ரஞ்சிதோட அண்ணனுக்கு எப்படின்னே புரியல முதல்ல. ஓரு புத்தாண்டப்போ தான் அவரோட பிரண்ட் அவர்கிட்ட சொன்னான். “உன் தம்பி தம் அடிக்குறாண்டா.” பேசிப் பாத்தார். ஆனா ரஞ்சித் பிடி குடுத்தே பேசலை. ரெண்டு மூணு வாரம் பேசாம எல்லாம் இருந்து பாத்தார், ஆனா வழக்கம் போல பேசியே கவுத்துட்டான்.

“அண்ணே! தம் அடிக்குறவன் எல்லாம் கெட்டவன் இல்லை. நீங்க கண்ட கண்ட இலக்கியம் எல்லாம் படிச்சுட்டு வந்து நைட் பூரா தூங்கவிடாம பேசிட்டே இருப்பீங்க. நான் கேக்காட்டி கூட நிறுத்துனு அடம் பிடிச்சுருக்கேனா? அப்புறம் ஏன் என் வழியில வர்றீங்க? என்னை நானாவே ஏத்துக்க உங்களால முடியாதா?” அப்படி இப்படினு பேசி சரி பண்ணிட்டான்.

நைட் ஷிப்ட் பாக்கும்போது ஆரம்பிச்சதுனு அண்ணனுக்கு தெரியும். ரெண்டு நாளைக்கு ஒண்ணு, ஒரு நாளைக்கு ஒண்ணுனு இருந்தது, போக போக அதிகமாக ஆரம்பிச்சது. அண்ணன் மறுபடியும் பேச ஆரம்பிச்சார்.

“ரஞ்சித்! ஒரு நாளைக்கு அம்பது ரூபா இதுக்காக செலவு பண்ற. அதைக் கொஞ்சம் குறைச்சீன்னா, மாசத்துக்கு 750 ரூபா லாபம். எவ்வளவு நல்ல விஷயம் பண்ணலாம். நிறைய நல்ல புஸ்தகம் வாங்கலாம். நம்ம ரெண்டு பேரும் சேந்து ஒரு நல்ல ஹோட்டல்ல போய் சாப்பிடலாம். யோசிடா.”

“அண்ணே இன்னும் ஒரு வருஷத்துல புரமோஷன் கிடைச்சிடும்”

“கிடைச்சதும் நிறுத்திடுவியா?”

“இல்லை, நான் தம் அடிச்சு காலி பண்ணது போக நீங்க சொன்னது எல்லாம் பண்ண நேரமும், பணமும் இருக்கும்.”

அண்ணன் அதோட சொல்றதை விட்டுட்டார். வீட்டுல தான் இப்படி ரஞ்சித்துக்கு பிரச்சினைன்னு பாத்தா ஆபீஸ்ல அதுக்கு மேல.

“என்ன தான் மிட்டாய் வாய்ல போட்டாலும் நாத்தம் வருதுடா” பக்கத்துல உக்காந்துருக்குறவன் டெய்லி சொல்லுவான்.

“தள்ளி உக்காந்துக்க போடா”.

என்ன தான் அவசர மீட்டிங்கா இருந்தாலும், இவன் வெளியில போயிருக்கான்னு தெரிஞ்சா, இவனோட மேனேஜர், இவன் வந்ததுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் கூப்பிட்டு பேசுவார். பாவம் மனுஷனுக்கு இந்த ஸ்மெல்லே அலர்ஜி.

கூட வேலை பாக்குறவங்களுக்கும் ரஞ்சித்தோட பதில் இது தான். “நான் தம் அடிக்குறது என்னோட தனிப்பட்ட விருப்பம். நாத்தம் அடிக்குதுனு சொல்றவன் என் கூட பேச வேண்டாம். சுற்றுசூழல் பத்தி பேசுறவன், ஒரு மாசம் சைக்கிள்ல வந்துட்டு அதுக்கப்புறம் என்கிட்ட வந்து பேசு. யாருக்காகவும் என்னால மாற முடியாது.”

