நாங்களும் எப் எம்-ம்
கார்ல ஏறின உடனே நான் சொல்ற முதல் வார்த்தை..”அந்த எப் எம்ம அமத்திட்டு பாட்டுப் போடுப்பா”ங்குறது தான். கார் சாரதி வினு நம்மூர்க்காரப் பையன் தான். “சார்வாளுக்கு எப் எம் மேல அப்படி என்னதான் கோவமோ? சும்மா வந்தாலும் வருவாரு. எப் எம் கேக்க மாட்டார்”னு அலுத்துக்குவான். உண்மை தான். எப்பமோ எப் எம் மேல இருக்குற மோகம் போயிருச்சு.
திருநெல்வேலி நம்ம ஊர். சினிமாவும் சாப்பாடும் தான் நமக்கு மூச்சு. இருவது வயசு வரைக்கும் அப்படித்தான். வெளில போனா ஒண்ணு தின்னுட்டு வருவோம் இல்லை படம் பாத்திட்டு வருவோம். அதனால சினிமாவையும் எங்களையும் பிரிக்க முடியாது. சினிமா பாட்டையும் தான். எங்க வீட்ல ஒரு டூ இன் ஒன் இருந்தது. நான் ரெண்டாப்பு படிக்கையில எங்கப்பா புதுப் பையன் பாட்டு போட்ருக்கான்னு ஒரு கேசட் வாங்கிட்டு வந்தார். ரெண்டு மூணு நாள் விடாம அந்த படப் பாட்டு தான் ஓடிகிட்டு இருந்தது. பக்கத்து தெரு பசங்க எல்லாம் வந்து வாசல்ல நின்னு கேட்டுப் போனானுங்க. அந்தப் படம் ரோஜா.
நாலாப்பு படிக்கையில, எங்கப்ப பெரிய ஸ்பீக்கர் ரெண்டு வெச்சு பிலிப்ஸ் பவர் ஹவுஸ் ஒண்ணு வாங்கிக் குடுத்தார். என் பொறந்தநாளைக்கு குடுத்த காசுல குளிக்க நின்ன துண்டோட கடைக்குப் போய் இந்தியன் படப் பாட்டு வாங்கிட்டு வந்தேன். தெற்கு பஜார்ல. ஒரு வாரத்துக்கு தெருவே அலறிச்சு. காலைல பாட்டு கேட்டு தான் எழுந்திருப்போம். அப்பா வீட்ல இருந்தா பாட்டுக் கேட்டு தான் தூங்குவோம். பழைய இந்திப் பாட்டெல்லாம் தலைகீழ் பாடமா மாடுறத இப்ப பாக்குறவங்க ஆச்சரியமா பாப்பாங்க. ஆனா அதுக்கெல்லம் எங்கப்பா வாங்கிட்டு வந்த எச் எம் வீ தான் காரணம்.
அப்போல்லாம், 1997 தான் சொல்லுதேன், திருநெல்வேலி ஜங்ஷன் ல இறங்கினாலே திடும் திடும்னு அலர்ற காபி கடைங்க தான் கண்ல படும். யார் கடைல பெரிய ஸ்பீக்கர் இருக்கோ, புது பாட்டு போடுதாவளோ அங்க தான் கூட்டம் நிக்கும். அங்க நின்னு பாட்டக் கேட்டுத் தான் ஒரு படம் எங்கூர்ல ஹிட்டா போச்சான்னே முடிவாகும். பக்கத்துலயே பெரிய கேசட் கடை இருக்கும். என்ன பாட்டு வேணும்னாலும் சலிக்காம எடுத்து தருவார் அந்தண்ணன். அங்க தான் பாட்டு பதியக் குடுப்போம். ரெண்டு நாள் காத்திருக்கணும். ஆனா பரவாயில்லை. என்ன பாட்டு வேணும்னு எழுத ரெண்டு வாரம்ல ஆயிருக்கும்.
ஸ்கூல்ல டான்ஸ் போட்டி வந்தா தான் அந்த அண்ணன் பாடு திண்டாட்டம். அங்க நிப்பாட்டி இந்தப் பாட்ட போட்டு, இங்க நிப்பாட்டி அந்தப் பாட்டப் போட்டு, ரொம்ப சிரமப்படுவார். ஆனா திருப்தியா வந்தா எங்க கிட்ட குடுக்கும் போது அவர் முகம் இருக்கும் பாருங்க களையா.. ரசிச்சு செஞ்சார் போல அந்த வேலைய.
