொல்லிக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தது நினைவுக்கு வந்தது.

தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை. வீடு மனைவி மக்கள். இது தான் வாழ்க்கை. சென்ற வாரம் சீரியல் பற்றி டைரக்டரிடம் பேசிக் கொண்டிருக்கையில் துறைத்தலைவர் கூப்பிட்டார்.

“நம்ம வெள்ளிகிழமை ரியாலிட்டி ஷோ இன்னும் 13 வாரத்துல முடியப் போகுது” கவனமாக தலையில் இருக்கும் நான்கு முடிகளையும் அதனதன் இடத்தில் வைத்தார்.

“ஆமா சார், இப்பவே எல்லாரும் யார் ஜெயிச்சானு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்காங்க”

“ஆமா.. நீங்க 13 வாரத்த பத்தி யோசிக்குறீங்க. நான் அடுத்த வருஷத்த பத்தி யோசிக்குறேன்.”

”இப்ப பாட்டு பாடுறாங்க. அடுத்து டான்ஸ். இதைத் தான சார் 5 வருஷமா பண்ணிட்டு இருக்கோம்.”

“இல்லை.. போன தடவையே டி.ஆர்.பி ரொம்ப குறைஞ்சுடுச்சு. அதுக்காகத் தான் ஒருத்தன் காலை எல்லாம் உடைஞ்ச மாதிரி நடிக்க வெச்சோம். ஐ ஹாவ் அன் ஐடியா”

இவர் இப்படிச் சொன்னாலே ஏதோ ஒரு ஆங்கில நிகழ்ச்சியோ இல்லை ஹிந்தி நிகழ்ச்சியோ தமிழில் வரப்போவது உறுதி.

“நாட்டுப்புறக் கலைஞர்களைக் கூட்டி வந்து ஒரு புரோகிராம் பண்ணா என்ன?”

“சார்! பொங்கலுக்கு காலைல அவங்க நிகழ்ச்சி பண்ணாலே எவனும் பாக்க மாட்டான். இதுல யாரு காசு போடுவா?”

“இதை ஒரு ஐ.பி.எல் மாதிரி பண்ணலாம். வாடிப்பட்டி மேளத்துக்கும் தஞ்சாவூர் தவிலுக்கும் போட்டி. அப்படி.”

“சரி சார்!”

“நான் எதுக்கு உங்ககிட்ட இதை சொல்றேன் தெரியுமா? இதை நீங்களே எடுத்து நடத்தணும்னு மேனேஜ்மெண்ட் ஆசைப்படுறாங்க. இன்ஃபாக்ட், இது லேட். பிளான் எடுத்துட்டு வாங்க. ஸ்பான்சர்ஸ் நான் பாத்துக்குறேன்”

அப்போ ஆரம்பித்தது என் பயணம். தமிழ்நாட்டின் மூலை முடிக்கெல்லாம் இசைத் தேடி அலைந்தேன். இளைஞர்களுக்கு சினிமா பாட்டும் திரை இசை சம்பந்தப் பட்ட வாத்தியங்களையும் தவிர எதுவும் தெரியவில்லை. பெரியவர்கள் மட்டுமே ஒரு அர்ப்பணிப்போடு செய்தார்கள். பறை, தம்பட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயில், வில்லிசை, மத்தளம், நாதஸ்வரம் என அவர்களின் வாத்திய வரிசையே என்னை மூச்சு முட்ட செய்து விட்டது.

கல்லூரியில் இருந்து வேலைக்கு புதிதாக சேர்ந்த இருவர் எனக்கு உதவி. ஒருவன் பெயர் கிருஷ், மற்றவன் யோகி. நவயுக இளைஞர்கள். 13 வருடங்களில் எவ்வளவோ மாறி விட்டன. ஐடியா சொன்னவுடன் பல ஆங்கில சேனல்களில் இருந்து நோட்ஸ் எடுத்து செட், பிராப்ஸ் எல்லாம் ரெடி செய்து விட்டனர். அவர்களுக்கு சுத்தமாக சங்கீத ஞானம் இல்லாததால் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க மட்டும் நான். புன்னைவயல் எனது கடைசி ஸ்டாப்.

“இங்க காசி நாடன்னு??” டீக்கடையில் டிரைவர் விசாரித்தார். டீ சொன்ன போது எனக்கும் டிரைவருக்கும் பிளாஸ்டிக் கோப்பையில் வந்தது. ஆளைப் பார்த்து ஜாதி சொல்லத் தெரியவில்லை போல.

“அவரு இப்ப பனை ஏறுரதில்லை. வீட்ல தான் இருக்கணும். தெக்கால போயி கடைசி திருப்பம்” பாலிலிருந்து கண்ணை எடுக்காம்லே பதில் சொன்னார் கடைக்காரர்.

சிறிய வீடு. முன்னால் திண்ணையில் சட்டையில்லாமல் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர். டிரைவர் சென்று உறுதி செய்ததும் நான் இறங்கிச் சென்றேன்.

“என் பேரு திலீப். சென்னைல டி.வி ஆபீஸ்ல இருந்து வரேன். போன் வந்திருக்குமே” எனச் சொல்லி முடிக்கும் முன் கையில் மோர் வந்தது.

“சொன்னாங்க. அவங்க சொன்னது எனக்கு புரியல தம்பி.”

“ஓண்ணுமில்லையா, சென்னைல ஸ்டூடியோ இருக்கும். நீங்க அங்கப் பாடணும். அவ்வளவு தான்”

“சினிமாவா?”

“இல்லீங்க ஐயா. டீவி தான். நீங்க கச்சேரி பண்ணுவீங்கள்ல அது மாதிரி தான்.”

சிரித்தார். ”இங்க கச்சேரி பண்ணியே பல வருசம் ஆச்சு தம்பி. மொதல்ல சினிமா பாட்டுக்காரவுக வந்தாக, பொறவு சினிமா பாட்டுக்கு ஆடினாவ.. இப்பல்லாம் ஒண்ணு ரெண்டும் சினிமால நடிச்சவுகளே வந்து ஆடுதாங்களே. நீங்க சொல்றது நம்ப முடியல.”

”அப்படி இல்லை ஐயா இது. நம்ம மண்ணோட பாட்ட எல்லா ஊரூக்கும் கொண்டு போகணும்னு தான் இதைப் பண்ணுறோம். எனக்காக நீங்க ஒரு பாட்டுப் பாடி காமிச்சீங்கன்னா, அதை ரெகார்ட் பண்ணி எங்க மேலதிகாரிக்கு போட்டு காமிப்போம்.”

கணீர் குரலில் ஆரம்பித்தது பாட்டு. என் அலைபேசியில் பதிவாகத் தொடங்கியது.

காசுமில்லை பணமுமில்லை

கரைச்சலுக்குப் பஞ்சமில்லை

வேலை இல்லை வெட்டி இல்லை

வெட்டி நியாயம் தீர இல்லை

சோறு இல்லை கொழம்புமில்லை

சாதி மட்டும் பெரிசு புள்ள

மானமில்லை ரோசமில்லை

மாண்புமிகு கிராமத்தாரே!!

”பதிவாயிட்டுதுங்களாயா??” என் கையிலிருந்த அலைபேசியை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“பதிவாயிட்டுதுங்க.. ஆனா இந்த மாதிரி இல்லாம எதாவது காதல் பாட்டா..”

