Category: அ முதல் ஃ


சின்ன வயசுல ஒருமைப்பாட பத்தி ஒரு பாடு கிளாஸ் எடுப்பாங்க. அதோட உண்மையான அர்த்தம் தமிழ்நாட்டுல ரெண்டு இடத்துல மட்டும்தான் இருக்கு. ஒண்ணு சினிமா தியேட்டர்.. இன்னொண்ணு டாஸ்மாக். டாஸ்மாக் பத்தி எல்லாம் எழுதி தீர்த்துட்டதால, நம்ம சினிமா தியேட்டர் பத்தி பாப்போம். கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. நான் கெட்டா திருநெல்வேலிதான்.

தடுக்கி விழுந்தா தியேட்டர் அப்படிங்குறதுக்கு எங்க ஊர் ஒரு உதாரணமா சொல்லலாம். சில தியேட்டரெல்லாம் எங்கப்பா ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து இருக்கு. பசங்க எல்லாம் வெளில போனோம்னா, ஒண்ணு தின்னுட்டு வருவோம் இல்ல படம் பாத்துட்டு வருவோம்.

திருநெல்வேலி டவுண்ல பஸ் ஸ்டாப் பேரே ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தது. சிவசக்தி தியேட்டர் ஸ்டாப், செண்ட்ரல் தியேட்டர் ஸ்டாப், ரத்னா தியேட்டர் ஸ்டாப், ராயல் தியேட்டர் ஸ்டாப், அருணகிரி தியேட்டர் ஸ்டாப் கடைசில கணேஷ் தியேட்டர் ஸ்டாப். இப்படி ஸ்டாப்கு ஸ்டாப் தியேட்டர் தான். அதனால படம் பாக்குறதுக்கு மட்டும் குறையே கிடையாது. அதுலயும் லீவுக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்கன்னா அவ்வளவுதான், படத்துக்கு போறது ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.

சில படங்கள மறக்க முடியாது, அதே மாதிரி சில தியேட்டர்களை மறக்கவே முடியாது. முருகன்குறிச்சில செல்வம் தியேட்டர்னு ஒண்ணு இருந்தது. அங்க தான் நான் முதன் முதல்ல தனியா படம் பாக்க ஆரம்பிச்சேன். கார்த்திக் நடிச்ச பிஸ்தானு ஒரு படம். அதைதான் தனியா முதன் முதல்ல பாத்தேன். அதுக்கு முன்னாடி படத்துக்கு போகணும்னா அண்ணனுக்காகவோ இல்லை அப்பாவுக்காகவோ காத்திருக்கணும்.

முன்னெல்லாம் இண்டெர்வெல் அப்போ உள்ளயே முறுக்கு, கடலைமிட்டாய் எல்லாம் கொண்டு வந்து விப்பாங்க. இப்ப ஏன் அந்த விஷயமெல்லாம் இல்லைனு தெரியலை. ரத்னா தியேட்டர்லதான் எல்லா ரஜினி படமும் ரிலீஸ் ஆகும். மெஸ்ல வேலை பாக்கும்போது தமிழ் புத்தாண்டுக்கு காலைல டவுண் மார்க்கெட்டுல காய்கறி வாங்கிட்டு வந்துகிட்டிருந்தோம். காலைல மூணு மணி இருக்கும். ரத்னா தியேட்டர் வாசல்ல சரியான கூட்டம். நின்னு நின்னு களைப்பாகி எல்லாரும் அங்கேயே பேப்பர் துண்டு எல்லாம் விரிச்சு படுத்திருந்தாங்க. நாங்க சும்மா ஒரு நிமிஷம் வண்டிய நிப்பாட்ட, கூட வந்த பய சத்தமா “சூப்பர் ஸ்டார்”னு கத்திட்டான். தூங்கிட்டு இருந்தவங்க எல்லாம் சுச் போட்டா மாதிரி எந்திரிச்சு “வாழ்க! வாழ்க”னு கத்த ஆரம்பிச்சுட்டானுங்க. அதுல பாதி பேர் டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாச்சுனு கவுண்டருக்குத் தாவ அங்க ஒரே தள்ளு முள்ளு. நாங்க மாட்டிகிட கூடாதேனு அங்க இருந்து ஒரே ஓட்டம் எடுத்துட்டோம்.

