Category: உலக சினிமா


தி டெர்ரர் லைவ்

மன்னிக்குறவன் மனுஷன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்னு விருமாண்டில கமல் ரெண்டு மூணு தடவை சொல்லிடுவார். அதை வெச்சு எடுக்கப்பட்ட படம் தான் தி டெர்ரர் லைவ். முன்னாடி ஆங்கிலத்துல தி போன் பூத்னு ஒரு படம் வந்து சக்கைப் போடு போட்டுச்சு. அதே டெம்ப்ளேட்ல எடுக்கப்பட்ட கொரியன் படம்தான் தி டெர்ரர் லைவ்.

ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல காலைல நிகழ்ச்சி பண்றார் நம்ம ஹீரோ. அப்ப வர்ற ஒரு போன் கால், தான் கட்டுமானத் தொழில் செய்றதாகவும், ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொல்லுது. இது என்னடா வம்பா போச்சுனு நிகழ்ச்சி நடத்துறவர் பேச்சை மாத்த, என்கிட்ட பாம் இருக்கு, பக்கத்துல இருக்குற பாலம் இப்ப வெடிக்கப் போகுதுனு சொல்லுறார் போன்ல வர்றவர். நம்ம ரேடியோ ஸ்டேஷன்காரர் இதை நம்பாம கால் கட் பண்ண அடுத்த நிமிஷம் பாலத்துல பாம் வெடிக்குது.

ஏற்கனவே ராத்திரி அர்னாப் மாதிரி டிவி ஷோ பண்ணிட்டு இருந்தவர்தான் நம்ம ரேடியோ நிகழ்ச்சி நடத்துறவர். நியூஸ் ரிப்போர்ட் பண்ண காசு வாங்கினதா சொல்லித்தான் அவரை ரேடியோக்கு அனுப்பியிருப்பாங்க. இப்படி ஒரு போன்கால் தான் தன் வாழ்க்கைய மாத்த போகுதுனு பழைய பாஸுக்கு போனைப் போட்டு ரேடியோ ஷோவை டீவி ஷோவா மாத்துறாங்க. மறுபடியும் கால் வருது. அந்தப் பாலம் கட்டும்போது மூணு பேர் தவறி விழுந்து இறந்துட்டாங்க, அவங்களுக்கு நிதியும் வரலை, யாரும் ஆறுதலும் சொல்லலை. அதனால நாட்டோட அதிபர் வந்து மன்னிப்புக் கேக்கணும்னு சொல்லுது அந்தக் குரல். பத்தாக்குறைக்கு நம்ம ஹீரோ காதுல வைக்குற ஹெட்செட்ல பாம் வெச்சிடுறாங்க. 90 நிமிஷத்துல என்ன நடக்குது. மறுபடி குண்டு வெடிக்குதா? அதிபர் வந்து மன்னிப்பு கேட்டாரா? இதுதான் கதை.

மேலோட்டமா பாத்தா ஒண்ணுமேயில்லாத கதை தான். ஒரு ஸ்டூடியோ மட்டும்தான் லொக்கேஷன். ஆனா படம் முதல் நிமிஷத்துல இருந்து துவங்கிடுது. எப்படி ஒரு குண்டு வெடிப்போ, இல்லை உயிரிழப்போ ஊடகங்களுக்கு வெறும் டி.ஆர்.பியா மாறிடுச்சுனு முகத்துல அடிக்குற மாதிரி சொல்லிருக்காங்க. ஒரு கட்டத்துல அதிபர் மன்னிப்புக் கேக்க வரப்போறதில்லைனு தெரியுது. ஆனா போன் பேசுறவர் இன்னொரு குண்டை வெடிக்க வைக்கப் போறதா சொல்றாரு. டி.ஆர்.பி ரேட்டிங் நினைச்ச அளவு வரலை. இன்னொரு குண்டு வெடிச்சு மக்கள் இறந்தா பாப்பாங்கனு ஹீரோவோட பாஸ் கொலைகாரனை டெம்ப்ட் பண்ற மாதிரி பேசச் சொல்லுவார். சில விளம்பரத்துக்காகவும் ஒரு பதவிக்காகவும் இப்படி எல்லாமா பண்ணுவாங்கனு தலையே சுத்திடும். படத்தோட பலமே நடிகர்கள் மற்றும் எடிட்டிங்தான். ஒரு டி.வி. ஸ்டேஷன்ல என்ன நடக்கும், எப்படி எல்லாம் நடக்கும். தனக்கு வாய்ப்பு கிடைக்கலைனா அடுத்த ஸ்டேஷனுக்கு எவ்வள்வு சுலபமா மக்கள் தாவிடுறாங்கனு எல்லா ஏரியாலயும் டைரக்டர் புகுந்து வந்துடுறார். இன்னிக்கு நிலமைல நம்ம நாட்ல மட்டுமில்லாம எல்லா நாட்டிலயும் மீடியா ஆளும்கட்சி கைல தான் இருக்கு. அதுல மேல்மட்ட, நடுமட்ட, அடிமட்ட பொடிகள் எல்லாம் நம்ம என்ன பாக்கணும், கேக்கணும்னு முடிவு பண்ணுறாங்கனு நினைக்கும் பொழுது ராமயண, மகாபாரதத்தை தவிர இவங்க டி.வி.ல போடுற எதையும் நம்பக் கூடாது போல இருக்கு.