”சரிதான் இந்த காலத்து பசங்களுக்கு கருத்து எங்கப் புடிக்குது?”

“அப்படியில்லையா, கிராமம், சாதி, வறுமை எல்லாம் ரொம்ப பழசில்லீங்களா??”

“காதல் மட்டும் என்னவாம்?” ஏளனச் சிரிப்புடன் பாடத் தயாரானார்.

வஞ்சிக் கூந்தல் நெழலுல

நெஞ்சி குழி பொத்தலுல

கஞ்சி மறந்தேண்டி புள்ள கஞ்சி மறந்தேண்டி

காளை மாட்டை கன்னத்தில

கிள்ளிப் போகும் கிளிப்புள்ள

கஞ்சி மறந்தேண்டி புள்ள கஞ்சி மறந்தேண்டி

உள்ளிருந்து மெலிதான ஒருச் சிரிப்பு சத்தம் கேட்டது.

“இந்தப் பாட்டுக்கு வயசு 35. அதான் சிரிக்கா.” எதனாலோ அவர் மீசை நுனி மேலே சென்றது போல ஒரு தோற்றம். “சாப்புடுதியளா??” உள்ளே இருந்து சத்தமும் மீன் குழம்பு வாசமும் வந்தது.

Whatsappல் யோகிக்கு இரு பாடல்களையும் அனுப்பிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். வாழை இலையில் கொள்ளாமல் சோறு வைத்து, மீன் குழம்பையும் அதன் மேல் ஊற்றும் பொழுதே என் வாயில் எச்சில் ஒழுகியது.

“நிலத்தில தண்ணியே இல்ல தம்பி! எனக்கு மட்டும் 35 தென்னை இருந்தது. கீழ தண்ணி இருந்தால்லா மேல வளரும்? கொஞ்சம் கூட இல்லை. அதுக்கப்புறம் தான் பனை ஏறப் போனேன்.”

டிரைவர் ருசியில் திளைத்து விட்டார். சென்னையில் சாப்பிட்ட நாக்கு. புன்னைவயலுக்கு பஞ்சம் வராமல் விடாது.

”சோத்துக்கே இல்லாதப்ப என்ன தம்பி பாட்டும் கூத்தும். காலைல இருந்து ஒரு 12 மரம் ஏறி இறங்கினா தான் வீட்டுக்கு சோறு. அப்ப அலுப்புக்கு பாடுறது தான் பாட்டு.”

“அலுப்புக்கு வேற ஒண்ணும் பண்ணுறதில்லையா?” டிரைவர் கேட்டார்.

“பழக்கமில்லை தம்பி”

கை கழுவி விட்டு வாசலில் வரும் முன்னே யோகியிடமிருந்து தகவல் வந்து விட்டது. காசி நாடன் சென்னை வர வேண்டி இருக்கும்.

“இதப் பாருங்க தம்பி! நான் இதுவரைக்கும் பாட்டுக்குனு யார்ட்டயும் பத்து பைசா வாங்குனதில்லை. இப்ப பனை ஏறக்கூடாதுன்னு வேற தடை போட்டிருக்காங்க. ரொம்ப கஷ்டம். நீங்க பாத்து பண்ணாதான் தம்பி வயிறு நிரையும். எனக்காக கேக்கலை. தோப்பிருக்கும் போது தொங்கட்டானும், பட்டுச் சீலையுமா அலைஞ்சவ, இப்ப ஒத்த சேலையோட வீட்டுல அடைஞ்சு கிடக்கா, அவளுக்காச்சும் எதுனா செய்யணும்.”

“ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூவா தருவோம் ஐயா! நீங்க நல்லா பாடி நிறைய பேருக்கு உங்கள பிடிச்சுப் போச்சுன்னா, கச்சேரிக்கெல்லாம் கூப்பிடுவாங்க. சினிமால கூட பாட வாய்ப்பிருக்கு.”

“அய்யே நமக்கு அது எல்லாம் ஆசை இல்லீங்க. ராஜாவ மட்டும் ஒரு தடவை பாத்திரணும். வேற எதும் வேணாம்”

வெத்தலை முடிந்து கார் ஏறுகையில், கார் வரை வந்தார் காசி நாடன். “ஒரு பத்து நாளைக்கு கண்டிப்பா வேலை இருக்கும்லா? துணி எடுக்கணும் அதான் கேட்டேன்” கையில் அவர் மறுக்க மறுக்க ஆயிரம் ரூபாய் வைத்து விட்டுக் கிளம்பினேன்.

எதிர் பார்த்ததை விட பெரிய துவக்கம். ஊர் முழுக்க கிராமிய வாத்தியங்கள் கேட்கத் துவங்கின. ஊர் கொடைக்குச் செல்லாத இளசுகள் மொபைலில் எங்கள் நிகழ்ச்சியில் பாடியவர்கள் குரல் காலர் ட்யூனாய் ஒலிக்கத் துவங்கியது. மூன்றாம் எபிசோடில் காசி நாடன் பாட வேண்டும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து காரில் வந்து இறங்கினார்.

“என்ன தம்பி, பிளசர் எல்லாம் அனுப்பிட்டீங்க. எனக்கு இது தான் மொத திரிப்பு”

வாசலில் வைக்கப்பட்டிருந்த குளிர்பான கம்பெனி போர்ட் அவர் கண்ணில் பட்டதும் முகம் மாறி விட்டது.

“இவன் இங்க என்ன பண்ணுதான்?”

“அவங்க தான் ஸ்பான்ஸர்”

“அப்படின்னா?”

”நம்ம படம் புடிக்க அவங்க காசு குடுப்பாங்க. பதிலுக்கு நம்ம விளம்பரம் போடணும். அதனால அவங்களுக்கு வியாபாரம் கூடும்.”

“அப்ப எனக்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூவா இவனா குடுக்கான்?”

“அவங்களும்!” அவரைத் தாண்டி ஸ்டூடியோ கேமரா கண்ட்ரோல் ரூமுக்குள் நுழைந்தேன். யாரும் இன்னும் வரவில்லை.

“தம்பிகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” இப்படி ஆரம்பித்தால் எங்கு செல்லும் என எனக்குத் தெரியும், ஸ்டூடியோவை பார்த்து ரேட்டை ரெண்டு மடங்கு ஏத்திவிடுவார்கள்.

“என்ன விஷயம்ணே? காசு முடிவு பண்ணி செக் எல்லாம் போட்டாங்க. இனி மாத்த முடியாது”

“அதில்லை தம்பி. ஊருக்கு போக காசும் உங்க விலாசமும் குடுத்தீங்கன்னா போதும். மாசம் பொறந்ததும் பணத்த அனுப்பிடுதேன்”

”பயப்படாதீங்கண்ணே. நீங்க பாட்டுக்கு உக்காந்து பாடுங்க. நாங்க பாத்துக்குறோம். அரை மணில பழகிடும்”

“பயமில்லை தம்பி. அந்த கலர்  கம்பெனிக்காரன் காசுல எனக்கு சாப்பிடப் பிடிக்கல” கண்ணில் கண்ணீர் எட்டிப் பாத்தது.

“நீங்க சொன்னீங்களே, வியாபாரம் கூடும்னு, அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா, எங்கள மாதிரி கிராமத்துக்கு வருவானுங்க, பாக்டரி போட்டுத் தண்ணி எல்லாம் உறிஞ்சுவானுங்க. என்ன மாதிரி ஊர்ல தோப்புக்காரனா திரிஞ்சவன் எல்லாம் கொத்தனாரா அனுப்புவானுங்க.” அழுதே விட்டார்.