Rathna Theater, Tirunelveli

Rathna Theater, Tirunelveli

இப்போ எப்படினு தெரியலை. 2004 ல பாம்பே தியேட்டர்ல 10 ரூவா டிக்கட் உண்டு. செவ்வாய்கிழமை மட்டும் மின்சார வாரியம் பாளையங்கோட்டைல மதியம் கரண்ட் கட் பண்ணிடுவாங்க. பாம்பே தியேட்டர் 10 ரூவா டிக்கட் கவுண்டர்ல போய் நிக்க, பயங்கர சைக்கிள் பந்தயமே நடக்கும். 10 ரூவா டிக்கட், ரெண்டு ரூவா சைக்கிள் பாஸ், 3 ரூவா சம்சா, சந்தோஷமா ஒரு மதியம் கழிஞ்சுடும். இப்படி சினிமா தியேட்டர் பத்தி பலப் பல நினைவுகள்.

Bombay

முதல்ல எங்க ஊர்ல மூடின சினிமா தியேட்டர் செல்வம். சேது, பாரதி, எட்டுப்பட்டி ராசா எல்லாம் முதல் ரவுண்ட்ல நல்லாவே போகலை. செகண்ட் ரவுண்ட் செல்வம் தியேட்டர்ல எடுத்துதான் அந்தப் படம் எல்லாம் பயங்க ஹிட் ஆகி ஓடிச்சு. அங்க கார்த்திக் படம் எல்லாமே எடுப்பாங்க. உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, கோகுலத்தில் சீதை எல்லாம் அங்கதான் பாத்தேன். மூடினப்போ ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு. இப்போ ஊர்க்கு போகும்போது ராயல் டாக்கீஸ் மூடிட்டதா சொன்னாங்க. ராயல் டாக்கீஸ் மறக்க முடியாத ஒரு தியேட்டர்.

நாங்க பதினொண்ணாம் கிளாஸ் படிக்கும் போது பல கல்சுரல்ஸ் அப்படி இப்படினு கலந்துகிட்டு, பல ஸ்கூல் பசங்க கூட பழக்கமாச்சு. இப்ப மாதிரி அப்போ செல் போனெல்லாம் கிடையாதுல்ல. பஸ் ஸ்டாப்ல பாத்துகிட்டாதான் உண்டு. ஆனா அந்த குறிப்பிட்ட வருஷம் மட்டும், எந்த ஸ்கூல் பையன வேணும்னா ராயல் தியேட்டர்ல பாக்கலாம். அங்கத்தான் “துள்ளுவதோ இளமை” படம் ரிலீஸ் ஆச்சு. டைரக்டர், நடிகர் எல்லாம் யாருன்னே தெரியாது.. பாட்டெல்லாம் சரியான ஹிட். அதனால பசங்க முதல் நாளே படத்துக்கு போயாச்சு. போயிட்டு வந்தவங்க முகத்துல ஈயாடலை.. முக்கியமா அங்க காலைல ஷோவுக்கும் மதியம் ஷோவுக்கும், அந்தப் படத்துக்கு பொண்ணுங்களுக்கு டிக்கட் குடுக்க மாட்டாங்க. அதனால தியேட்டர் பூரா எங்க அராஜகம் தான். ஒரு காலத்துல ஹரிதாஸ் படம் 3 வருஷம் ஓடின தியேட்டர் அது. போஸ்டர் அடிச்சு ஓய்ஞ்சு போயி சிமெண்டுல செதுக்கியே வெச்சுட்டாங்க. இப்போ தியேட்டரே இல்லை.

இதையெல்லாம் மனசுல வெச்சு, ஒன்பது குழி சம்பத் படக்குழுவினர், திரையரங்க தினம்னு ஏப்ரல் 18அ கொண்டாடுறாங்க. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். உங்களுக்கும் திரையரங்கம் சம்பந்தமா எதுனா நினைவுகள் இருந்தா 16ம் தேதிக்குள்ள எழுதி இங்க பதிவு பண்ணுங்க. பரிசுகள் காத்திருக்கு.

Advertisements

சில நாட்கள் நான் உன் கண்களில் தொலைந்திருந்தேன்.

அந்த அழகிய கரு உலகத்தில் எனக்கான வெளிச்சங்கள்

எனக்கே எனக்கு மட்டுமான உலகம்

நமக்கே நமக்கு மட்டுமான கனவுகளுடன்.