பல குண்டுவெடிப்புகள் நடக்குது. ஆனா சம்பவத்துக்கு பொறுப்பேத்துகிட்டு ஒரு அதிகாரியோ, இல்லை அதிபரோ வருத்தம் தெரிவிச்சா எல்லா உயிரையும் பொருளையும் காப்பாத்தி இருக்கலாம். செஞ்ச தப்பை ஒத்துக்ககூடாது. இதனால என் பேரனுக்கு பேரன் எலக்‌ஷன்ல நிக்கும் போது பிரச்சினை வரும்னு சுயநலமா சிந்திக்கிற அரசியல்வாதி, அவருக்கு சொம்பு தூக்குற அதிகாரிகள், இதனால ஏற்படுற இழப்புகளைத் தான் படத்துல சொல்லி இருக்காங்க.

ஒரு 90 நிமிஷம் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் நகராம நகம் கடிச்சுட்டே படம் பாக்குறது உங்களுக்கு இஷ்டம்னா இந்தப் படத்தை விட்டுடாதீங்க. முக்கியமா படம் முடிஞ்சப்புறம் நம்ம நாட்டுல இருக்குற பல ஊடகங்களோட இந்தப் படம் ஒத்துப் போறதுனால இதை சீக்கிரமே ரீமேக் பண்ணலாம். ஆனா எந்தக் கட்சி ஆட்சில இருந்தாலும் தடை பண்ணிடுவாங்க. அதனால் நம்ம சப்டைட்டில்ல கொரிய மொழியிலயே பாக்குறதுதான் உசிதம்.

 

Advertisements

2006ல் பிரொஸன்சித் சட்டர்ஜி நடிப்பில் ரிதுபூர்ணோ கோஷ் இயக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம். ரிதுபூர்ணோ கோஷ் எப்பொழுதும் ஒரு தேர்ந்த கதை சொல்லி. கதை சொல்லுதல் என்பது ஒரு கலை. ஒருவரை ஒரு தேநீர் கடையில் பார்த்து ஒரு கதை சொல்லத் துவங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அவர் பாதியில் எழுந்து செல்லாதிருக்கும் வகையில் கதை சொல்வது எவ்வளவு கடினம்? அதை மிகவும் அநாயசமாக செய்யக் கூடியவர் தான் ரிதுபூர்ணோ கோஷ்.

தோஸார் படத்தின் கதையும் ஒரு சிறுகதையாகத்தான் இருந்திருக்க வேண்டும். படத்தின் துவக்கத்தில் ஒரு விடுதியில் இருந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கிளம்புகின்றனர். விடுதியில் வேலை செய்பவர்கள் அவர்களை ஒரு கணவன் மனைவியாகத்தான் பார்க்கிறார்கள். திரும்ப செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிறது. பெண் இறந்து விடுகிறாள். ஆண் பலத்த காயங்களுடன் தப்பிக்கிறார்.

அதன் பின்னரே அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல; அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிபவர்கள் என காட்டப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஆண் கௌசிக்கின் மனைவி காவேரி மருத்துவமனைக்கு விரைகிறாள். அங்கு தான் தன் கணவன் தனக்குத் தெரியாமல் அலுவலகத்தில் வேலை செய்யும் மிதாவுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் எனத் தெரிய வருகிறது. பரிதாபத்தைவிட கோவம் மேலோங்க அவர் தன் கணவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றுகிறாள். அலுவலகத்தில் கௌசிக்கிற்கு இருக்கும் நல்ல பெயரால் இந்த விஷயம் மூடி மறைக்கப்படுகிறது.

காவேரி ஒரு நாடக கம்பெனியில் பணிபுரிகிறாள். அங்கிருக்கும் அவளது நண்பர்கள் பிருந்தா மற்றும் பாபி காவேரிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். பிருந்தா பாபியைவிட வயதில் மூத்தவளாக இருந்தாலும், திருமணம் ஆனவளாக இருந்தாலும் பாபியிடம் காதல் கொள்கிறாள். இது காவேரிக்கும் தெரியும்.

இது இவ்வாறிருக்க, விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கணவனின் கதை இன்னும் கஷ்டம். அவர்களது ஒரே மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில், தன் மனைவி தனக்குத் தெரியாமல் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் எனத் தெரியாமல் திடீரென்று அவரின் மரண செய்தியும் அவரது நடத்தையும் அவருக்குத் தெரிய வரும் பொழுது என்ன செய்ய எனத் தெரியாமல் திண்டாடுகிறார். உடல் பசியைத் தீர்க்கவும், மனைவியை பழிவாங்கவும் பரத்தையிடம் செல்லும் பொழுதும், அங்கு இயங்க முடியாமல் தவிப்பதும், அந்தக் கணவர் கதாபாத்திரத்தின் பேரில் ஒரு பெரிய பரிதாபத்தை ஏற்பட்டுத்துகிறது.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த கணவனை கவனிக்க பிடிக்காமலும், கவனிக்காமல் இருக்கவும் முடியாமல் காவேரி இருதலைக் கொள்ளி எறும்ப்பாய் தவிக்கிறார். தன்னால் ஒரு பெண் இறந்து போனது மட்டுமல்லாமல் அவள் குடும்பம் சிதறி அவர்கள் தவிப்பதை எண்ணிக் கௌசிக்கும் வேதனைப்படுகிறான். ஒரு கட்டத்தில் தன்னை விட என்ன அவளிடம் இருந்தது எனத் தெரிய, கணவனின் கைப்பேசியிலிருந்து காவேரி அந்தப் பெண்ணின் எண்ணிற்கு அழைக்கிறார். ஒரு அழகிய பறவைப் போல் அந்தப் பெண்ணின் குரல் ஒலிக்கிறது. ஒரு விதமான அசூயையுடன் காவேரி போனை அணைக்கிறாள். காவேரி இல்லாத சமயம் மிதாவின் குரலை ஒரு முறைக் கேட்க கௌசிக் அதே எண்ணிற்கு அழைத்துப் பார்க்கிறாரன். அவளது குரலைக் கேட்க கண்ணீர் பெருகுகிறது. ஒரே செயலை இருவர் வேறு வேறு நோக்கத்திற்காக செய்யும் பொழுது அது அவர்களை எவ்வாறு ரியாக்ட் செய்ய வைக்கிறது என்பதை இயக்குனர் மிக அழகாக காட்டியுள்ளார்.

