இண்டி சினிமா என்பதை பல நாட்கள் இந்தி சினிமா என்றே நினைத்துக்

கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் அது வேறு விஷயம் எனத் தெரிய வந்தது.

அதாவது, பொதுவான சினிமாவாக இல்லாமல், தான் நினைத்ததை அப்படியே

திரைக்கு கொண்டு வர இயக்குனர் ஒருவருக்கு தயாரிப்பாளர் யாரும் உதவாத

பட்சத்தில் தனியாக அவரே படம் செய்வது தான் அது. நிறைய படங்கள் அது

போல பார்த்ததில்லை என்றாலும் சமீபத்தில் பார்த்த ஷிப் ஆப் தீஸியஸ் என்ற

படம் மிகவும் என்னை பாதித்தது.

ship-of-theseus-poster4

 

ஷிப் ஆப் தீஸியஸ் என்பது ஒரு முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை.

அதாவது ஒரு கப்பலுக்கு தீஸியஸ் எனப் பெயர் இருக்கிறது என வைத்துக்

கொள்வோம். சரி செய்கிறோம் என்கிற பெயரில் அதன் ஒவ்வொரு பாகத்தையும்

தனியே கழட்டி வேறு பாகங்களை அதில் பொருத்தினால் அது இன்னும் தீஸியஸ்

என்று தான் அழைக்கப்படுமா? இல்லை கழட்டி எடுக்கப்பட்ட பாகங்கள் மூலம்

தனியே இன்னொரு கப்பலைக் கட்டினால், அதை தீஸியஸ் என அழைக்கலாமா?

என்பது தான் இந்த முரண்பாடு. இதை மையமாகக் கொண்டு மூன்று கதைகளை

ஒரு திரைப்படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் காந்தி.

 

கண் தெரியாத ஒரு புகைப்படக் கலைஞர் ஆலியா. ஒலியை மட்டும் வைத்து

சிறப்பு வசதியுடன் கொண்ட ஒரு கேமராவால் உலகை அழகாக படம் பிடிக்கிறார்.

கண்காட்சியும் வைக்கிறார். அனைவரும் அவரைக் கொண்டாடுகிறார்கள். அறுவை

சிகிச்சைக்குப் பின் பார்வை வரும் பொழுது அவரால் முபு போல படமெடுக்க

முடிவதில்லை. ஒரு கட்டத்தில் தன் வாழ்வின் முக்கிய அங்கமான கேமராவைப்

பூட்டி பையில் வ் ஐத்து விடுகிறார். அடுத்த கதை லேப்களில் பரிசோதனைக்காக

இருக்கும் மிருகங்களின் உரிமைகளுக்காக போராடும் துறவி மைத்ரேயா. எங்கு

சென்றாலும் நடந்தே செல்லும், எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யக் கூடாது

என வாழும் மனிதரின் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. மிருகங்களிடம் பரிசோதனை

செய்யப்பட்ட மருந்துகளை தவிர்க்கும் அவர், நோயின் கடைசி கட்டத்தில் கல்லீரல்

மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகிறார்.

 

நவீன் ஒரு ஸ்டாக் புரோக்கர். ஒவ்வொரு மணித்துளியும் பணம். இவருக்கு

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. தன் பாட்டி மருத்துவமனையில்

அனுமதிக்கப் பட்டிருக்கும் பொழுது வயிற்று வலிக்காக மருத்துவமனி வந்த ஒரு

கூலித் தொழிலாளியின் சிறுநீரகம் திருடப்பட்டதை அறிகிறார். பணத்தைத் தவிர

எதையும் பற்றீக் கவலைப்படாத நவீன் ஒரு கூலித் தொழிலாளிக்காக எங்கு வரை

செல்கிறார் என்பதே மீதிக் கதை.

 

கடைசியில் மூவரையும் இணைக்கும் ஒரு பொதுவான புள்ளியில் படம்

முடிகிறது. கதை சொல்லுகையில் சாதரணமாக இருக்குமொரு படம் தொழில்

நுட்பத்தால் எப்படி மெருகேற்ற முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு

சிறந்த உதாரணம். எல்லா காட்சியும் கவிதைகள். கேனான் 5ட் கேமராவால்

எடுக்கப்பட்ட இந்த படம், இது வரை பார்த்திராத புதிய பல கோணங்களை

அறிமுகப்படுத்துகிறது. கண் தெரியாத ஆலியாவை தொடரும் பொழுது

குலுங்கியும், தொலைதூரம் எந்த சஞ்சலமும் இல்லாமல் நடக்கும் மைத்ரேயாவை

தொடரும் பொழுது அமைதியும், நவீனைத் தொடரும் பொழுது ஒரு

பதற்றத்தையும் கேமரா மூலமே நாம் உணர்கிறோம்.

 

ஆனந்த் காந்தியின் வசனங்கள் அனைத்தும் பளிச். ஆலியாவின் காதலன்

ஆலியாவின் மனதில் என்ன ஓடுகிறது எனத் தெரியாமல் சண்டையிடும்

பொழுதும், நெரிசலான மும்பைத் தெருவின் வழியே மைத்ரேயாவும் வக்கீலும்

சம்பாஷித்துக் கொண்டே இயல்பாக செல்லும் பொழுதும் வசனங்கள் பல

இடங்களில் கைத்தட்டை அள்ளுகின்றன.

 

முக்கியமாக எகிப்திலிருந்து வந்த ஆலியா அம்மாவிடம் அரபியில் தான் பேசுகிறார்.

கூலித் தொழிலாளி ஹிந்தியில் தான் பேசுகிறார், ஸ்டாக்ஹோமிலிருக்கும் மனிதர்

ஸ்வீடிஷில் தான் பேசுகிறார். ஆங்கிலத்தில் அல்ல. படத்தின் நேர்மைக்கும், நாம்

படத்துடன் ஒன்றுவதற்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கிறது.

ஒவ்வொரு கதை முடியும் பொழுதும், அடுத்த கடைக்குள் மனது செல்ல

மறுக்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தின் நிலையில் நம்மை வைத்து யோசிக்கத்

துவங்குகிறோம். அதனால் சில நல்ல பல காட்சிகளைத் தொலைத்தும்

விடுகிறோம். இடைவேளை சற்று தள்ளி விட்டிருக்கலாம் என்பதைத் தவிர இந்தப்

படத்தில் குறையொன்றுமில்லை.

 

பிளாட்டோவின் அலிகொரி ஆப் கேவைக் காட்டி படம் முடிவது பரம திருப்தியைத்

தருகிறது. ஒரு கலைஞன் எத்தனை நாள் தன் கதைக்குள் வாழ்ந்திருப்பான் என்று

இப்படம் உணர்த்துகிறது. மனதும் மூளையும் இணையும் ஒரு அனுபவம்

வேண்டுபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.

Advertisements