”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கையில், ஒருவர் தொண்டையை செருமினார்.

நல்லது.. யாரோ பேசப் போகிறார்கள். மரணவீட்டில் ஓலத்தைக் கூட சகித்துக் கொள்ளலாம். அதற்காகவே வந்து அழும் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களின் மவுனங்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சாமியானா கட்டிக் கொண்டிருப்பவனை மேற்பார்வை பார்ப்பது போல, கேனில் இருந்து ஆறிப் போன காபியை கப்பில் எடுத்து ஊதி ஊதி குடிப்பதைப் போல ஏதோ ஒரு வகையில், பேசுவதை தவிர்க்கிறார்கள். புதிதாக மரணவீட்டிற்கு செல்கையில் சில பேர் நம் கையைப் பிடித்து, என்னப்பா இப்படி ஆகிடுச்சு என கேட்பர். என்னவோ நாம் தான் காலத்திடம் சொல்லி சுவிட்ச் ஆப் செய்ய சொன்னது போல. சில நேரங்களில் இவ்வாறான வரவேற்புக்கு மவுனம் எவ்வளவோ பரவாயில்லை.

“நம்ம ஏம்ல கிருஷ்ணா ராமாங்கோம். இறந்தது ஐயர்லா” சொன்ன மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. இறந்தவர் என் மாமா.. அவரையே நான் 10 முறைக்கு மேல் பார்த்ததில்லை.

“கொஞ்சம் பேசாம இருக்கீறா? இன்னும் சித்த நேரத்துல காட்டுக்கு போயிருவோம்” குத்த வைத்த மனிதர் பேசினார்.

“அப்போ இவர் வைகுண்டத்துக்குப் போனா பரவாயில்லைங்கீங்க?”

“இப்படி வெட்டிப் பேச்சு பேசதுக்கு சாமி பேரு சொல்றது எம்புட்டோ புண்ணியம்” இறந்தவரின் மகன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அவனும் அழவில்லை. பேசவில்லை. மவுனத்திற்கும் மரணத்திற்கும் என்ன தொடர்போ? பின்னால் தெருப்பையன்கள் சிலர் வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தம்பியும் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இரண்டொரு நிமிடங்களாக அவரைக் காணொம். வேனில் ”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஜீவா படம் எந்தத் தியேட்டர்லலே போட்ருக்கான்?” இந்தக் கேள்வி கேட்ட நபரையும் எனக்குத் தெரியவில்லை.

“ரத்னானு நினைக்கேன்”

”படம் பாக்கப் போறியளோ?” இன்னொருவர் கேட்டார்.

”தெரியலை. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன இருக்கு? கரண்டும் கட் பண்ணிப்புட்டானுவோ பேப்பயலுக. அதான்..”

“மெட்ராசு படம் நல்லாயிருக்குனு பயலுவோ சொன்னானுவோ” சொல்லி முடிக்கையில் காடு வந்திருந்தது. பெரும் பிரயத்தனத்துக்குபின் இறந்தவரை இறக்கி உள்ளே கொண்டு சென்றோம். பல கட்டுப்பாடுகள் விதிகளை சொல்லி எங்களை உள்ளே விடவில்லை. இறந்தவரின் தம்பி இரண்டு பாட்டில் செவன் அப்புடன் வந்து சேர்ந்தார். கொடூரமாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. காட்டுக்குள் போக முடியாமல், மர நிழலில் அமர்ந்திருந்தேன். செவன் அப் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து வந்த இன்னொரு குடும்பத்தினர் வாடகைக் காரில் வந்திருந்தனர். அவர்களுடைய டிரைவர் என்னருகில் வந்தமர்ந்தார். கையில் செவன் அப்பைப் பார்த்ததும், நான் அமர்ந்திருந்த இடத்தை முன்னும் பின்னும் பார்த்தார். வேறு பாட்டில்கள் கண்ணில் படாத துக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

”எல்லாம் அவ்வளவுதான் இல்லை!” மரண வீட்டில் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சில வாக்கியங்கள். வாதம் பண்ண திராணியில்லாததால் அமைதியாக தலையசைத்தேன்.

“என்னாத்துக்கு காசு காசுனு ஓடுறோம். கடைசில சாம்பலாத்தான் போகப் போறோம். என்ன வாழ்க்கையிது?”

“சென்னையில எங்க?”

“பெரியமேடு. சாருக்கு?”