காவேரியும் இறந்துபோன பெண்ணின் கணவனும் சந்திக்கும் காட்சி இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிப் பேசாமல் சுற்றிச் சுற்றி வேறு விஷயங்களைப் பேசினாலும் எப்படி இந்த நிலையை ஒருவர் எதிர்கொள்கிறார் என இன்னொருவர் அறிய விழைவது அற்புதமான ஒரு விஷயம்.

“உயிரோடு இருந்தால் கேட்கலாம், சண்டையிடலாம். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போவது கொடுமை” என அந்தக் கணவர் சொல்ல, காவேரி “உயிரோடு இருந்தால் கேட்கவும் முடியாமல், கேட்காமல் இருக்கவும் முடியாமல் இருப்பதை விடவா கொடியது” எனக் கேட்பார். ஆனால் பின் கௌசிக் தனது பழக்கத்தைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு ஒரு பெண் என்பதைத் தாண்டி மனைவி என்கிற முறையில் காவேரி தன் கணவனை ஏற்றுக் கொள்கிறாள். இதே நிலை அந்தப் பெண்ணிற்கும் நடந்திருக்குமா என யோசித்துப் பார்த்தேன். கேள்விக்குறி தான் மிஞ்சுகிறது.

படத்தின் பலமே ஒருவரும் ஒருவரைப் பற்றியும் ஜட்ஜ் பண்ணாமல், சம்பவத்தை சம்பவமாக பார்ப்பது தான். இதை விடுத்து நான் செய்தால் என்ன செய்திருப்பாய், நான் எவ்வளவு நல்லவன் எனக்குப் போய் இப்படி ஒரு மனைவி என எந்த ஒரு வசனமோ காட்சியோ இல்லாமல் இருப்பது தான். படத்தில் எல்லோருடைய நடிப்பும் படத்திற்கு ஏற்றார்போல் கச்சிதமாக பொருந்தி வந்துள்ளது. பிரொஸன்சித் சட்டர்ஜி வங்காளத்தில் சிறுத்தை, சிங்கம் படங்களில் நடித்திருந்தவர் என்பதால் அவரிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தவறு செய்துவிட்டு செயல்பட முடியாமல் மனைவியை சமாதானப்படுத்த கஷ்டப்படும் கணவனாக அவரது நடிப்பு அற்புதம். இந்த வாக்கியத்தை எழுதும் பொழுதுதான் அந்த கதாபாத்திரத்தின் ஆழம் புரிகிறது. காவேரியாக கொண்கொணாசென் ஷர்மா. சொல்லவே தேவையில்லை. படம் முழுக்க இவரது ராஜ்ஜியம் தான். கணவன் செய்த தவறுக்கு அவரை கொல்லும் அளவுக்கு கோபம் வந்தாலும் உடல்நிலை சரியில்லாததால், அவரது சகோதரரையும், அலுவலக மேலாளரையும் வறுத்து எடுக்கும் இடங்களில் மின்னுகிறார்.

முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படத்தைல் ஒளிப்பதிவாளருக்கு பல சவாலான விஷயங்கள். திறம்பட செய்திருக்கிறார். கௌசிக் மற்றும் அவரது காதலி பற்றிய சின்ன சின்ன பிளாஷ்பேக் காட்சிகள் அற்புதம். அதிலும் ஒரு கவிதை,

“நீ என்னை முத்தமிட்டாய்,

முத்தங்கள் எனக்குப் புதிதில்லை.

ஆனால் நீ என்னை முத்தமிட்ட பொழுதுதான்.

இந்தப் புனல் கடல் சேர்ந்தது” என காட்சியுனூடே வருகிறது. கடைசியில் காவேரி தன் கணவனைப் பற்றி அழும்பொழுதும் வருகிறது.

கவிதையிலும் காதலிலும் நல்லது, கள்ளம் என இருக்கிறதா என்ன?

இதுவரை உலக சினிமாக்களும் பிற மொழிப் படங்களும் மட்டுமே இந்தப் பகுதியில் இடம் பெற்று வந்தன. இந்த முறை முதன் முதலாக சமீபத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படத்தைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம். அதற்கு முன் சில வரிகள்.

இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் சரியான விமர்சகர்கள் இல்லாத காரணத்தாலேயே பல இயக்குனர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த நிலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறினார். முற்றிலும் சரி. படத்தைப் பார்க்கும் அனைவரும் ஒரு பார்வையாளனாகவே இருந்து அந்தப் படத்தை பற்றி விவாதம் செய்வதால் சில முக்கியமான விஷயங்களை இயக்குனர் வெளிப்படையாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. சில விஷயங்களை வெளிப்படையாக சொன்னாலோ செய்தாலோ அதன் அழகு கெட்டு விடும். IMDB போன்ற இணையதளங்களில் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படங்களைப் பற்றி இன்றும் விவாதிக்கிறார்கள். அதுதான் அந்த படத்திற்கு ரசிகர்கள் தரும் மரியாதை. ஆனால் இங்கு அந்த சூழலே இல்லையே. அதனாலேயே எது நல்ல சினிமா, எது தவிர்க்கப்பட வேண்டிய சினிமா எனப் பலருக்கும் தெரிவதில்லை. சில குப்பைகளைக் கொண்டாடுகிறோம், சில மாணிக்கங்களைக் குப்பையில் போடுகிறோம்.