 

நீ சிரிக்கையில் உன் இதழுக்கு முன் உன் கண்கள் சிரிக்கும்

நீ என் கண் பார்த்துப் பேசுவது எனக்கு பிடிக்கிறது என்றாய்

யசோதைக்குப் பின் உலகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால்

அதைத் தவிர வேறு எதைப் பார்க்கத் தோன்றும்.

 

என் பிறந்தநாளுக்கு  திடீரென சென்னை வந்து

தூங்காத கண்களுடன் காலையில் முதல் முத்தம் தந்தாய்

குறும்பும் தூக்கமும் கலந்த உன் கண்கள்

அந்தப் பெர்முடா முக்கோணத்தைவிட ஆழமானது, ஆபத்தானது.

 

காதலில் மிதந்து, கலவியில கலந்த முதல் நாளில்

உன் கண்களில் சங்கடத்தைப் பார்க்க வேண்டுமோ என பயந்து திரும்பிப் படுத்தேன்

எல்லாம் உனக்குத்தானடா எனச் சொன்ன பொழுது

உன் கண்களை என் கண்ணீர் மறைத்து விட்டது.

 

அம்மா தற்கொலை பண்ணிப்பாங்க

தங்கைக்கு வரன் கிடைக்காது

அப்பாவால தெருவுல நடக்க முடியாது

எனக்கு வேற வழி தெரியலை; சரி சொல்லிட்டேன் என நீ சொல்ல

உன் கண்களில் ஒரே ஒரு துளி கண்ணீர் தானடி எதிர்பார்த்தேன்.

 

கடைசி வரை அதை நான் பார்க்கவில்லை.

கண்களில் கனவைத்தான் காண முடியும்

உலகத்தை அல்ல என சொல்லி சென்று விட்டாய்.

 

(தவறான ளகரத்துக்காக யாரும் கோவிக்க வேண்டாம். பேச்சு வழக்கை கொண்டு வர்றதுக்காகத்தான் அப்படி எழுதிருக்கேன்)

எளவு வீடு ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு. யாராச்சும் இறந்து போயிட்டாங்கனா, அவங்களை கிடத்தி வெச்சிருக்குற இடத்துல சில விநாடிகளுக்கு மேல நான் இருக்கவே மாட்டேன். சொந்தக்காரங்கனா”இவன் வந்திருக்கான் பாரு, அவன் வந்திருக்கான் பாரு”னு இறந்தவங்களைப் பார்த்து அழ ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கு என்ன சொல்றதுன்னே தெரியாது. ஆனா அங்க கூட சில அழகியல் விஷயங்கள் இருக்கும். நமக்குப் பாக்கத் தெரிஞ்சா. மரணம், எளவு வீட்டப் பத்தி சுமித்ரா  நாவல்ல கல்பெட்டா நாரயணன் எழுதின மாதிரி யாராலயும் சொல்ல முடியுமானு தெரியலை.

”அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரிய அன்பின் அலைகள் நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.”

ஏனோ எவ்வளவு நெருங்கின சொந்தம் இறந்தாலும் எனக்கு அழுகை மட்டும் வரவே வராது. சில நேரங்கள்ல அழுறவங்களைப் பார்த்து எரிச்சலாக் கூட வரும். எங்கயாச்சும் எழுந்து போயிடலாமானு பாத்துட்டே இருப்பேன். சில நேரங்கள்ல செத்தவங்களுக்கு செய்யுற அவமரியாதையோனு கூட எனக்கு பயமாயிருக்கும். ஆனா என்ன பண்ணுறது எளவு வீட்டுல மட்டும் மனசு ஒரு பக்கம் நிக்காம அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிகிட்டேல்லா இருக்கு.  தெரிஞ்சோ தெரியாமலயோ எங்க ரெண்டு அத்தை இறந்தப்போ நான் அவங்க கூட இருந்தேன். ரெண்டு பேரும் வீட்டை கோயில் மாதிரி வெச்சுகிட்டவங்க. அவங்க எனக்கு கத்துக்குடுத்தது ஏராளம். அவங்க இறந்ததும் உடல் தான்ம் பண்ணக் ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டுப் போனோம். அரசு ஆஸ்பத்திரில அட்டெண்டர் “பாடி வந்திருச்சா”னு கேட்டார். இருக்கும் போது எத்தனை பேர் வெச்சுக் கூப்பிட்டாலும், செத்தா எல்லாரும் பாடி தான? விட்டை எப்படித்தான் கோயில் மாதிரி வெச்சிருந்தாலும் அந்த ரெண்டு நாளைக்கு வீடு எளவு வீடு தான.