“கொரட்டூர்”

சிறிது நேரம் அமைதியாக இருந்தார். மறுபடி என்ன தோன்றியதோ

“சார்.. நானும் காலைல இருந்து யோசிச்சு பாத்தேன். ஒரு அர்த்தமும் இல்லை சார். கார்ல வந்தவங்க உங்களுக்கு என்ன வேணும்?”

“உங்க கார்ல யார் வந்தானு எனக்கு எப்படித் தெரியும்?”

“கயத்தாறு வர்ற வரைக்கும் சினிமா பாத்துட்டுத்தான் சார் வந்தாங்க. இங்க தெரு திரும்பின உடனே “உன்னை மாதிரி யாரு, எப்படி வரும்”னு ஒரே அழுகை. பெரிய மனுஷன் நிறைய நல்லது பண்ணிருக்காருனு சொல்றாங்க.. ஆனா பாருங்க சொந்தக் காரங்க கூட தெரு முக்குக்கு வந்தாத்தான் அழுவுறாங்க. அவ்வளவுதான் சார். இதுக்குத்தான் நான் சாவு வீட்டு சவாரி எடுக்குறதே இல்லை. பேஜாரு. இப்ப போனாலும் அவ்வளவுதான் அப்புறமா போனாலும் அவ்வளவுதான்”

மீண்டும் தலையை மட்டும் அசைத்தேன்.

“செவன் அப்ல மிக்ஸ் பண்ணிட்டீங்களா சார்? பேசவே மாட்றீங்கோ?”

“சரக்கெல்லாம் வாங்கலை பாஸ். குளிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல”

“அதுவும் சரிதான். எங்க குளிப்பாங்க.?”

“பக்கத்துல குறுக்குத்துறைனு ஒரு இடம் இருக்கு. அங்க போய் குளிச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்”

ஆக வேண்டியவை முடிந்து அனைவரும் திரும்பி வந்தார்கள். மேகம் மெதுவாக இருட்டிக் கொண்டு வந்தது. ஒரு ஷேர் ஆட்டோ போன்ற வாகனத்தின் பின் கதவைத் திறந்து காலைத் தொங்கப் போட்டுக்கொண்டே குறுக்குத்துறை சென்றேன். ரொம்ப நாள் ஆச்சு.

சிறிது சிறிதாக தூறல் போட ஆரம்பித்தது. அனைவரும் ஆற்றை நோக்கி ஓடினோம். டிரைவர் சற்று பின்னால் வந்தார். ஆழம் அதிகம் எனத் தெரிந்ததால் நான் படியில் அமர்ந்து உடல் நனைத்துக் கொண்டிருந்தேன். ஆற்றைப் பார்த்ததும் டிரைவருக்கு ஆவல் பொறுக்க முடியவில்லை போல. துண்டுடன் தண்ணீரில் பாய்ந்தார். ஆனந்தக் கூச்சல் எல்லாம் வந்தது. எங்களுக்கு ஆற்றுக் குளியல் பழகிய ஒன்று. அவருக்கு எப்பொழுதாவது ஒரு முறை கிடைப்பது. சற்று நேரத்தில் கூச்சல் மட்டுமே கேட்டது.

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க”

பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த பீடி வியாபாரி பாய்ந்து சென்று டிரைவரைத் தூக்கி வந்து மண்டபத்தில் கிடத்தினார். மயக்கமெல்லாம் இல்லை. கண்ணில் பயம் மட்டும் இருந்தது.

“என்னாச்சுன்னே தெரியலை. மூச்சே விட முடியலை.”

“எப்பவுமே ஓடுற ஆத்துல நெஞ்சுல அடி விழுற மாதிரி விழுவக்கூடாது. இது உங்க ஊர் ஸ்விம்மிங் இடம் இல்லை கேட்டியளா” பீடி வியாபாரி தலையைத் துவட்டிக்கொண்டு நடையைக் கட்டினார். மெதுவாக நாங்களும், கார், ஆட்டோ நிற்கும் இடத்திற்கு நடக்கத் துவங்கினோம்.

டிரைவர் என்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். உடம்பில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

“பயந்துட்டீங்களா?” நான் கேட்டேன்.

“ஆமா சார்”

“எதை நினைச்சு?”

பேசாமல் படி ஏறிக் காரில் ஏறி அமர்ந்து கொண்டார். நான் மீண்டும் ஆட்டோவின் பின்னால் அமர்ந்து கொண்டேன். மழை வலுப்பெறத் துவங்கியது.

Advertisements