திருநெல்வேலில பட்டிமன்றங்கள் ரொம்ப பிரபலம். 1992-1998 வரைக்கும் எங்கம்மா நிறைய பட்டிமன்றத்துல பேசுவாங்க. இப்போ டிவில போடுற பட்டிமன்றம் மாதிரி எல்லாம் இருக்காது. “கம்பராமாயணத்தில் சிறந்த பாத்திரம், குகன் இல்லை அனுமன்” சிலப்பத்திகாரத்தின் சிறந்தப் பெண் பாத்திரம் கண்ணகியா மாதவியானு எல்லாம் பயங்கரமா இருக்கும். அப்போ இதைப் பத்தி எல்லாம் மணிக்கணக்கா பேச ஆள் இருந்தாங்க. இப்ப பேச ஆள் இருந்தாலும் கேக்க ஆள் இருக்கானு தெரியலை. எங்க ஊர் பக்கம் பேசுறவங்கள்ல கணபதி சுப்பிரமணியம்னு ஒரு மாமா இருந்தாப்புல. உலக்கைனாலே எனக்கு அவர் நினைப்புத் தான் வரும்.

ஒரேடியா இலக்கியமா பேசிட்டிருந்தாலும் மக்களுக்கு அலுப்பு தட்டிரும்லா! அதனால கணபதி சுப்பிரமணியம் மாமா நிறைய குட்டிக் கதை வெச்சிருப்பார். புத்தினெரி கோ செல்லப்பா மாமாவும் அப்படித்தான். பிச்சுமணி மாமா ரொம்ப அழகா பாடுவாப்புல. அதே நேரம் சொல்ல வந்த விஷயத்தையும் அழகா சொல்லி முடிச்சுடுவாப்புல. கணபதி சுப்பிரமணியம் மாமா பேச போறார்னாலே உலக்கை கதை ஒண்ணு சொல்லாம விட மாட்டாங்க.

அதாவது ஒரு மாமியாருக்கும், மருமகளுக்கும் ஆகவே இல்லையாம். எப்ப பாத்தாலும் மருமகளை மாமியார்காரி திட்டிகிட்டே இருந்தாளாம். அவளுக்கும் எவ்வளவு நாள் பொறுக்கும்? புருஷன் இல்லாத நாள் ஒரு நாளா பாத்து உலக்கைய எடுத்து மாமியார் கழுத்துலயே போட்டாளாம். மாமியார்காரிக்கு பேச்சே வரலை. சனியன் விட்டதுனு படுக்கைல போட்டு மருமக மத்த காரியத்தை எல்லாம் நிம்மதியா பாத்துட்டு இருந்திருக்கா.

புருஷன் சாயங்காலம் வந்துட்டான். மாமியார்காரிக்கு இருப்பு கொள்ளலை. மகன்கிட்ட எப்படியாவது நடந்தத சொல்லிரணும்னு கெடந்து தவிக்கா. இவனும் என்னமா என்னமானு பக்கத்துல வந்து கேக்கான். மாமியார்காரி உலக்கைய காமிக்கா, மருமகளை காமிக்கா, கழுத்தைக் காமிக்கா. மகனுக்கு ஒர் மண்ணும் விளங்கலை.

“ஏட்டி! எங்கம்மாக்காரி என்ன சொல்லுதா?”

“அதை நானே சொன்னா நல்லாவா இருக்கும்?”

“கேக்கேம்லா சொல்லுடி”

“உலக்கை மாதிரி நிக்காத. என் கழுத்துல இருக்குற ரெண்டு பவுனை எடுத்து மருமக கழுத்துல போடுன்னு சொல்லுதா உங்கம்மா”

இந்தக் கதைய எத்தனை தடவை கேட்டாலும் விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன். அதுல இருந்து உலக்கைனு பேர் கேட்டாலே இந்தக் கதையும் சொன்னவரும்தான் நியாபகத்துக்கு வருவாங்க. எங்க வீட்டுல உலக்கை இருந்ததே இல்லை. மாமியார் மருமக சண்டையும் இருந்ததில்லை.

Advertisements