நண்பனுக்கு கல்யாணம். சென்னைத் தாண்டி புத்தூர் பொண்ணு வீடு. எங்க அலுவலகத்துல யாருக்கு கல்யாணம்னாலும் நம்மள கூப்பிடுவாங்க. புகைப்படக் கலைல எனக்கு இருக்குற ஆர்வத்த அவங்களுக்கு ஏத்த மாதிரி உபயோகம் பண்ணிக்க. முகூர்த்த நேரத்துல பல நண்பர்கள் நான் ரெடி ஆன பிறகு தான் தாலியே கட்டுவாங்க. இந்த நண்பன் கிட்டத்தட்ட ஆபீஸுக்கு செல்ல புள்ள. அதனால அலுவலக நண்பர்கள் எல்லாருமே வந்தாங்க.

 

அப்படி வர்றதுல என்ன பிரச்சினை ஆகும்னா, எல்லாருமே மாப்பிள்ளை மாதிரியே போட்டோக்கு போஸ் குடுப்பானுங்க. நின்னா, நடந்தா, உக்காந்தா போட்டோ எடுக்க சொல்லி சாவடிப்பானுங்க. நம்ம வித்தியாசமான கோணத்துல எதுனா போட்டோ எடுக்கணும்னு நினைச்சாலும் விட மாட்டானுங்க. எல்லாம் சரி இத்தனை பேரை போட்டோ எடுக்குறோமே நம்மளை ஒருத்தனும் எடுக்க மாட்டான். அப்படியே எடுத்தாலும் ஏண்டா எடுக்க சொன்னோம்னு கவலைப்படுற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் குடுத்து சாவடிப்பானுங்க.

இதை மாதிரி ஒரு ரெண்டு மூணு தடவை ஆனதால, மாப்பிள்ளை, பொண்ணைத் தவிர யாரும் போட்டோ எடுக்க சொன்னா கொஞ்சம் கண்டுக்காத மாதிரி இருக்குறது. ரெண்டு வாட்டி கேப்பானுங்க, அப்புறம் போய் மெயின் போட்டோகிராபரை தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க.

இந்த தடவைப் போன கல்யாணம் ரொம்ப சூப்பர். ஏழு மணிக்கு மாப்பிள்ளைய கூப்பிட வர வேண்டிய சொந்தக்காரங்க ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் வரலை. மாப்பிள்ளை நெருங்கிய நண்பன்னு நான் தான் அவன் கூட இருந்தேன். ஆறு மணில இருந்து அவனை போட்டோ எடுத்தே சலிச்சுட்டேன். கடைசில மாப்பிள்ளை அழைப்புக்கு கோயிலுக்கு போனப்போ மணி ஒன்பதரை.

ஆபிஸ் பசங்க யாருமே வரலை. நான் தான் மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுறதையும் செயின் போடுறதையும் வளைச்சு வளைச்சு எடுத்துட்டு இருந்தேன். திடீர்னாப்புல “பிரசன்னா”னு ஒரு சத்தம். பாத்தா எங்க ஆபீஸ் ல ஹெல்பர் அக்கா அங்க இருந்தாங்க. அப்போ அப்போ எனக்கு டீ போட்டு தருவாங்க. கல்யாணத்துக்கு வரணும்னு மழையோட மழையா வந்திருந்தாங்க. பொதுவா பேசிட்டு நான் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் மெதுவா என்கிட்ட அவங்க கேட்டாங்க.

“என்னை ஒரு போட்டோ எடுப்பியா?”

இவங்களுமா?னு இருந்துச்சு.

“இல்லைக்கா காலைல வரைக்கும் எடுக்கணும். பேட்டரி இல்லை.”

பட்டு புடவை எல்லாம் கட்டிட்டு வந்திருந்தாங்க. எப்பவும் ஆபீஸ்ல யுனிபார்ம்ல அவங்கள பாத்த எனக்கு வித்தியாசமா இருந்திச்சு. ஒரே ஒரு செயின் கொஞ்சம் பூ. அவ்வளவு தான். வெளியில வேற பயங்கர மழை. கோயில்லயே நின்னுகிட்டு இருந்தோம்.