எங்க அண்ணன் ஒரு தடவை ஏதோ ஒரு பாட்டை பஸ்ல கேட்டு வந்து ஒரு கேசட் கடைல இருக்க அவ்ளோ புதுப் பாட்டு கேசட்டையும் கேட்டு படத்த கண்டுபிடிச்சு வாங்கிட்டு வந்தப் படம், முதல்வன். வெளியூர்ல இருந்து வந்த எங்க அத்தை மவன் எதையாவது வாங்கி குடுத்துட்டு தான் போவேன்னு சொல்லவும், கேட்டு வாங்கினது உயிரே பாட்டு. எங்களுக்கு முன்னாடி இருந்த தலைமுறை எப்படி இளையராஜாவை கொண்டாடிச்சோ, நாங்க ரஹ்மானைக் கொண்டாடினோம். நடுவுல ரொம்பத் தொல்லைப் பண்ணி இந்திப் பாட்டெல்லாம் கேட்டு வாங்குவோம்.
இப்படி எங்க தேடலுகெல்லாம் எமனா வந்தது தான் இந்த எப் எம். போன தடவை போனப்ப நாங்க பதிவா கேசட் கடை இருக்குற எடத்துல எது எடுத்தாலும் முப்பது ரூவா கடை இருந்தது. அந்தண்ணன் தான் இருந்தார் ஆனா அவர் முகத்துல பழைய களை இல்லை. நாம கேக்கலனாலும் காதுக்குள்ள பாடுற எப் எம் எங்க? முக்கால் மணி நேரம் சைக்கிள் அழுத்தி நண்பன் வீட்டுல உக்கார வெச்சு நம்மளக் கேக்க வெச்ச பாட்டுங்க எங்க?
சேசே எனக்கு எப் எம் பிடிக்காதுங்க.
மகாமுனி – சிறுகதை விமர்சனம்.
மகாமுனி மகாத்மியம்..
நான் பெரிய புதிய இலக்கிய ரசிகன் இல்லை. சிற்சில புது எழுத்தாளர்களை படித்துவிட்டு போதும்டா சாமி என மறுபடியும் கல்கி, தேவன், புதுமைப்பித்தன் என ஒதுங்கியவன். இந்த முறை புத்தகக் கண்காட்ச்சியில் மகாமுனினு ஒரு புத்தகத்தை அண்ணன் எடுத்து (வாங்கி) வந்திருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தது படமே இல்லாமல் எழுத்துக்களாய் இருந்ததால் வைத்துவிட்டேன்.
எங்களறையில் போன் அருகில் கம்புயூட்டர். வந்த போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்வதற்குள் கம்ப்யூட்டர் கை விட்டுப் போயிருந்தது.. 155ம் பக்கத்தில் மகாமுனினு ஒரு கதை இருக்கும், படிச்சு முடிக்குறதுகுள்ள குடுக்குறேன்னு கண்டிஷன் வேற.. சரி படிக்கலாம்னு எடுத்தா… கீழ வைக்க முடியலை.
நான் கதைய பத்தி பெருசா ஒண்ணும் சொல்லப் போறதில்லை. இது ஒரு அருமையான வாசிப்பு அனுபவம். கண்டிப்பா எல்லாரும் இதை அனுபவிக்கணும். எத்தனை விதமான மனிதர்கள்.. ஒரு மனிதன் தன்னைப் பத்தி மத்தவங்க நினைச்சிருக்குறது சரினு நிரூபிக்க (அது பொய்யாய் இருந்தாலும்) எந்த அளவுக்கு போவான் அப்படிங்குறது தான் கதை. இந்தக் கதைய இன்னும் கய் ரிச்சி படிக்கலை அல்லது அவருக்கு யாரும் இதை மொழிபெயர்க்கலை. ஒரு வேளை படிச்சிருந்தா இந்நேரம் எதாவது ஒரு பிரென்சு கிராமத்துல ப்ரட் பிட் நடிச்சுட்டு இருக்கலாம்.
பீடிகை 1, பீடிகை 2 அப்படின்னு தொடங்குற கதை எப்படி எல்லாம், எங்கெல்லாம் போகுது. பழைய ஆவணங்களோட மதிப்பு இப்ப இல்லை ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கூட யாருக்கும் தெரியலை. அதனாலயே பல விஷயங்கள இழந்த்திருக்கோம். இந்தக் கதைல ஒரு கத்தி வருது. அருமையான வர்ணணைகளோட அந்தக் கத்திய விவரிச்சிருக்காங்க. தொட்டதுகெல்லாம் அந்த காலத்துல கோவப்பட்டு பல கொலைகள் நடந்திருக்கு போல. இதைப் போல கொலைகளப் பண்ண அப்பல்லாம் இருந்த வஸ்தாது ஒருத்தர் தான் மகாமுனி.