”படம் நல்லா இருந்தா ஓடப் போகுது” இது ஒரு சாரார் சொல்லும் கருத்து. படம் வெளியிட்டு, போதுமான திரையரங்குகள் கிடைத்து, நாலு பேர் நல்லா இல்லை என சொல்லிப் படம் ஓடவில்லை என்றால் அது வேறு. ஒரே நேரத்தில் ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் தயாரிப்பில் வெளியான ஒரு படம் அனைத்துத் திரையரங்குகளையும் குத்தகைக்கு எடுத்து, இந்தப் படத்திற்கு இடம் கிடைக்காமல், கிடைத்த இடத்தில் திரையிட்டு மக்களிடம் போய்ச் சேரவிடாமல் செய்துவிட்டால் எப்படி ஓடும். மனம் தொட்டுச் சொல்லுங்கள், நம் ஓய்வு நேரத்தில் தான் நாம் படத்திற்கு செல்கிறோம். அந்த நேரத்தில் இந்தப் படத்தின் காட்சிகள் இல்லையென்பது இயக்குனரின் தவறா?

images

நல்லப் படம் என்கிறார்கள், அப்படி என்னதான் இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு, சென்னையை இரவில் பார்த்திருக்கிறீர்களா? இங்கு உலவும் பல மிருகங்களைப் பற்றிக் தெரிந்ததுண்டா? பல பாவங்களை செய்து பின் மனம் திரும்பிய ஒருவனை போலீஸும் அவனது முந்தைய முதலாளியும் வேட்டையாடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அவன் படும் பாடுதான் படம். படத்தின் ஓநாயும் ஆட்டுக்குட்டிக்கும் வேலை என ஒன்று இருப்பதே எனக்கு பெரிய ஆறுதலாய்ப் பட்டது. சமீபத்தில் வந்த எந்தப் படத்திலும் கதாநாயகனுக்கு வேலை கிடையாது, இருந்தாலும் சும்மாவே சுத்துவார். ஒரே நேரத்தில் உயிர் எடுப்பவனும், உயிர் வாங்குபவனும் ஓடும் பொழுது அவர்களது சந்தர்ப்ப வசத்தால் உயிர் எடுப்பவன் காப்பாற்றுபவனாக மாறுகிறான். காப்பாற்றுபவன் கொல்பவனாக மாறுகிறான். இந்த இருவரின் இந்த சுபாவங்கள் மாறி மாறி வர, ஓநாய் ஆடாக மாறியதா? இல்லை ஆடு ஓநாயாக மாறியதா என்பதே கதை. ஓநாய் படத்தின் ஒரு காட்சியில் கூட பொய் சொல்வதில்லை. ஆடு பொய்யில் மட்டுமே வாழ்கிறது.

சின்ன படங்களுக்குள் சுவராசியங்கள் வைப்பது தான் ஒரு கலைஞனின் வேலை. பெரிய கதைகள் எழுத பல நாவலாசிரியர்கள் இருக்கிறார்கள். பல காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. குறிப்பாக கடைசி சண்டையின் போது இளையராஜாவின் பின்னணி (முன்னணி) இசை சிலிர்க்க வைக்கிறது. Water tight screenplay எனச் சொல்வார்கள். தமிழில் இது இருந்ததே இல்லை. பாக்யராஜ் கூட பாடல்களோடு சேர்த்து தான் திரைக்கதை எழுதுவார் போலும். ஒரு தேவையில்லாத காட்சியில்லை. ஹீரோ பெண்களைக் கேலிச் செய்வதில்லை. கை ஓங்குவதில்லை இரட்டை அர்த்த பாடல்கள் வசனங்கள் இல்லை. இரண்டு நிஞ்ஜா வீரர்களுடன் வெறும் கையில் மிஷ்கின் சண்டையிடும் பொழுது நமக்கே பதறுகிறது. முக்கியமாக படத்தைக் கெடுக்க பிளாஷ்பேக் எதுவுமே இல்லை. இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொண்டு மூன்றே நிமிடங்களில் படம் எதைப் பற்றி என மிஷ்கின் சொல்லச் சொல்ல சிலர் கண்ணீரைக் கூட துடைத்துக் கொண்டார்கள்.

சென்னையில் எங்கப்பா நிஞ்ஜா வீரர்கள்? எனக் கேட்பவர்கள் ஒரு நிமிடம் தன் மனதைத் தொட்டுச் சொல்லட்டும் எந்த ஆங்கிலப் படத்தில் நிஞ்ஜா சண்டை வரும் போதாவது இவ்வாறு கேட்டிருக்கிறாரா என்று? நம் கலைஞன் எடுத்தால் மட்டும் ஏன் அதில் தவறு கண்டுபிடிக்க இப்படித் துடிக்கிறோம்? இன்னுமா வெள்ளைக்காரன் நம்மளை விட புத்திசாலி என நினைத்துக் கொண்டிருக்கிறோம்? தவறில்லை. ஆனால் நம்மை ஏன் நாமே முட்டாளாகப் பார்க்க வேண்டும்.

படத்தின் விளம்பரத்திற்காக தானே போஸ்டர் ஒட்டுகிறார் மிஷ்கின். இதே விஷயத்தை ஒரு ஷங்கரோ, மணிரத்தினமோ செய்திருந்தால் உலகமே பொங்கி எழுந்திருக்கும்.. மிஷ்கின் தானே! சில பேர் இதன் காரணமாகவே படம் பார்க்க அசூயையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சரிதான். ஊதாரி ஒருவன் பள்ளி செல்லும் ஒரு மாணவியைக் காதலிக்கும் ஒரு படத்திற்கு பல்லிளிக்க சென்று, பதிவும் போட்டு, பாராட்டி பின், ஆஸ்கர் விருது சமயத்தில் மட்டும் ராமாயண மகாபாரதத்தில் இல்லாத கதையா அதை வைத்தே ஆயிரம் நல்ல படம் எடுக்கலாமே என அங்கலாய்போம். ஆனால் ராமாயணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இதைப் போன்ற படைப்பைப் பார்க்காமல் படைப்பாளியின் செயல்களைப் பார்த்துக் அசூயைப்படுவோம்.