சமயத்துல சின்ன விஷயத்துக்கு மத்தவங்க எல்லாம் ரொம்ப ரியாக்ட் பண்ற மாதிரி ரஞ்சித்துக்கு தோணும். ஆனா பெட்டிக் கடைல நிக்குற கூட்டத்த பாத்து மனசு அமைதியாகிடும்.

இன்னைக்கு காலைல அண்ணன் வெளியில கிளம்பும் போது தான் நேத்தே காசு எடுத்துட்டு வர சொன்னது ஞாபகம் வந்தது ரஞ்சித்துக்கு. இப்போ இல்லைனு சொன்னா ரொம்ப டென்ஷன் ஆகிடுவார். புது வருசம் வேற.

“என்னடா, நான் கேட்டது என்னாச்சு.” அண்ணனே வந்துட்டார்.

“அண்ணே! நீங்களே எப்பவோ ஒரு தடவை வெளில போறீங்க. என் டெபிட் கார்ட் எடுத்துக்குங்க. உங்களுக்கு எவ்வளவு தேவையோ செலவு பண்ணிட்டு பாக்கி தாங்க. பிரச்சினையில்லை.”

“நேத்து காசு எடுத்துட்டு வர மறந்துட்டியா?”

“அதெல்லாம் இல்லை. உங்க மேல ஒரு பாசத்துல பண்ணா, இப்படி எல்லாம் சொல்றது நல்லாயில்லை.”

“உனக்கு?”

“நான் எங்கயும் போகலை. என்கிட்ட ஒரு 130 ரூவா இருக்கு. அதைத் தாண்டி எனக்கு எந்த செலவும் இல்லை. நீங்க கிளம்புங்க நேரமாகுது”

அண்ணன் கிளம்புன பத்தாவது நிமிஷம் ஒரு நட்புகிட்டயிருந்து போன்.

“மச்சான், உடனே கிளம்பி திருமங்கலம் வா!”

“என்னாத்துக்கு?”

“நான் கம்ப்யூட்டர் வாங்க போறேன். கொஞ்சம் கூட வா”

சரின்னு வண்டி எடுத்துட்டு கிளம்பி பாதி வழியில போறதுக்கு முன்னாடி, வண்டி முக்க ஆரம்பிச்சுட்டுது. அட சனிக்கிழமை. வண்டிக்கு பெட்ரோல் போடணும். நேரா பங்குக்கு போய் பெட்ரோல் ஒரு நூறு ரூபாய்க்கு போட்டு, நட்பு சொன்ன எடத்துக்கு போய் நின்னா எவனையும் காணம்.

வண்டிய நிப்பாடிட்டு, பெட்டிக் கடைல போய் அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் வாங்கி பத்த வெச்சான். வந்துட்டேயிருக்கேன்னு நட்புகிட்டயிருந்து குறுஞ்செய்தி நடுவுல வந்திருந்தது.

“தம்பி” தோளுக்கு பின்னால ஒரு குரல் கேட்டு திரும்பினான் ரஞ்சித்.

கூப்பிட்டவௌக்கு ஒரு 65 வயசிருக்கும். கையில ஒரு பிளாஸ்டிக் கவர் வெச்சிருந்த்தார். அதுல இருந்த துணி பைக்கு அடங்காம கொஞ்சம் வெளில தெரிஞ்சது. ஒரு கிழிஞ்ச டீசர்ட், பல நாள் அழுக்கேறின வேட்டி. பொதுவா இந்த மாதிரி இதுவரைக்கு கூப்பிட்டவங்க எல்லாம், காசு தான் கேட்டாங்க. ஆனா இவர் கண்ல இருந்த ஏதோ ஒண்ணு இவர் காசுக்காக கூப்பிடலைனு சொல்லிச்சு.

”சொல்லுங்க”

“ரெட் ஹில்ஸ் எந்தப் பக்கம் போகணும்?”

