சென்ற முறைப் பார்த்த ஹாரி ஹோலே நாவல் வரிசையில் வந்தது தான் இந்த நாவலும். யூ நெஸ்போ ஒரு கதை வொண்டர் இல்லை என்று எனக்கு நிரூபித்தது இந்த நாவலே. ஜெட் ஸ்பீடு என்றால் ஜெட் ஸ்பீடு.

1991ல் நார்வேயின் சால்வேஷன் ஆர்மி முகாமில் ஒரு 14 வயது பெண் கற்பழிக்கப்படுகிறாள். கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் என்ன நடந்தது என யாரிடமும் சொல்ல முடியாமல் வளர்கிறாள். அதே நேரம் செர்பியப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கிருக்கும் ஒரு வீரனின் கதையும் சேர்த்து சொல்லப் படுகிறது.

பின் 2003 கிறிஸ்துமஸ் நாளிற்கு கதை வருகிறது. க்ரோட்டியாவைச் சேர்ந்த ஒரு கூலிக் கொலைகாரன் நார்வே சால்வேஷன் ஆர்மி நடத்தும் ஒரு தெரு முனை இசை நிகழ்ச்சியில் ராபர்ட் கார்ல்சன் என்பவரை சுட்டுக் கொல்கிறான். Hyperelasticity எனப்படும் ஒரு வகையான நோயில் அவதிப்படும் கொலைகாரனால் தன் முகத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் முடியின் நிறம், உயரம் எல்லாம் அப்படியே இருக்கும்.

இதனால் போலீஸிற்கு ஒரு தடயமும் கிடைப்பதில்லை. அடுத்த நாள் தன் பணி முடிந்து நார்வே திரும்புகையில் தான் கொலைகாரனுக்கு தான் கொன்றது குறிப்பிட்ட நபரை அல்ல அவரது தம்பியை எனத் தெரிய வருகிறது. உருவ ஒற்றுமையினால் ஏமாந்தது தெரிய வந்ததும், குடுத்த காசுக்கு கொல்லாமல் விடுவதில்லை என தன் திட்டத்தை மாற்றுகிறான் கொலைகாரன்.

ஹாரி இதை ஒருவாறு மோப்பம் பிடித்து கொலைகாரனைத் துரத்த, துவங்குகிறது ஒரு மகத்தான ஆடு புலி ஆட்டம். கடமை தவறாத போலீஸ் ஹாரி, எடுத்த காரியத்தை முடிக்கத் துடிக்கும் கொலைகாரன். ஹாரிக்கு உதவும் பேட்டே லான் மற்றும் ஹால்வர்சன். கொலைகாரனுக்கு உதவும் 14 வயதில் கற்பழிக்கப்பட்ட பெண் என ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் அனுபவம்.

வழக்கம் போல ஹாரி அசால்டாக பல மைல் ஓடுகிறார். புதிய பாஸிடம் சைக்கிள் பந்தயத்தில் தோற்கிறார். இருந்தும் சரியான சமயத்தில் சரியான இடத்தில் சென்று கொலைகாரனைத் துரத்திப் பிடிக்கிறார். சற்றும் எதிர்பாராத முடிவு விசிலடிக்கவே வைக்கும்.

ஸ்டீக் லார்ஸன் (தி கேர்ள் வித் டிராகன் டாட்டூ) போல் இல்லாமல், இப்படி ஒரு சால்வேஷன் ஆர்மி இருக்கும் அதுல உள்ள என்ன விஷயம் எல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குங்க என விட்டு சென்று விடுகிறார் யூ நெஸ்போ. இதனால் ஒவ்வொரு விஷயம் பற்றியும் பல பக்கங்களுக்கு படிக்க அவசியமில்லை. கதைக்கு எது தேவையோ, கதையை முன்னெடுத்து செல்ல என்ன விஷயங்கள் அவசியமோ அதை மட்டுமே சொல்கிறார். மக்களுக்கு விருப்பம் இருந்தால் மற்றதைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் தேடித் தெரிந்து கொண்டால் நால் இன்னும் ரசிக்க முடியும்.

மற்றும் ஓஸ்லோவின் அரசியல் நிலைப்பாடு, போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு அங்கு அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது. இதனால் யாருக்கு, எவ்வாறு எவ்வளவு லாபம் என அறிந்து கொள்ள முடிகிறது. இங்கு தான் ஒரு புத்தகம் சினிமாவை தோற்கடிக்கிறது. என்னதான் இருந்தாலும் ஒரு சினிமாவில் நாவலில் உள்ளதைப் போல தெளிவாக சொல்ல முடியாது.

விறுவிறுப்பான நாவல் விரும்புபவர்கள் தவற விடக் கூடாத புதினம் இது.

Advertisements