7000 ரூபாய்க்கு கேமரா வாங்கி, ஒரு பூவின் படத்தை எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தன் மொத்த நட்பு வட்டத்தையும் அதில் டேக் செய்து லைக்கும் கமெண்டும் வாங்குபவர்கள், மிஷ்கினின் இந்த செயலை விமர்சனம் செய்யும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மிகவும் நல்ல ஒரு திரைப்படம். தவறுகள் கூட இருக்கலாம். ஆனால் முதலாளித்துவமும் மேட்டிமைத்தனமும் ஒரு படைப்பை அழிக்க முடியும் என்றால்,

இந்த நாடும் நாட்டு மக்களும்………     நன்றாய் இருக்கட்டும்.

நியூ ஜென் தமிழா மின் இதழில் வெளிவந்தது

சமீப காலமாக, பிற மொழித் திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணன், ஆரம்பிச்சு வெச்சது தான் இது. Memories of Murder  கொரியத் திரைப்படம் பார்த்த பிறகு அதே வரிசையில் சில படங்கள் பார்க்க வேண்டும் என ஆசை வந்திருச்சு. அப்படி தரவிறக்கி பார்த்தது தான் “The Man from Nowhere”.

சாதாரண பழி வாங்கும் கதை தான். ஆனா அதை எடுத்திருக்குற குடுத்திருக்குற விதம் தான் படத்தோட ஸ்பெஷாலிட்டி. செம மேக்கிங். பர பரன்னு திரைக்கதை. கண்ல ஒத்திக்கலாம் போல ஒளிப்பதிவு. தேவையான இடத்துல அமைதியாகுற பின்னணி இசை. அளவான நடிப்புனு பட்டைய கிளப்பிச்சு இந்தப் படம்.

3 அயர்ன் மாதிரியோ, இல்லை தி கிளாஸிக் மாதிரியோ நினைச்சு இந்தப் படத்தைப் பாக்க வேணாம். பக்கா மாஸ் மசாலா.

 

சா டே ஷிக். ஒரு அமைதியான அடகுக் கடைக்காரன். யார்கிட்டயும் அதிகம் பேசுறது கிடையாது. அவன் வீட்டு பக்கத்துல ஒரு வாண்டு. சரியான வாலு. அப்போ அப்போ சின்ன சின்ன திருட்டு பண்ணி அதை டே ஷிக் கிட்ட அடகு வைக்க வரும் (அந்தப் பாப்பா அவ்வளவு அழகு). அவங்க அம்மா ஒரு கிளப்ல டான்ஸர். கொஞ்சம் பிரச்சினையான பார்ட்டி.

இவனுக்கு அந்த குழந்தை மேல பாசம் ஜாஸ்தி, ஆனா காமிச்சுக்க மாட்டான். ஒரு நாள் இந்த பாப்பாவோட அம்மா ஒரு குரூப் கிட்ட இருந்து போதை மருந்தை திருடி, ஹீரோ அடகுக் கடைல ஒளிச்சு வெச்சுடுறாங்க. அந்த குரூப், போதைக் கும்பல் மட்டுமில்லை, உறுப்புகளைத் திருடி விக்குற ஒரு கும்பலும் கூட. போதை மருந்துக்காக அவங்க அம்மாவையும் பொண்ணையும் கடத்தப் போய், நம்ம ஹீரோகிட்ட வந்து நிக்குறாங்க. அங்க ஆரம்பிக்குது ரணகளம். அதுக்கப்புறம் எல்லாம் பயங்கர ஸ்பீட் தான். பாப்பாவைக் காப்பத்தினாரா ஹீரோ அப்படிங்குறது தான் படம்.

ஹீரோ வீட்டுக்கு வந்து ரவுடிங்க மிரட்டும் போது, அவங்கள விரட்ட ஒரு மேனரிஸம் வெச்சிருப்பார். மரண மாஸ். இதெல்லாம் தமிழ்ல யோசிப்பாங்களான்னே சந்தேகம் தான். சில இடங்கள்ல ரொம்ப ஒவர்னு தோணினாக் கூட நம்மளை மறந்து பாக்க ஆரம்பிச்சுடுவோம். சண்டை எல்லாம் செகண்ட் கணக்குல தான். ரொம்ப இளகின மனம் கொண்டவங்க, கடைசி சண்டைக்காட்சியப் பாக்க வேண்டாம். படம் முழுக்க  கெட்ட வார்த்தைதான். நல்ல வேளை எனக்கு கொரியா மொழி புரியாது.

ஹீரோ போதை மருந்து சப்ளை பண்ற இடத்துக்கு போகும்போது, அவங்க இவரை வாங்க வந்தவர்னு நினைச்சு மரியாதையா நடந்துக்குறது, போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தப்பிக்குற சீன் எல்லாமே நச். இடைவேளை அப்போதான் ஹீரோ முகமே தெரியுது, அதுவரைக்கும் முடி வெச்சு மறைச்சிருப்பாங்க. இவ்வளவு அழகான ஹீரோவை (வோன் பின்) ஏன் இப்படி எல்லாம் பண்ணனும்?