ஆள் கொலையும் பண்றார்.. விஷக்கடி மருந்தும் கொடுக்குறார். ஆச்சரியமான விஷயம் இது. எப்படி உயிர காப்பத்துற ஒருத்தனுக்கு உயிர எடுக்கவும் மனசு வருது. அவரப் பத்தி அவர் பேசுறாரோ இல்லையோ ஊர் உலகம் பயங்கரமா பேசுது. அவர் கைல இருக்குற கத்தியால குத்தினா கொல்லப்பட்டவருக்கு ரத்தமே வராது. கத்தில கைரேகையும் படாதுங்குறது தான் ஹைலைட். அதனாலயே மர்மமா அவர் ஏரியால யாராவது செத்தா மகாமுனி தான் பண்ணாருன்னு ஊர்க்காரங்க குசுகுசுனு பேசிக்கிறாங்க.
இதை மகாமுனி என்னிக்கும் மறுத்ததும் இல்லை. ஒத்துகிட்டதும் இல்லை. இப்படி இருக்கும் போது இவர் கைல ஒரு 4 அசைன்மெண்ட் மாட்டுது. வேணாம்னு சொல்லி தலைமறைவா இருந்து இருவது நாள் கழிச்சி பாத்தா நாலு பேருமே குளோஸ். ஆனா மகாமுனி கோர்ட்ல அவர்தான் எல்லாக் கொலையும் பண்ணதா சொல்லி ஒத்துக்குறார்.
இதான் கதை. ஆனா பிரேம் ரமேஷ் எழுத்து உங்களை பழைய பாண்டிச்சேரி வீதி வழியா இழுத்துட்டு போகுது பாருங்க.. வார்த்தைகளுக்குள் புதைத்த அற்புதமான நகைச்சுவை கதைக்கு வெளில உங்கள யோசிக்கவே வைக்காது. ஒரு கட்டுரைல ஜெமோ சொல்லியிருப்பார். சிறுகதைங்குறது ஒரு முடிவை நோக்கி அல்ல ஒரு திருப்பத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்தத் திருப்பத்தில் அதை நிறுத்தத் தெரிய்வது தான் ஒரு சிறந்த சிறுகதையாளனின் வெற்றினு. அருமையா அதைப் பண்ணிருக்காங்க.
கண்டிப்பா வாசிச்சு பாருங்க. மகாமுனினு இவங்க சிறுகதை தொகுப்பு வெளிவந்திருக்கு.
உறக்கமில்லா இரவுகள்
”எப்படி உணர்ற??”
”ரொம்ப சந்தோஷமா!! இப்ப போன் கிட்ட தேவுடு காக்க தேவை இல்லை. எந்த பொண்ணுகிட்ட வேணும்னாலும் பேசலாம். பசங்க கூட சந்தோஷமா சரக்கடிக்கலாம். சுதந்திரமா இருக்கேன்.”
”அவ இருந்திருந்தா, உன்னால இதெல்லாம் பண்ணியிருக்க முடியாதா?”
”ஏன்? முடியுமே. ஆனா ஒப்பாரி வைப்பா. கடுப்பா இருக்கும். மணிக்கு ஒரு முறை நான் பொறுப்பா இருக்கணும்னு நியாபகபடுத்திட்டே இருப்பா. ”
”இப்ப கடுப்பாவே இல்லை?”
”இல்லை. இது வேற மாதிரி. நம்மளை நம்பி யாரும் இல்லை. நம்ம யாருக்கு பதில் சொல்ல வேண்டாம் அப்படினு நினைக்கவே சந்தோஷமா இருக்கு.”
”எனக்கு உன்னை பத்தி சிரிக்குறதா அழுவுறதானு தெரியலை. இவ்வளவு பேசுற நீ அவ போனப்போ ஏன் விழுந்து விழுந்து அழுத??”
”அது வந்து… ”
”சொல்லு.”
“என்னவோ தெரியலை. நம்ம மேல ரொம்ப பாசம் வெச்சிருந்த ஒரு ஆள் நம்ம வாழ்க்கைல இருந்து போறாளேனு ஒரு வருத்தம். ”
”ரொம்ப பாசம்னா எப்படி?”
”இப்ப சிக்கம் பப்ஸ் ஆர்டர் பண்ணோம்னு வைங்க, அவ கிட்ட இருக்குற சிக்கனையும் எனக்கே குடுத்துடுவா. ஒரே ஒரு பீஸ் டெய்ரி மில்க் இருக்கும் போது நான் கேக்காமலே என் வாய்ல போட்ருவா. அந்த மாதிரி.”
”அவ்வளவு தான் நீ சொல்ற பாசமா?”