அம்புட்டுதேன் வாழ்க்கை. அதுக்கு அதைக் கொண்டா, இதைக் கொண்டானு சண்டை வேற. இதையெல்லாம் நிதம் பாத்தாக்கூட நம்ம திருந்தவாப் போறோம்?

 

 

 

திருநெல்வேலில பட்டிமன்றங்கள் ரொம்ப பிரபலம். 1992-1998 வரைக்கும் எங்கம்மா நிறைய பட்டிமன்றத்துல பேசுவாங்க. இப்போ டிவில போடுற பட்டிமன்றம் மாதிரி எல்லாம் இருக்காது. “கம்பராமாயணத்தில் சிறந்த பாத்திரம், குகன் இல்லை அனுமன்” சிலப்பத்திகாரத்தின் சிறந்தப் பெண் பாத்திரம் கண்ணகியா மாதவியானு எல்லாம் பயங்கரமா இருக்கும். அப்போ இதைப் பத்தி எல்லாம் மணிக்கணக்கா பேச ஆள் இருந்தாங்க. இப்ப பேச ஆள் இருந்தாலும் கேக்க ஆள் இருக்கானு தெரியலை. எங்க ஊர் பக்கம் பேசுறவங்கள்ல கணபதி சுப்பிரமணியம்னு ஒரு மாமா இருந்தாப்புல. உலக்கைனாலே எனக்கு அவர் நினைப்புத் தான் வரும்.

ஒரேடியா இலக்கியமா பேசிட்டிருந்தாலும் மக்களுக்கு அலுப்பு தட்டிரும்லா! அதனால கணபதி சுப்பிரமணியம் மாமா நிறைய குட்டிக் கதை வெச்சிருப்பார். புத்தினெரி கோ செல்லப்பா மாமாவும் அப்படித்தான். பிச்சுமணி மாமா ரொம்ப அழகா பாடுவாப்புல. அதே நேரம் சொல்ல வந்த விஷயத்தையும் அழகா சொல்லி முடிச்சுடுவாப்புல. கணபதி சுப்பிரமணியம் மாமா பேச போறார்னாலே உலக்கை கதை ஒண்ணு சொல்லாம விட மாட்டாங்க.

அதாவது ஒரு மாமியாருக்கும், மருமகளுக்கும் ஆகவே இல்லையாம். எப்ப பாத்தாலும் மருமகளை மாமியார்காரி திட்டிகிட்டே இருந்தாளாம். அவளுக்கும் எவ்வளவு நாள் பொறுக்கும்? புருஷன் இல்லாத நாள் ஒரு நாளா பாத்து உலக்கைய எடுத்து மாமியார் கழுத்துலயே போட்டாளாம். மாமியார்காரிக்கு பேச்சே வரலை. சனியன் விட்டதுனு படுக்கைல போட்டு மருமக மத்த காரியத்தை எல்லாம் நிம்மதியா பாத்துட்டு இருந்திருக்கா.

புருஷன் சாயங்காலம் வந்துட்டான். மாமியார்காரிக்கு இருப்பு கொள்ளலை. மகன்கிட்ட எப்படியாவது நடந்தத சொல்லிரணும்னு கெடந்து தவிக்கா. இவனும் என்னமா என்னமானு பக்கத்துல வந்து கேக்கான். மாமியார்காரி உலக்கைய காமிக்கா, மருமகளை காமிக்கா, கழுத்தைக் காமிக்கா. மகனுக்கு ஒர் மண்ணும் விளங்கலை.

“ஏட்டி! எங்கம்மாக்காரி என்ன சொல்லுதா?”

“அதை நானே சொன்னா நல்லாவா இருக்கும்?”

“கேக்கேம்லா சொல்லுடி”

“உலக்கை மாதிரி நிக்காத. என் கழுத்துல இருக்குற ரெண்டு பவுனை எடுத்து மருமக கழுத்துல போடுன்னு சொல்லுதா உங்கம்மா”

இந்தக் கதைய எத்தனை தடவை கேட்டாலும் விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன். அதுல இருந்து உலக்கைனு பேர் கேட்டாலே இந்தக் கதையும் சொன்னவரும்தான் நியாபகத்துக்கு வருவாங்க. எங்க வீட்டுல உலக்கை இருந்ததே இல்லை. மாமியார் மருமக சண்டையும் இருந்ததில்லை.

