Category: கதை


”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கையில், ஒருவர் தொண்டையை செருமினார்.

நல்லது.. யாரோ பேசப் போகிறார்கள். மரணவீட்டில் ஓலத்தைக் கூட சகித்துக் கொள்ளலாம். அதற்காகவே வந்து அழும் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களின் மவுனங்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சாமியானா கட்டிக் கொண்டிருப்பவனை மேற்பார்வை பார்ப்பது போல, கேனில் இருந்து ஆறிப் போன காபியை கப்பில் எடுத்து ஊதி ஊதி குடிப்பதைப் போல ஏதோ ஒரு வகையில், பேசுவதை தவிர்க்கிறார்கள். புதிதாக மரணவீட்டிற்கு செல்கையில் சில பேர் நம் கையைப் பிடித்து, என்னப்பா இப்படி ஆகிடுச்சு என கேட்பர். என்னவோ நாம் தான் காலத்திடம் சொல்லி சுவிட்ச் ஆப் செய்ய சொன்னது போல. சில நேரங்களில் இவ்வாறான வரவேற்புக்கு மவுனம் எவ்வளவோ பரவாயில்லை.

“நம்ம ஏம்ல கிருஷ்ணா ராமாங்கோம். இறந்தது ஐயர்லா” சொன்ன மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. இறந்தவர் என் மாமா.. அவரையே நான் 10 முறைக்கு மேல் பார்த்ததில்லை.

“கொஞ்சம் பேசாம இருக்கீறா? இன்னும் சித்த நேரத்துல காட்டுக்கு போயிருவோம்” குத்த வைத்த மனிதர் பேசினார்.

“அப்போ இவர் வைகுண்டத்துக்குப் போனா பரவாயில்லைங்கீங்க?”

“இப்படி வெட்டிப் பேச்சு பேசதுக்கு சாமி பேரு சொல்றது எம்புட்டோ புண்ணியம்” இறந்தவரின் மகன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அவனும் அழவில்லை. பேசவில்லை. மவுனத்திற்கும் மரணத்திற்கும் என்ன தொடர்போ? பின்னால் தெருப்பையன்கள் சிலர் வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தம்பியும் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இரண்டொரு நிமிடங்களாக அவரைக் காணொம். வேனில் ”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஜீவா படம் எந்தத் தியேட்டர்லலே போட்ருக்கான்?” இந்தக் கேள்வி கேட்ட நபரையும் எனக்குத் தெரியவில்லை.

“ரத்னானு நினைக்கேன்”

”படம் பாக்கப் போறியளோ?” இன்னொருவர் கேட்டார்.

”தெரியலை. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன இருக்கு? கரண்டும் கட் பண்ணிப்புட்டானுவோ பேப்பயலுக. அதான்..”

“மெட்ராசு படம் நல்லாயிருக்குனு பயலுவோ சொன்னானுவோ” சொல்லி முடிக்கையில் காடு வந்திருந்தது. பெரும் பிரயத்தனத்துக்குபின் இறந்தவரை இறக்கி உள்ளே கொண்டு சென்றோம். பல கட்டுப்பாடுகள் விதிகளை சொல்லி எங்களை உள்ளே விடவில்லை. இறந்தவரின் தம்பி இரண்டு பாட்டில் செவன் அப்புடன் வந்து சேர்ந்தார். கொடூரமாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. காட்டுக்குள் போக முடியாமல், மர நிழலில் அமர்ந்திருந்தேன். செவன் அப் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து வந்த இன்னொரு குடும்பத்தினர் வாடகைக் காரில் வந்திருந்தனர். அவர்களுடைய டிரைவர் என்னருகில் வந்தமர்ந்தார். கையில் செவன் அப்பைப் பார்த்ததும், நான் அமர்ந்திருந்த இடத்தை முன்னும் பின்னும் பார்த்தார். வேறு பாட்டில்கள் கண்ணில் படாத துக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

”எல்லாம் அவ்வளவுதான் இல்லை!” மரண வீட்டில் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சில வாக்கியங்கள். வாதம் பண்ண திராணியில்லாததால் அமைதியாக தலையசைத்தேன்.

“என்னாத்துக்கு காசு காசுனு ஓடுறோம். கடைசில சாம்பலாத்தான் போகப் போறோம். என்ன வாழ்க்கையிது?”

“சென்னையில எங்க?”

“பெரியமேடு. சாருக்கு?”

“கொரட்டூர்”

சிறிது நேரம் அமைதியாக இருந்தார். மறுபடி என்ன தோன்றியதோ

“சார்.. நானும் காலைல இருந்து யோசிச்சு பாத்தேன். ஒரு அர்த்தமும் இல்லை சார். கார்ல வந்தவங்க உங்களுக்கு என்ன வேணும்?”

“உங்க கார்ல யார் வந்தானு எனக்கு எப்படித் தெரியும்?”

“கயத்தாறு வர்ற வரைக்கும் சினிமா பாத்துட்டுத்தான் சார் வந்தாங்க. இங்க தெரு திரும்பின உடனே “உன்னை மாதிரி யாரு, எப்படி வரும்”னு ஒரே அழுகை. பெரிய மனுஷன் நிறைய நல்லது பண்ணிருக்காருனு சொல்றாங்க.. ஆனா பாருங்க சொந்தக் காரங்க கூட தெரு முக்குக்கு வந்தாத்தான் அழுவுறாங்க. அவ்வளவுதான் சார். இதுக்குத்தான் நான் சாவு வீட்டு சவாரி எடுக்குறதே இல்லை. பேஜாரு. இப்ப போனாலும் அவ்வளவுதான் அப்புறமா போனாலும் அவ்வளவுதான்”

மீண்டும் தலையை மட்டும் அசைத்தேன்.

“செவன் அப்ல மிக்ஸ் பண்ணிட்டீங்களா சார்? பேசவே மாட்றீங்கோ?”

“சரக்கெல்லாம் வாங்கலை பாஸ். குளிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல”

“அதுவும் சரிதான். எங்க குளிப்பாங்க.?”

“பக்கத்துல குறுக்குத்துறைனு ஒரு இடம் இருக்கு. அங்க போய் குளிச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்”

ஆக வேண்டியவை முடிந்து அனைவரும் திரும்பி வந்தார்கள். மேகம் மெதுவாக இருட்டிக் கொண்டு வந்தது. ஒரு ஷேர் ஆட்டோ போன்ற வாகனத்தின் பின் கதவைத் திறந்து காலைத் தொங்கப் போட்டுக்கொண்டே குறுக்குத்துறை சென்றேன். ரொம்ப நாள் ஆச்சு.

சிறிது சிறிதாக தூறல் போட ஆரம்பித்தது. அனைவரும் ஆற்றை நோக்கி ஓடினோம். டிரைவர் சற்று பின்னால் வந்தார். ஆழம் அதிகம் எனத் தெரிந்ததால் நான் படியில் அமர்ந்து உடல் நனைத்துக் கொண்டிருந்தேன். ஆற்றைப் பார்த்ததும் டிரைவருக்கு ஆவல் பொறுக்க முடியவில்லை போல. துண்டுடன் தண்ணீரில் பாய்ந்தார். ஆனந்தக் கூச்சல் எல்லாம் வந்தது. எங்களுக்கு ஆற்றுக் குளியல் பழகிய ஒன்று. அவருக்கு எப்பொழுதாவது ஒரு முறை கிடைப்பது. சற்று நேரத்தில் கூச்சல் மட்டுமே கேட்டது.

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க”

பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த பீடி வியாபாரி பாய்ந்து சென்று டிரைவரைத் தூக்கி வந்து மண்டபத்தில் கிடத்தினார். மயக்கமெல்லாம் இல்லை. கண்ணில் பயம் மட்டும் இருந்தது.

“என்னாச்சுன்னே தெரியலை. மூச்சே விட முடியலை.”

“எப்பவுமே ஓடுற ஆத்துல நெஞ்சுல அடி விழுற மாதிரி விழுவக்கூடாது. இது உங்க ஊர் ஸ்விம்மிங் இடம் இல்லை கேட்டியளா” பீடி வியாபாரி தலையைத் துவட்டிக்கொண்டு நடையைக் கட்டினார். மெதுவாக நாங்களும், கார், ஆட்டோ நிற்கும் இடத்திற்கு நடக்கத் துவங்கினோம்.

டிரைவர் என்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். உடம்பில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

“பயந்துட்டீங்களா?” நான் கேட்டேன்.

“ஆமா சார்”

“எதை நினைச்சு?”

பேசாமல் படி ஏறிக் காரில் ஏறி அமர்ந்து கொண்டார். நான் மீண்டும் ஆட்டோவின் பின்னால் அமர்ந்து கொண்டேன். மழை வலுப்பெறத் துவங்கியது.

Advertisements

எலிஃப் ஷஃபக் எழுதிய காதலின் நாற்பது விதிகள் சமீபத்தில் வாசித்த நூல்களில் தனித்து நின்றது. நம்ம ஊர் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் காதல் புனிதங்களும் ஒரு வகையான டெம்ப்ளேட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ். எல்லோருக்கும் பதின்ம வயதில் தபூ சங்கர் கவிதைகள் பிடித்திருக்கும். பின்னால் அறிவுமதி, மேத்தா என வளர்ந்து வந்து விடுவோம். நிக்கோலஸ் ஸ்பார்க்ஸும் அதைப் போலத்தான். இப்புதினத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால், காதலை பலப்பலக் கோணங்களில் சொன்ன ரூமிக்கு, காதலை உணர்த்திய ஒருவனைப் பற்றியது என்பது தான். இளையராஜாவிற்கு இசையமைக்க கற்றுக் கொடுத்தவர் என் யாராவது சொன்னால் அவரைப் பற்றி அறிந்திடத் துடிப்போமில்லையா, அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தை நான் எடுத்தேன்.

40_rules_of_love

கதையின் முக்கியக் கதாபாத்திரம் எல்லா. அமெரிக்காவில் இருக்கும் நாற்பது வயதுப் பெண்ணான இவர், தன் கணவருடனும் 3 குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறார். சமைப்பதை மட்டுமே பெரிய கடமையாக செய்து வரும் இவரை, ஒரு பதிப்பகத்தில் நாவலை வாசித்து கருத்துக் கூறும் வேலைக்கு கணவர் சேர்த்து விடுகிறார். நாற்பது வயதான பெண்ணின் கணவர்கள் செய்வதைப் போலவே அவரும் மனைவிக்குத் தெரியாது என நம்பி வேறு பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார். பிள்ளைகளும் வளர்ந்து எல்லாவை தனிமையில் தள்ளுகிறார்கள். அவ்வாறிருக்க அஸிஸ் என்பர் எழுதிய “தி ஸ்வீட் பிளாஸ்பெமி” என்கிற நாவலை வாசிக்கும் வாய்ப்பு எல்லாவிற்கு கிடைக்கிறது. இங்கு ஒரு நாவலுக்குள் ஒரு நாவல் துவங்குகிறது.

தி ஸ்வீட் பிளாஸ்பெமி என்னும் நாவல் ஷாம்ஸ் எனப்படுபவரின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறது. நாடோடியாகத் திரியும் முஸ்லிம் துறவியான இவர், யாரையும் மதிப்பதில்லை. கடவுளைத் தவிர யாரும் அவ்வளவு முக்கியம் இல்லை என்னும் நிலைப்பாடு கொண்டவர். இவரது கனவில் பாக்தாத் சென்று அங்கிருக்கும் ஒருவருடன் நட்பு பாராட்டும்படி கனவில் செய்தி வருகிறது. அவரும் அவ்வாறே செய்கிறார். அவர் நட்பு பாராட்டுவது ரூமியுடன் என அங்கு சென்ற பிறகுதான் அவருக்கே தெரிகிறது. அது எவ்வாறு இருவரையும் பாதிக்கிறது என்பதே கதை. கதையை வாசிக்கும் எல்லா, தனிமையைக் கொல்ல அஸிஸிடம் மின்னஞ்சலில் பேசத் துவங்குகிறார். நாவல் முடியும் வேளையில் எல்லா தன் கணவரை விட்டு அஸிஸுடன் வாழச் செல்கிறார். அவரை எது அப்படி மாற்றியது? முஸ்லிம் துறவியான ஷாம்ஸ் காதலைப் பற்றி என்ன சொல்லியிருந்தால் குரான் விற்பன்னராக இருந்த ரூமி காதலை மட்டுமே எழுதத் தலைப்பட்டிருப்பார்? என்பதை எல்லாம் நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கதையை ஒருவர் சொல்லுவது போல அல்லாமல் பல்வேறு பாத்திரங்கள் சொல்வது போல் அமைத்தது மிகச் சிறப்பு. அதனாலேயே பல விஷயங்களை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. மின்னஞ்சல் மூலமாகவும், பேச்சு மூலமாகவும், நாவலாகவும் கதை நம் முன் விரிகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்காலகட்டத்தில் ஷாம்ஸ் எவ்வாறு காதலைப் பற்றி தெளிவான பல எண்ணங்கள் கொண்டிருந்தார் என்பது தான். ஒருவருக்கு பெயர், புகழ், பணம், அழகான மனைவி, அன்பான குழந்தைகள் அனைத்தும் இருந்தும் சில சமயம் எதுவோ ஒன்று குறைவது போலத் தோன்றும். அதைச் சில பேர் இன்னொரு பெண்ணிடத்தில் தேடுவார்கள். சில பேர் மதுவிடமும் புகையிலையிடமும் தேடுவார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவை, தன் எண்ணங்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு தோழமை தான் என்று இப்புத்தகம் மிக மிக அழகாக சொல்கிறது.