“இப்படி எத்தன பேர் தெரியுமா? எனக்கு மட்டும் ஊரை விட்டுப் போகப் பிடிக்காம அங்கேயே தங்கிட்டேன். இன்னிக்கு காலைல ஸ்டேஷன்ல எங்க ஊர் பண்ணைக்காரன் ஒருத்தன் கூலியா பாத்தேன். காசே வாங்காம என் சாமானெல்லாம் தூக்கி கார்ல வெச்சுட்டு, அண்ணே, நீயாச்சும் நல்லா இருக்கியேனு சிரிக்கான். இதெல்லாம் யாரால?”

“ஐயா! நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கும் காசு தேவை. ஒரு பத்து பன்னிரெண்டு நாள் பொறுத்துகிட்டா, காசோட வீட்டுக்கு போயிரலா. வீட்டம்மாவ நெனச்சுப் பாத்தியளா?”

“அவன் காசுல எனக்கு தண்ணி கூட கழுத்துல எறங்காதுய்யா. எம்மூதிய நான் பாத்துகிடுதேன். எனக்கு கொஞ்சம் ஊர் போக காசு மட்டும் குடுங்கையா”

“இத மாதிரி வாய்ப்பு கிடைக்குமா உங்களுக்கு? எத்தனை பேர் அலையுறான் தெரியுமா டிவில வர? சுளுவா கிடைச்சதால எளப்பமா போச்சோ?” என் குரல் என்னையறியாமல் உயர்ந்தது.

”சரிதான் யா! ஆனா எல்லாம் போக மானம் ரோசம் மட்டும் தான் பாக்கி. அதை 30 ஆயிரம் ரூவாய்க்கு அடமானம் வைக்க முடியாது. நான் வரேன்”

“ஒரு நிமிஷம் இருங்க” என் பாஸை பார்த்து நிலமையை விளக்கினேன்.

“அவங்க தான் மெயின் ஸ்பான்ஸர்ஸ். பேக் தட் ஓல்ட்மேன் ஹோம். வி ஆர் பிராக்டிகல் மென். நோ ஸூடோ ஆக்டிவிஸ்ட்”

காசி நாடனுடம் ஆட்டோ வரைக்கும் சென்றேன். வந்து போன செலவுக்கு 6 ஆயிரம் கையில் வைத்தேன். ஆட்டோவில் ஏறியவர் அவசரமாக இறங்கினார்.

“தம்பி!! தம்பி!” தோளின் பின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். காசி நாடன் கையில் ஒரு தூக்கு வாளியுடன் நின்றிருந்தார்.

“அன்னிக்கு கொழம்புக்கு அள்ளி அள்ளி தின்னீங்களாம். உங்களுக்கு குடுத்து அனுப்பிச்சா. மறந்தே போனேன். மறுக்கா ஊர் பக்கம் வரும் போது பொஞ்சாதி பிள்ளைகள கூட்டிட்டு வாங்க”

ஆட்டோவில் ஏறியவரை வியப்புடன் பார்த்தேன். ஆஃப்டர் ஆல், வி வேர் பிராக்டிகல் மென்.

கம்பராமாயணத்தை நம்ம படிக்க முடியாது. கம்பராமாயணம் பெரிய மனசு பண்ணா நம்ம கைக்கு அது வரும். எங்க அம்மா மேல எனக்கு அப்படி ஒரு பொறாமை இந்த விஷயத்துல உண்டு. எங்க ஊர்ல நெல்லைக் கண்ணன்னு ஒருத்தர் இருப்பார். இருக்கார். அவர் கம்பராமயணத்தைப் பத்திப் பேசினா கேட்டுட்டே இருக்கலாம். கம்பராமாயணம் அவர் சொல்லக் கேட்டா, அது மேல ஒரு பெரிய காதலே வந்திரும். எவ்வளவு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளனோ இல்லை கவிஞனோ இருந்தா, அவன் கம்பன் மாதிரியோ இல்லை பாரதி மாதிரியோ இருக்கணும். அவங்களைப் படிக்குற யாரும் அவங்களை வெளி மனுஷனாப் பாக்க மாட்டாங்க. ஒரு பெரிய கெத்து இருக்குற பிம்பம் எல்லாம் மனசுல வராது. நான் பெருசா கம்பனை படிச்சதில்லை. ஆனா அவனை படிச்சவங்க எல்லோரும், தன் நண்பனாவோ இல்லை, தானாவோ தான் நினைச்சுப்பாங்க.

எனக்கு பாரதி குடுத்த அதே உணர்வை ஒரு வேளை கம்பன் அவங்களுக்கு குடுத்திருக்கலாம். இல்லை அதுக்கு மேலயும் குடுத்திருக்கலாம். எவ்வளவு பாடல்கள். எவ்வளவு உவமைகள்.

எங்க வீடு ஒரு வித்தியாசமான வீடு. எங்கப்பா எப்பவுமே எங்களை வெளில நடக்குற கூட்டத்துக்கெல்லாம் போய் கேட்டு வரச் சொல்லுவார். நமக்கா அது பெரிய கொடுமை. என்னடா ரோட்ல நின்னு யார் பேசுறதையோ கேக்கணுமேனு இருக்கும். வீட்டுக்கு வந்தா மீட்டிங்ல என்ன பேசினாங்கனு வேற சொல்லணும். திராவிட கட்சிகள் மீட்டிங்னா கூட பரவாயில்லை யாரையாச்சும் திட்டுவாங்க. கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்கெல்லாம் போனா அவ்வளவு தான். அப்படி ஒரு வாட்டிக் கேட்டது தான் இந்த கம்பனோட வார்த்தைகள்.

அதாவது, தசரதன் ஒரு நாள் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துகிட்டு இருக்கும் பொழுது அவர் காது பக்கத்துல ஒரு நரை முடி தெரிஞ்சதாம். அப்பதான் சரி நமக்கு வயசாயிடுச்சு, பையன்கிட்ட பொறுப்ப ஒப்படைக்க நேரம் வந்திடுச்சுனு அவருக்கு தோணிச்சாம். இதைக் கேட்டப்போ இருந்து எங்கப்பாக்கு நரை தெரியுதானு பாத்துட்டே இருப்பேன். அவருக்கு ஒரு வேளை நரைச்சுட்டா, அவரை உக்கார வெச்சுட்டு நம்ம வேலை எல்லாம் பாக்கணும்னு தோணிட்டே இருக்கும். நான் கொஞ்சம் மக்குங்குறது அப்பாக்குத் தெரியுமோ என்னவோ, லேட்டாதான் அவருக்கு நரைச்சது.

இன்னொரு விஷயத்தையும் நம்ம இங்க பாக்கணும். ஒரு புலவருக்கு ஒரு நரை முடி கூட இல்லைனு எல்லோரும் கேட்டப்போ, மனசுக்கு பிடிச்ச வேலை, அருமையான மனைவி மக்கள், நல்ல வேலையாட்கள், இதெல்லாம் இருக்கும் போது எனக்கென்ன கவலை. எப்படி நரைக்கும்னு அவர் கேட்டாப்புலயாம். அப்போ தசரதனும் ஆட்சி அதிகாரம் கசக்க ஆரம்பிச்சிருக்கும். பிடிக்காத வேலைய பண்ணறதை விட லைன்ல இருக்குற பயபுள்ளைக்கு குடுக்கலாம்னு தோணிருக்கும்னு அப்புறமா எனக்குப் பட்டுச்சு.

