பொதுவா நவராத்திரி வந்துட்டாலே இங்க சென்னைல எல்லோரும் கல்கத்தாவுக்கோ, இல்லை மைசூருக்கோ கிளம்பிடுறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நானும் எங்க அண்ணனும் அங்க தான் தசராக்கு இருந்தோம். ஆனா பாருங்க எந்த ஊரு தசரா பாத்தாலும் எங்க ஊர் தசரா மாதிரி வராது. எந்தத்  திருநெல்வேலிக்காரனும் இதத்தான் சொல்லுவான்.

அதுலயும் டவுண்காரவுக “தேரோட்டம் மாதிரி வருமாவே”ம்பாவோ. பாளையங்கோட்டை தசரால ஒரு வித்தியாசம் உண்டு. இப்ப என்னவோ ஐபில் அது இதுங்காவோ, அதுக்கு முன்னாடியே தெருத் தெருவா பிரிஞ்சி, இந்த தடவை தசரால நம்மதாம்லே கலக்கணும்னு மோதிரமெல்லாம் அடமானம் வெச்சு செலவு பண்ணி ஜெவிக்கப் பாப்பாய்ங்க. பணமெல்லாம் ஒண்ணும் கிடையாது. சும்மா கெத்துக் காட்டத்தான்.

Photo0361

நவராத்திரி தொடங்கியதும் ஊர் களை கட்டத் தொடங்கிரும். புது சந்தனம் குங்குமம் வெத்தலை மார்க்கெட்டுல மணக்கும். பக்கத்து பக்கத்துல இருக்குற கோயில்ல எல்லாம் அம்மன் திடீர்னு அழகாயிரும். அக்ரஹாரம் பக்கம் போனா, தாவணிப் பொண்ணுங்க கைல குங்குமச்சிமிழ் வெச்சிகிட்டு ஒவ்வொரு வீடா போய் தெருவழைப்பாங்க. அங்க வீட்டைக் கடந்து போகும்போதே எதுனா ஒரு பொண்ணு ஒரு பாட்டு பாடிட்டு இருக்கும். சின்ன பிள்ளைல கூட்டமா சேந்திகிட்டு உங்க வீட்டு கொலு பாக்கவானு வீடு வீடா போய்க் கேப்போம். சுண்டலுக்குத் தான். எங்க வீட்ல குறைஞ்சது ஏழு படி இல்லை ஒன்பது படி வெச்சிருவோம். பத்தா குறைக்கு பார்க், கிரிக்கெட் செட்னு தூள் பறக்கும். எங்க வீட்ல கொலு பொம்மை உடையாம வைக்குறதுக்கு மட்டுமே ஒரு ஸ்டோர் ரூம் இருந்தது.

ஒயின் மாதிரி பழைய பொம்மைக்கு அவ்வளவு மதிப்பு. இந்த தடவை கொலு சீசன்ல வாங்கி வெச்ச பொம்மைய யாரும் பாக்க மாட்டாங்க. முதல் படில இருக்குற பொம்மை தலைமுறை தலைமுறையா வரும். அதோட அழகை சொல்லி முடியாது. எட்டுக்கட்டு ஆறுகட்டு வீட்டுல எல்லாம் முதல் படில வெச்ச பொம்மைக்கு வெளிச்சம் வராதுனு அதுக்குனு தனியா ஒயரிங் எல்லாம் போட்டு பளிச்னு ஆக்கி விட்டிருப்பாங்க.

“ஆயிரம் முகம் கொண்ட தாமரைப் பூ”னு பி. சுசீலா அம்மாவும், “செல்லாத்தா செல்ல மாரியாத்தா”னு எல்.ஆர். ஈஸ்வரியும் ஸ்பீக்கர்ல போட்டி போட எங்க கூட்டம் ஆரம்பிக்கும். அதுவரைக்கும் ஒண்ணு மண்ணா கில்லி ஆடிகிட்டு இருந்த பயலுவ கூட அப்ப அவங்க தெரு பசங்க கூட கூட்டு சேர்ந்துகிடுவானுங்க.

“ஆயிரத்தம்மன் கோயில் காரன் என்ன பண்ணப் போறானாம்”

“பூ வியாபாரி அவன் தெரு தான. சகாய வெலைல பூ வருதாம். இந்த தடவை அலங்காரத்துக்கு அசலூர்காரன் வாரான் போல”னு பேச்சுப் போகும்.