“ரைட்ல திரும்புனா, ஒரு சிக்னல் வரும், அதுக்கு அடுத்தாப்புல ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். அங்க ஏறிக்குங்க.”

“பஸ் இல்ல தம்பி, நடந்து போக வழி சொல்ல முடியுமா?”

“என்னங்க ஊருக்கு புதுசா, இல்லை காமெடி புரோக்ராம் எதுவும் பண்றீங்களா? பத்து மணி வெயில்ல பதினெட்டு வயசு பையன் கூட அவ்வளவு தூரம் நடந்து போக மாட்டான். பேசாம பஸ்ல போங்க.” ரஞ்சித் சொல்லிட்டு இருக்கும் போதே பிரண்ட் வந்துட்டான்.

“மச்சான், வண்டி பஞ்சர்டா, உன் வண்டி எடுத்துட்டு போறேன், டியுப் மாத்தணும்” சொல்லிட்டே வண்டி எடுத்துட்டு போயிட்டான். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும். இன்னொரு தம் வாங்கலாம்னு சொல்லி பாத்தா பெரியவர் அங்கயே நின்னுகிட்டு இருந்தார்.

“இன்னும் கிளம்பலையா நீங்க?”

“தம்பி இன்னும் வழி சொல்லலையே!”

“நாந்தான் சிக்குனேனா இன்னைக்கு.”

“தம்பி எனக்கு வெளியூர். இங்க சென்னைக்கு காலைல தான் வந்தேன். யார்கிட்டயாவது வழி கேட்டா நான் சொல்ல வர்றதைக் கூட கேக்க மட்டேங்குறாங்க. இந்த ஊர்ல எல்லாரும் எங்கேயோ அவசரமா போய்கிட்டே இருக்காங்க. நான் பக்கத்துல போனாலே பிச்சைக்காரன்னு நினைச்சு விரட்டுறாங்க.” சொல்லிட்டு இருக்கும்போதே கண் கலங்கிருச்சு. சில நேரங்கள்ல சென்னை நரகம் தான்.

“இங்க அப்படித்தாங்க. எக்மோர்ல இருந்தே பஸ் இருந்திருக்குமே?”

“காசு இல்லை தம்பி. ரெட் ஹில்ஸ்ல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. அங்க போய் இன்னைக்கு வேலை பாத்தாத்தான் காசு. ஊர்ல தங்கை மகன் டிக்கட் எடுத்து குடுத்தான். மேல காசு கேக்க கூச்சமா இருந்தது. அதான் எக்மோர்ல இருந்து நடந்தே வந்துட்டேன்.”

“என்னங்க நீங்க. இங்க இருக்குறவங்க எல்லாரும் கெட்டவங்க இல்லை. நீங்க கேட்டிருந்தீங்கன்னா யாராச்சும் உதவி பண்ணியிருப்பாங்க. சரி சாப்டீங்களா?”

“அங்க போய் தான் தம்பி. வழி சொன்னா நல்லா இருக்கும்”

“நீங்க வாங்க முதல்ல, நான் வழி சொல்றேன்”பஸ் ஸ்டாப்புக்கு பெரியவரைக் கூப்பிட்டு நடக்க ஆரம்பிச்சான். வாகன நெரிசல் ரொம்ப அதிகமா இருந்தது. ரோட்டைக் கடக்க கையப் பிடிச்சுக் கூப்பிட்டு போகும்போது பெரியவர் அழ ஆரம்பிச்சுட்டார்.

“என்ன சார், ஏன் அழறீங்க”

“தெரியலை தம்பி, என்னமோ இந்த ஊர் கொஞ்சம் பயமா இருக்கு. என் பையன காசெல்லாம் போட்டு படிக்க வெச்சேன். நிலம் எல்லாம் வித்துட்டேன். சென்னைல தான் நாலு வருஷம் படிச்சான். ஊருக்கு வர்ற வழியில பஸ் விபத்துல போய் சேந்துட்டான். பொண்டாட்டி எப்பவோ போய் சேந்துட்டா. கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான்னு நினைச்ச மகனும் போய் சேந்துட்டான். ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்காகத் தான் இந்த வயசுலயும் வேலைக்கு போறேன்.”