அப்புறம் அந்தப் பாப்பா. சின்னக் குழந்தைதான். ஆனா என்னமா நடிச்சுருக்கு. அந்தப் பொண்ணு நம்ம ஹீரோ கிட்ட “என்னைத் தெரியும்னு சொல்ல அசிங்கமா இருந்ததுல்ல? எல்லாருக்கும் அப்படித்தான். என் டீச்சர், என் கூட படிக்குற பசங்க எல்லாருக்கும் அப்படித் தான். ஆனா அதுக்காக நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஏன்னா உன்னையும் வெறுத்தா நான் நேசிக்க இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க” அப்படின்னு அழுதுகிட்டே சொல்லும்போது நமக்கு என்னவோ பண்ணிடும்.

அதனால, இந்த சனிக்கிழமை நைட் போரடிச்சாலோ, இல்லை என்ன படம் பாக்குறதுனு யோசிச்சுட்டு இருந்தாலோ தைரியமா, இந்தப் படத்தை தரவிறக்கிப் பாருங்க. ரெண்டு மணி நேரம் சும்மா சிட்டாப் பறக்கும்.

நம்ம ஆட்களுக்கு அடுத்தவனை வேவு பாக்குறதுன்னா அவ்வளவு குஷி. அவன் சாதாரணமா செய்யுற விஷயத்த கூட எவ்வளவு ஊத முடியுமோ அவ்வளவு ஊதுறது. சில பேர், நாம பாக்குறோம்னு தெரிஞ்சா போடுவாங்க பாருங்க சீனு.. தாங்க முடியாது. ஆனா சில பேருக்கு அது தான் வேலையே. சத்தியமா ஒரு மாசத்துக்கு மேல பிடிச்சு அந்த வேலைய செய்ய முடியாது.

அப்படி ஒருத்தரை பத்தி வேவு பாக்க வெச்ச ஆள், அந்த மனுஷன காப்பாத்துறார். எப்படி அப்படின்ற படம் தான், “The Lives of Others”. இது ஒரு ஜெர்மன் படம். 1980கள்ல கிழக்கு மேற்கு ஜெர்மனி பிரிஞ்சிருந்தப்ப நடந்த விஷயங்கள சொல்லி இருக்காங்க.

 

வெய்ஸ்லர்னு ஒரு இன்ஸ்பெக்டர் தன் நண்பனை மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச்சு போக உதவியா இருந்த ஒருத்தனை விசாரிக்குறதுல படம் ஆரம்பிக்குது. அவனை தூங்க விடாம தொடர்ந்து கேள்வி கேட்டு அவனை மிரட்டி பதில் வாங்குறார். அதை அகாடமில இருக்குற பசங்களுக்கும் சொல்லித் தரார். வெய்ஸ்லர் ஒரு தனிமையான மனுஷன். வீடு துப்புறவா இருக்கும். யார் கூடவும் பெருசா பேசுறதில்ல. அப்போ அவரோட சீனியர் ஒருத்தர் வந்து ஒரு நாடகம் பாக்க கூட்டிட்டு போறார்.

நாடகம் எழுதினவர் பேரு டிரேமேன். அவரை பாத்தா நம்ம வெய்ஸ்லருக்கு சத்தமில்லாம மேற்கு ஜெர்மனிக்கு சப்போர்ட் பண்ற ஆள் மாதிரி தெரியுது. ஆனா சீனியர் ஒத்துக்க மாட்டேங்குறார். அந்த நாடகத்துல டிரேமேனோட காதலி கிறிஸ்டா நடிச்சிருக்காங்க. அந்த நாடகம் பாக்க வந்த மந்திரி ஒருத்தர், கிறிஸ்டா மேல ஆசைப்படுறார். அப்போ கிழக்கு ஜெர்மனியில பயங்கர கலாசார ஆதிக்கம். அரசாங்கத்துக்கு எதிராவோ இல்லை மேற்கு ஜெர்மனிக்கு ஆதரவாவோ யாராவது பேசினாலோ எழுதினாலோ அவங்களை உடனே கைது பண்றது இல்லை வேற வழில டார்ச்சர் பண்றதுன்னு அநியாயம் பண்றாங்க.  அதனால தன் பவர யூஸ் பண்ணி இந்த மந்திரி, சீனியர டிரேமேனை வேவு பாக்க சொல்றார். சீனியர் இந்த வேலைய வெய்ஸ்லருக்கு தரார்.

அப்போலேருந்து வெய்ஸ்லர் டிரேமேனை நோட்டம் விடுறார். அவங்க வீட்டை அங்குல அங்குலமா வயர் பொருத்தி வீட்ல எங்க இருந்து பேசினாலும் போலீசுக்கு கேக்குற மாதிரி செட் பண்றாங்க. பகல் முழுசும் வெய்ஸ்லரே கேக்குறார். நாள் முடிவுல அதை ஒரு ரிப்போர்ட்டா டைப் பண்ணி எடுத்துக்குறார். இதுக்கு நடுவுல வேவு பாக்க வெச்சது அரசாங்கத்துக்காக இல்லை, மந்திரிக்கு அந்த நடிகை மேல உள்ள ஆசையில அப்படின்னு வெய்ஸ்லருக்கு தெரிய வருது. ஆனா சீனியர் அதை எல்லாம் கண்டுக்க தயாராயில்லை. முடிஞ்சா அதை பத்தியும் ஒரு கண் வைக்க சொல்லி சொல்றார்.

நல்லவரா இருக்குற டிரேமேன் மேல வெய்ஸ்லருக்கு ஒரு அபிப்ராயம் வருது அது மட்டுமில்லாம  ஒரு பரிதாபமும் வருது. ஒரு தடவை வேற வழி இல்லாம மந்திரி ஆசைக்கு சம்மதிச்சு அவர் கார்ல இருந்து இறங்கி வர்ற கிறிஸ்டாவ டிரேமேன் கிட்ட மாட்டியும் குடுக்குறார். (பேசாம தான். எப்படின்னு படத்துல பாருங்க). ஆனா அவங்க சண்டை போட்டுக்கலை. அடுத்த தடவை அவங்க மந்திரிய பாக்க போகும் போது டிரேமேன் நாகரீகமா தடுக்குறார். ஆனா கிறிஸ்டா போறாங்க. இதை எல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு இருக்குற வெய்ஸ்லர், அவங்க கிட்ட பேசி திரும்ப வீட்டுக்கு போக வைக்குறார்.