ஒவ்வொரு அத்தியாயமும் ஆங்கில எழுத்தான B என்னும் எழுத்தில் துவங்குகிறது. அல் ஃபைதா என்னும் குரானின் ஒரு பகுதியிலே பிஸ்மில்லாஹிரஹ்மானிரஹீம் எனும் வார்த்தை வருகிறது. அதன் அர்த்தம் அன்பும் கருணையும் நிறைந்த அல்லாவின் பெயரால் என்பதாகும். இதை வலியுறுத்தியே சுஃபி இயக்கம் இயங்குவதால் கதைக்கு இது மேலும் அழகு சேர்க்கிறது.

பல இடங்களில் உரையாடல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இது நம் தமிழ் கதாசிரியர்களிடம் கிடைத்தால் ஒரு 6 வருடங்களுக்கும் காதல் வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. என் கையில் கிடைத்ததால் சில பெண்களை மட்டும் சென்றடையும். ”காதலின் தேடல் நம்மை உள்ளும் வெளியும் மாற்றிவிடும். அவ்வாறு நீ மாறவில்லையெனில் சரியாக காதலிக்கவில்லை எனக் கொள்” ”காதலில்லாத ஒரு வாழ்வு என சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை. பணத்தின் மீதான காதல், கடவுள் மீதான காதல் என பிரிக்கத் தேவையில்லை. பிரிவினை மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும். காதலுக்கு எந்த விளக்கமுமில்லை. அது புனிதமானதும் எளிமையானதுமாகும், காதலே வாழ்வின் நீருற்று. காதலிப்பவனது ஆன்மா நெருப்பு. இவையிரண்டும் சேரும்பொழுது உலகம் மிகவும் மாறாகத் தென்படும்” போன்ற வரிகளை அடிக்கோடிட்டு அடிக்கடி படிக்கலாம்.

நாவல் வாசித்து முடித்தவுடன் மீண்டும் ரூமியின் கவிதைகளை வாசித்துப் பார்த்தேன். காதலை மட்டுமே பாடியிருந்தாரே தவிர எந்தப் பாலினத்தையும் பற்றிப் பாடவில்லை. செக்‌ஷன் 377ஐ எதிர்த்து சில முஸ்லிம் இயக்கங்கள் போஸ்டர் அடித்திருந்தது கண் முன் வந்து போனது.

கொசுறு: கல்யாணம் என்னும் நிக்காஹ் படத்தில் க்வாஜாஜி மற்றும் ஸிக்ரு பாடல்களைக் கேட்டு இந்தப் புத்தகத்தையும் படித்து மசூதி இருக்கும் தெரு வழியில் நடந்து பாருங்கள். நான் சென்ற பொழுது என்னையும் அறியாமல் எல்லோருக்கும் வணக்கம் வைத்தேன். அமைதியாக இருந்தது,

 

இதுவரை உலக சினிமாக்களும் பிற மொழிப் படங்களும் மட்டுமே இந்தப் பகுதியில் இடம் பெற்று வந்தன. இந்த முறை முதன் முதலாக சமீபத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படத்தைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம். அதற்கு முன் சில வரிகள்.

இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் சரியான விமர்சகர்கள் இல்லாத காரணத்தாலேயே பல இயக்குனர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த நிலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறினார். முற்றிலும் சரி. படத்தைப் பார்க்கும் அனைவரும் ஒரு பார்வையாளனாகவே இருந்து அந்தப் படத்தை பற்றி விவாதம் செய்வதால் சில முக்கியமான விஷயங்களை இயக்குனர் வெளிப்படையாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. சில விஷயங்களை வெளிப்படையாக சொன்னாலோ செய்தாலோ அதன் அழகு கெட்டு விடும். IMDB போன்ற இணையதளங்களில் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படங்களைப் பற்றி இன்றும் விவாதிக்கிறார்கள். அதுதான் அந்த படத்திற்கு ரசிகர்கள் தரும் மரியாதை. ஆனால் இங்கு அந்த சூழலே இல்லையே. அதனாலேயே எது நல்ல சினிமா, எது தவிர்க்கப்பட வேண்டிய சினிமா எனப் பலருக்கும் தெரிவதில்லை. சில குப்பைகளைக் கொண்டாடுகிறோம், சில மாணிக்கங்களைக் குப்பையில் போடுகிறோம்.

”படம் நல்லா இருந்தா ஓடப் போகுது” இது ஒரு சாரார் சொல்லும் கருத்து. படம் வெளியிட்டு, போதுமான திரையரங்குகள் கிடைத்து, நாலு பேர் நல்லா இல்லை என சொல்லிப் படம் ஓடவில்லை என்றால் அது வேறு. ஒரே நேரத்தில் ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் தயாரிப்பில் வெளியான ஒரு படம் அனைத்துத் திரையரங்குகளையும் குத்தகைக்கு எடுத்து, இந்தப் படத்திற்கு இடம் கிடைக்காமல், கிடைத்த இடத்தில் திரையிட்டு மக்களிடம் போய்ச் சேரவிடாமல் செய்துவிட்டால் எப்படி ஓடும். மனம் தொட்டுச் சொல்லுங்கள், நம் ஓய்வு நேரத்தில் தான் நாம் படத்திற்கு செல்கிறோம். அந்த நேரத்தில் இந்தப் படத்தின் காட்சிகள் இல்லையென்பது இயக்குனரின் தவறா?

images

நல்லப் படம் என்கிறார்கள், அப்படி என்னதான் இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு, சென்னையை இரவில் பார்த்திருக்கிறீர்களா? இங்கு உலவும் பல மிருகங்களைப் பற்றிக் தெரிந்ததுண்டா? பல பாவங்களை செய்து பின் மனம் திரும்பிய ஒருவனை போலீஸும் அவனது முந்தைய முதலாளியும் வேட்டையாடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அவன் படும் பாடுதான் படம். படத்தின் ஓநாயும் ஆட்டுக்குட்டிக்கும் வேலை என ஒன்று இருப்பதே எனக்கு பெரிய ஆறுதலாய்ப் பட்டது. சமீபத்தில் வந்த எந்தப் படத்திலும் கதாநாயகனுக்கு வேலை கிடையாது, இருந்தாலும் சும்மாவே சுத்துவார். ஒரே நேரத்தில் உயிர் எடுப்பவனும், உயிர் வாங்குபவனும் ஓடும் பொழுது அவர்களது சந்தர்ப்ப வசத்தால் உயிர் எடுப்பவன் காப்பாற்றுபவனாக மாறுகிறான். காப்பாற்றுபவன் கொல்பவனாக மாறுகிறான். இந்த இருவரின் இந்த சுபாவங்கள் மாறி மாறி வர, ஓநாய் ஆடாக மாறியதா? இல்லை ஆடு ஓநாயாக மாறியதா என்பதே கதை. ஓநாய் படத்தின் ஒரு காட்சியில் கூட பொய் சொல்வதில்லை. ஆடு பொய்யில் மட்டுமே வாழ்கிறது.

சின்ன படங்களுக்குள் சுவராசியங்கள் வைப்பது தான் ஒரு கலைஞனின் வேலை. பெரிய கதைகள் எழுத பல நாவலாசிரியர்கள் இருக்கிறார்கள். பல காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. குறிப்பாக கடைசி சண்டையின் போது இளையராஜாவின் பின்னணி (முன்னணி) இசை சிலிர்க்க வைக்கிறது. Water tight screenplay எனச் சொல்வார்கள். தமிழில் இது இருந்ததே இல்லை. பாக்யராஜ் கூட பாடல்களோடு சேர்த்து தான் திரைக்கதை எழுதுவார் போலும். ஒரு தேவையில்லாத காட்சியில்லை. ஹீரோ பெண்களைக் கேலிச் செய்வதில்லை. கை ஓங்குவதில்லை இரட்டை அர்த்த பாடல்கள் வசனங்கள் இல்லை. இரண்டு நிஞ்ஜா வீரர்களுடன் வெறும் கையில் மிஷ்கின் சண்டையிடும் பொழுது நமக்கே பதறுகிறது. முக்கியமாக படத்தைக் கெடுக்க பிளாஷ்பேக் எதுவுமே இல்லை. இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொண்டு மூன்றே நிமிடங்களில் படம் எதைப் பற்றி என மிஷ்கின் சொல்லச் சொல்ல சிலர் கண்ணீரைக் கூட துடைத்துக் கொண்டார்கள்.

சென்னையில் எங்கப்பா நிஞ்ஜா வீரர்கள்? எனக் கேட்பவர்கள் ஒரு நிமிடம் தன் மனதைத் தொட்டுச் சொல்லட்டும் எந்த ஆங்கிலப் படத்தில் நிஞ்ஜா சண்டை வரும் போதாவது இவ்வாறு கேட்டிருக்கிறாரா என்று? நம் கலைஞன் எடுத்தால் மட்டும் ஏன் அதில் தவறு கண்டுபிடிக்க இப்படித் துடிக்கிறோம்? இன்னுமா வெள்ளைக்காரன் நம்மளை விட புத்திசாலி என நினைத்துக் கொண்டிருக்கிறோம்? தவறில்லை. ஆனால் நம்மை ஏன் நாமே முட்டாளாகப் பார்க்க வேண்டும்.

படத்தின் விளம்பரத்திற்காக தானே போஸ்டர் ஒட்டுகிறார் மிஷ்கின். இதே விஷயத்தை ஒரு ஷங்கரோ, மணிரத்தினமோ செய்திருந்தால் உலகமே பொங்கி எழுந்திருக்கும்.. மிஷ்கின் தானே! சில பேர் இதன் காரணமாகவே படம் பார்க்க அசூயையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சரிதான். ஊதாரி ஒருவன் பள்ளி செல்லும் ஒரு மாணவியைக் காதலிக்கும் ஒரு படத்திற்கு பல்லிளிக்க சென்று, பதிவும் போட்டு, பாராட்டி பின், ஆஸ்கர் விருது சமயத்தில் மட்டும் ராமாயண மகாபாரதத்தில் இல்லாத கதையா அதை வைத்தே ஆயிரம் நல்ல படம் எடுக்கலாமே என அங்கலாய்போம். ஆனால் ராமாயணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இதைப் போன்ற படைப்பைப் பார்க்காமல் படைப்பாளியின் செயல்களைப் பார்த்துக் அசூயைப்படுவோம்.

7000 ரூபாய்க்கு கேமரா வாங்கி, ஒரு பூவின் படத்தை எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தன் மொத்த நட்பு வட்டத்தையும் அதில் டேக் செய்து லைக்கும் கமெண்டும் வாங்குபவர்கள், மிஷ்கினின் இந்த செயலை விமர்சனம் செய்யும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மிகவும் நல்ல ஒரு திரைப்படம். தவறுகள் கூட இருக்கலாம். ஆனால் முதலாளித்துவமும் மேட்டிமைத்தனமும் ஒரு படைப்பை அழிக்க முடியும் என்றால்,

இந்த நாடும் நாட்டு மக்களும்………     நன்றாய் இருக்கட்டும்.

நியூ ஜென் தமிழா மின் இதழில் வெளிவந்தது

 

 

குற்றப்புனைவுகளில் ஸ்கேண்டிநேவியன் நாவல்களை அடிக்க ஆள் இல்லை என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நிரூபணமாவது உண்டு. வாலாண்டர் தொடர்கள், அதற்கு முன் மார்ட்டின் பெக் என அவர்கள் படைத்த பாத்திரங்கள் ஏராளம். சமீபத்தில் அங்கு பிரபலமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் யூ நெஸ்போ (Jo Nesbo). அவரது ஹாரி ஹோலே கதாபாத்திரம் மிகவும் பிரபலம். குடிப்பிரச்சினை உள்ள ஒரு போலீஸ் அதிகாரி. பல இடங்களில் டர்டி ஹாரியை நினைவுபடுத்தும் ஒரு பாத்திரம். யாருக்கும் அடங்காத, தன் உள்ளுணர்வை மட்டுமே முழுவதுமாக நம்பும் ஒரு அதிகாரி.

