இன்றெல்லாம் கண்ணீர் கட்டுக்கடங்காமல்
கன்னத்தை நனைக்கிறது.
ஆங்கிலப் படத்தில் வருவது போல்
உனைச் சார்ந்த நினைவுகளை மட்டும்
அழிக்க முடிந்தால்
அழித்திருப்பேனா என்பது ஐயமே.

சில நாட்களில் தாயாய்,
எப்பொழுதும் தோழியாய்
சிணுங்குகையில் சிறுமியாய்
தலையில் குட்டித் திருத்துகையில்
ஆசிரியையாய்
இப்படிப் பலவாகவும் இருந்த
உன் நினைவுகளை
எந்த அளவை கொண்டு அழிப்பேன்

ஒரு கோப்பை மது தரும்
ஒரு வித மயக்கமும்
சில நிமிட மறத்தலும்
நிரந்தரமாய் இருந்தால்
நானும் இருப்பேன்.
நான்கு வருட நினைவுகளை
மொத்தமாய் அழித்து
மனதிற்குள் புதைத்து
கண்ணாடி பார்க்கிறேன்.

வெற்று அறை என்னைப் பார்த்து
ஏளன சிரிப்பொன்றை உதிர்த்தது
“உனக்கு யாரும் இருக்கப் போவதில்லை
என்று சொன்னேனே.
எனைக் கடிந்து எனைப் பார்க்காமல்
திரிந்தாயே
இப்பொழுது புரிந்ததா, உனக்காக
நீ கூட இல்லை.
தீயினில் உன்னைச் சுடும் பொழுதேனும்
யாராவது வரக் கூடும்.
பாசத்தால் அல்ல, பரிதாபத்தால்”

கண்கள் துடைத்து, முகமூடி அணிந்து
வெயிலில் புகையிலை பற்ற வைத்தவுடன்
மனதில் வரும் பாடலின் வழி மதி புகுந்து
விடுகிறாய் நீ

உலகத்தின் மிகப் பெரிய பாவியாய் நான்.

Advertisements