இவங்களை படிக்குறதுல என்ன பிரச்சினைனா, சம்பந்தப்பட்ட நேரத்துல அந்தப் பாட்டு மனசுல வந்துத் தொலைக்கும். அப்புறம் தமிழ் இனிக்க ஆரம்பிக்கும். பக்கத்துல சொல்லி ரசிக்க ஆள் இல்லைன்னா, தனியா சிரிக்க வேண்டி வரும். அப்புறம் ஊரே நம்மளப் பாத்து சிரிக்கும். இந்த தமிழ் புலவர்கள் பண்ற கூத்து கொஞ்சமா நஞ்சமா?

அதே போல, எங்களுக்கு ஊர்ல ஒரு நல்ல நட்பு வட்டம் உண்டு. இங்க இப்பத்தான் ஒரு வட்டம் அமையுது. ஒவ்வொரு தடவை வீட்டைக் காலி பண்ணும் போதும் எங்க அண்ணனுடைய நண்பர்கள் வருவாங்க. எங்களைக்கூட ஒரு வேலை செய்ய விடாம எல்லாத்தையும் அடுக்கி ஏத்தி இறக்கி எல்லா வேலையும் பண்ணுவாங்க. அப்போ அவங்களுக்கெல்லாம் ஒரு நன்றி சொல்லணும்னு கூட எனக்குத் தோணலை.அது என்னவோ அவங்க கடமை மாதிரி அவங்க பண்ணிட்டுப் போயிட்டாங்க. கம்பர் மொழில சொல்லணும்னா

”குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை”.”

இதுல யாரு குகன், யாரு சுக்ரீவன்னு என்னால இப்போ சொல்ல முடியாது. என்னைப் பாத்து குரங்குனு சொன்னியா, அண்ணனைக் காட்டி குடுக்குறவன்னு சொன்னியான்னு சண்டைக்கு வந்துடுவாங்க.

பருவம் வந்த அனைவருக்கும் வருவது காதல். எனக்கும் வந்தது. பிறக்கும் போது எப்படி இறப்பு நிச்சயமாயிடுதோ அதே போல காதலிக்க ஆரம்பிக்கும் போதே பிரிவும் முடிவாயிடுது. சிலருக்கு உடலளவுல, சிலருக்கு மனசளவுல. முதல் வாட்டி அப்படி நடக்கும் போது எனக்கு நெஞ்சுல அப்படி ஒரு வலி. தாங்கவே முடியலை. ஒரு வேலையும் செய்யப் பிடிக்காது. கவுண்டமணி காமெடி பாத்தாக் கூட கடுப்பா இருக்கும். என்ன பண்ண ஏது பண்ணனு தெரியாம, கடுப்புல சுத்திட்டு இருப்பேன். எங்க அண்ணன் என்னை நல்லா புரிஞ்சுகிட்டு தொந்தரவே பண்ணலை. ஆனா 4 வருஷம் கழிச்சு இந்தப் பாட்டை என்கிட்ட சொன்னார் பாருங்க. இதை விட அந்த நிலைமைய யாரால சொல்ல முடியும்.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளும்
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை
எத்தனை உலா? அவை எண்ணும் ஈட்டவோ?

அதாவது, மத்தை வெச்சுத் தயிர் கடையரப்போ, தயிர் நுரைச்சு பாத்திரத்தோட ஒரு பக்க விளிம்புக்கு போயிடுமாம். உடனே மத்து இன்னொரு பக்கம் போய் அதை அப்படியே பாத்திரத்துக்குள்ள தள்ளிடுமாம். அதே மாதிரி உடலாகிய பாத்திரத்தை, நினைவுகளாகிய மத்து கடையுறப்போ, உயிர் போகவும் போகாம உள்ளையும் நிக்க முடியாம படுமே ஒரு கஷ்டம்! அப்பப்பா! காதலிச்சவனுக்கும் தயிருக்கும் மட்டுமே தெரிஞ்ச வலி அது.

சும்மாவா சொன்னாங்க, தமிழை ரசிக்க ஒரு ஆயுள் போதாது. இப்ப இருக்குற பசங்களுக்கு அவங்க பேர் தமிழ்ல எழுதத் தெரிஞ்சாலே பெரிய விஷயம். இந்த சிந்தனைகளையும், இந்த உவமைகளையும் அவங்க தெரிஞ்சுக்காமலே போற வாய்ப்பிருக்குனு நினைக்கும் போது மறுபடி மனசுல மத்து கடையுது.

எல்லோர் வாழ்விலும் பெண்கள் இருக்கிறார்கள். அம்மாவாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய், மனைவியாய், இன்னும் பலவாக. அவ்வாறான பெண்களின் அனைத்துக் கூறுகளையும் நம்மால் அறிய முடியுமா? உதாரணமாக, என் தங்கையை எனக்கு தங்கையாய் மட்டுமே தெரியும். அவள் மணமான பின் எவ்வாறான மனைவியாய் இருப்பாள் எனவோ, இல்லை எப்படிப்பட்ட தோழியாய் இருப்பாள் எனவோ என்னால் முழுவதுமாக அறிய முடியாது. என்னதான் நான் நினைத்தாலும் அவளிடம் கேட்டறிந்தாலும் எதோ ஒன்று குறையும்.

அவ்வாறாக, ஒரு பெண்ணின் அனைத்துக் கூறுகளையும் பிரித்துக் காட்டியது சுமித்ரா என்ற நாவல். சுமித்ரா எனும் 38 வயதுப் பெண் இறந்து போகிறாள். சற்றும் தகவலின்றி மரணம் அவளை அணைத்துக் கொள்கிறது. அவளுடன் வாழ்ந்த அனைவருக்கும் அவளை எரிக்கும் வரை அவளுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இவ்வளவுதான் நாவல். மலையாளத்தில் கல்பெட்டா நாராயணன் எழுதிய ”த்ர மாத்ரா (அவ்வளவுதான்)” என்ற நாவல், தமிழில் சுமித்ராவாக கே.வி. ஷைலஜா அவர்களின் கைவண்ணத்தில் வெளி வந்திருக்கிறது.

முதல் அத்தியாயத்திலேயே சுமித்ரா இறந்து விடுகிறாள். பின்பு அவள் மற்றவர்களுக்கு விட்டுச் சென்ற நினைவுகளே நாவலாக நீள்கின்றன. அவளது விருப்பு வெறுப்புகள், பாச நேசங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் பிற கண்களின் வாயிலாக காணும் பொழுது நமக்கு தெரிந்த பெண்களை நமக்கு எவ்வளவு தூரம் தெரியும் என நம்மில் கேள்விகள் எழுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தில் மரணத்தைப் பற்றி வரும் ஒரு பத்தி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு துக்க வீட்டுக்குள் நாம் செல்லும் பொழுது நம் மனது நினைக்கும், ஆனால் வாய் சொல்ல மறுக்கும் விஷயங்களை தயவு தாட்சணியமின்றி எழுதித் தள்ளியிருக்கிறார். மரணம் போலவே இரக்கமில்லாத ஒரு நடை அந்தப் பத்திக்கு மேலும் வலுக்கூட்டுகிறது.

அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரிய அன்பின் அலைகள் நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.

வயநாட்டில் வாழ்க்கைப்பட்ட, ஒரு சிறு பெண்ணினது வாழ்க்கைக் கதை என்னதான் சுவாரசியமாக இருக்கும் என மக்கள் நினைக்கலாம். ஆனால் என்னுடையதும் உங்களுடையதும் போல சுமித்ராவின் வாழ்வும் மிக யதார்த்தமான, சுவாரசியமிக்க ஒரு பயணம் தான். ஒரு பெண்ணாய், தோழியாய், மனைவியாய், தாயில்லாத தந்தை உடல் நலம் குன்றிய பையனுக்கு ஒரு பெரியம்மா போல, யாரும் அற்ற ஒரு கிழவருக்கு சேவகியாய் எல்லாரும் எடுக்கும் அவதாரங்களை அவள் எடுத்திருக்கிறாள். ஆனால் கல்பெட்டா நாராயணனைப் போல் நமக்கு யாரும் அழகிய உரைநடை எழுதுவது தான் சிரமம்.

எவ்வளவோ அன்பைக் குடுத்தாலும், அவளிடம் அன்பையும் பிறவற்றையும் வாங்கியவர்கள் மீண்டும் அவள் பூதவுடலிடமும் ஏதோ தேடுகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்பில்லை எனினும். அம்மாவை இழந்த புருசு அம்மாவையும், யாரும் அற்ற பெரியவர் ஒரு மகளையும் அவள் இறந்த பின்னும் தேடுகிறார்கள். பெண்கள் வாழ்வே இப்படித்தான். எப்போதும் அவர்களிடம் நாம் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களும் குடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தீர்ந்து போனாலும். சுமித்ராவின் வாழ்வின் ரசனைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது நாராயணன் இப்படிச் சொல்கிறார். அவளுக்கு வீட்டை விட நெல் கொட்டி வைக்கும் பழங்கலம் இஷ்டம்.

காந்தியை அல்ல நேருவை, நசீரை அல்ல மதுவை, ஜேசுதாசை அல்ல ஏ.எம் ராஜாவை, சோறல்ல பொரியலை, கஞ்சியல்ல அதன் தொடுபொருளைப் போல, வீட்டையல்ல பழங்கலத்தைத் தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும்

இதைப் படித்து முடிக்கும் பொழுதே பழங்கலத்தை அவள் எவ்வாறு நேசித்தாள் என நமக்கு புரிந்துவிடும்.

தாயாய், தாரமாய், தங்கையாய், அக்காவாய் இருந்தாலும் உயிர் போனபின் அது வெறும் பிணம்தான். இது அனைவருக்குமே தெரியும். செய்தி அறிந்தவுடன் ஒருவராய், ரெண்டு பேராய், கூட்டமாய் வந்தவர்கள், வெயில் ஏற ஏற பொறுமை இழந்து இதை எரித்தால் வேலை முடிந்து செல்லலாமே என யோசிக்கத் துவங்குவார்கள். துவங்குகிறார்கள். எரிக்கும் வரைக்கும் அவளைப் பற்றியும் அவளிடமும் இருந்த நினைவுகள் எரியும் பொழுதே கரைந்து அனைவரும் தத்தமது வேலைகளை கவனிக்க துவங்குகிறதாக முடிகிறது நாவல்.

நாவலை முடித்து விட்டு ஒரு 5 விநாடி அப்படியே அமர்ந்திருந்தேன். பின் முதல் பக்கத்தை மீண்டும் வாசித்தேன்.

யக்‌ஷன்: இந்தப் பூவுலகின் மிகப் பெரும் வியப்பு என்ன?

தருமன் : ஒவ்வொரு நாளும் மக்கள் மனித வாழ்வு முடிந்து யமனினி கோட்டைக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இந்த பூலோகத்தில் எஞ்சி இருப்பவர்கள் தங்களுக்கொன்றும் நஷ்டம் இல்லை என்றும், இங்கே நிலையாக தங்கிவிடுவோமென்றும் நினைக்கிறார்கள். இதைவிட வியப்பு என்ன இருக்கிறது?

இப்பொழுது யக்‌ஷனும், தர்மனும் என்னைப் பார்த்து வியந்து கொண்டிருப்பார்கள்.

 

கார்ல ஏறின உடனே நான் சொல்ற முதல் வார்த்தை..”அந்த எப் எம்ம அமத்திட்டு பாட்டுப் போடுப்பா”ங்குறது தான். கார் சாரதி வினு நம்மூர்க்காரப் பையன் தான். “சார்வாளுக்கு எப் எம் மேல அப்படி என்னதான் கோவமோ? சும்மா வந்தாலும் வருவாரு. எப் எம் கேக்க மாட்டார்”னு அலுத்துக்குவான். உண்மை தான். எப்பமோ எப் எம் மேல இருக்குற மோகம் போயிருச்சு.

திருநெல்வேலி நம்ம ஊர். சினிமாவும் சாப்பாடும் தான் நமக்கு மூச்சு. இருவது வயசு வரைக்கும் அப்படித்தான். வெளில போனா ஒண்ணு தின்னுட்டு வருவோம் இல்லை படம் பாத்திட்டு வருவோம். அதனால சினிமாவையும் எங்களையும் பிரிக்க முடியாது. சினிமா பாட்டையும் தான். எங்க வீட்ல ஒரு டூ இன் ஒன் இருந்தது. நான் ரெண்டாப்பு படிக்கையில எங்கப்பா புதுப் பையன் பாட்டு போட்ருக்கான்னு ஒரு கேசட் வாங்கிட்டு வந்தார். ரெண்டு மூணு நாள் விடாம அந்த படப் பாட்டு தான் ஓடிகிட்டு இருந்தது. பக்கத்து தெரு பசங்க எல்லாம் வந்து வாசல்ல நின்னு கேட்டுப் போனானுங்க. அந்தப் படம் ரோஜா.

நாலாப்பு படிக்கையில, எங்கப்ப பெரிய ஸ்பீக்கர் ரெண்டு வெச்சு பிலிப்ஸ் பவர் ஹவுஸ் ஒண்ணு வாங்கிக் குடுத்தார். என் பொறந்தநாளைக்கு குடுத்த காசுல குளிக்க நின்ன துண்டோட கடைக்குப் போய் இந்தியன் படப் பாட்டு வாங்கிட்டு வந்தேன். தெற்கு பஜார்ல. ஒரு வாரத்துக்கு தெருவே அலறிச்சு. காலைல பாட்டு கேட்டு தான் எழுந்திருப்போம். அப்பா வீட்ல இருந்தா பாட்டுக் கேட்டு தான் தூங்குவோம். பழைய இந்திப் பாட்டெல்லாம் தலைகீழ் பாடமா மாடுறத இப்ப பாக்குறவங்க ஆச்சரியமா பாப்பாங்க. ஆனா அதுக்கெல்லம் எங்கப்பா வாங்கிட்டு வந்த எச் எம் வீ தான் காரணம்.