இப்பல்லாம் சில பேருக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியுறதில்லை. தமிழ்நாட்டுல மட்டும் ஏழு வள்ளல்கள் இருந்தாங்களாம். நம்பவே கஷ்டமா இருக்கு. பாட்டி கர்ணன் கதை சொல்லி வளர்த்தப்ப எல்லாம் நம்ம கிட்ட இருக்கும்பொழுது மத்தவங்களுக்கு தேவைப்பட்டா குடுக்குறது ஒரு கெத்துனு சொல்லியே வளர்த்துட்டாங்க. இன்னிக்கு இருக்குற நிலமைல குழந்தைகளுக்கு இந்த மாதிரியான கதைகள சொல்லி வளக்குறாங்களானே சந்தேகமா இருக்கு. சின்ன குழந்தைங்க மனசுல கூட ஒரு சுயநலம். என் மிட்டாய். என் பொம்மைனு குழந்தைகளோட உலகம் கூட ரொம்ப சுருங்கிப் போச்சு.

போன வாரம் எங்க அலுவலகத்துல இருந்த ஒருத்தருக்கு கொஞ்சம் பணமுடை. அவசரமா குழந்தைக்கு பீஸ் கட்ட பணம் வேணும்னு எங்கெல்லாமோ முயற்சி பண்ணிட்டு இருந்தார். அவரோட நண்பர் ஒருத்தர், இந்தா தாரேன்.. அந்தா தாரேன்னு இழுத்தடிச்சுட்டே இருந்தார். இவரும் அவரைப் போய் பாத்துட்டே இருந்தார். கடைசில ஒரு நாள் உடனே வா நான் உனக்குத் தேவையானத வெச்சிருக்கேன்னு சொல்ல, நம்மாளும் ஆர்வமா கிளம்பி போயிருக்கார். அங்கப் போய் காசு கிடைக்கும்னு பாத்தா, அவரோட நண்பர் ஒரு பெரிய சிரிக்கும் புத்தர் சிலைய வெச்சிருந்திருக்கார்.

”இது என்னத்துக்கு?” நண்பர் கேட்டுருக்கார்.

“சைனால கடை கண்ணில எல்லாம் இந்த சிலையத்தான் வெச்சிருக்காங்களாம். இது வீட்டுல இருந்தா காசு கூரையப் பிச்சுட்டுக் கொட்டுமாம். அதான் உனக்காக வாங்கினேன்” அவரு சொல்லிருக்காப்புல.

”அப்ப காசு?”

“இந்த மாசம் கொஞ்சம் சிரமம் தான்பா”

நம்மாளு பேசாம அந்தப் பொம்மையத் தூக்கிப் போட்டு உடைச்சுட்டு வந்துட்டார். கடனுக்கே இந்த நிலமை. இதுல ஈகை எல்லாம் நடக்கவே நடக்காது.

 

சில பாட்டு கேக்கும்போது தான் இந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரியுது. பாடல் விமர்சனம் எல்லாம் பெரிய விஷயம். அதுலயும் இளையராஜா பாட்டெல்லாம் விமர்சனம் பண்ற அளவுக்கு நமக்கு விஷய ஞானம் பத்தாது. ஆனா இந்தப் பாட்டுல ஒவ்வொரு நிமிஷமும், அது மவுனமா இருந்தாக் கூட ஒரு மாதிரியான அமைதியை மனசுக்கு குடுக்கும்.

ரொம்ப அருமையா படமாக்கப்பட்ட, இசையமைக்கப்பட்ட, நடிக்கப்பட்ட பாடல்கள்ல இதுவும் ஒண்ணு. அதுலயும் குறிப்பா பல்லவில எஸ்.பி.பி பாட ஆரம்பிக்கும்போது கமல் ஒரு ரியாக்‌ஷன் குடுப்பார் பாருங்க. அதுக்கு ஒரு செகண்டு முன்னாடி அந்தம்மா ஒரு ரியாக்‌ஷன் குடுக்கும். எனக்குத் தெரிஞ்சு அது தெலுங்கு பொண்ணுங்களால மட்டுமே பண்ணக்கூடிய விஷயம் அது. ஒரு பார்வை.. ஒரு ஜெர்க். அவ்வளவுதான். நம்ம பனால் ஆகிடுவோம்.

