ஏகப்பட்டவாட்டி இந்த அடடே சொல்ல வேண்டி வந்தது சமீபத்துல. சில நேரங்கள்ல பெரிய விஷயங்கள் கூட சின்ன விஷயமா தெரியும். இல்லை, கண்டுக்காம போய்ட்டே இருப்போம். ஆனா அது எவ்வளவு பெரிய விஷயம்னு அப்புறம் யோசிச்சுப் பாத்தாதான் தெரியும்.

சமீபத்துல ஆபீஸ்ல வேலை பாக்குற ஒருத்தரோட அம்மா இறந்துட்டாங்க. எல்லாருக்கும் துக்கம் தான். இருந்தாலும் இரவு ஷிப்ட் முடிச்சுத் தான் போய் பாக்க முடியும். அவர் டீம்ல இருந்த ஒரு பையன் மட்டும் அவர் கூட இருக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அவன் ஆபீஸ்லயே ஒரு மண்ணும் செய்ய மாட்டான். துஷ்டி வீட்ல என்ன செய்யப் போறானோனு நாங்கெல்லாம் நினைச்சோம். அம்மாவை இழந்தவர் அந்தத் தாக்கத்துலயே உக்காந்துட்டார். நாங்க காலைல மூணு மணிக்கெல்லாம் கோயம்பேடு போயிட்டு, மாலை வாங்கிட்டு நண்பர் வீட்டுக்கு போயிட்டோம். நினைச்சா மாதிரியே இந்தப் பய இல்லை.

துக்கம் விசாரிச்சுட்டு, மெதுவா அவனைப் பத்திக் கேட்டா, நண்பர் சொன்னதெல்லாம் அடடே ரகம். “அவனுக்கு என்னாச்சுனு தெரியலையா. எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுறான். இப்பக் கூட எங்க சொந்தக்காரங்களைக் கூப்பிடத்தான் கோயம்பேடுக்கு காரெடுத்துட்டு போயிருக்கான்”னு சொல்லும்போது எங்களுக்கு சத்தியமா நம்ப முடியலை.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு, அவன் வந்தப்போ எங்களுக்கும் டீ வாங்கிட்டு வந்துட்டான். என்னடா திடீர்னு இவ்வளவு வேலை எல்லாம் செய்யுறனு கேட்டா. “நமக்கு எல்லாம் சாதாரணமா போனா வேலை செய்யத் தோணாது மாப்ள. எதுனா பிரச்சினை ஆகணும். பரபரப்பா இருக்கணும். அப்பத் தான் நம்ம மூளையே வேலை செய்யும்”ங்குறான். எப்பலேர்ந்துடா இப்படினா. “எல்லாம் நம்ம  தோனியப் பாத்துதான்” அப்படிங்குறான்.

எங்களுக்கு “அடடே”னு ஆயிருச்சு.

Advertisements