அப்போல்லாம், 1997 தான் சொல்லுதேன், திருநெல்வேலி ஜங்ஷன் ல இறங்கினாலே திடும் திடும்னு அலர்ற காபி கடைங்க தான் கண்ல படும். யார் கடைல பெரிய ஸ்பீக்கர் இருக்கோ, புது பாட்டு போடுதாவளோ அங்க தான் கூட்டம் நிக்கும். அங்க நின்னு பாட்டக் கேட்டுத் தான் ஒரு படம் எங்கூர்ல ஹிட்டா போச்சான்னே முடிவாகும். பக்கத்துலயே பெரிய கேசட் கடை இருக்கும். என்ன பாட்டு வேணும்னாலும் சலிக்காம எடுத்து தருவார் அந்தண்ணன். அங்க தான் பாட்டு பதியக் குடுப்போம். ரெண்டு நாள் காத்திருக்கணும். ஆனா பரவாயில்லை. என்ன பாட்டு வேணும்னு எழுத ரெண்டு வாரம்ல ஆயிருக்கும்.

ஸ்கூல்ல டான்ஸ் போட்டி வந்தா தான் அந்த அண்ணன் பாடு திண்டாட்டம். அங்க நிப்பாட்டி இந்தப் பாட்ட போட்டு, இங்க நிப்பாட்டி அந்தப் பாட்டப் போட்டு, ரொம்ப சிரமப்படுவார். ஆனா திருப்தியா வந்தா எங்க கிட்ட குடுக்கும் போது அவர் முகம் இருக்கும் பாருங்க களையா.. ரசிச்சு செஞ்சார் போல அந்த வேலைய.

எங்க அண்ணன் ஒரு தடவை ஏதோ ஒரு பாட்டை பஸ்ல கேட்டு வந்து ஒரு கேசட் கடைல இருக்க அவ்ளோ புதுப் பாட்டு கேசட்டையும் கேட்டு படத்த கண்டுபிடிச்சு வாங்கிட்டு வந்தப் படம், முதல்வன். வெளியூர்ல இருந்து வந்த எங்க அத்தை மவன் எதையாவது வாங்கி குடுத்துட்டு தான் போவேன்னு சொல்லவும், கேட்டு வாங்கினது உயிரே பாட்டு. எங்களுக்கு முன்னாடி இருந்த தலைமுறை எப்படி இளையராஜாவை கொண்டாடிச்சோ, நாங்க ரஹ்மானைக் கொண்டாடினோம். நடுவுல ரொம்பத் தொல்லைப் பண்ணி இந்திப் பாட்டெல்லாம் கேட்டு வாங்குவோம்.

இப்படி எங்க தேடலுகெல்லாம் எமனா வந்தது தான் இந்த எப் எம். போன தடவை போனப்ப நாங்க பதிவா கேசட் கடை இருக்குற எடத்துல எது எடுத்தாலும் முப்பது ரூவா கடை இருந்தது. அந்தண்ணன் தான் இருந்தார் ஆனா அவர் முகத்துல பழைய களை இல்லை. நாம கேக்கலனாலும் காதுக்குள்ள பாடுற எப் எம் எங்க? முக்கால் மணி நேரம் சைக்கிள் அழுத்தி நண்பன் வீட்டுல உக்கார வெச்சு நம்மளக் கேக்க வெச்ச பாட்டுங்க எங்க?

சேசே எனக்கு எப் எம் பிடிக்காதுங்க.

ரஞ்சிதோட அண்ணனுக்கு எப்படின்னே புரியல முதல்ல. ஓரு புத்தாண்டப்போ தான் அவரோட பிரண்ட் அவர்கிட்ட சொன்னான். “உன் தம்பி தம் அடிக்குறாண்டா.” பேசிப் பாத்தார். ஆனா ரஞ்சித் பிடி குடுத்தே பேசலை. ரெண்டு மூணு வாரம் பேசாம எல்லாம் இருந்து பாத்தார், ஆனா வழக்கம் போல பேசியே கவுத்துட்டான்.

“அண்ணே! தம் அடிக்குறவன் எல்லாம் கெட்டவன் இல்லை. நீங்க கண்ட கண்ட இலக்கியம் எல்லாம் படிச்சுட்டு வந்து நைட் பூரா தூங்கவிடாம பேசிட்டே இருப்பீங்க. நான் கேக்காட்டி கூட நிறுத்துனு அடம் பிடிச்சுருக்கேனா? அப்புறம் ஏன் என் வழியில வர்றீங்க? என்னை நானாவே ஏத்துக்க உங்களால முடியாதா?” அப்படி இப்படினு பேசி சரி பண்ணிட்டான்.

நைட் ஷிப்ட் பாக்கும்போது ஆரம்பிச்சதுனு அண்ணனுக்கு தெரியும். ரெண்டு நாளைக்கு ஒண்ணு, ஒரு நாளைக்கு ஒண்ணுனு இருந்தது, போக போக அதிகமாக ஆரம்பிச்சது. அண்ணன் மறுபடியும் பேச ஆரம்பிச்சார்.

“ரஞ்சித்! ஒரு நாளைக்கு அம்பது ரூபா இதுக்காக செலவு பண்ற. அதைக் கொஞ்சம் குறைச்சீன்னா, மாசத்துக்கு 750 ரூபா லாபம். எவ்வளவு நல்ல விஷயம் பண்ணலாம். நிறைய நல்ல புஸ்தகம் வாங்கலாம். நம்ம ரெண்டு பேரும் சேந்து ஒரு நல்ல ஹோட்டல்ல போய் சாப்பிடலாம். யோசிடா.”

“அண்ணே இன்னும் ஒரு வருஷத்துல புரமோஷன் கிடைச்சிடும்”

“கிடைச்சதும் நிறுத்திடுவியா?”

“இல்லை, நான் தம் அடிச்சு காலி பண்ணது போக நீங்க சொன்னது எல்லாம் பண்ண நேரமும், பணமும் இருக்கும்.”

அண்ணன் அதோட சொல்றதை விட்டுட்டார். வீட்டுல தான் இப்படி ரஞ்சித்துக்கு பிரச்சினைன்னு பாத்தா ஆபீஸ்ல அதுக்கு மேல.

“என்ன தான் மிட்டாய் வாய்ல போட்டாலும் நாத்தம் வருதுடா” பக்கத்துல உக்காந்துருக்குறவன் டெய்லி சொல்லுவான்.

“தள்ளி உக்காந்துக்க போடா”.

என்ன தான் அவசர மீட்டிங்கா இருந்தாலும், இவன் வெளியில போயிருக்கான்னு தெரிஞ்சா, இவனோட மேனேஜர், இவன் வந்ததுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் கூப்பிட்டு பேசுவார். பாவம் மனுஷனுக்கு இந்த ஸ்மெல்லே அலர்ஜி.

கூட வேலை பாக்குறவங்களுக்கும் ரஞ்சித்தோட பதில் இது தான். “நான் தம் அடிக்குறது என்னோட தனிப்பட்ட விருப்பம். நாத்தம் அடிக்குதுனு சொல்றவன் என் கூட பேச வேண்டாம். சுற்றுசூழல் பத்தி பேசுறவன், ஒரு மாசம் சைக்கிள்ல வந்துட்டு அதுக்கப்புறம் என்கிட்ட வந்து பேசு. யாருக்காகவும் என்னால மாற முடியாது.”

சமயத்துல சின்ன விஷயத்துக்கு மத்தவங்க எல்லாம் ரொம்ப ரியாக்ட் பண்ற மாதிரி ரஞ்சித்துக்கு தோணும். ஆனா பெட்டிக் கடைல நிக்குற கூட்டத்த பாத்து மனசு அமைதியாகிடும்.