சிலது சிற்றின்பம், சிலது பேரின்பம். இந்தப் பாட்டு மட்டும் காதுல கேட்கும் போதெல்லாம் தீண்டும் இன்பம்.

 

திருநெல்வேலி பத்தி எழுதணுனாலே சந்தோஷமாயிருது. ”ஆ”ங்குற எழுத்துக்கு என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, நம்மள ஆஹானு சொல்ல வெச்ச விஷயத்த எழுதலாம்னு சட்டுனு தோணிட்டு. நம்ம வாய்ல இருந்து ஆஹா வர்றது ரொம்ப கஷ்டம். அப்படி வர வைக்குற ஒரே விஷயம்…வேறென்னா, சோறுதான். 

எல்லா ஊர் மாதிரி எங்க ஊர்லயும் சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது. சின்ன சின்ன காம்பவுண்ட்ல வளந்த குழந்தைங்க எல்லாம் மதியம் யார் வீட்டுல சாப்பிடுறாங்கனு அவங்களுக்கும் தெரியாது, பெத்தவங்களுக்கும் தெரியாது. ஆனா எல்லாரும் நல்லா போஷாக்காத்தான் வளந்தோம். சனிக்கிழமை மதியம் மட்டும் எங்க பள்ளிக்கூடத்துல அரை நாள். மதியம் அடிச்சி பிடிச்சி வீட்டுக்கு ஓடியாருவோம். சுட சுட சாப்பாடு போட்டு, அதுல பருப்பும் நெய்யும் கலந்து, ஒரு துண்டு நார்த்தங்காய் வைச்சு எங்க பாட்டி எங்களுக்கு ஊட்டி விடுவாங்க பாருங்க. இப்ப எழுதும்போதே தட்டச்சுப் பலகைல எச்சி ஒழுகிடுச்சு. 

கொஞ்சம் வளந்த பிறகு வீட்டுல எங்க சாப்பிட்டோம்? எல்லாம் தெருவுல தான். எங்க ஊர்ல சில வீட்ல எல்லாம் ஓட்டல்ல சாப்பிட்டாலே திட்டுவாங்க. நீ என்ன நாடோடியா? அப்படியே திங்கணும்னாலும் பார்சல் கட்டி வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிடுனு பெரிய பாட்டா பாடுவாங்க. ஆனாலும் விடுவோமா? பாளையங்கோட்டை பெருமாள் கீழ ரத வீதில லலித விலாஸ்னு ஒரு மெஸ் உண்டு. அங்கதான் பொட்டுக் கடலை சட்னி போடுவாங்க. அதுக்காகவே அங்க போவோம். சாப்பிட்டு முடிச்சு, அப்படியே ரெண்டடி எடுத்து வெச்சா, தெற்கு பஜார்ல கணேஷ் லாலால ஒரு அம்பது கிராம் சூடா அல்வா சாப்பிட்டு முடிச்சுக்கலாம். 

இல்லையா, அப்படியே தெற்கு பஜார்ல நடந்து போய், லோகமதி ஓட்டல்ல புரோட்டாவோ, இல்லை வெங்காய தோசையோ சாப்பிடலாம். அவங்க வைக்குற கார சட்னிக்கு நான் அடிமை. இல்லைனா அப்படியே நடந்து போனா ராமசாமி கோயில் மைதானத்துல வித விதமா தட்டுக்கடை இருக்கும். பானி பூரி, சுண்டல், பருத்திப்பால், கைமா இட்லி, ருமாலி ரோட்டினு என்ன வேணும்னாலும் கிடைக்கும் (நான் சொல்றது 2000 – 2006 சமயத்துல. இப்ப ராமர் கோயில் மைதானத்துல எதுவுமே இல்லை). சாப்பிட்டு வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப் போற வழில ஒரு ஆட்டுக்கால் சூப் குடிச்சோம்னா வயிறு திம்முனு ஆகிடும். 

வெள்ளிக்கிழமை வடக்கு பஜார்ல சேது மெஸ்ல கூட்டம் சொல்லி மாளாது. அன்னிக்கு சொதி சாப்பாடு போடுவாங்க. அதை எப்படி பண்ணனும்னு இங்க எழுதிருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க..காலைல பத்து மணிக்கெல்லாம் கூட்டம் வர ஆரமிச்சுடும். எப்பவாச்சும், சிவன் கோயில் பக்கத்துல இருக்குற சௌராஷ்டிரா கடைக்குப் போவோம். இங்க இருக்குற 14 இட்லி சாம்பாருக்கெல்லாம் முன்னாடியே சாம்பார்ல இட்லி மிதக்குற அளவுக்கு குடுப்பாங்க. 

