எல்லோர் வாழ்விலும் பெண்கள் இருக்கிறார்கள். அம்மாவாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய், மனைவியாய், இன்னும் பலவாக. அவ்வாறான பெண்களின் அனைத்துக் கூறுகளையும் நம்மால் அறிய முடியுமா? உதாரணமாக, என் தங்கையை எனக்கு தங்கையாய் மட்டுமே தெரியும். அவள் மணமான பின் எவ்வாறான மனைவியாய் இருப்பாள் எனவோ, இல்லை எப்படிப்பட்ட தோழியாய் இருப்பாள் எனவோ என்னால் முழுவதுமாக அறிய முடியாது. என்னதான் நான் நினைத்தாலும் அவளிடம் கேட்டறிந்தாலும் எதோ ஒன்று குறையும்.

அவ்வாறாக, ஒரு பெண்ணின் அனைத்துக் கூறுகளையும் பிரித்துக் காட்டியது சுமித்ரா என்ற நாவல். சுமித்ரா எனும் 38 வயதுப் பெண் இறந்து போகிறாள். சற்றும் தகவலின்றி மரணம் அவளை அணைத்துக் கொள்கிறது. அவளுடன் வாழ்ந்த அனைவருக்கும் அவளை எரிக்கும் வரை அவளுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இவ்வளவுதான் நாவல். மலையாளத்தில் கல்பெட்டா நாராயணன் எழுதிய ”த்ர மாத்ரா (அவ்வளவுதான்)” என்ற நாவல், தமிழில் சுமித்ராவாக கே.வி. ஷைலஜா அவர்களின் கைவண்ணத்தில் வெளி வந்திருக்கிறது.

முதல் அத்தியாயத்திலேயே சுமித்ரா இறந்து விடுகிறாள். பின்பு அவள் மற்றவர்களுக்கு விட்டுச் சென்ற நினைவுகளே நாவலாக நீள்கின்றன. அவளது விருப்பு வெறுப்புகள், பாச நேசங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் பிற கண்களின் வாயிலாக காணும் பொழுது நமக்கு தெரிந்த பெண்களை நமக்கு எவ்வளவு தூரம் தெரியும் என நம்மில் கேள்விகள் எழுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தில் மரணத்தைப் பற்றி வரும் ஒரு பத்தி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு துக்க வீட்டுக்குள் நாம் செல்லும் பொழுது நம் மனது நினைக்கும், ஆனால் வாய் சொல்ல மறுக்கும் விஷயங்களை தயவு தாட்சணியமின்றி எழுதித் தள்ளியிருக்கிறார். மரணம் போலவே இரக்கமில்லாத ஒரு நடை அந்தப் பத்திக்கு மேலும் வலுக்கூட்டுகிறது.

அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரிய அன்பின் அலைகள் நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.

வயநாட்டில் வாழ்க்கைப்பட்ட, ஒரு சிறு பெண்ணினது வாழ்க்கைக் கதை என்னதான் சுவாரசியமாக இருக்கும் என மக்கள் நினைக்கலாம். ஆனால் என்னுடையதும் உங்களுடையதும் போல சுமித்ராவின் வாழ்வும் மிக யதார்த்தமான, சுவாரசியமிக்க ஒரு பயணம் தான். ஒரு பெண்ணாய், தோழியாய், மனைவியாய், தாயில்லாத தந்தை உடல் நலம் குன்றிய பையனுக்கு ஒரு பெரியம்மா போல, யாரும் அற்ற ஒரு கிழவருக்கு சேவகியாய் எல்லாரும் எடுக்கும் அவதாரங்களை அவள் எடுத்திருக்கிறாள். ஆனால் கல்பெட்டா நாராயணனைப் போல் நமக்கு யாரும் அழகிய உரைநடை எழுதுவது தான் சிரமம்.

எவ்வளவோ அன்பைக் குடுத்தாலும், அவளிடம் அன்பையும் பிறவற்றையும் வாங்கியவர்கள் மீண்டும் அவள் பூதவுடலிடமும் ஏதோ தேடுகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்பில்லை எனினும். அம்மாவை இழந்த புருசு அம்மாவையும், யாரும் அற்ற பெரியவர் ஒரு மகளையும் அவள் இறந்த பின்னும் தேடுகிறார்கள். பெண்கள் வாழ்வே இப்படித்தான். எப்போதும் அவர்களிடம் நாம் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களும் குடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தீர்ந்து போனாலும். சுமித்ராவின் வாழ்வின் ரசனைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது நாராயணன் இப்படிச் சொல்கிறார். அவளுக்கு வீட்டை விட நெல் கொட்டி வைக்கும் பழங்கலம் இஷ்டம்.

காந்தியை அல்ல நேருவை, நசீரை அல்ல மதுவை, ஜேசுதாசை அல்ல ஏ.எம் ராஜாவை, சோறல்ல பொரியலை, கஞ்சியல்ல அதன் தொடுபொருளைப் போல, வீட்டையல்ல பழங்கலத்தைத் தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும்

இதைப் படித்து முடிக்கும் பொழுதே பழங்கலத்தை அவள் எவ்வாறு நேசித்தாள் என நமக்கு புரிந்துவிடும்.

தாயாய், தாரமாய், தங்கையாய், அக்காவாய் இருந்தாலும் உயிர் போனபின் அது வெறும் பிணம்தான். இது அனைவருக்குமே தெரியும். செய்தி அறிந்தவுடன் ஒருவராய், ரெண்டு பேராய், கூட்டமாய் வந்தவர்கள், வெயில் ஏற ஏற பொறுமை இழந்து இதை எரித்தால் வேலை முடிந்து செல்லலாமே என யோசிக்கத் துவங்குவார்கள். துவங்குகிறார்கள். எரிக்கும் வரைக்கும் அவளைப் பற்றியும் அவளிடமும் இருந்த நினைவுகள் எரியும் பொழுதே கரைந்து அனைவரும் தத்தமது வேலைகளை கவனிக்க துவங்குகிறதாக முடிகிறது நாவல்.

நாவலை முடித்து விட்டு ஒரு 5 விநாடி அப்படியே அமர்ந்திருந்தேன். பின் முதல் பக்கத்தை மீண்டும் வாசித்தேன்.

யக்‌ஷன்: இந்தப் பூவுலகின் மிகப் பெரும் வியப்பு என்ன?

தருமன் : ஒவ்வொரு நாளும் மக்கள் மனித வாழ்வு முடிந்து யமனினி கோட்டைக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இந்த பூலோகத்தில் எஞ்சி இருப்பவர்கள் தங்களுக்கொன்றும் நஷ்டம் இல்லை என்றும், இங்கே நிலையாக தங்கிவிடுவோமென்றும் நினைக்கிறார்கள். இதைவிட வியப்பு என்ன இருக்கிறது?

இப்பொழுது யக்‌ஷனும், தர்மனும் என்னைப் பார்த்து வியந்து கொண்டிருப்பார்கள்.

 

Advertisements