ஸ்நோமேன் – ஹாரி ஹோலே தொடரில் மிகவும் பிரபலமான ஒரு நாவல். தொடரில் 7வதாக வந்த இந்த நாவலே உலக அளவில் மிகவும் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. முதலில் இருந்து படித்தால் ஹாரி ஹோலே பற்றி முழுமையான ஒரு பிம்பம் உருவாகும் இருந்தாலும் இந்த நாவலைத் தனியே படித்தாலும் முன் நடந்த பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடக்கும் தொடர் கொலைகளை ஆராய ஹாரி ஹோலே பணிக்கப்படுகிறார். ஒவ்வொரு முதல் பனி நாளிலும் ஒரு இளம் தாய் காணாமல் போகிறார். அவர் வீட்டு முன் அல்லது அருகில் ஒரு பனி மனிதன் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. பல நாட்கள் இந்த வழக்குகள் காணாமல் போனவர்கள் பர்ரியலில் இருப்பதால் அவர்கள் இறந்திருக்கலாமோ என்கிற சந்தேகத்தில் ஹாரி ஹோலே விடம் இந்த விஷயம் வருகிறது. நார்வேயின் இன்னொரு பகுதியான பெர்கென் நகரிலிருந்து ஒரு பெண் அதிகாரி ஹாரிக்கு துணையாக செயல் படுகிறார். இதை எல்லாம் தவிர ஹாரிக்கு முதல் பனி நாளில் ஒரு கொலை விழும் என்கிற மொட்டைக் கடிதமும் வருகிறது.

அது மட்டுமல்லாமம் ஹாரியின் சொந்த வாழ்க்கை ஆகக் கொடுமையாக இருக்கிறது. அவரது காதலி ரேக்கல் இன்னொருவரோடு வாழ்கிறார். ரேக்கலின் பையன் ஒலெக் ஹாரியை மட்டுமே தந்தையாகப் பார்க்கிறான். இருந்தும் ஹாரியின் வேலையும் அதைச் சார்ந்த ஆபத்துகளும் அவர்கள் சேர விடாமல் தடுக்கிறது.

அடுத்த குறி யார்?  யாரெல்லாம் இவ்வாறு கொலை செய்ய வாய்ப்பிருக்கிறது? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? ஹாரியின் கூட இருக்கும் பெண் அதிகாரி காத்தரீன் உண்மையிலேயே உதவத் தான் வந்திருக்கிறாரா? என்பதைப் பல சுவாரசியமான பல திருப்பங்களுக்கு பின் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் யூ நெஸ்போ.

கதாபாத்திரங்களும், அவற்றை அவர் படிப்படியாக கட்டமைப்பதும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. திருப்பம் என்றால் திருப்பம், பக்கங்களைத் திருப்பிக் கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு இடத்திலும் அலுக்காத ஒரு நடை. இவராக இருக்குமோ என நினைக்கும் நேரத்தில் அவர் இல்லை என்று ஆதாரங்கள் வருவது ஹாரிக்கு எரிச்சலாக இருக்குமோ இல்லையோ நமக்கு மிகவும் கொடுமையாக இருக்கிறது.

கடைசி பகுதி போலீஸ் பார்வையிலிருந்து சடாரென கொலைகாரன் பார்வைக்கு செல்வது மிகவும் புதியது இல்லை என்றாலும் அவன் தரப்பு விளக்கம் நாவலுக்கு மிகவும் தேவையாகவும் அதே நேரம் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. மெல்லிய நகைச்சுவை, அபார வேகம் வெறுப்புடன் ரசிக்க வைக்கும் ஒரு கதாநாயகன். ஒரு சிறந்த குற்றப் புனைவுக்கு வேறு என்ன வேண்டும்?

முதல் இரண்டு ஹாரி ஹோலே நாவல்கள் இன்னும் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. மூன்றாவது நாவலில் ரெட் பிரஸ்ட் கதையிலிருந்து துவங்கும் ஹாரி ஹோலேவின் சாகசங்கள் எந்த அமெரிக்க ஹீரோவின் சாகசத்துக்கும் குறைவில்லை. இரண்டு வாரங்களில் மூன்று ஹாரி ஹோலே புத்தகங்களை முடித்த திருப்தியில் சொல்கிறேன். நம்பி வாங்கி வாசிக்கலாம்.

நியூ ஜென் தமிழா மின் இதழில் வெளியானது.

காரின் குளிரில் பாதங்கள் விரைத்து விட்டன. பயணத்தில் படிக்க எனக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரியே இருந்தன. ஒரு பக்கம் கூட புரட்டவில்லை. காரில் ஏறியவுடன் அப்படி ஒரு தூக்கம். இப்படிப்பட்ட காரில் எல்லாம் நம்மையும் ஏற்றிக் கொள்வார்களா என பள்ளிக் காலத்தில் காரின் பின் ஓடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ”அதெல்லாம் மறந்துடு. சாதிச்சாச்சு” மனசு சொல்லியது. இல்லை.. இன்னும் ஒரே ஒரு படி.

புன்னைவயல் கிராமத்தில் கார் திரும்பிய பொழுது பத்து சிறுவர்கள் பின்னால் ஓடி வந்தனர். டி.வி. எல்லாம் வந்த பிறகும் காரைப் பார்க்காதது போல ஒடி வருவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சென்ற வாரம் நாக்கு தள்ள பணம் கட்டி ஐ10 வீட்டிற்கு கொண்டு சென்ற போது மகன் தஷ்வந்த் “என்னப்பா வண்டி இது?? ஆடி இல்லையா?” என சொல்லிக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தது நினைவுக்கு வந்தது.

தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை. வீடு மனைவி மக்கள். இது தான் வாழ்க்கை. சென்ற வாரம் சீரியல் பற்றி டைரக்டரிடம் பேசிக் கொண்டிருக்கையில் துறைத்தலைவர் கூப்பிட்டார்.

“நம்ம வெள்ளிகிழமை ரியாலிட்டி ஷோ இன்னும் 13 வாரத்துல முடியப் போகுது” கவனமாக தலையில் இருக்கும் நான்கு முடிகளையும் அதனதன் இடத்தில் வைத்தார்.

“ஆமா சார், இப்பவே எல்லாரும் யார் ஜெயிச்சானு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்காங்க”

“ஆமா.. நீங்க 13 வாரத்த பத்தி யோசிக்குறீங்க. நான் அடுத்த வருஷத்த பத்தி யோசிக்குறேன்.”

”இப்ப பாட்டு பாடுறாங்க. அடுத்து டான்ஸ். இதைத் தான சார் 5 வருஷமா பண்ணிட்டு இருக்கோம்.”

“இல்லை.. போன தடவையே டி.ஆர்.பி ரொம்ப குறைஞ்சுடுச்சு. அதுக்காகத் தான் ஒருத்தன் காலை எல்லாம் உடைஞ்ச மாதிரி நடிக்க வெச்சோம். ஐ ஹாவ் அன் ஐடியா”

இவர் இப்படிச் சொன்னாலே ஏதோ ஒரு ஆங்கில நிகழ்ச்சியோ இல்லை ஹிந்தி நிகழ்ச்சியோ தமிழில் வரப்போவது உறுதி.

“நாட்டுப்புறக் கலைஞர்களைக் கூட்டி வந்து ஒரு புரோகிராம் பண்ணா என்ன?”

“சார்! பொங்கலுக்கு காலைல அவங்க நிகழ்ச்சி பண்ணாலே எவனும் பாக்க மாட்டான். இதுல யாரு காசு போடுவா?”

“இதை ஒரு ஐ.பி.எல் மாதிரி பண்ணலாம். வாடிப்பட்டி மேளத்துக்கும் தஞ்சாவூர் தவிலுக்கும் போட்டி. அப்படி.”

“சரி சார்!”

“நான் எதுக்கு உங்ககிட்ட இதை சொல்றேன் தெரியுமா? இதை நீங்களே எடுத்து நடத்தணும்னு மேனேஜ்மெண்ட் ஆசைப்படுறாங்க. இன்ஃபாக்ட், இது லேட். பிளான் எடுத்துட்டு வாங்க. ஸ்பான்சர்ஸ் நான் பாத்துக்குறேன்”

அப்போ ஆரம்பித்தது என் பயணம். தமிழ்நாட்டின் மூலை முடிக்கெல்லாம் இசைத் தேடி அலைந்தேன். இளைஞர்களுக்கு சினிமா பாட்டும் திரை இசை சம்பந்தப் பட்ட வாத்தியங்களையும் தவிர எதுவும் தெரியவில்லை. பெரியவர்கள் மட்டுமே ஒரு அர்ப்பணிப்போடு செய்தார்கள். பறை, தம்பட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயில், வில்லிசை, மத்தளம், நாதஸ்வரம் என அவர்களின் வாத்திய வரிசையே என்னை மூச்சு முட்ட செய்து விட்டது.

கல்லூரியில் இருந்து வேலைக்கு புதிதாக சேர்ந்த இருவர் எனக்கு உதவி. ஒருவன் பெயர் கிருஷ், மற்றவன் யோகி. நவயுக இளைஞர்கள். 13 வருடங்களில் எவ்வளவோ மாறி விட்டன. ஐடியா சொன்னவுடன் பல ஆங்கில சேனல்களில் இருந்து நோட்ஸ் எடுத்து செட், பிராப்ஸ் எல்லாம் ரெடி செய்து விட்டனர். அவர்களுக்கு சுத்தமாக சங்கீத ஞானம் இல்லாததால் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க மட்டும் நான். புன்னைவயல் எனது கடைசி ஸ்டாப்.

“இங்க காசி நாடன்னு??” டீக்கடையில் டிரைவர் விசாரித்தார். டீ சொன்ன போது எனக்கும் டிரைவருக்கும் பிளாஸ்டிக் கோப்பையில் வந்தது. ஆளைப் பார்த்து ஜாதி சொல்லத் தெரியவில்லை போல.

“அவரு இப்ப பனை ஏறுரதில்லை. வீட்ல தான் இருக்கணும். தெக்கால போயி கடைசி திருப்பம்” பாலிலிருந்து கண்ணை எடுக்காம்லே பதில் சொன்னார் கடைக்காரர்.

சிறிய வீடு. முன்னால் திண்ணையில் சட்டையில்லாமல் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர். டிரைவர் சென்று உறுதி செய்ததும் நான் இறங்கிச் சென்றேன்.

“என் பேரு திலீப். சென்னைல டி.வி ஆபீஸ்ல இருந்து வரேன். போன் வந்திருக்குமே” எனச் சொல்லி முடிக்கும் முன் கையில் மோர் வந்தது.

“சொன்னாங்க. அவங்க சொன்னது எனக்கு புரியல தம்பி.”

“ஓண்ணுமில்லையா, சென்னைல ஸ்டூடியோ இருக்கும். நீங்க அங்கப் பாடணும். அவ்வளவு தான்”

“சினிமாவா?”

“இல்லீங்க ஐயா. டீவி தான். நீங்க கச்சேரி பண்ணுவீங்கள்ல அது மாதிரி தான்.”

சிரித்தார். ”இங்க கச்சேரி பண்ணியே பல வருசம் ஆச்சு தம்பி. மொதல்ல சினிமா பாட்டுக்காரவுக வந்தாக, பொறவு சினிமா பாட்டுக்கு ஆடினாவ.. இப்பல்லாம் ஒண்ணு ரெண்டும் சினிமால நடிச்சவுகளே வந்து ஆடுதாங்களே. நீங்க சொல்றது நம்ப முடியல.”

”அப்படி இல்லை ஐயா இது. நம்ம மண்ணோட பாட்ட எல்லா ஊரூக்கும் கொண்டு போகணும்னு தான் இதைப் பண்ணுறோம். எனக்காக நீங்க ஒரு பாட்டுப் பாடி காமிச்சீங்கன்னா, அதை ரெகார்ட் பண்ணி எங்க மேலதிகாரிக்கு போட்டு காமிப்போம்.”

கணீர் குரலில் ஆரம்பித்தது பாட்டு. என் அலைபேசியில் பதிவாகத் தொடங்கியது.

காசுமில்லை பணமுமில்லை

கரைச்சலுக்குப் பஞ்சமில்லை

வேலை இல்லை வெட்டி இல்லை

வெட்டி நியாயம் தீர இல்லை

சோறு இல்லை கொழம்புமில்லை

சாதி மட்டும் பெரிசு புள்ள

மானமில்லை ரோசமில்லை

மாண்புமிகு கிராமத்தாரே!!

