காலை காரை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்த உடனே ம்யூசிக் பிளேயர்ல ஷஃப்ஃபில் ஆப்ஷன்ல தும் ஹி ஹோ பாட்டு ஓட ஆரம்பிச்சது. எனக்கு எப்பவுமே சரியா இந்தி புரிஞ்சதில்லை. அரைகுறை தான். என்னவோ இந்தப் பாட்டுல முதல் வரியும் பாடியவர் பாடிய விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சும்மா அதுக்காகவாச்சும் அப்போ அப்போ முதல் 30 செகண்ட் கேப்பேன் இந்தப் பாட்டை. அப்போதான் இன்னிக்கு எதோ ஒரு முக்கியமான நாள்லனு மனசுல தோணிகிட்டே இருந்துச்சு.

தேதிகளை நான் நல்லா ஞாபகம் வெச்சுப்பேன்னு நண்பர்கள் அடிக்கடி சொல்லுவாங்க. எல்லா நாள் கூடவும் ஒரு எமோஷனல் விஷயத்தை சேத்து வெச்சுக்குறது என் பழக்கம். சில வருஷம் கழிச்சு சில நாட்களை மறக்கலாம்னு நினைக்கும் போது கூட முடியாது. இந்த மூளை ஒரு பெரிய விந்தைதான். அதை சரியா தூண்டி விடுறது இசை தான். சின்ன வயசுல இருந்து தனியா இருந்து இருந்து சினிமாவோ இல்லை நாவலோ வாசிக்கும் போது அதுல வர்ற முக்கிய கதாபாத்திரமா என்னை நினைச்சுக்குறது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. அதுலயும் நிஜ வாழ்க்கைல சில விஷயங்கள் நடக்குறப்போ இப்ப இந்தப் பாட்டு வந்தா நல்லா இருக்கும்லனு தோணும்.

தும் ஹி ஹோ பாட்டைக் கேக்கும் போது மட்டும் இந்தப் பாட்டுக்கு சரியா நம்ம வாழ்க்கைல ஏன் எதுவும் நடக்கலைனு தோணும். இப்ப பாருங்க, 1 வருஷத்துக்கும் முன்னாடி என்கிட்ட பேச்சை நிப்பாட்டின ஒரு பொண்ணுக்கு இந்தத் தேதில பிறந்தநாள். ஒரு வேளை இன்னிக்கு அந்தப் பொண்ணை ரோட்ல பாக்க வேண்டி வந்ததுனு வெச்சுக்குங்க, நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கே தெரியலை. ஆனா மண்டைல இந்தப் பாட்டு ஓட ஆரம்பிக்கும். என்னைச் சுத்தி இருக்குறதெல்லாம் ஒரு ஸ்லோமோஷன்ல நடக்குற மாதிரி தெரியும். கண்ல இருந்து தண்ணி வந்தாலும் வரலாம்.

ஏண்டா இந்தப் பாட்டெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வரலைனு இருக்கு. நமக்குத் தான் சொல்ல வேண்டிய நேரத்துல சொல்ல வேண்டிய விஷயத்த சொல்ல வேண்டிய விதத்துல சொல்லத் தெரியாது. யாரோ ஒரு வடக்கத்திய புண்ணியவான், நமக்காக ஃபீல் பண்ணி, ஒரு பாட்டை எழுதி இசையமைச்சிருக்காப்புல. ஆனா காலம் கடந்து வந்தப் பாட்டாலயும் காலம் கடந்த சில விஷயங்களையும் என்ன தான் பண்ண முடியும் சொல்லுங்க? சில நாட்களையும், பாடல்களையும் நினைவுகளையும் நம்மளை விட்டுப் பிரிச்சு எடுத்துட்டா, மிச்சம் இருக்குறது நமக்கே பிடிக்குமானு தெரியலை.

ஏதோ ஒரு மொழி தெரியாத பாட்டுக்கு, எப்பவோ விட்டுப் போன பொண்ணுக்கு அவளுக்கும் புரியாத மொழியில ஒரு பதிவு எழுதிட்டிருக்கேன் பாருங்க, மனசு ஒரு விந்தைதான்.

Advertisements