இன்னைக்கு காலைல அண்ணன் வெளியில கிளம்பும் போது தான் நேத்தே காசு எடுத்துட்டு வர சொன்னது ஞாபகம் வந்தது ரஞ்சித்துக்கு. இப்போ இல்லைனு சொன்னா ரொம்ப டென்ஷன் ஆகிடுவார். புது வருசம் வேற.

“என்னடா, நான் கேட்டது என்னாச்சு.” அண்ணனே வந்துட்டார்.

“அண்ணே! நீங்களே எப்பவோ ஒரு தடவை வெளில போறீங்க. என் டெபிட் கார்ட் எடுத்துக்குங்க. உங்களுக்கு எவ்வளவு தேவையோ செலவு பண்ணிட்டு பாக்கி தாங்க. பிரச்சினையில்லை.”

“நேத்து காசு எடுத்துட்டு வர மறந்துட்டியா?”

“அதெல்லாம் இல்லை. உங்க மேல ஒரு பாசத்துல பண்ணா, இப்படி எல்லாம் சொல்றது நல்லாயில்லை.”

“உனக்கு?”

“நான் எங்கயும் போகலை. என்கிட்ட ஒரு 130 ரூவா இருக்கு. அதைத் தாண்டி எனக்கு எந்த செலவும் இல்லை. நீங்க கிளம்புங்க நேரமாகுது”

அண்ணன் கிளம்புன பத்தாவது நிமிஷம் ஒரு நட்புகிட்டயிருந்து போன்.

“மச்சான், உடனே கிளம்பி திருமங்கலம் வா!”

“என்னாத்துக்கு?”

“நான் கம்ப்யூட்டர் வாங்க போறேன். கொஞ்சம் கூட வா”

சரின்னு வண்டி எடுத்துட்டு கிளம்பி பாதி வழியில போறதுக்கு முன்னாடி, வண்டி முக்க ஆரம்பிச்சுட்டுது. அட சனிக்கிழமை. வண்டிக்கு பெட்ரோல் போடணும். நேரா பங்குக்கு போய் பெட்ரோல் ஒரு நூறு ரூபாய்க்கு போட்டு, நட்பு சொன்ன எடத்துக்கு போய் நின்னா எவனையும் காணம்.

வண்டிய நிப்பாடிட்டு, பெட்டிக் கடைல போய் அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் வாங்கி பத்த வெச்சான். வந்துட்டேயிருக்கேன்னு நட்புகிட்டயிருந்து குறுஞ்செய்தி நடுவுல வந்திருந்தது.

“தம்பி” தோளுக்கு பின்னால ஒரு குரல் கேட்டு திரும்பினான் ரஞ்சித்.

கூப்பிட்டவௌக்கு ஒரு 65 வயசிருக்கும். கையில ஒரு பிளாஸ்டிக் கவர் வெச்சிருந்த்தார். அதுல இருந்த துணி பைக்கு அடங்காம கொஞ்சம் வெளில தெரிஞ்சது. ஒரு கிழிஞ்ச டீசர்ட், பல நாள் அழுக்கேறின வேட்டி. பொதுவா இந்த மாதிரி இதுவரைக்கு கூப்பிட்டவங்க எல்லாம், காசு தான் கேட்டாங்க. ஆனா இவர் கண்ல இருந்த ஏதோ ஒண்ணு இவர் காசுக்காக கூப்பிடலைனு சொல்லிச்சு.

”சொல்லுங்க”

“ரெட் ஹில்ஸ் எந்தப் பக்கம் போகணும்?”

“ரைட்ல திரும்புனா, ஒரு சிக்னல் வரும், அதுக்கு அடுத்தாப்புல ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். அங்க ஏறிக்குங்க.”

“பஸ் இல்ல தம்பி, நடந்து போக வழி சொல்ல முடியுமா?”

“என்னங்க ஊருக்கு புதுசா, இல்லை காமெடி புரோக்ராம் எதுவும் பண்றீங்களா? பத்து மணி வெயில்ல பதினெட்டு வயசு பையன் கூட அவ்வளவு தூரம் நடந்து போக மாட்டான். பேசாம பஸ்ல போங்க.” ரஞ்சித் சொல்லிட்டு இருக்கும் போதே பிரண்ட் வந்துட்டான்.

“மச்சான், வண்டி பஞ்சர்டா, உன் வண்டி எடுத்துட்டு போறேன், டியுப் மாத்தணும்” சொல்லிட்டே வண்டி எடுத்துட்டு போயிட்டான். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும். இன்னொரு தம் வாங்கலாம்னு சொல்லி பாத்தா பெரியவர் அங்கயே நின்னுகிட்டு இருந்தார்.

“இன்னும் கிளம்பலையா நீங்க?”

“தம்பி இன்னும் வழி சொல்லலையே!”

“நாந்தான் சிக்குனேனா இன்னைக்கு.”

“தம்பி எனக்கு வெளியூர். இங்க சென்னைக்கு காலைல தான் வந்தேன். யார்கிட்டயாவது வழி கேட்டா நான் சொல்ல வர்றதைக் கூட கேக்க மட்டேங்குறாங்க. இந்த ஊர்ல எல்லாரும் எங்கேயோ அவசரமா போய்கிட்டே இருக்காங்க. நான் பக்கத்துல போனாலே பிச்சைக்காரன்னு நினைச்சு விரட்டுறாங்க.” சொல்லிட்டு இருக்கும்போதே கண் கலங்கிருச்சு. சில நேரங்கள்ல சென்னை நரகம் தான்.

“இங்க அப்படித்தாங்க. எக்மோர்ல இருந்தே பஸ் இருந்திருக்குமே?”

“காசு இல்லை தம்பி. ரெட் ஹில்ஸ்ல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. அங்க போய் இன்னைக்கு வேலை பாத்தாத்தான் காசு. ஊர்ல தங்கை மகன் டிக்கட் எடுத்து குடுத்தான். மேல காசு கேக்க கூச்சமா இருந்தது. அதான் எக்மோர்ல இருந்து நடந்தே வந்துட்டேன்.”

“என்னங்க நீங்க. இங்க இருக்குறவங்க எல்லாரும் கெட்டவங்க இல்லை. நீங்க கேட்டிருந்தீங்கன்னா யாராச்சும் உதவி பண்ணியிருப்பாங்க. சரி சாப்டீங்களா?”

“அங்க போய் தான் தம்பி. வழி சொன்னா நல்லா இருக்கும்”

“நீங்க வாங்க முதல்ல, நான் வழி சொல்றேன்”பஸ் ஸ்டாப்புக்கு பெரியவரைக் கூப்பிட்டு நடக்க ஆரம்பிச்சான். வாகன நெரிசல் ரொம்ப அதிகமா இருந்தது. ரோட்டைக் கடக்க கையப் பிடிச்சுக் கூப்பிட்டு போகும்போது பெரியவர் அழ ஆரம்பிச்சுட்டார்.