”பதிவாயிட்டுதுங்களாயா??” என் கையிலிருந்த அலைபேசியை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“பதிவாயிட்டுதுங்க.. ஆனா இந்த மாதிரி இல்லாம எதாவது காதல் பாட்டா..”

”சரிதான் இந்த காலத்து பசங்களுக்கு கருத்து எங்கப் புடிக்குது?”

“அப்படியில்லையா, கிராமம், சாதி, வறுமை எல்லாம் ரொம்ப பழசில்லீங்களா??”

“காதல் மட்டும் என்னவாம்?” ஏளனச் சிரிப்புடன் பாடத் தயாரானார்.

வஞ்சிக் கூந்தல் நெழலுல

நெஞ்சி குழி பொத்தலுல

கஞ்சி மறந்தேண்டி புள்ள கஞ்சி மறந்தேண்டி

காளை மாட்டை கன்னத்தில

கிள்ளிப் போகும் கிளிப்புள்ள

கஞ்சி மறந்தேண்டி புள்ள கஞ்சி மறந்தேண்டி

உள்ளிருந்து மெலிதான ஒருச் சிரிப்பு சத்தம் கேட்டது.

“இந்தப் பாட்டுக்கு வயசு 35. அதான் சிரிக்கா.” எதனாலோ அவர் மீசை நுனி மேலே சென்றது போல ஒரு தோற்றம். “சாப்புடுதியளா??” உள்ளே இருந்து சத்தமும் மீன் குழம்பு வாசமும் வந்தது.

Whatsappல் யோகிக்கு இரு பாடல்களையும் அனுப்பிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். வாழை இலையில் கொள்ளாமல் சோறு வைத்து, மீன் குழம்பையும் அதன் மேல் ஊற்றும் பொழுதே என் வாயில் எச்சில் ஒழுகியது.

“நிலத்தில தண்ணியே இல்ல தம்பி! எனக்கு மட்டும் 35 தென்னை இருந்தது. கீழ தண்ணி இருந்தால்லா மேல வளரும்? கொஞ்சம் கூட இல்லை. அதுக்கப்புறம் தான் பனை ஏறப் போனேன்.”

டிரைவர் ருசியில் திளைத்து விட்டார். சென்னையில் சாப்பிட்ட நாக்கு. புன்னைவயலுக்கு பஞ்சம் வராமல் விடாது.

”சோத்துக்கே இல்லாதப்ப என்ன தம்பி பாட்டும் கூத்தும். காலைல இருந்து ஒரு 12 மரம் ஏறி இறங்கினா தான் வீட்டுக்கு சோறு. அப்ப அலுப்புக்கு பாடுறது தான் பாட்டு.”

“அலுப்புக்கு வேற ஒண்ணும் பண்ணுறதில்லையா?” டிரைவர் கேட்டார்.

“பழக்கமில்லை தம்பி”

கை கழுவி விட்டு வாசலில் வரும் முன்னே யோகியிடமிருந்து தகவல் வந்து விட்டது. காசி நாடன் சென்னை வர வேண்டி இருக்கும்.

“இதப் பாருங்க தம்பி! நான் இதுவரைக்கும் பாட்டுக்குனு யார்ட்டயும் பத்து பைசா வாங்குனதில்லை. இப்ப பனை ஏறக்கூடாதுன்னு வேற தடை போட்டிருக்காங்க. ரொம்ப கஷ்டம். நீங்க பாத்து பண்ணாதான் தம்பி வயிறு நிரையும். எனக்காக கேக்கலை. தோப்பிருக்கும் போது தொங்கட்டானும், பட்டுச் சீலையுமா அலைஞ்சவ, இப்ப ஒத்த சேலையோட வீட்டுல அடைஞ்சு கிடக்கா, அவளுக்காச்சும் எதுனா செய்யணும்.”

“ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூவா தருவோம் ஐயா! நீங்க நல்லா பாடி நிறைய பேருக்கு உங்கள பிடிச்சுப் போச்சுன்னா, கச்சேரிக்கெல்லாம் கூப்பிடுவாங்க. சினிமால கூட பாட வாய்ப்பிருக்கு.”

“அய்யே நமக்கு அது எல்லாம் ஆசை இல்லீங்க. ராஜாவ மட்டும் ஒரு தடவை பாத்திரணும். வேற எதும் வேணாம்”

வெத்தலை முடிந்து கார் ஏறுகையில், கார் வரை வந்தார் காசி நாடன். “ஒரு பத்து நாளைக்கு கண்டிப்பா வேலை இருக்கும்லா? துணி எடுக்கணும் அதான் கேட்டேன்” கையில் அவர் மறுக்க மறுக்க ஆயிரம் ரூபாய் வைத்து விட்டுக் கிளம்பினேன்.

எதிர் பார்த்ததை விட பெரிய துவக்கம். ஊர் முழுக்க கிராமிய வாத்தியங்கள் கேட்கத் துவங்கின. ஊர் கொடைக்குச் செல்லாத இளசுகள் மொபைலில் எங்கள் நிகழ்ச்சியில் பாடியவர்கள் குரல் காலர் ட்யூனாய் ஒலிக்கத் துவங்கியது. மூன்றாம் எபிசோடில் காசி நாடன் பாட வேண்டும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து காரில் வந்து இறங்கினார்.

“என்ன தம்பி, பிளசர் எல்லாம் அனுப்பிட்டீங்க. எனக்கு இது தான் மொத திரிப்பு”

வாசலில் வைக்கப்பட்டிருந்த குளிர்பான கம்பெனி போர்ட் அவர் கண்ணில் பட்டதும் முகம் மாறி விட்டது.

“இவன் இங்க என்ன பண்ணுதான்?”

“அவங்க தான் ஸ்பான்ஸர்”

“அப்படின்னா?”

”நம்ம படம் புடிக்க அவங்க காசு குடுப்பாங்க. பதிலுக்கு நம்ம விளம்பரம் போடணும். அதனால அவங்களுக்கு வியாபாரம் கூடும்.”

“அப்ப எனக்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூவா இவனா குடுக்கான்?”

“அவங்களும்!” அவரைத் தாண்டி ஸ்டூடியோ கேமரா கண்ட்ரோல் ரூமுக்குள் நுழைந்தேன். யாரும் இன்னும் வரவில்லை.

“தம்பிகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” இப்படி ஆரம்பித்தால் எங்கு செல்லும் என எனக்குத் தெரியும், ஸ்டூடியோவை பார்த்து ரேட்டை ரெண்டு மடங்கு ஏத்திவிடுவார்கள்.

“என்ன விஷயம்ணே? காசு முடிவு பண்ணி செக் எல்லாம் போட்டாங்க. இனி மாத்த முடியாது”

“அதில்லை தம்பி. ஊருக்கு போக காசும் உங்க விலாசமும் குடுத்தீங்கன்னா போதும். மாசம் பொறந்ததும் பணத்த அனுப்பிடுதேன்”

”பயப்படாதீங்கண்ணே. நீங்க பாட்டுக்கு உக்காந்து பாடுங்க. நாங்க பாத்துக்குறோம். அரை மணில பழகிடும்”

“பயமில்லை தம்பி. அந்த கலர்  கம்பெனிக்காரன் காசுல எனக்கு சாப்பிடப் பிடிக்கல” கண்ணில் கண்ணீர் எட்டிப் பாத்தது.

“நீங்க சொன்னீங்களே, வியாபாரம் கூடும்னு, அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா, எங்கள மாதிரி கிராமத்துக்கு வருவானுங்க, பாக்டரி போட்டுத் தண்ணி எல்லாம் உறிஞ்சுவானுங்க. என்ன மாதிரி ஊர்ல தோப்புக்காரனா திரிஞ்சவன் எல்லாம் கொத்தனாரா அனுப்புவானுங்க.” அழுதே விட்டார்.

“இப்படி எத்தன பேர் தெரியுமா? எனக்கு மட்டும் ஊரை விட்டுப் போகப் பிடிக்காம அங்கேயே தங்கிட்டேன். இன்னிக்கு காலைல ஸ்டேஷன்ல எங்க ஊர் பண்ணைக்காரன் ஒருத்தன் கூலியா பாத்தேன். காசே வாங்காம என் சாமானெல்லாம் தூக்கி கார்ல வெச்சுட்டு, அண்ணே, நீயாச்சும் நல்லா இருக்கியேனு சிரிக்கான். இதெல்லாம் யாரால?”

“ஐயா! நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கும் காசு தேவை. ஒரு பத்து பன்னிரெண்டு நாள் பொறுத்துகிட்டா, காசோட வீட்டுக்கு போயிரலா. வீட்டம்மாவ நெனச்சுப் பாத்தியளா?”

“அவன் காசுல எனக்கு தண்ணி கூட கழுத்துல எறங்காதுய்யா. எம்மூதிய நான் பாத்துகிடுதேன். எனக்கு கொஞ்சம் ஊர் போக காசு மட்டும் குடுங்கையா”

“இத மாதிரி வாய்ப்பு கிடைக்குமா உங்களுக்கு? எத்தனை பேர் அலையுறான் தெரியுமா டிவில வர? சுளுவா கிடைச்சதால எளப்பமா போச்சோ?” என் குரல் என்னையறியாமல் உயர்ந்தது.

”சரிதான் யா! ஆனா எல்லாம் போக மானம் ரோசம் மட்டும் தான் பாக்கி. அதை 30 ஆயிரம் ரூவாய்க்கு அடமானம் வைக்க முடியாது. நான் வரேன்”

“ஒரு நிமிஷம் இருங்க” என் பாஸை பார்த்து நிலமையை விளக்கினேன்.

“அவங்க தான் மெயின் ஸ்பான்ஸர்ஸ். பேக் தட் ஓல்ட்மேன் ஹோம். வி ஆர் பிராக்டிகல் மென். நோ ஸூடோ ஆக்டிவிஸ்ட்”

காசி நாடனுடம் ஆட்டோ வரைக்கும் சென்றேன். வந்து போன செலவுக்கு 6 ஆயிரம் கையில் வைத்தேன். ஆட்டோவில் ஏறியவர் அவசரமாக இறங்கினார்.

“தம்பி!! தம்பி!” தோளின் பின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். காசி நாடன் கையில் ஒரு தூக்கு வாளியுடன் நின்றிருந்தார்.

“அன்னிக்கு கொழம்புக்கு அள்ளி அள்ளி தின்னீங்களாம். உங்களுக்கு குடுத்து அனுப்பிச்சா. மறந்தே போனேன். மறுக்கா ஊர் பக்கம் வரும் போது பொஞ்சாதி பிள்ளைகள கூட்டிட்டு வாங்க”

ஆட்டோவில் ஏறியவரை வியப்புடன் பார்த்தேன். ஆஃப்டர் ஆல், வி வேர் பிராக்டிகல் மென்.

எல்லோர் வாழ்விலும் பெண்கள் இருக்கிறார்கள். அம்மாவாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய், மனைவியாய், இன்னும் பலவாக. அவ்வாறான பெண்களின் அனைத்துக் கூறுகளையும் நம்மால் அறிய முடியுமா? உதாரணமாக, என் தங்கையை எனக்கு தங்கையாய் மட்டுமே தெரியும். அவள் மணமான பின் எவ்வாறான மனைவியாய் இருப்பாள் எனவோ, இல்லை எப்படிப்பட்ட தோழியாய் இருப்பாள் எனவோ என்னால் முழுவதுமாக அறிய முடியாது. என்னதான் நான் நினைத்தாலும் அவளிடம் கேட்டறிந்தாலும் எதோ ஒன்று குறையும்.

அவ்வாறாக, ஒரு பெண்ணின் அனைத்துக் கூறுகளையும் பிரித்துக் காட்டியது சுமித்ரா என்ற நாவல். சுமித்ரா எனும் 38 வயதுப் பெண் இறந்து போகிறாள். சற்றும் தகவலின்றி மரணம் அவளை அணைத்துக் கொள்கிறது. அவளுடன் வாழ்ந்த அனைவருக்கும் அவளை எரிக்கும் வரை அவளுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இவ்வளவுதான் நாவல். மலையாளத்தில் கல்பெட்டா நாராயணன் எழுதிய ”த்ர மாத்ரா (அவ்வளவுதான்)” என்ற நாவல், தமிழில் சுமித்ராவாக கே.வி. ஷைலஜா அவர்களின் கைவண்ணத்தில் வெளி வந்திருக்கிறது.