நான் கடைல வேலை பாத்துட்டு இருக்கும்போது எனக்கு வாரா வாரம் சனிக்கிழமை சம்பளம் போட்ருவாங்க. நண்பர்கள் பட்டாளம் சரியா 9 மணிக்கெல்லாம் எங்க கடைக்கு வந்திடுவாங்க. சம்பளம் வந்த உடனே சைக்கிள் அழுத்திட்டு தெற்கு பஜார் ஜெயந்தி புரோட்டா ஸ்டால் போயிருவோம். அங்கத்தான் ஒரு புரோட்டா ஒண்ணரை ரூவா. 20 ரொட்டிக்கு 30 ரூபா கணக்கு. ஏன்னா எங்க செட்ல யாரும் அதுக்கு குறையா திங்க மாட்டோம். 

இதோட அருமை எல்லாம் அப்போ தெரியலை. ஆனா பாருங்க சென்னைல சாப்பிடப் போகணும்னா, சென்னை புட் கைட், ஸொமாட்டோ எல்லாம் படிச்சுத் தெரிஞ்சுத்தான் போக வேண்டி இருக்கு. ஒரு காலத்துல நான் என்னமா சாப்பிட்டிருக்கேன்.. ஆஹா

ஏகப்பட்டவாட்டி இந்த அடடே சொல்ல வேண்டி வந்தது சமீபத்துல. சில நேரங்கள்ல பெரிய விஷயங்கள் கூட சின்ன விஷயமா தெரியும். இல்லை, கண்டுக்காம போய்ட்டே இருப்போம். ஆனா அது எவ்வளவு பெரிய விஷயம்னு அப்புறம் யோசிச்சுப் பாத்தாதான் தெரியும்.

சமீபத்துல ஆபீஸ்ல வேலை பாக்குற ஒருத்தரோட அம்மா இறந்துட்டாங்க. எல்லாருக்கும் துக்கம் தான். இருந்தாலும் இரவு ஷிப்ட் முடிச்சுத் தான் போய் பாக்க முடியும். அவர் டீம்ல இருந்த ஒரு பையன் மட்டும் அவர் கூட இருக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அவன் ஆபீஸ்லயே ஒரு மண்ணும் செய்ய மாட்டான். துஷ்டி வீட்ல என்ன செய்யப் போறானோனு நாங்கெல்லாம் நினைச்சோம். அம்மாவை இழந்தவர் அந்தத் தாக்கத்துலயே உக்காந்துட்டார். நாங்க காலைல மூணு மணிக்கெல்லாம் கோயம்பேடு போயிட்டு, மாலை வாங்கிட்டு நண்பர் வீட்டுக்கு போயிட்டோம். நினைச்சா மாதிரியே இந்தப் பய இல்லை.

துக்கம் விசாரிச்சுட்டு, மெதுவா அவனைப் பத்திக் கேட்டா, நண்பர் சொன்னதெல்லாம் அடடே ரகம். “அவனுக்கு என்னாச்சுனு தெரியலையா. எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுறான். இப்பக் கூட எங்க சொந்தக்காரங்களைக் கூப்பிடத்தான் கோயம்பேடுக்கு காரெடுத்துட்டு போயிருக்கான்”னு சொல்லும்போது எங்களுக்கு சத்தியமா நம்ப முடியலை.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு, அவன் வந்தப்போ எங்களுக்கும் டீ வாங்கிட்டு வந்துட்டான். என்னடா திடீர்னு இவ்வளவு வேலை எல்லாம் செய்யுறனு கேட்டா. “நமக்கு எல்லாம் சாதாரணமா போனா வேலை செய்யத் தோணாது மாப்ள. எதுனா பிரச்சினை ஆகணும். பரபரப்பா இருக்கணும். அப்பத் தான் நம்ம மூளையே வேலை செய்யும்”ங்குறான். எப்பலேர்ந்துடா இப்படினா. “எல்லாம் நம்ம  தோனியப் பாத்துதான்” அப்படிங்குறான்.

எங்களுக்கு “அடடே”னு ஆயிருச்சு.