“விடுங்க சார். எல்லார் வாழ்க்கைலயும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்யும். நீங்க மனசை விடாதீங்க. நான் பஸ் ஏத்தி விட்டு டிக்கட் எடுக்குறேன். நீங்க போய் வேலைல சேருங்க முதல்ல.”

“தம்பி என்னை எல்லாரும் பிச்சைக்காரன் மாதிரி பாத்தாங்கனு தான் சொன்னேன். நீங்க என்னை பிச்சைக்காரனாவே ஆக்கிடுவீங்க போல இருக்கே!”

“உங்க தங்கை பையனா என்னை நினைச்சுக்குங்க. போதுமா?”

பெரியவர் ரொம்ப நேரம் பேசவேயில்லை. அமைதியா நடந்து வந்தார். அப்போ அப்போ தனக்குத்தானே பேசிகிட்டார். இந்த மாதிரி சமயத்துல எதுவும் பேசவோ கேக்கவே கூடாதுன்னு அண்ணன் சொல்லியிருக்கார். அதனால ரஞ்சித் அமைதியா வந்தான். பஸ் ஸ்டாப்ல ஒரே கூட்டம்.

“ரெட் ஹில்ஸ் பஸ் இங்க தான வரும்?”

“இன்னைக்கு அங்க ஏதோ பிரச்சினை பண்ணிட்டானுங்க. பஸ் போகாதாம். வெள்ளை ஷேர் ஆட்டோல தான் போகணும்.”

ரெண்டு ஷேர் ஆட்டோ 5 ஷேர் ஆட்டோ கூட்டத்த ஏத்திட்டு போச்சு. அடுத்தாப்புல வந்த வண்டில ஏறினப்போ டிரைவர்

“ரெட் ஹில்ஸ் ஒண்டி தான் போகும். முப்பது ரூபா. ஓகேனா ஏறுங்க.”னு கத்திட்டு இருந்தான்.

எவ்வளவு தான் தடவிப் பாத்தும் 25 ரூபா தான் இருந்தது. எப்படி? ஆங் 100 ரூவா பெட்ரோல், 5 ரூவா தம். சே.. இந்த ஆள் கடைக்கு போறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி பாத்திருக்க கூடாதா? பெரியவர்ட்ட சொன்னான்.

“டிரைவர், என்னை 25 ரூவா வரைக்கும் எங்க போகுமோ அங்க இறக்கி விட்டிருங்க.”னு கேட்டார்.

“பெருசு, நீ உக்கார்ற எடத்துல, இன்னொருத்தர் உக்காந்தா, எனக்கு 5 ரூவா கூட கிடைக்கும். அப்படியே நேரா நடந்து போ, 4 மைல்ல வந்த்துடும்”னு சொல்லிட்டு வண்டிய எடுத்துட்டு போயிட்டான்.

முதல் முறையா, யார் மேல எதுக்குனு தெரியாம ரஞ்சித்துக்கு கோவம் கோவமா வந்தது. ஆட்டோக்காரனை கண்டபடி திட்டினான்.

“விடுங்க தம்பி, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. இப்ப பரவாயில்லை. எனக்கு யார்கிட்டயோ பேசணும் போல இருந்திருக்கு. கொஞ்சம் வயசாயிடுச்சுன்னாலே பேச யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க கேட்டீங்க, நான் கொட்டினேன். மனசு இப்ப லேசாயிடுச்சு.  ஆட்டோக்காரன் சொன்ன மாதிரியே நேரா நடந்து போயிடுறேன்.”

எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு டீ கூட சாப்பிடாம நடந்து போன அந்த பெரியவரை பாக்கும்போது, விரலுக்கிடையில இருந்த வாசம் நாத்தமா குமட்டிச்சு ரஞ்சித்துக்கு.

Advertisements