வசந்த காலத்தின் அந்தியில் மழை கொண்டு வந்தாள் ஒருத்தி
சாரல் வேண்டுமா, மழை வாசனை போதுமா எனக் கேட்டாள்
சாரல் மண்ணில் விழுந்தால் தானே வாசனை என்றேன் நான்.
உனக்கு மழை பற்றித் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள்.

கோடைக் காலத்தின் மத்தியில் மழைக் கொண்டு வந்தாள் ஒருத்தி
பெருமழை வேண்டுமா, உடல் நனைக்கப் போதுமா எனக் கேட்டாள்
பெருமழையில் உடல் நனைக்கிறேன் என்றேன் நான்.
உனக்கு நனையத் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள்.

மார்கழியின் குளிரில் மழைக் கொண்டு வந்தாள் ஒருத்தி
மழையைத் தராமல் மாதக்கணக்கில் பனி மட்டுமே தந்தாள்
நனைந்து நாளாயிற்று கொஞ்சம் கருணைக் கேட்டேன்
மழைக்காதலனுக்கு பொய் சொல்லத் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள்.

மழைக்கும் காலங்களுக்கும் தொடர்புகள் இல்லை எனினும்
மழையை எனக்குத் தெரியவில்லை எனினும்
மழைக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நான் நனைய முடியும்
என்று மட்டும் தெரிந்து கொண்டேன்.

அடுத்த வசந்தக் காலத்தை எதிர்பார்த்து
சன்னலில் நான்….

Advertisements