முதல் அத்தியாயத்திலேயே சுமித்ரா இறந்து விடுகிறாள். பின்பு அவள் மற்றவர்களுக்கு விட்டுச் சென்ற நினைவுகளே நாவலாக நீள்கின்றன. அவளது விருப்பு வெறுப்புகள், பாச நேசங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் பிற கண்களின் வாயிலாக காணும் பொழுது நமக்கு தெரிந்த பெண்களை நமக்கு எவ்வளவு தூரம் தெரியும் என நம்மில் கேள்விகள் எழுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தில் மரணத்தைப் பற்றி வரும் ஒரு பத்தி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு துக்க வீட்டுக்குள் நாம் செல்லும் பொழுது நம் மனது நினைக்கும், ஆனால் வாய் சொல்ல மறுக்கும் விஷயங்களை தயவு தாட்சணியமின்றி எழுதித் தள்ளியிருக்கிறார். மரணம் போலவே இரக்கமில்லாத ஒரு நடை அந்தப் பத்திக்கு மேலும் வலுக்கூட்டுகிறது.

அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரிய அன்பின் அலைகள் நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.

வயநாட்டில் வாழ்க்கைப்பட்ட, ஒரு சிறு பெண்ணினது வாழ்க்கைக் கதை என்னதான் சுவாரசியமாக இருக்கும் என மக்கள் நினைக்கலாம். ஆனால் என்னுடையதும் உங்களுடையதும் போல சுமித்ராவின் வாழ்வும் மிக யதார்த்தமான, சுவாரசியமிக்க ஒரு பயணம் தான். ஒரு பெண்ணாய், தோழியாய், மனைவியாய், தாயில்லாத தந்தை உடல் நலம் குன்றிய பையனுக்கு ஒரு பெரியம்மா போல, யாரும் அற்ற ஒரு கிழவருக்கு சேவகியாய் எல்லாரும் எடுக்கும் அவதாரங்களை அவள் எடுத்திருக்கிறாள். ஆனால் கல்பெட்டா நாராயணனைப் போல் நமக்கு யாரும் அழகிய உரைநடை எழுதுவது தான் சிரமம்.

எவ்வளவோ அன்பைக் குடுத்தாலும், அவளிடம் அன்பையும் பிறவற்றையும் வாங்கியவர்கள் மீண்டும் அவள் பூதவுடலிடமும் ஏதோ தேடுகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்பில்லை எனினும். அம்மாவை இழந்த புருசு அம்மாவையும், யாரும் அற்ற பெரியவர் ஒரு மகளையும் அவள் இறந்த பின்னும் தேடுகிறார்கள். பெண்கள் வாழ்வே இப்படித்தான். எப்போதும் அவர்களிடம் நாம் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களும் குடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தீர்ந்து போனாலும். சுமித்ராவின் வாழ்வின் ரசனைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது நாராயணன் இப்படிச் சொல்கிறார். அவளுக்கு வீட்டை விட நெல் கொட்டி வைக்கும் பழங்கலம் இஷ்டம்.

காந்தியை அல்ல நேருவை, நசீரை அல்ல மதுவை, ஜேசுதாசை அல்ல ஏ.எம் ராஜாவை, சோறல்ல பொரியலை, கஞ்சியல்ல அதன் தொடுபொருளைப் போல, வீட்டையல்ல பழங்கலத்தைத் தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும்

இதைப் படித்து முடிக்கும் பொழுதே பழங்கலத்தை அவள் எவ்வாறு நேசித்தாள் என நமக்கு புரிந்துவிடும்.

தாயாய், தாரமாய், தங்கையாய், அக்காவாய் இருந்தாலும் உயிர் போனபின் அது வெறும் பிணம்தான். இது அனைவருக்குமே தெரியும். செய்தி அறிந்தவுடன் ஒருவராய், ரெண்டு பேராய், கூட்டமாய் வந்தவர்கள், வெயில் ஏற ஏற பொறுமை இழந்து இதை எரித்தால் வேலை முடிந்து செல்லலாமே என யோசிக்கத் துவங்குவார்கள். துவங்குகிறார்கள். எரிக்கும் வரைக்கும் அவளைப் பற்றியும் அவளிடமும் இருந்த நினைவுகள் எரியும் பொழுதே கரைந்து அனைவரும் தத்தமது வேலைகளை கவனிக்க துவங்குகிறதாக முடிகிறது நாவல்.

நாவலை முடித்து விட்டு ஒரு 5 விநாடி அப்படியே அமர்ந்திருந்தேன். பின் முதல் பக்கத்தை மீண்டும் வாசித்தேன்.

யக்‌ஷன்: இந்தப் பூவுலகின் மிகப் பெரும் வியப்பு என்ன?

தருமன் : ஒவ்வொரு நாளும் மக்கள் மனித வாழ்வு முடிந்து யமனினி கோட்டைக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இந்த பூலோகத்தில் எஞ்சி இருப்பவர்கள் தங்களுக்கொன்றும் நஷ்டம் இல்லை என்றும், இங்கே நிலையாக தங்கிவிடுவோமென்றும் நினைக்கிறார்கள். இதைவிட வியப்பு என்ன இருக்கிறது?

இப்பொழுது யக்‌ஷனும், தர்மனும் என்னைப் பார்த்து வியந்து கொண்டிருப்பார்கள்.

 

முந்தைய பதிவுகள்

அடுத்த வாரம் மெஸ்ஸே ஒரே பரபரப்பா இருந்தது. எப்பவும் சட்டையே இல்லாம் உக்காந்திருக்குற எங்க வெட்டு மாஸ்டர், அன்னைக்கு எழுபதுகள்ல பரபரப்பா இருந்த கழுத காது காலர் வெச்ச சட்டை போட்டிருந்தார். நம்ம மணிய பத்தி கேக்கவே தேவை இல்லை. சும்மாவே ஆள் மினுமினுப்பா இருப்பாப்புல, அன்னைக்கு அரை இஞ்ச் பவுடர் ஜாஸ்தியா இருந்தது. ரெண்டு நாள் கடை பக்கம் போகாம சுத்திட்டு காலைல கடைக்குப் போன எனக்கு இன்ப அதிர்ச்சி.

என்னைக்குமில்லாம மணி எங்கிட்ட வந்து, “என்ன பிரசன்னா?? எப்புடி?”ன்னார்.

“என்ன எப்புடி?”

“ஓண்ணும் தெரியலையோ?”

“இல்லையே”

சட்டுனு சடை பைக்குள்ள இருந்து மூக்குப் பொடி டப்பா சைஸுக்கு ஒண்ணு எடுத்தார். கேட்டா ஜவ்வாதாமா. என்னயா நடக்குது இங்கனு நினைக்குறதுகுள்ள..

“சார்”னு ஒரு குரல்.

பாத்தா ஒரு 30, 35 வயசுல ஒரு அம்மா நின்னுகிட்டு இருந்தாங்க.

“என்னம்மா வேணும்”

“பெரியவர் வர சொல்லியிருந்தார்”

“என்ன விஷயமா?”

கேக்குறதுகுள்ள எங்க வெட்டு மாஸ்டரும் மணியும் ஓடி வந்துட்டாங்க.

“பிரசன்னா! பிரசன்னா! இவங்க தான் அவங்க”

“யாரு?”

”எனக்கு அஸிஸ்டெண்ட்” வெட்டு மாஸ்டர் சொல்லிட்டார்.

“இவாளுக்கே பதினோறு மணிக்கு மேல வேலை கிடையாதாம். இவருக்கு அஸிஸ்டெண்ட் கேக்குது.. எனக்கு கூட மாட ஒத்தாசையா இருக்க அப்பா வர சொல்லிருக்காருப்பா” மணி.

சரி வேலைய ஆரம்பிங்கனு சொல்லியாச்சு. அப்பா வந்ததும் கேட்டா, வந்த அம்மா பேரு சாந்தி. இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கடைல வேலை பாத்திருக்காங்க. எல்லா வேலையும் செய்யுறாங்க. காய்கறி வெட்டுறது, சமையலுக்கு ஒத்தாசை, பார்சல் கட்டுறது, பாத்திரம் தேய்க்குறதுனு எல்லாம் தெரியுமாம்.

நல்லாத்தான் போய்க்கிட்டுருந்தது. அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்தது. அதுவும் கூட மாட எல்லாம் பண்ணுமாம். ஆனா எங்களுக்கு இப்பத்தைக்கு ஆள் தேவை இல்லைனு வர வேண்டாம்னு சொல்லிட்டோம். காலைல வந்திடுவாங்க. ஆனா எனக்கென்னவோ அவங்க கிட்ட ஒரு விதமான தயக்கம். பெருசா பேசிக்க மாட்டேன். அண்ணனும் அப்படித்தான்.

ஒரு நாள் காலைல எங்க அண்ணன் கடைல உக்காந்திருந்தார். எட்டரை மணி இருக்கும். ஒருத்தர் வந்து 3 செட் பூரி பார்சல் கேட்டார். உள்ள கேட்டா மணி பூரி இல்லைனு சொல்லிட்டார். எங்கப்பா பெரிய பெரிய கம்பெனில வேலை பாத்ததால இன்வேண்டரி எண்ட்ரி எல்லாம் பக்காவா இருக்கும். புக்கைப் பாத்தா ரெண்டு செட் பூரி தான் போயிருக்கு வெளில. மாஸ்டர்ட அர்ஜெண்டா பூரி போட சொல்லிட்டு வந்து அண்ணன் மணி கிட்ட கேட்டார்.

“என்னாச்சு போட்ட பூரி எல்லாம்?”

“என்னைக் கேட்டா?”

ராஜா தாத்தா கூட இல்லை பழி போட, சொல்லுங்க வேற எங்கையாவது பார்சல் போகுதா?”

“நீ வேறப்பா! மாஸ்டர் அளக்கத் தெரியாம மாவு போட்டிருப்பான்”

“கேட்டாச்சு! ஒரு கிலோ மைதா போட்டிருக்கு. 24 பூரியாவது வரணும். 4 பூரி போக 20 பூரி என்னாச்சு?”

“அப்புறம் பேசுவோம். இப்ப பார்சல் கட்ட வேலை இருக்கு” அண்ணனுக்கு மணி மேல இருந்த சந்தேகம் போகலை. நான் வந்ததும் என்கிட்ட சொன்னார். நான் கேக்குறேன்னு சொல்லிட்டு உள்ள மணிகிட்ட போனேன்.  உர்ருனு இருந்ததால பேசல. மாஸ்டர் கிட்ட போய் இப்ப எத்தனை கிலோ மாவு போட்டார்னு கேட்டேன். மறுபடி ஒரு கிலோ போட்டிருந்தார்.

வெளில வந்து பாத்தா 12 தான் இருக்கு. எனக்கே ஷாக். மணிகிட்ட கேட்டேன். டேப்ல பாட்ட சத்தமா வெச்சிட்டு எனக்கு மட்டும் கேக்குற மாதிரி “என் கிட்டயே இரு. எப்படி காணாம போகுதுனு காட்டுறேன். சுரேஷ் என்னை சந்தேகப்பட்டாம்பா”

நானும் உக்காந்துகிட்டே இருந்தேன். அந்தம்மா அடுக்களைக்குள்ள இருந்து வெட்டு மாஸ்டர் பக்கம் போச்சு. டேபிள் தாண்டி தான் போயாகணும். திரும்பி உள்ள போச்சு. மணி கூப்பிட்டான். இப்ப தட்டுல எட்டு பூரி தான் இருந்தது.

“இப்படித்தான் எல்லாம் போகுது. அண்ணனும் தம்பியும் என்னை சந்தேகப்பட்டியளேடே”

“நான் சந்தேகமே படலை மணி”

“நீ பாத்ததுலயே தெரிஞ்சிட்டு”

எங்கண்ணன் அந்தம்மாவ கூப்பிட்டு சொன்னாங்க. அம்மா, இந்த மாதிரி நம்ம ஒரு நாளைக்கு 3 கிலோ மாவு பூரி வித்தாலே பெரிய விஷயம். அதுல ஒரு கிலோ நீங்களே சாப்பிட்டா நல்லதில்லை. லைன் முடிஞ்சப்புறம் ஒரு பத்து மணிக்கா சாப்பிட்டுகிடுங்கனு சொல்லியாச்சு. அதுக்கு அந்தம்மா சொன்ன பதிலைத் தான் இப்ப வரைக்கும் என்னால மறக்க முடியலை.

“வயித்துக்கு தான தம்பி சாப்பிடுறேன். இதுல குத்தம் சொன்னா எப்படி?”

24 பூரி வயித்துக்கு சாப்பிட்டிருக்கு அந்தம்மா.. பாவம்.