“ஒரே ஒரு போட்டோ தான? எடேன்” மறுபடியும்.

”சரி நில்லுங்க”னு சொல்லு ஒரு போட்டோ எடுத்தேன்.

“லைட்டே வரலை”

“இது டிஜிட்டல் கேமரா. லைட்டெல்லாம் வராது”

சொல்லிட்டிருக்கும் போதே மழை நின்னுடுச்சு.

“அப்புறமா எனக்கு மட்டும் குடு. ஆல்பத்துல போட்றாத”னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்க பஸ் பிடிச்சு சென்னை வந்து காலைல ஆபீஸ் வேற வரணும். மண்டபத்துக்கு போனப்புறம் கொஞ்சம் சம்பிரதாயமான லட்டு ஊட்டுற போட்டோல்லாம் எடுத்துட்டு நான் போய் படுத்துட்டேன்.

அடுத்த நாளைக்கு ஆபீஸ் போனப்ப அந்தக்கா மறுபடியும் வந்தாங்க. ”போச்சுடா, போட்டோ எங்கனு ஆரம்பிக்கப் போறாங்க”னு பயந்தேன்.

“இங்க காண்ட்ராக்ட் மாறுது பிரசன்னா, நான் திங்கள்ல இருந்து இங்க வர மாட்டேன்”

“ஓ அப்படியா?”

“ஆமா நீ எங்க சார் கிட்ட என் நம்பர் வாங்கிக்கோ. எப்போ போட்டோ ரெடி ஆனாலும் சொல்லு. நான் வந்து வாங்கிக்குறேன்”

“இப்பொ லைட்டா பிஸிக்கா. ஒரு வாரமாவது ஆகும்”

“ரெண்டு வருசம் காத்திருந்தேன். ஒரு வாரம் பொறுக்க மாட்டேனா?”

“என்ன சொல்றீங்க? ரெண்டு வருஷமா நீங்க போட்டோவே எடுக்கலையா?

“நான் பொட்டு, பூ எல்லாம் வைச்சா எதுனா சொல்லுவாங்க”

கணவர் வேதம் போல இருக்கு. பொட்டு வெச்சா திட்டுவாரா இருக்கும்னு மனசு சொல்லிச்சு. ஆனா அதுக்குள்ள வாய் “ஏன்?” கேட்டிடுச்சு.

ரெண்டு பேர் நடுவுல தண்ணி எடுக்க வந்தாங்க. அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு நான் சாப்பிட்டு பாத்திரம் கழுவும் போது என் பின்னாடி நின்னு எனக்கு மட்டும் கேக்குற மாதிரி சொன்னாங்க

“அவரு டெத் ஆயிட்டார். இங்க பூ எல்லாம் வெச்சா எல்லாரும் ஒரு மாதிரி பேசுவாங்க. ஆனா எனக்கு அதெல்லாம் வைக்கணும்னு ஆசை. இவன் கல்யாணம் ஆந்திராவுல. யாருக்கும் என்னைத் தெரியாது. யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கனு தான் கல்யாணப் புடவை, நகை பூ எல்லாம் வெச்சுட்டு வந்தேன். ஒரு போட்டோ இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். நீயா இருக்கப் போய் கேட்டு வாங்க முடியும் இன்னொருத்தர் கிட்ட கேக்க முடியுமா? நீ போட்டோ குடுத்தா யாருக்கும் தெரியாம அப்போ அப்போ பாத்துப்பேன்” சொல்லிட்டு லைட்டா கண்ணைத் துடைச்சுகிட்டே போயிட்டாங்க. எனக்கு என்ன சொல்லனே தெரியலை.

உண்மையிலயே அவங்கள நான் போட்டோ எடுத்திருக்கலாம்.

Advertisements