கிபி – 2003.

அதுவரைக்கும் அடுப்படி வரைக்கும் கூட போகாத எங்களை முழு மூச்சா அடுப்படில கட்டிப் போட்ட வருஷம் அது. அப்பா ரொம்ப நாள் மார்க்கெட்டிங் வேலை பாத்ததால, எப்போவாச்சும் தான் வீட்டுக்கு வருவாங்க. அப்புறம் அந்த வேலைய விட்டதும், எங்க கூடவே இருக்க போறாங்கனு எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நானும் அண்ணனும் மட்டும் தான் வீட்ல. வீட்டுக்கு வந்த அப்பாவால ரொம்ப நாள் சும்மா இருக்க முடியலை. அப்படி ஆரம்பிச்சது தான் அன்னை மெஸ்.

மார்க்கெட்டிங் விஷயமா தமிழ்நாடு பூரா சுத்தினதால, எங்கப்பாக்கு பல இடங்கள்ல இருக்குற சின்ன சின்ன மெஸ் எல்லாம் பழக்கம். அது போல நம்மளும் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு ஆசை. எங்களுக்கும் ஹோட்டல் வேலைன்னா என்னனு தெரியாது. அப்பா சொன்னா சரினு இறங்கிட்டோம். அப்புறம் தான் தெரிஞ்சது எவ்வளவு கஷ்டம்னு. அப்பாக்கு அம்மா சமையல் மேல அபார நம்பிக்கை. அதனால, மாஸ்டர் எல்லாம் ஒண்ணும் வைக்கலை. அம்மா காலைல எழுந்து, எங்களுக்கும், வரப் போற 10 (?!) பேருக்கும் சமைச்சிட்டு ஆபீஸ் போவாங்க. யாராச்சும் வந்தா (வரமாட்டாங்க) நாங்க இலைப் போட்டு பரிமாறி, எல்லாம் பண்ணுவோம். ஆனா அதே எங்களுக்கு பெரிய வேலையா இருக்கும்.

பொதுவா அம்மா ஆபீஸுக்கு வெளியூர்ல இருந்து ஆபீசர் யாராவது வந்தா, எங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். அதான் எங்களுக்கு பெரிய ஆர்டர். அதைக் கேரியர்ல வெச்சு யார் கொண்டு போய் குடுக்குறதுன்னு ஒரு பெரிய பிரச்சினை நடக்கும். அண்ணன் தான் முக்கால்வாசி நேரம் போவாங்க. என்னை போக சொல்றதுக்கு முன்னாடி நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்.

அப்படித்தான் ஒரு வாட்டி என்ன ஆச்சுன்னா, அம்மா ஆபீசுல கொஞ்சம் பெரிய விழா ஒண்ணு வந்தது. அப்போ வேலை எல்லாம் எதுவும் இல்லாம நாங்க ஒரு குரூப் சும்மா சுத்திட்டு இருந்தோம். நாங்கனா நான், எங்க அண்ணன், போலீஸ் குமார் மூணு பேருக்கு மட்டும் தான் வேலை இல்லை. பாலா, பொறியியல் கல்லூரிக்கு போய்கிட்டு இருந்தான். அப்புறம் ஐயப்பாவும் காய்கறி கடை செந்தில். ஒரு உதவின்னா எல்லாரும் வந்திடுவாங்க. ஆனா உதவி உதவியா இருக்குமாங்குறது வேற விஷயம்.

அம்மா அன்னிக்கு ஆபீசுக்கு லீவு போட்டு எல்லா ஐட்டமும் ரெடி பண்ணிட்டாங்க. நாங்க தான் போய் பரிமாறணும். மொத்தம்13 ஐட்டம் அதனால எங்க நண்பர்கள் பட்டாளம் எல்லாரும் பரிமாற வந்திருந்தாங்க. அந்த ஆபீஸ்ல பாக்கத்தான் எல்லாரும் டிப்டாப். திங்க ஆரம்பிச்சா, எல்லாரும் குண்டோதரன் தான். எங்களுக்கும் அளவு பாத்தெல்லாம் வைக்கத் தெரியலை. சீக்கிரம் காலி ஆகிடுச்சு. வந்த எல்லாரும் கேட்ட கேள்வி, கடை பேர் என்ன, கடை பேர் என்னனு தான். அப்போ எங்க கடைக்கு பேரெல்லாம் வைக்கலை. நோட்டிஸ் அடிக்கணும்னு கூட தோணலை.

வீட்டுக்கு வந்து காலி பாத்திரத்தை எல்லால் விளக்கப் போட்டுட்டு நடந்ததை எல்லாம் சொன்னோம். அப்பாகிட்ட ரிப்போர்ட் பண்றது ரொம்ப கஷ்டம். பாராட்டினவங்க எங்க பாத்து பாராடுனாங்கங்குற வரை சொல்லணும். கடைக்கு பேர் இல்லாததால, அடுத்தாப்ல வர்றவங்க எப்படி வருவாங்க அப்படின்னு ஒரு கேள்வி வந்தது. அப்போ எங்க கடைக்கு நாங்க வெச்ச பேர் தான் அன்னை மெஸ்.

அடுத்த பாகம் விரைவில்….

Advertisements