இனி இவங்களை கண்காணிக்க தேவை இல்லைனு இவர் சொல்லும்போது, டிரேமேனோட நண்பர் ஒருத்தர் இறந்து போறார். அந்த கடுப்புல நம்ம எழுத்தாளர், கிழக்கு ஜெர்மனிய காய்ச்சி எடுத்து ஒரு கட்டுரை எழுதுறார். கட்டுரை பிரசுரிக்குற பத்திரிக்கை ஆசிரியர், கைல எழுதுனா மாட்டிக்குவ தலைவா, அப்படின்னு, ஒரு டைப்ரைட்டர் மறைச்சு கொண்டு வரார் (அப்போ அது எல்லாம் பெரிய குத்தம் போல இருக்கு.). அந்த டைப் ரட்டரை வீட்டுல குழி தோண்டி புதைக்கெல்லாம் செய்யறாங்க. இது எல்லாம் நம்ம வெய்ஸ்லருக்கு தெரியும் ஆனா யார்கிட்டயும் அவர் சொல்லலை. அந்த கட்டுரையும் வந்துடுது, நம்ம சீனியர் போலீஸ எல்லாரும் வறுத்து எடுக்குறாங்க.

கிறிஸ்டா வர்றதில்லைனு கடுப்பான மந்திரி, டிரேமேன் தான் அந்த கட்டுரைய எழுதினார்னு போற போக்குல போட்டு போறார். ஒரு தடவை போய் வீட்ல தேடி பாக்குறாங்க எதுவும் அகப்பட மாட்டேங்குது. எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு கிறிஸ்டாவ அரெஸ்ட் பண்ணி விசாரணை வல்லவரான வெய்ஸ்லர விசாரிக்க சொல்றாங்க. வேற வழியில்லாம கிறிஸ்டா டைப் ரைட்டர் இருக்குற இடத்த சொல்லிடுறாங்க. எப்படியாவது இவங்க ரெண்டு பேரை காப்பத்தணும்னு நினைக்குற வெய்ஸ்லர், வீட்டை உடைச்சு டைப் ரைட்டர தன் கார்ல வெச்சுடுறார். வீட்ட மறுபடி சோதனை போட போலீஸ்காரங்க வராங்க. தன் கிட்ட எந்த தப்பும் இல்லாத மாதிரி டிரேமேன் இருக்க, தன் கணவர் மாட்டிக்குறத பாக்க முடியாத கிறிஸ்டா வெளிய ஓடி லாரில அடிபடுறாங்க. இதை பாக்குற வெய்ஸ்லர், அவங்க கிட்ட போய் தான் தான் டைப் ரைட்டர எடுத்ததா சொல்லும்போது கிறிஸ்டா இறந்துடறாங்க.

தன் மனைவிதான் தன்னைக் காப்பாத்த டைப் ரைட்டர எடுத்ததா நினைக்குற டிரேமேன், குலுங்கி அழுறார். இப்ப தேடுதல் பிளாப் ஆனதுக்கு காரணம் வெய்ஸ்லர் தான்னு சீனியருக்கு தெரியும். ஆனா ஆதாரம் இல்லை. அதனால அவருக்கு பணி தரக்குறைவு செஞ்சு 20 வருஷத்துக்கு பதவி உயர்வு கிடைக்காத மாதிரி பண்ணிடுறார்.

எழுத்தாளர் டிரேமேனுக்கு வெய்ஸ்லரோட தியாகம் தெரிஞ்சதா? அவர் எப்படி தன் நன்றிய காமிச்சார்னு படம் பாத்து தெரிஞ்சுக்குங்க.

வெய்ஸ்லரா நடிச்ச உல்ரிச் முஹெ பத்தி கண்டிப்பா சொல்லணும். இந்த படத்துக்கு முன்னாடி அவர் பெரிய ஆள் எல்லாம் கிடையாது போல இருக்கு. ஆனா அப்படி ஒரு நடிப்பு. படம் முழுக்குஅ ஒரு கண் இமை அசையணுமே, ஒரு புன்னைகை வரணுமே. ம்ஹும். அப்படி ஒரு அசாதரணமான நடிப்பு. தன் நண்பன் செத்து போகும்போது டிரேமேன் இசைக்கும் சோக கீதம் கேக்கும் போது அவரையும் அறியாம அவர் கண்ல தண்ணி வர்ற சீன் டாப் கிளாஸ். பாவம் மனுஷன் இறந்துட்டார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு பயங்கர பலம். தேவை இல்லாம ஒரு சீன் கிடையாது. அமைதியான காட்சிகளா இருந்தாலும் சீட் நுனில நம்மள உக்கார வெச்சிருக்காங்க. படம் ஆஸ்கர் வாங்குச்சு. படத்தோட டிரைலர் இங்க.

 

படிச்சது பிடிச்சிருந்தா சொல்லிட்டு போங்க. சந்தோஷப்படுவேன்ல.

 

இது வரைக்கும் பெருசா சினிமா விமர்சனம் எலாம் செஞ்சது கிடையாது.  ஆனா ரொம்ப நாளா ஹாலி பாலி, ஜெய், கருந்தேள் இவங்க வலைப்பூ எல்லாம் பாத்து பழக்கம். யாரும் இது வரைக்கும் இந்த படம் பத்தி எழுதி இருக்காங்களானு தெரியலை.  நான் பாத்து எழுதணும்னு நினைச்ச படம், The secret in their eyes. என்னோட விமர்சனம் எல்லாம் தியேட்டர்ல பாப்கார்ன் விக்குறவன் கதை சொல்ற மாதிரி தான் இருக்கும். என்ன செய்ய அவ்வளவு தான் வரும்.