அதுல இருந்து மணிகிட்ட பேசுறதில்ல அவங்க. போட்டுக் குடுத்துட்டார்ல. ஒரு நாள் அவசர வேலையா எங்க மாஸ்டர் அவர் வீட்டுக்கு போயிட்டார். மதியம் சாப்பாடு பண்ண ஆள் இல்லை. இந்தம்மாவே பண்ணிடுறேன்னு சொல்லிட்டாங்க. ஆனா துணைக்கு பொண்ணை கூப்பிட்டுக்கிறேன்னு சொன்னாங்க. ஒரு நாளைக்காக இன்னும் செலவு பண்ணனுமானு யோசிக்கும்போது அவங்களே

“காசெல்லாம் வேணாம் தம்பி! அவ சாப்பிட குடுத்தா போதும்”

ஏற்கனவே பட்டது போதும்னு நான் எங்கண்ணனுக்கு கண்ணை காமிச்சேன். அவங்களும் அதைப் பாத்துட்டாங்க. “சாம்பார்லாம் வேணாம் தம்பி! அவ வெறும் வத்தக்குழம்பு தான் திம்பா!”

அண்ணனும் சரினு வரச் சொல்லிட்டார். அம்மாவும் பொண்ணும் சும்மா பம்பரமாத் தான் சுத்தினாங்க. நினைச்சதை விட சீக்கிரமாவே ரெடியாயிடுச்சு. அசைவ ஹோட்டல்ல வேலை பாத்ததாலயோ என்னமோ சாம்பார் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். ஆனா ரசமும் வத்தகுழம்பும் சூப்பர். அவங்க பொண்ணு பரிமாறெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு, நாங்களே பரிமாறி காசெல்லாம் வாங்கிப் போட்டுகிட்டிருந்தோம். மணி அவசர அவசரமா என்கிட்ட வந்தாப்புல,

“அந்தப் பிள்ளை சாப்பிடுது”

“காலைலயே அண்ணன்கிட்ட சொல்லியாச்சு. சாப்பிடட்டும்”

“எனக்கொண்ணுமில்லை, ரெண்டு மணிக்கு அண்ணனும் தம்பியும் வந்து கிலோக்கு இத்தனை சாப்பாடு இருக்கணும், பாக்கி எங்கனு எங்கிட்ட கேக்காதீங்க”

“என்னயா சொல்ற?”

“அடுக்களைக்கு நீயே போய்ப் பாரு.”

அங்க போய் பாத்தா, அந்தப் பொண்ணு மூணு பேர் சாப்பாட்ட இலைல போட்டு வத்தக்குழம்பு மட்டும் ஊத்தி தின்னுகிட்டு இருக்கு. அவங்கம்மா பரவசமா பாத்துகிட்டு இருந்தாங்க. ஒண்ணும் சொல்லலை. எங்கண்ணன்கிட்ட மட்டும் சொன்னேன். அந்தம்மா ஒரு கல்யாணத்துக்கே சமைச்சா கூட அந்தப் பொண்ணுக்கு முழு சாப்பாடு போடுறேன்னு வாக்கு குடுக்காதீங்க. முடியாது.

அவங்க பொண்ணு ஒரு நாலு மணிக்கா கிளம்பிட்டு.

“சைவம் அவ்வளவா திங்க மாட்டா” ஓஹோ!!

“இதுக்கு முன்னாடி எங்கம்மா வேலைப் பாத்தீங்க?”

“நாங்க் ரெண்டு பேருமே பிரியாணி கடை பாய் கடைல தான்”

“இப்ப எங்க அவரு?”

“அவரு கடைய மூடிட்டு வேலூருக்கே போயிட்டார்”

மணி அப்புறமா எங்ககிட்ட வந்து சொன்னார் “ஒரு வேளை அவனும் ஒரு வேளை சோறுக்கு ஓகே சொல்லிருப்பான் போல”

அது மட்டுமில்லாம, ஏகப்பட்ட பொய். பாத்திரம் கழுவ ஒரு வண்டி பாத்திரம் போச்சுன்னா வரும்போது பாதி தான் வரும். சுவருக்கு அந்தப் பக்கம் பாத்திரத்த எல்லாம் தூக்கிப் போட்டு அப்புறமா ஓடிப் போய் எடுத்துட்டு வீட்டுக்கு போயிடும். ஒரு வாட்டி கண்டு பிடிச்சுட்டோம். நாங்க குரல உசத்துறதுக்கு முன்னாடி எங்க வெட்டு மாஸ்டர் அவ கைய பிடிச்சி இழுத்துட்டார்னு கூச்சல் போட்டு ஓடிருச்சு. எதுத்தாப்புல இருக்குற ஹோட்டல் காரர் எங்கப்பாட்ட அப்புறமா சொன்னார்

“மூதி தொலையுதுனு விட்ருங்க. இல்லை நீங்க கைய பிடிச்சி இழுத்தீங்கனு ஊர் பூரா சொல்லி வைக்கும்”

அடுத்த நாள் எங்க வெட்டு மாஸ்டர் சட்டையில்லாம வந்து நின்னார். மணி பார்சல் கட்டி குடுத்து அவர்கிட்ட போய்

“என்னவே கழுதைக் காதென்னாச்சு?”

“பேசாம போயிரு, இல்லை அப்பிருவேன்”

நான் “என்ன மாஸ்டர், என்ன விஷயம்”

“போன மூதி போகச்சுல என் கத்தியும் வெச்சு வெட்டுற பலகையையும் தூக்கிட்டு போயிட்டா பிரசன்னா! புதுசா ஒண்ணு வாங்கித் தாயேன்”

பேசிட்டே இருக்கும் போது அப்பா வந்தார்.

“ஆமா பிரசன்னா! ரெண்டு சேத்து வாங்கணும். பொருட்காட்சி வருது! கடை போட முடியுமானு பாக்கணும்”

சும்மாத்தான் சொல்றாருன்னு நினைச்சேன். அடுத்த மாசம் நாங்க பட்ட பாடு இருக்கே!!!

 

முந்தைய பதிவுகள்.

ஒரு வழியா இந்த ராஜா தாத்தா தொல்லை முடிஞ்சது. அதனால அப்பாவ அப்பப்ப மாத்தி விடுற வேலைகளை நானும் எங்க அண்ணனும் பண்ணிகிட்டு இருந்தோம். இது மணிக்கு கொஞ்சம் சாதகமா போயிருச்சு. எப்ப பாரு ஒரே ஜாலி தான் மனுஷன். பாட்டு பாடுறதென்ன, ஆடிகிட்டே பார்சல் கட்டுறதென்ன?. அப்பல்லாம் எப் எம் கிடையாது. நாங்க மெஸ்க்கு தனியா ஒரு வீடு, தங்க தனியா ஒரு வீடு எடுத்துட்டோம். அதனால, மெஸ்ல டீவி எல்லாம் கிடையாது. நாங்க வெச்சிருந்த டேப் மட்டும் தான் ஒரு பொழுதுபோக்கு அம்சம்.

ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. இருக்கவே இருக்கார் மணி. அவருக்கும் வெட்டு மாஸ்டருக்கும் அவ்வளவு பொருத்தம். சான்ஸ் கிடைச்சிருந்தா மணியோட விரல், நாக்கு எல்லாம் எங்க வெட்டு மாஸ்டர் கிட்ட வந்திருக்கும். ஆச்சு நாப்பது வயசுக்கு மேல. கல்யாணம் எதுவும் பண்ணிக்கிடலை. எப்ப பாரு கைல ஒரு பீடி. ஒரு அம்பது ரூவா குடுத்தா கூட பீடி தான் வாங்குவாரே தவிர்த்து சிகரெட் பக்கம் கூட போக மாட்டார்.

“உடம்புக்கு கெடுதி டே”

“பீடி குடிச்சா மட்டும் தங்க பஸ்பம் சாப்டா மாதிரியா?”

எங்க கடைல ரொம்ப நாள் வேலை பாத்தது, சொல்லப்போனா கடைசி வரைக்கும் வேலை பாத்தது மணி தான். எங்கப்பா, அண்ணன், என்னை எல்லாம் சமாளிக்குற ஆள். வெளில போடுற கடைக்கு துணைக்கு மணினா நான் கவலையே படாம போயிடுவேன். எப்படியும் நைட் செந்தில்வேல் தியேட்டர்ல எதுனா படம் பாத்திருப்பார்.

“சொக்கத்தங்கம் பாத்தேன் பிரசன்னா, என்னா படம்கே”

“எனக்கு பிடிக்கல மணி”

“உனக்கெப்படி பிடிக்கும்? தங்கச்சியா, அக்காவா?”

“உங்களுக்கு?”

“எனக்கும் யாரும் இல்லை, ஆனா எங்க காம்பவுண்டுல இருக்குறதெல்லாம் எனக்கு அக்கா தங்கை மாதிரி தாண்டே”

கல்யாணம் தான் ஆகலையே தவிர சாருக்கு கமலுக்கப்புறம் பொண்ணுங்களுக்கு அவருதான்னு ஒரு நினைப்பு. ஒரு பஸ், ஆட்டோ, வேன் விடமாட்டார். கரெக்டா டயம் பாத்து, சீப்பு, பவுடர், குங்குமம்னு ரெடி ஆகிடுவார். எப்படியெல்லாம் லுக் விடணும்னு அவர்கிட்டதான் நான் கத்துகிட்டேன் பாத்திகிடுங்க.

“என்ன மணி, ஹோட்டல் காரன் பொண்ணு போகுது போல”

“நான் அதெல்லாம் பாக்க மாட்டேன் பா”

“ஏன்?”

“அதான், நீ பாக்கெல்லா”

“என்  கிரகம்யா உம்ம கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு. இதுல விட்டு வேற குடுக்காரு. கொடுமை. என்னத்த சொல்ல?”

மணிகிட்ட அப்புறம் ரொம்ப பிடிச்ச விஷயம், அவரோட சைக்கிள். பெரிய கேரியர் வெச்சிருப்பார். கடைல போயிட்டு ஒரு மாசத்துக்கு தேவையான காய்கறி, பலசரக்கு எல்லாம் கேரியலயே வாங்கி வெச்சிட்டு வந்திரலாம். மணிய கோவப்படுத்த எங்களுக்கு இருக்குற ஒரே ஆயுதம். மதியம் சாப்பாடு முடிஞ்ச பிறகு அதோட கேரியர்ல ஏறி உக்காந்துகிடுவேன். எங்க அலர்ட் வெச்சிருந்தாரோ என்னவோ, எங்க இருந்தாலும் ஓடி வந்து என்னைப் பத்தி விடப் பாப்பார்.

“என்ன வேணா பேசுடே, சைக்கிள்ல விளையாடாத”

“அப்படி என்ன சைக்கிள் மேல அவ்வளவு பாசம்”

“எங்கம்மாக்கு பொறவு எங்கூட ரொம்ப நாள் இருக்குதுடே இது”

சொன்னா மாதிரி அம்மாவ பாத்துகுற மாதிரி தான் பாத்துக்குவார். ஒரு பக்கத்துல இருந்தும் சத்தம் வந்ததே கிடையாது. ரொம்ப தூரம் போய் எதுனா வாங்கிட்டு வரணும்னா, அவர் கிட்ட தான் கெஞ்சிக் கூத்தாடி சைக்கிள் வாங்கிட்டு போவேன். அழுத்துறதும் தெரியாது, போயிட்டு வாரதும் தெரியாது. கொண்டு வந்து நிறுத்திட்டு அவர்கிட்ட இதை சொன்னா, பெருமையா மீசை மேல கை வைச்சுட்டு ஒரு புன்னகை பூப்பார் பாருங்க. பேட் மொபைல் பண்ண, லுசியஸ் பாக்ஸ் எல்லாம் பிச்சை வாங்கணும்.

அவர் சொந்த வாழ்க்கைய பத்தியெல்லாம் ரொம்ப பேசிக்க மாட்டோம். கல்யாணம் பண்ணிக்கலையே தவிர ஊர்ல ஒரு பொண்ணு கூட தொடுப்பு இருக்குனு பேசிக்கிடுவாங்க. எங்களுக்கு அது தேவையில்லாத விஷயம். அதனால நாங்க அத ஒண்ணும் கேட்டுக்கலை. எப்பவாச்சும் கல்யாணத்த பத்தி கேட்டா மையமா சிரிச்சு மழுப்பிடுவார். சரி, பேசப் பிடிக்கல போலனு நாங்களும் விட்ருவோம். கல்யாணத்த பத்தி தான் பேச மாட்டாப்புல, பொண்ணுங்கள பத்தி பேச ஆரம்பிச்சா போதும் சரிக்கு சரியா வந்து நின்னுக்குவார்.

நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் அருமையானவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில முக்கியமான விஷயம் நாலு. பொண்ணுங்க, லட்கியாங், கேர்ள்ஸ், பிகர்ஸ். இதைத் தாண்டி நாங்க புரட்சிகரமா பேசினதெல்லாம் கிடையாது. நண்பர்கள் கடைக்கு வந்து புதுசா எந்தப் பொண்ண பத்தி பேசினாலும் மணிக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். பசங்க டென்ஷன் ஆகிடுவாங்க. எனக்கா குஷியாயிடும், இந்தாளு நமக்கு மட்டும் போட்டியில்ல, ஊர்ல ஒரு பொண்ணைக் கூட விடலைன்னு.

