சமீப காலமாக, பிற மொழித் திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணன், ஆரம்பிச்சு வெச்சது தான் இது. Memories of Murder  கொரியத் திரைப்படம் பார்த்த பிறகு அதே வரிசையில் சில படங்கள் பார்க்க வேண்டும் என ஆசை வந்திருச்சு. அப்படி தரவிறக்கி பார்த்தது தான் “The Man from Nowhere”.

சாதாரண பழி வாங்கும் கதை தான். ஆனா அதை எடுத்திருக்குற குடுத்திருக்குற விதம் தான் படத்தோட ஸ்பெஷாலிட்டி. செம மேக்கிங். பர பரன்னு திரைக்கதை. கண்ல ஒத்திக்கலாம் போல ஒளிப்பதிவு. தேவையான இடத்துல அமைதியாகுற பின்னணி இசை. அளவான நடிப்புனு பட்டைய கிளப்பிச்சு இந்தப் படம்.

3 அயர்ன் மாதிரியோ, இல்லை தி கிளாஸிக் மாதிரியோ நினைச்சு இந்தப் படத்தைப் பாக்க வேணாம். பக்கா மாஸ் மசாலா.

 

சா டே ஷிக். ஒரு அமைதியான அடகுக் கடைக்காரன். யார்கிட்டயும் அதிகம் பேசுறது கிடையாது. அவன் வீட்டு பக்கத்துல ஒரு வாண்டு. சரியான வாலு. அப்போ அப்போ சின்ன சின்ன திருட்டு பண்ணி அதை டே ஷிக் கிட்ட அடகு வைக்க வரும் (அந்தப் பாப்பா அவ்வளவு அழகு). அவங்க அம்மா ஒரு கிளப்ல டான்ஸர். கொஞ்சம் பிரச்சினையான பார்ட்டி.

இவனுக்கு அந்த குழந்தை மேல பாசம் ஜாஸ்தி, ஆனா காமிச்சுக்க மாட்டான். ஒரு நாள் இந்த பாப்பாவோட அம்மா ஒரு குரூப் கிட்ட இருந்து போதை மருந்தை திருடி, ஹீரோ அடகுக் கடைல ஒளிச்சு வெச்சுடுறாங்க. அந்த குரூப், போதைக் கும்பல் மட்டுமில்லை, உறுப்புகளைத் திருடி விக்குற ஒரு கும்பலும் கூட. போதை மருந்துக்காக அவங்க அம்மாவையும் பொண்ணையும் கடத்தப் போய், நம்ம ஹீரோகிட்ட வந்து நிக்குறாங்க. அங்க ஆரம்பிக்குது ரணகளம். அதுக்கப்புறம் எல்லாம் பயங்கர ஸ்பீட் தான். பாப்பாவைக் காப்பத்தினாரா ஹீரோ அப்படிங்குறது தான் படம்.

ஹீரோ வீட்டுக்கு வந்து ரவுடிங்க மிரட்டும் போது, அவங்கள விரட்ட ஒரு மேனரிஸம் வெச்சிருப்பார். மரண மாஸ். இதெல்லாம் தமிழ்ல யோசிப்பாங்களான்னே சந்தேகம் தான். சில இடங்கள்ல ரொம்ப ஒவர்னு தோணினாக் கூட நம்மளை மறந்து பாக்க ஆரம்பிச்சுடுவோம். சண்டை எல்லாம் செகண்ட் கணக்குல தான். ரொம்ப இளகின மனம் கொண்டவங்க, கடைசி சண்டைக்காட்சியப் பாக்க வேண்டாம். படம் முழுக்க  கெட்ட வார்த்தைதான். நல்ல வேளை எனக்கு கொரியா மொழி புரியாது.

ஹீரோ போதை மருந்து சப்ளை பண்ற இடத்துக்கு போகும்போது, அவங்க இவரை வாங்க வந்தவர்னு நினைச்சு மரியாதையா நடந்துக்குறது, போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தப்பிக்குற சீன் எல்லாமே நச். இடைவேளை அப்போதான் ஹீரோ முகமே தெரியுது, அதுவரைக்கும் முடி வெச்சு மறைச்சிருப்பாங்க. இவ்வளவு அழகான ஹீரோவை (வோன் பின்) ஏன் இப்படி எல்லாம் பண்ணனும்?

அப்புறம் அந்தப் பாப்பா. சின்னக் குழந்தைதான். ஆனா என்னமா நடிச்சுருக்கு. அந்தப் பொண்ணு நம்ம ஹீரோ கிட்ட “என்னைத் தெரியும்னு சொல்ல அசிங்கமா இருந்ததுல்ல? எல்லாருக்கும் அப்படித்தான். என் டீச்சர், என் கூட படிக்குற பசங்க எல்லாருக்கும் அப்படித் தான். ஆனா அதுக்காக நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஏன்னா உன்னையும் வெறுத்தா நான் நேசிக்க இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க” அப்படின்னு அழுதுகிட்டே சொல்லும்போது நமக்கு என்னவோ பண்ணிடும்.

அதனால, இந்த சனிக்கிழமை நைட் போரடிச்சாலோ, இல்லை என்ன படம் பாக்குறதுனு யோசிச்சுட்டு இருந்தாலோ தைரியமா, இந்தப் படத்தை தரவிறக்கிப் பாருங்க. ரெண்டு மணி நேரம் சும்மா சிட்டாப் பறக்கும்.

Advertisements