“என்ன சார், ஏன் அழறீங்க”

“தெரியலை தம்பி, என்னமோ இந்த ஊர் கொஞ்சம் பயமா இருக்கு. என் பையன காசெல்லாம் போட்டு படிக்க வெச்சேன். நிலம் எல்லாம் வித்துட்டேன். சென்னைல தான் நாலு வருஷம் படிச்சான். ஊருக்கு வர்ற வழியில பஸ் விபத்துல போய் சேந்துட்டான். பொண்டாட்டி எப்பவோ போய் சேந்துட்டா. கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான்னு நினைச்ச மகனும் போய் சேந்துட்டான். ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்காகத் தான் இந்த வயசுலயும் வேலைக்கு போறேன்.”

“விடுங்க சார். எல்லார் வாழ்க்கைலயும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்யும். நீங்க மனசை விடாதீங்க. நான் பஸ் ஏத்தி விட்டு டிக்கட் எடுக்குறேன். நீங்க போய் வேலைல சேருங்க முதல்ல.”

“தம்பி என்னை எல்லாரும் பிச்சைக்காரன் மாதிரி பாத்தாங்கனு தான் சொன்னேன். நீங்க என்னை பிச்சைக்காரனாவே ஆக்கிடுவீங்க போல இருக்கே!”

“உங்க தங்கை பையனா என்னை நினைச்சுக்குங்க. போதுமா?”

பெரியவர் ரொம்ப நேரம் பேசவேயில்லை. அமைதியா நடந்து வந்தார். அப்போ அப்போ தனக்குத்தானே பேசிகிட்டார். இந்த மாதிரி சமயத்துல எதுவும் பேசவோ கேக்கவே கூடாதுன்னு அண்ணன் சொல்லியிருக்கார். அதனால ரஞ்சித் அமைதியா வந்தான். பஸ் ஸ்டாப்ல ஒரே கூட்டம்.

“ரெட் ஹில்ஸ் பஸ் இங்க தான வரும்?”

“இன்னைக்கு அங்க ஏதோ பிரச்சினை பண்ணிட்டானுங்க. பஸ் போகாதாம். வெள்ளை ஷேர் ஆட்டோல தான் போகணும்.”

ரெண்டு ஷேர் ஆட்டோ 5 ஷேர் ஆட்டோ கூட்டத்த ஏத்திட்டு போச்சு. அடுத்தாப்புல வந்த வண்டில ஏறினப்போ டிரைவர்

“ரெட் ஹில்ஸ் ஒண்டி தான் போகும். முப்பது ரூபா. ஓகேனா ஏறுங்க.”னு கத்திட்டு இருந்தான்.

எவ்வளவு தான் தடவிப் பாத்தும் 25 ரூபா தான் இருந்தது. எப்படி? ஆங் 100 ரூவா பெட்ரோல், 5 ரூவா தம். சே.. இந்த ஆள் கடைக்கு போறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி பாத்திருக்க கூடாதா? பெரியவர்ட்ட சொன்னான்.

“டிரைவர், என்னை 25 ரூவா வரைக்கும் எங்க போகுமோ அங்க இறக்கி விட்டிருங்க.”னு கேட்டார்.

“பெருசு, நீ உக்கார்ற எடத்துல, இன்னொருத்தர் உக்காந்தா, எனக்கு 5 ரூவா கூட கிடைக்கும். அப்படியே நேரா நடந்து போ, 4 மைல்ல வந்த்துடும்”னு சொல்லிட்டு வண்டிய எடுத்துட்டு போயிட்டான்.

முதல் முறையா, யார் மேல எதுக்குனு தெரியாம ரஞ்சித்துக்கு கோவம் கோவமா வந்தது. ஆட்டோக்காரனை கண்டபடி திட்டினான்.

“விடுங்க தம்பி, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. இப்ப பரவாயில்லை. எனக்கு யார்கிட்டயோ பேசணும் போல இருந்திருக்கு. கொஞ்சம் வயசாயிடுச்சுன்னாலே பேச யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க கேட்டீங்க, நான் கொட்டினேன். மனசு இப்ப லேசாயிடுச்சு.  ஆட்டோக்காரன் சொன்ன மாதிரியே நேரா நடந்து போயிடுறேன்.”

எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு டீ கூட சாப்பிடாம நடந்து போன அந்த பெரியவரை பாக்கும்போது, விரலுக்கிடையில இருந்த வாசம் நாத்தமா குமட்டிச்சு ரஞ்சித்துக்கு.

நாங்கள் சந்திக்க நேரும் போதெல்லாம், மழை பெய்திருக்கிறது.

அன்று, மொட்டை மாடியில் நின்று கைகள் நீட்டி காதல் சொன்ன போதும்,

பின்பு, இரண்டு அடி இடைவெளி விட்டு மலர்கள் நிறைந்த பாதையில் நடந்த போதும்,

சென்னை வந்து அவள் செல்கையில் வழியனுப்ப நெல்லை எக்ஸ்பிரஸ் ஜன்னலின் வழி விரல் பற்றிக் கொண்டு இருந்த போதும்,

“வரும்போதே மழைய கூட்டிகிட்டு வருவியா? ” என்று அவள் கேட்ட போதும், மழை மிகவும் பிடித்திருந்தது.

அவள் செல்பேசியில் ஒலிக்கும் நியூயார்க் நகரம் எங்களுக்கும் குளிருக்கும் உடைய தொடர்பை சொல்கிறது என்றே எண்ணினேன்.

.மழைக்காலங்கள் என் வாழ்வில், ஏன் பலர் வாழ்வில் மறக்க முடியாத சில நினைவுகளை விட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. காதல் சொல்லி கண்ணால் பேசி நகரும் போது மேலே விழும் மழைத்துளிக்கு இணையான ஆசீர்வாதம் இருக்கவே முடியாது. சில சமயங்கள் என வாழ்வில் மழை, சில சங்கேத குறியீடுகளை அள்ளித் தெளித்துள்ளது.

பாலோ கோயலோ சொல்வதைப் போல, உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு ஏதோ சொல்லத் துடிக்கின்றன. கேட்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். என் காதல் அவளிடம் துவங்கியது ஒரு மழைக்காலம்.  மழையும் குளிரும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் வீதியில் உலா வந்தன. அப்பொழுது அவள் தன் வீட்டிலுருந்து என்னை பார்க்கும் பொழுது அடித்தது ஒரு சாரல். ஒரு வேளை அந்த சாரல் வராமல் இருந்திருந்தால், அந்தப் பார்வை அவ்வளவு தூரம் என்னை பாதித்திருக்காதோ என்னவோ..

அவள் பாட்டி வீட்டுக்கு அவள் சென்ற போது அவளைப் பார்க்க முடியுமா முடியாதா எனத் தெரியாமல், ஒரு குக்கிராமத்தில் சுற்றிய பொழுது, குடைக்கும் வலிக்காமல், நிற்கவும் நிற்காமல் பெய்த மழை அவளுக்கான என் பதட்டமான தேடலுக்கு துணை நின்றது.

இனி சந்திக்க வேண்டாம், என அவள் சொல்லச் சொல்ல அவளுக்காக பேருந்து நிலையம் ஒடும் போது பெய்த அடைமழையை விட என் மன உணர்ச்சியை சரியாக சொல்ல எதுவாலும், எந்த எழுத்தாலும் முடியாது.

காலங்கள் கடந்து சென்றாலும், கூச்சமில்லாமல் என்னை வாட்டிய மழையும் குளிரும் மீண்டும் என் வாசலில் உலா செல்லும் போது.. சீ சீ எனக்கு மழைக்காலங்கள் பிடிப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.