நாங்கள் சந்திக்க நேரும் போதெல்லாம், மழை பெய்திருக்கிறது.

அன்று, மொட்டை மாடியில் நின்று கைகள் நீட்டி காதல் சொன்ன போதும்,

பின்பு, இரண்டு அடி இடைவெளி விட்டு மலர்கள் நிறைந்த பாதையில் நடந்த போதும்,

சென்னை வந்து அவள் செல்கையில் வழியனுப்ப நெல்லை எக்ஸ்பிரஸ் ஜன்னலின் வழி விரல் பற்றிக் கொண்டு இருந்த போதும்,

“வரும்போதே மழைய கூட்டிகிட்டு வருவியா? ” என்று அவள் கேட்ட போதும், மழை மிகவும் பிடித்திருந்தது.

அவள் செல்பேசியில் ஒலிக்கும் நியூயார்க் நகரம் எங்களுக்கும் குளிருக்கும் உடைய தொடர்பை சொல்கிறது என்றே எண்ணினேன்.

.மழைக்காலங்கள் என் வாழ்வில், ஏன் பலர் வாழ்வில் மறக்க முடியாத சில நினைவுகளை விட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. காதல் சொல்லி கண்ணால் பேசி நகரும் போது மேலே விழும் மழைத்துளிக்கு இணையான ஆசீர்வாதம் இருக்கவே முடியாது. சில சமயங்கள் என வாழ்வில் மழை, சில சங்கேத குறியீடுகளை அள்ளித் தெளித்துள்ளது.

பாலோ கோயலோ சொல்வதைப் போல, உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு ஏதோ சொல்லத் துடிக்கின்றன. கேட்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். என் காதல் அவளிடம் துவங்கியது ஒரு மழைக்காலம்.  மழையும் குளிரும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் வீதியில் உலா வந்தன. அப்பொழுது அவள் தன் வீட்டிலுருந்து என்னை பார்க்கும் பொழுது அடித்தது ஒரு சாரல். ஒரு வேளை அந்த சாரல் வராமல் இருந்திருந்தால், அந்தப் பார்வை அவ்வளவு தூரம் என்னை பாதித்திருக்காதோ என்னவோ..

அவள் பாட்டி வீட்டுக்கு அவள் சென்ற போது அவளைப் பார்க்க முடியுமா முடியாதா எனத் தெரியாமல், ஒரு குக்கிராமத்தில் சுற்றிய பொழுது, குடைக்கும் வலிக்காமல், நிற்கவும் நிற்காமல் பெய்த மழை அவளுக்கான என் பதட்டமான தேடலுக்கு துணை நின்றது.

இனி சந்திக்க வேண்டாம், என அவள் சொல்லச் சொல்ல அவளுக்காக பேருந்து நிலையம் ஒடும் போது பெய்த அடைமழையை விட என் மன உணர்ச்சியை சரியாக சொல்ல எதுவாலும், எந்த எழுத்தாலும் முடியாது.

காலங்கள் கடந்து சென்றாலும், கூச்சமில்லாமல் என்னை வாட்டிய மழையும் குளிரும் மீண்டும் என் வாசலில் உலா செல்லும் போது.. சீ சீ எனக்கு மழைக்காலங்கள் பிடிப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

 

Advertisements