பாளையங்கோட்டைல மட்டும் மொத்தம் 12 அம்மன் கோவில்.புது உலகம்மன் கோயில், உலகம்மன் கோயில், தேவி தூத்துவாரியம்மன், யாதவர் உச்சினி மாகாளியம்மன், கிழக்கு உச்சினி மாகாளியம்மன், உச்சினி மாகாளியம்மன், வடக்கு உச்சினிமாகாளியம்மன், வடக்கு முத்தாரம்மன், முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், ஆயிரத்தம்மன், வண்ணார்பேட்டை பேராச்சியம்மன்னு ஒவ்வொரு அம்மன் ஒவ்வொரு தெருவுல இருக்கும். இந்த அம்மனை அலங்காரம் பண்றது பூசாரினாலும் கெத்தா கொண்டு போய் சேக்க வேண்டியது தெருப்பசங்களான எங்கக் கடமை.

எல்லாம் எங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற மைதானத்துல தான் சப்பரம் கொண்டு வந்து நிப்பாட்டுவாங்க, வர்ற வழியில வாடிப்பட்டி மேளம் இல்லாம இருக்காது. இந்த மாசம் மட்டும் வாடிப்பட்டில பொங்குற சோறு பூரா திருநெல்வேலிக்காரன் அரிசியாத்தான் இருக்கும். ஏன்னா இதுல நல்ல மேள பார்ட்டிய பிடிக்குறதுல தான் நாம் எவ்வளவு மெனெக்கெடுறோம்னு ஊருக்குத் தெரியும். அடிக்கிற அடியில அடிக்கிறவன் கை அந்துத் தொங்கிரும். இருந்தாலும் அடுத்த சப்பரத்துக் காரன் சவுண்டு கேட்ட உடனே வெறி வந்து அடிப்பான் பாருங்க. அதைக் கேட்டுட்டு உங்க கால் ஒரு எடத்துல நின்னா, உங்க காதையோ காலையோ டாக்டர்ட காட்டணும்னு அர்த்தம்.

விஜயதசமி அன்னிக்கு எல்லா கோயில் சப்பரமும் பாளையங்கோட்டை ராமசாமி கோயில் மைதானத்துல வந்து நிக்கும் பாருங்க. பூக்களால இவ்வளவு அழகா 12 சப்பரத்துக்கு அலங்காரம் பண்ண முடியுமானு ஒரே ஆச்சரியமா போகும். எல்லா கோயில் சப்பரத்திலயும் போய் திருநீறு, சுண்டல் வாங்கிட்டு அப்படியே காலாற தெற்கு பஜார்ல இருக்குற எல்லா ட்யூஷன் செண்டருக்கும் ஒரு நடை போவோம். அதாவது மத்த நாள்ல ட்யூஷனுக்கு லீவ் போடுற பொண்ணுங்க கூட விஜயதசமி ட்யூஷனுக்கு கண்டிப்பா வரும். அன்னிக்கு வாத்தியாரு பத்து கிளாஸ் வைக்காம ஒரே கிளாஸா வைப்பாரா, அதனால அழகிகள் மிகுந்த தெருவெல்லாம் நடந்து அதில் மிக அழகியை விரும்பலாம்.

சரினு ஒரு 1 மணிக்கு வீட்டுக்குப் போயிட்டு தின்னுட்டு கண்ணசந்தோம்னா, சரியா நாலு மணிக்கு முழிப்பு வந்திரும். குளிச்சிட்டு, பஜார்ல ஒரு ஒரு கடைக்கா போய் பூஜை முடிஞ்சதானு கேட்டு அவங்க குடுக்குற அவலையும் பொறிகடலையும் கொறிச்சுட்டே மார்க்கெட் மைதானத்துக்கு வந்தா, இருக்குற வாடகைக் கார், வேன் எல்லாத்துக்கும் சந்தனம் தெளிச்சிட்டிருப்பாங்க. நம்மளும் குடத்துல கை விட்டு பத்து வண்டில தெளிச்சிட்டு கை மணக்க மணக்க மைதானத்துல அவசரத்துல வெச்ச கொலம்பஸ், ரங்கராட்டினம், எல்லாத்துலயும் சுத்திட்டு சௌராஷ்ட்டிரா தெருல இருக்குற ஐயர் கடைல அல்வாவும், காபியும் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து படுத்தா கண்ணுல இருந்து கரகரனு தண்ணி கொட்டும். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போணுமே!

இப்படி எல்லாம் வாழ்ந்துட்டு, இப்ப ஆயுத பூஜைக்கு ஆபீஸ்ல லீவ் கேட்டா, அமெரிக்கா காரன்

“வாட் இஸ் தி அகேஷன்? எக்ஸ்பிளெயின் மீ”ங்குறான்.

இதை எல்லாம் சொன்னா அவனுக்குப் புரியவா போகுது.

Advertisements