காமெடி என்னன்னா. வேற ஏதோ படத்த தேடப் போய் இந்தப் படம் தரவிறக்கம் செஞ்சுட்டேன். இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தான்.

கதை என்னன்னா, பியூனஸ் ஏர்ஸ்ல ஒரு பொண்ணு கொடூரமான முறைல கற்பழித்து கொலை செய்யபடுறாங்க. அதை பெஞ்சமின் அப்படின்னு ஒரு வக்கீல், விசாரிக்குறார். அப்போ அவருக்கும் அந்த பொண்ணோட கணவனான மொராலஸ்க்கும் ஒரு நட்பு உருவாகுது. பப்ளிக் பிராசிக்யூட்டர் மாதிரி ஒருத்தர் ரெண்டு டம்மி பீஸை கொலைகாரங்கனு சொல்றார். ஆனா பாத்த உடனே அவங்க தப்பு பண்ணலைனு பெஞ்சமினுக்கு தெரிஞ்சுடுது. ஒரு நாள் ராத்திரி மொராலஸ் வீட்ல உக்காந்து பேசிட்டு இருக்கும்போது இறந்து போன பொண்ணோட பழைய போட்டோ ஆல்பம் பாக்குறார் பெஞ்சமின். அதுல ஒருத்தன், இந்த பொண்ணையே உத்து பாத்துட்டு இருக்குறதை பாத்து அவன் மேல சந்தேகப்படுறார்.

சொன்னா மாதிரி அவனும் கொலை நடந்த அன்னிக்கு அதே ஊர்ல தான் இருந்திருக்கான். அவனை பிடிக்க படாத பாடு பட்டு அவங்க அம்மா வீட்டுல எல்லாம் ஏறி குதிச்சு, அவன் எழுதுன லெட்டரை எல்லாம், எடுத்துட்டு வந்து இவங்க வேலை பாக்குற ஜட்ஜ் கிட்ட மாட்டிகிறார் பெஞ்சமின். அந்த மெயின் பீஸ் இவங்க வர்றது தெரிஞ்சு எஸ் ஆயிட்டே இருக்கான். இவங்க பண்ண கயவாளித்தனத்தால கேஸ் குளோஸ் ஆயிடுது.  பெஞ்சமினோட பாஸ் ஒரு அழகான பொண்ணு பேரு ஐரீன். அவங்க தான் நம்மாளு வேலை போகாம காப்பாத்துறாங்க.

ஒரு வருஷம் கழிச்சு, ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல மொராலஸ பாக்குறார் பெஞ்சமின். என்ன விஷயம்னா, வேலை முடிஞ்சதும் மொரால்ஸ் தினமும் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனா போய் உக்காந்து தன் மனைவிய கொன்னவன் வரானானு ஒரு வருஷமா தேடிகிட்டு இருக்கான். இதுல ரொம்ப பாதிக்கபடுற பெஞ்சமின், ஐரீண்ட பேசி கேசை திறக்க சொல்றார். ரெண்டு பேருக்கும் நடுவுல பரஸ்பர அன்பு இருக்குறதால அவங்களும் பண்றாங்க.

அப்போ அந்த வில்லன், எழுதுன லெட்டர்ல இருந்து அவன் ஒரு கால்பந்து வெறியன்னு தெரியுது. அடுத்த நாள் நடக்குற மேட்ச்ல பையன புடிச்சுடுறாங்க. அப்புறம் என்னாச்சு. மொராலஸ் சந்தோஷபட்டாரா? ஐரீன் பெஞ்சமின் வாழ்க்கை என்னவாகுது அப்படின்னு நீங்களும் என்னை மாதிரி படம் பாத்து தெரிஞ்சுக்குங்க.  இந்த படம் 2010 ஆஸ்கர்ல சிறந்த வேற்று மொழிப்படமா தேர்வாகி வேட்டைக்காரன தோக்கடிச்சது..

படத்துல நிறைய டயலாக் அற்புதமா இருந்தது. ஐரீன் கருப்பு டிரஸ் போட்டு வரும்போது, ஹீரோவோட பிரண்ட் கமெண்ட் அடிப்பார் “இன்னைக்கு பாதிரி யாராவது இறந்துட்டாங்களா என்ன? தேவதை கருப்பு டிரஸ் போட்டு வருது?

அதுக்கு ஐரீன் “தேவதை மூணு கிலோ எடை கம்மியா தெரியணும்னா கருப்பு டிரஸ் போடும்”

படத்துக்கு பெரிய பலமே ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் தான். அப்புறம் பெஞ்சமினோட பிரண்ட்டா வர்றவர் நடிப்புல பின்னி இருப்பார். அப்போ அப்போ எனக்கு நாகேஷ் சார் ஞாபகம் வந்தது. அவர் பேரு கல்லிமோரோ பிரன்ஸெல்லா. நம்ம யூகி சேது சார் மாதிரி அங்க நையாண்டி தர்பார் நடத்துறவர். இவர் நடிக்குறார்னு தெரிஞ்சு, 2003ல பிடல் கேஸ்ட்ரோ அந்த படத்தை க்யூபால எடுக்க அனுமதி குடுத்தார்னு சொல்றாங்க. பெரிய ஆள் தான் போல இருக்கு.

ஒரு ரொமாண்டிக் திரில்லர் பாக்கணும்னு நினைச்சா தைரியமா இந்த படம் பாக்கலாம். பிடிக்கும்.

படத்தோட டிரைலர் இங்க.