“பிரஸ், நம்ம ஜாவர் சார் டியூஷனுக்கு புதுசா ஒரு பொண்ணு பச்சை ஸ்கூட்டில வருதுல” பாலா சொல்லுவான்.

“அது புது பிள்ளை எல்லாம் இல்லை, ரெண்டு வருஷம் அவங்க தாத்தா வீட்ல தங்கி படிச்சுச்சு. நம்ம சிவன் கோயில் தெரு தான்” பார்சல் கட்டிகிட்டே போற போக்குல மணி போடுற பொக்ரான் இது.

”எல இந்தாள் சரியில்லை, எந்தப் பிள்ளையப் பத்தி பேசினாலும் சரியா சொல்லிப்புடுதாரு” நம்மவர்கள் அப்பப்போ சொல்லுவாங்க. ஒரு நாள் நல்ல மூட்ல இருக்கும் போது நானே கேட்டேன்.

“மணி, சொல்லுதேன்னு கோவிச்சுக்காதீங்க. எல்லாம் நல்ல படியா நடந்திருந்தா, உங்களுக்கு அந்த வயசுல பிள்ளைகள் இருக்கும். அதுகள பத்தி விவரம் கேட்டு வைக்குறதெல்லாம் நல்லாவா இருக்கு?”

“அந்தப் பொடிசுகளை பத்தி எனக்கெதுக்கு?”

“பின்ன எல்லாம் எப்படித் தெரியும்”

“அவங்க அம்மா, சித்தியெல்லாம் நான் சைட் அடிச்சிருக்கேம்டே. அதான் ஒரு பாசத்துல தகவல் கேக்குறது”

அவரை கடைசி வரைக்கும் திருத்தவே முடியாதுன்னு விட்டுட்டோம். அப்போ தான் எங்கப்பா, புதுசா ஒரு அம்மாவை வேலைக்கு சேக்குறதா சொன்னார். அவங்களே காய்கறி வெட்டி, சமையலுக்கு உதவியும் பண்ணி, பாத்திரமும் தேய்க்குற மாதிரி. அப்ப ஆரம்பிச்சது எங்க வெட்டு மாஸ்ட்டருக்கும், மணிக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. மணியோட எண்ணெய், சீப்பு செலவு எல்லாம் ரெண்டு மடங்காச்சு. எங்களுக்கு புது தலைவலியும் வந்தது.

அடுத்த பதிவில் தொடரும்…

 

 

முந்தைய இடுகைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் (கிளிக்கவும்னு போட்டதுக்கு விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு ;-))

திருநெல்வேலில ரொம்ப விசேஷமான சாப்பாட்டு ஐட்டம்ல சொதிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சேந்தவுங்க, இதை கல்யாணத்துக்கு மறுநாள் நடக்குற மறுவீட்டு விருந்துல கண்டிப்பா பண்ணுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். திருநெல்வேலில இருந்து வந்த முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாருமே சொதி பத்தி எழுதிருப்பாங்க.

என்னன்னா, கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாத்தையும் ஒரு இஞ்ச் நீளத்துக்கு வெட்டி வெச்சுக்கணும். தேங்காய்ப் பாலை, முதல் பால், ரெண்டாம் பால் ரெண்டையும் எடுத்து வெச்சுக்கணும். இதெல்லாம், சமையல் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி.

பாசிபருப்பை நல்லா வேக வெச்சு, அதுல இந்த ரெண்டாம் தேங்காய்ப்பாலை ஊத்தி, வேகவைக்கணும்.அப்போவே இஞ்சி தவிர இருக்குற எல்லா வெட்டி வெச்ச காய்கறியையும் வேக வெச்சிடணும். இஞ்சிய நல்லா சாறெடுத்து, அத வடிகட்டி, வேகுற காய்கறில விட்டு, உப்பு சேர்க்கணும். பாசிபருப்பும் காய்கறியும் நல்லா வெந்த பிறகு, தேங்காய்ல இருந்து முதல்ல எடுத்த பாலை விட்டு கொதிக்க வெச்சு, நுரைகட்டி வரும்போது இறக்கிடணும்.

அதுக்கப்புறம் ஒரு அரை மூடி எலுமிச்சை சாறைப் பிழிஞ்சு, கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி வெச்சு நகாசு வேலை எல்லாம் பண்ணி மூடி வைக்கணும். அவ்ளோ தான் சொதி பண்ற வேலை. இதுக்கு தொட்டுகிட கண்டிப்பா இஞ்சிப் பச்சடி வைக்கணும். அப்பதான் செரிக்கும். அதே மாதிரி லேசா மொறு மொறுனு பொறிச்ச உருளைக் கிழங்கு கறி வெச்சுத் தின்னா.. நான் சொல்ல வேணாம், அதெல்லாம் தின்னு பாத்தாதான் தெரியும்.

இந்த மூடி வெச்ச, சொதிக் குழம்பை திறக்கும் போது வருமே ஒரு வாசனை. ஈடு இணையே கிடையாது. திருநெல்வேலில இத ஹோட்டல்ல சாப்பிடணும்னா வெள்ளிக்கிழமை மட்டும் பாளையங்கோட்டை வடக்கு பஜார்ல இருக்குற சேது மெஸ்க்கு போகணும். பதினோரு மணில இருந்து அங்க கூட்டம் அம்ம ஆரம்பிச்சுடும். பெரிய பெரிய கேரியர் எல்லாம் கடை வாசல்லயே தவம் கிடக்கும். பக்கத்துல இருக்குற அன்னபூர்ணா ஹோட்டல்ல அன்னிக்கு மட்டும் ஈ ஆடும்.

இதே மாதிரி ஒரு விஷயத்த நம்மளும் பண்ணனும்னு அப்பாக்கு ரொம்ப ஆசை. ஆனா இதைப் பண்ண ஒரு அசல் சைவப் பிள்ளைமார் ஆச்சி இருந்தாதான் எடுபடும்னு எங்க வெட்டு மாஸ்டர் சொல்லிட்டார். எப்படியும் அம்மாவால மாஸ்டர் இல்லாம ரொம்ப நாள் சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு அப்பாவும் பேப்பர்ல விளம்பரம் குடுத்தார். அதை பாத்து ஒரு அம்மா வந்தாங்க. எனக்கு அவங்க பேர் என்னனு தெரியலை. ஆச்சினு தான் கூப்பிடுவேன். அவங்களுக்கும் என பேர் தெரியாது. தம்பினு தான் கூப்பிடுவாங்க. சின்ன மெஸ் தான்னாலும் எங்கப்பா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்ச்க்கு இண்டெர்வியூ எல்லாம் வைச்சார். அப்ப அவங்க பண்ணது தான் இந்த சொதிக்குழம்பு. அடுப்புல பாதி வேகும் போதே நான், மணி எல்லாம் தட்டைத் தூக்கிட்டு அடுப்படிக்கு போய் நின்னுட்டோம். அப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிட்டு வேலை கன்பர்ம்னு.

நல்லா வேலை செய்வாங்க. அளவா சாப்பிடுவாங்க. பாட்டி இறந்தப்புறம் அம்மாக்கு நிறைய வேலைகள் இருந்ததால, எங்க வேலை எல்லாம் நாங்களே செய்ய பழகிக்கிட்டோம். இவங்க வந்தப்புறம், சாப்பிட உக்காந்தா தண்ணி தன்னால வந்திடும், தட்டுல சோறு, தனி தட்டுல தொடுகறினு கிட்டத்தட்ட எங்களை பெரும் சோம்பேறி ஆக்கிட்டாங்க. தேவையில்லாம பேச மாட்டாங்க. பெருசா சம்பளம் கூட கேக்கலை. எப்பவும் மெஸ்ல தான் இருப்பாங்க. எங்க கடைலயும் வெள்ளிக்கிழமைல சொதி சாப்பாடுனு போர்டெல்லாம் வெச்சாச்சு.

வெள்ளிக்கிழமை அன்னிக்கு மட்டும் எங்க கடைல இரு அம்பது இலை விழுந்தது. சாப்பிட்டு போனவங்க எல்லாம், மறுபடி யாரையாச்சும் கூப்பிட்டு வந்து இன்னொரு தடவை சாப்பிட்டு போனாங்க. அப்பாவுக்கு எப்பவுமே காசு வர்றத பத்தி கவலை கிடையாது. அன்னிக்கு வந்தவங்க சாப்பிட்டு அவங்க வயிறு நிரம்புச்சோ இல்லையோ, சாப்பிட்டதப் பாத்து எங்கப்பா மனசு ரொம்ப நிறைஞ்சது.

மணி எங்கிட்ட வந்து. “அம்பது இலை விழுந்திட்டு. எனக்கு இருக்கா தெரியலையே?”ன்னாப்புல. அவன் அவன் கவலை அவனவனுக்கு.அந்தம்மா எங்களுக்காக ஏற்கனவே எடுத்து வெச்சிருந்தாங்க.

என்னதான் கேட்டாலும் அவங்க வீட்டைப் பத்தி மட்டும் சொல்லவே மாட்டாங்க. எதுனா அவங்களுக்கு வேணும்னா கூட கேட்டு வாங்கிக்க ரொம்ப கூச்சப்படுவாங்க. ஆனா எங்களுக்கு பண்றதெல்லாம் பாத்து பாத்து பண்ணும் போது நாங்க பண்ண மாட்டோமா? பொட்டு வெச்சுகிறதில்லை அதனால புருஷன் இல்லைனு மட்டும் தெரியும். மத்தபடி அவங்க விஷயத்த  பத்தி எப்போ கேட்டாலும் எழுந்து போயிடுவாங்க.

நல்லபடியா வேலை பாத்திட்டு இருந்ததால, நாங்களும் பெருசா எதுவும் கேட்டுக்கலை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்க கடைல கூட்டம் கூடிகிட்டே தான் போச்சு. எங்க கடைக்கும் ஒரு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் கேரியர் வரிசை கட்ட ஆரம்பிச்சது. வெள்ளிக்கிழமை காலைக்கு மட்டும் எங்க மரத்தடி கடைக்கு லீவ் விட்டாச்சு. ஏன்னா வீட்டுல பார்சல் போடல்லாம் ஆள் வேணும்லா?

அப்போத்தான், ஒரு இண்டிகா கார் வந்து நின்னுச்சு. மதியம் ஒரு மணி. கடைல நல்ல கூட்டம். அந்த கார் வந்ததை கவனிச்சேன். ஆனா கார்ல இருக்குற யாரும் உள்ள வந்த மாதிரி தெரியலை. சரினு நானும் விட்டுட்டேன். ஒரு ரெண்டு மணிக்கு க்டைல கூட்டம் குறைய ஆரம்பிச்சது. அப்போ தான் கார்ல இருந்து ஒருத்தர் இறங்கி வந்தார். சாப்பிட உக்காந்தவர் சொதி சாப்பாட்டை ஒரு வாய் அள்ளி வெச்சவர், குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார்.

மணி தான் முதல்ல பாத்தாப்புல. அவசரமா எங்கண்ணன்கிட்ட வந்து, “சுரேசு! கார்ல வந்தவன் காசு கொண்டு வரலை போல. அழுதான். நீ கொஞ்சம் என்னானு பாரேன்”ன்னார். எங்களுக்கு இது மாதிரி விஷயம் எல்லாம் புதுசு. அவர்கிட்ட போய் என்னானு கேக்கவும் முடியல. கேக்காம இருக்கவும் முடியலை. அவரே பேச ஆரம்பிச்சார்.

“இதைப் பண்ணவங்கள நான் பாக்கலாமா?”

“எதுக்கு?”

“சொல்றேன். பிளீஸ். நான் பாக்கணும்”

மணி அதுக்குள்ள விஷயத்த சொல்ல, கடைல வேல பாத்துட்டு இருந்த அம்மாவும் வந்துட்டாங்க. இந்த ஆள் தடால்னு அவங்க கால்ல விழுந்துட்டான். எங்களுக்கும் மயக்கம் வராத குறை. அந்தம்மா அங்க நிக்கவே இல்லை. உள்ள போய் கிச்சன் கதவை மூடிகிட்டாங்க. எங்களுக்கு ரெண்டு பேர்கிட்டயும் பேசிப் பாக்க பயம். அவர் அழுதுகிட்டே கார்ல ஏறி போயிட்டார். அப்பா அம்மா ஆபீஸுக்கு போன் பண்ணி சொன்னார். அன்னிக்கு அவங்கள நாங்க மறுபடி பாக்கல.

மணி மதியம் ஒரு பீடிய இழுத்துட்டே சொன்னார்.

“உங்கண்ணண்ட ஒரு விஷயம் சொன்னா, கவனிக்க மாட்டேக்கான்பா!”

“என்ன கவனிக்கலை?”

“அந்தாளு அழுதுட்டே காசு குடுக்காம் போயிட்டான் கவனிச்சியா?”

அம்மா சாயங்காலம் வந்து அவங்க கிட்ட பேசினாங்க. வந்தவன் அவங்க பையன் தான். பக்கத்துல செட்டிகுளத்துல வீடு. மருமகள் கூட சண்டைனு கிளம்பி வந்துட்டாங்க போல. ரெண்டு மாசம் கழிச்சு பையன் பிரண்ட் யாரோ ஆர்டீஓ ஆபீஸ் கிட்ட பாத்து சொல்லிருக்காங்க. அவன் வந்திருக்கான். போலீஸ்க்கு போனானா என்னானெல்லாம் தெரியலை. அடுத்த நாள் ஆர்டீஓ ஆபீஸ் லீவு. அதனால எங்க கடை கொஞ்சம் காலியாதான் இருந்தது. மறுபடியும் அவன் வந்தான். இந்த தடவை வீட்டம்மாவோட.

போன தடவை வந்தப்பவே பழைய நடிகர் பாலாஜி மாதிரி சீன் போட்டானே, இந்த தடவை என்னாகப்போகுதோனு எங்களுக்கெல்லாம் ரொம்ப பயம். ஆனா வந்தவங்க ரெண்டு பேரும் சாப்பிடவும் இல்லாம, தண்ணி கூட குடிக்காம கடை வாசல்லயே ரெண்டு மணி நெரம் நின்னாங்க. அம்மா சரினு சொல்ல, அந்தம்மா பேசாம அவங்க சாமானெல்லாம் எடுத்துகிட்டு கார்ல போய் உக்காந்தாங்க. வண்டி போயிடுச்சு. ஒரு வார்த்தைக் கூட யாருமே பேசிக்கலை.

அவங்க போனாக்கூட எங்கம்மா அவங்களோட சொதிக்குழம்பை அவங்கள விட அருமையா பண்ண ஆரம்பிச்சு, அடுத்து வந்த மாஸ்டெருக்கெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. ஒரு மாசம் கழிச்சு அந்தம்மா எங்க கடைக்கு வந்திருந்தாங்க. புது வளையல், புடவைனு கொஞ்சம் பொலிவா இருந்தாங்க. பேசிட்டே இருக்கும்போது அம்மா கிட்ட அவங்க தூக்கு வாளில கொண்டு வந்த சொதிக் குழம்பை குடுத்தாங்க. சந்தோஷமா சாப்பிட உக்காரும்போது வழக்கம் போல தண்ணி எடுக்க மறந்துட்டேன். நிமிர்ந்து பாக்குறதுக்குள்ள, தண்ணி டம்ளரோட அவங்க நின்னாங்க.

அடுத்த பாகம்.. அடுத்த வாரம்.

முந்தைய பதிவுகளை படிக்க இங்கே கிளிக்கவும்

அடுத்து நடந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அப்பா அம்மாவ எப்படியும் சமாளிச்சுடலாம்னு நினைச்சேன். அண்ணன் களத்துல இறங்கின பிறகு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆர்டீஓ ஆபீஸ் பக்கத்துலயே ஒரு வீடு பாத்தாச்சு கடை போட. நாங்க தங்க தனியா இரு வீடு. நான் ஒருத்தன் மட்டும் தான் எதிர்ப்பு. ஒரு பருப்பும் வேகலை. அங்க நாங்க தங்கப் போன வீடப் பாத்த உடனே தான் எனக்கு கொஞ்சம் ஆறுதல். நல்ல பெரிய வீடு. பாளையங்கோட்டைல இருந்த மாதிரி இடுக்கி நசுக்கி இருக்க வேண்டாம். அந்த ஒரே காரணத்துக்காக தான் நான் பேசாம இருந்தேன். பசங்கள பாக்கவும் ஒரு பத்து நிமிஷம் எக்ஸ்ட்ரா சைக்கிள் அழுத்தினா போதும்.

பழைய டேபிள் ஒண்ணு. ரெண்டு செட் பெஞ்சு. நாங்க மெஸ் ஆரம்பிச்சாச்சு. அப்பா போய் ஆர்டீஓ ஆபீஸ்ல நோட்டீஸ் எல்லாம் குடுத்துட்டு வந்தாங்க. முதல் நாளே நாங்க எதிர்பாக்காத அளவுக்கு கூட்டம். முதல் நாள் தானனு அப்பா ஒரு 20 சாப்பாடு ரெடி பண்ண சொன்னார். ஆனா வந்தது என்னவோ 30 பேருக்கு மேல. அதனால எல்லாருக்கும் சந்தோஷம். கடைல சப்ளை பண்ண, காய்கறி வெட்ட ரெண்டு பேர போட்டோம். சப்ளை மாஸ்டர் பேரு மணிகண்டன். எங்களுக்கு மணி. நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்து எங்க வீட்ல வேலை பாத்த அம்மாவோட புருஷன் தான் வெட்டு மாஸ்டர். இதுல என்ன ஒரு தொழில் ரகசியம்னா, எங்க வெட்டு மாஸ்டருக்கு சரியா கண்ணு தெரியாது பாத்துக்குங்க. என்னத்த கட்டைல போட்டாலும் வெட்டாம விடமாட்டார். ஒரு தடவை அவங்க வீட்டம்மா விரலை பிடிச்சி வெட்டப் போயிட்டார்.

என்னதான் மத்தியானம் கூட்டம் நல்லா வந்தாலும், அந்த ஏரியால காலைல டிபன் அவ்வளவா போகலை. அப்பா பழைய ஆயுதத்தை கைல எடுத்துகிட்டார். மறுபடியும் கைல டேபிள் தூக்கிகிட்டு ஆர்டீஓ ஆபீஸ் முன்னாடி கடை.

மணி தான் எப்பவும் எங்க கூட சப்ளை பண்ண வருவாப்ல. எங்களுக்கு அப்பெல்லாம் பார்சல் கட்ட வராது. மணி தான் கட்டுவார். நாங்கெல்லாம் அவர் பார்சல் கட்டுற வேகத்த ஆனு பாத்துட்டு உக்காந்திருப்போம். அவரு எப்பவுமே பேண்ட் போடமாட்டார். வேட்டி தான். பாளையங்கோட்டைல இருந்து சைக்கிள் மிதிச்சிட்டு வருவாப்ல. நல்லா சிரிக்க சிரிக்க பேசுவார். அதுமாதிரி ரொம்ப கேனைத்தனமா எதுனா பண்ணி வெச்சு அப்பாகிட்ட நல்லா திட்டு வாங்குவாப்புல.

ஒரு நாளைக்கு நான் கடைக்கு லேட்டாப் போனேன். நல்ல தூக்கம். சாப்பிட்டுட்டு ஆர்டீஓ ஆபீஸ் கடைக்கு வந்தா மணிய காணோம். ஏதோ வாங்க போயிருந்தாப்புல. அப்பாவும், அண்ணனும் தான் இருந்தாங்க. எதுனா வேலை சொல்லிடப் போறாங்கனு பயந்து டக்குனு தட்டுல ரெண்டு இட்லியப் போட்டுட்டு உக்காந்துட்டேன். அப்பொ பாத்து ஐயப்பா அண்ணன் சொன்ன மகளிர் மட்டும் பஸ் போச்சு.  ஒருத்தர் சாப்பிட்டுட்டு அப்பாகிட்ட காசு குடுத்தார்.

“சுரேஷு! ஒரு அம்பது பைசா சில்லறை எடு” அப்பா கேட்டார்.

அண்ணன் ஒரு ஒரு ரூவா எடுத்தத பாத்தேன். சரி சில்லறை இல்ல போலனு நினைச்சேன்.

“ஒரு ரூவா இல்லப்பா, அம்பது பைசா! ஃபிப்டி பைசே”

இப்ப ஒரு ரெண்டு ரூவா காயின் அப்பா கைக்கு வந்தது. நிமிந்து பாத்தா எங்க அண்ணன் கல்லாவையும் பாக்கலை, எங்க அப்பாவையும் பாக்கலை. தூரத்துல இருந்து பஸ்ச நோக்கி ஓடி வந்த ஒரு பிள்ளைய விடாம பாத்திட்டு இருந்தாங்க.

“நான் சொல்றது உனக்கு கேக்குதா?? அம்பது பைசா, சின்னதா இருக்கும். முன்னாடி 50னு போட்டிருக்கும். பின்னாடி இந்திய வரைபடமெல்லாம் இருக்கும்.” எங்கப்பா விடாம கத்த ஆரம்பிச்சிட்டார். கடைல காசு குடுத்துட்டு இருந்தவர் பஸ்ல இருந்த பொண்ணுங்க எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டங்க. எனக்கும் சிரிப்பு தாங்கல. ஆனா அந்த பொண்ணு மட்டும் சிரிக்காம வண்டில ஏறி போயிடுச்சு.

அப்பா அதுக்கப்புறம் ஒண்ணும் பேசாம போயிட்டார். எனக்கா ஒரே சிரிப்பு. மணியும் அதுக்குள்ள வந்துட்டாப்புல.

“அண்ணே! இது தான் உங்க தொழில் பக்திக்கு காரணமா?”

பதில் சொல்லாம அசடு மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சார்.

“ஓ! நீயும் பாத்துட்டியா? நானும் பாத்துட்டுதாண்டே இருக்கேன். உங்கண்ணன் என்னமோ அந்தப் பிள்ளைய கடலோர கவிதைகள் சத்யராஜ் மாதிரி பாத்துட்டே நிக்கான் தினமும்” மணி உள்ள புகுந்துட்டார்.

”மணி உங்களுக்கும் கம்பேர் பண்ண வேற ஆளே கிடைக்கலியா?”

”சத்யராஜ்க்கு என்னடே குறைச்சல்?”

“நான் எதுவும் சொல்லலை.”

”நாங்கெல்லாம் ரசிகர் மன்றத்துல இருக்கோம்ல”

“என்னது?? சரி என்ன பிடிக்கும்னு சேந்தீங்க??”

“அவன் செம ஸ்டைலா சிகரெட் பிடிப்பாண்டே” சொல்லிட்டே ஒரு பீடிய பத்த வைச்சார். ஒரு அரை மணி நேரம் வாய் சும்மா இருக்காது.

அப்போதைக்கு அண்ணன் எதுவும் சொல்லலை ஆனா அப்புறமா தான் தெரிஞ்சது அந்த பொண்ணு தான் எங்க அண்ணனோட திடீர் மனமாற்றத்திற்கு காரணம்னு. விஷயம் என்னன்னா எங்க அண்ணன் கேடி, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர்ல தான் மெஸ்க்கு வீடு பிடிச்சிருந்தார். சரி அண்ணன் இந்தப் பொண்ணோட செட்டில் போல இருக்குனு நினைக்கும்போது தான் எங்க நட்பு எல்லாம் கடைய பாக்க வாரோம்னு வந்து உக்காந்தாங்க.

அண்ணனும் நானும் ஒரு பத்து நிமிஷம் தான் உள்ள போயிருப்போம், கதவ தட தடனு தட்டுற சத்தம் கேட்டுச்சு. வெளில வந்து பாத்தா, அந்தப் பொண்ணோட அப்பா.
“தம்பி நானும் ஓட்டல் காரன் தான்! ஆனா உங்க கடைக்கு வர ஆள் சரியில்லையே”
“என்னாச்சு சார்?”
“அந்த கண்ணாடிக்காரன் என் பொண்ண உத்து பாத்துகிட்டிருக்கான். புதுசா வந்திருக்கீங்க.. பாத்து நடந்துக்குங்க”
 கண்ணாடிக்காரன் வேற யாரும் இல்லை. எங்க போலிஸ் குமார் தான். போலிஸ்கு முயற்சி பண்ணிகிட்டிருந்தான். அதனால தான் அவர் போலிஸ் குமார். வெளில இருந்து ஆள் வந்ததுமே பாலா ஐயப்பாவ காணோம். எங்க அண்ணனுக்கா சரியான கடுப்பு.
“ஏலே! அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் மடிலே கை வைக்கியா?”
“இல்லையே நீ சொன்ன பிள்ள காலேஜ்லா. நான் பாத்தா பிள்ள ஸ்கூல்”
இப்ப தான் நான் கவனிக்க ஆரம்பிச்சேன்.
ஸ்கூல் படிக்குற ஒரு பொண்ணு சைக்கிள எடுத்திட்டு கிளம்பிச்சு.
“தங்கச்சியா இருக்குமோ?”
அப்பல இருந்து தான் எனக்கு மெஸ் பிடிக்க ஆரம்பிச்சது.