”எனக்கு சொல்லத் தெரியலை. ஆமா எதுக்கு இப்ப இந்த நேரத்துல பழசெல்லாம்?”
”நீ இப்ப ரொம்ப மாறிட்ட. அதான் கொஞ்சம் பேசலாம்னு தோணுச்சு.”
”நீ சொல்றதும் சரிதான். நிறைய மாறிடுச்சி. முன்னால அழகா தெரிஞ்ச எதுவும் இப்ப பாக்கப் பிடிக்கலை. முன்னாடி பிடிக்காத விஷயத்த இப்ப செய்யுறேன்.”
”பிடிச்சு செய்யுறியா?”
”அப்படி சொல்ல முடியாது. எதுலயும் பிடிப்பில்லை. என்ன பண்றதுன்னு தெரியலை. அதான் இப்படி ராத்திரி மூணு மணிக்கு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.”
”கஷ்டமாயிருக்கா?”
”ஹிஹி.. யாருமே துயரத்துல தனியா இருக்குறதில்லை. என்னை மாதிரி இதே நேரத்துல என்னை விட கஷ்டப்படுறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அதனால நான் மட்டும் தனியா கஷ்டப்படுறேன்னு தோணலை.”
”தத்துவமெல்லாம் பேசுற? நீ காமெடி பண்ணாதான எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும்.”
”எல்லாருக்கும் என்னை பிடிக்கிறதை விட, எனக்கு என்னைப் பிடிக்கணுமே. பிடிக்க மாட்டேங்குது.”
”ஏன் உன் மேல உனக்கு நம்பிக்கை போச்சு?”
”அது அப்படித் தான் பாஸ். ஒரு பொண்ணு உங்க கூட இருக்கும்போது உலகமே உங்க காலடில இருக்குற மாதிரி இருக்கும். எதையும் சாதிச்சுடலாம்னு தோணும். நம்ம ஒரு சின்ன ஓடைய தாண்டுனா கூட கைதட்டி உற்சாகப் படுத்த ஒரு உயிர் இருக்கும். அது இல்லைனு ஆகும் போது எல்லாம் போன மாதிரி ஆயிடும்.”
”ஆனா.”
”புரியுது.. மனுஷன் நம்பணும்னு நினைக்குறதை மட்டும் தான் நம்புவான். நம்ம நம்பிக்கை தான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மாறுமே.”
——————————————————————————————
”இன்னும் தூங்கலையா?? நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம்?” அம்மா எழுந்துட்டாங்க. நான் கண்ணாடிய வெச்சிட்டு படுக்கப் போறேன். இன்னுமோர் உறக்கமில்லா இரவு.
எங்கிருந்தோ வந்தான்!
சமீப காலமாக, பிற மொழித் திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணன், ஆரம்பிச்சு வெச்சது தான் இது. Memories of Murder கொரியத் திரைப்படம் பார்த்த பிறகு அதே வரிசையில் சில படங்கள் பார்க்க வேண்டும் என ஆசை வந்திருச்சு. அப்படி தரவிறக்கி பார்த்தது தான் “The Man from Nowhere”.
சாதாரண பழி வாங்கும் கதை தான். ஆனா அதை எடுத்திருக்குற குடுத்திருக்குற விதம் தான் படத்தோட ஸ்பெஷாலிட்டி. செம மேக்கிங். பர பரன்னு திரைக்கதை. கண்ல ஒத்திக்கலாம் போல ஒளிப்பதிவு. தேவையான இடத்துல அமைதியாகுற பின்னணி இசை. அளவான நடிப்புனு பட்டைய கிளப்பிச்சு இந்தப் படம்.
3 அயர்ன் மாதிரியோ, இல்லை தி கிளாஸிக் மாதிரியோ நினைச்சு இந்தப் படத்தைப் பாக்க வேணாம். பக்கா மாஸ் மசாலா.
சா டே ஷிக். ஒரு அமைதியான அடகுக் கடைக்காரன். யார்கிட்டயும் அதிகம் பேசுறது கிடையாது. அவன் வீட்டு பக்கத்துல ஒரு வாண்டு. சரியான வாலு. அப்போ அப்போ சின்ன சின்ன திருட்டு பண்ணி அதை டே ஷிக் கிட்ட அடகு வைக்க வரும் (அந்தப் பாப்பா அவ்வளவு அழகு). அவங்க அம்மா ஒரு கிளப்ல டான்ஸர். கொஞ்சம் பிரச்சினையான பார்ட்டி.
இவனுக்கு அந்த குழந்தை மேல பாசம் ஜாஸ்தி, ஆனா காமிச்சுக்க மாட்டான். ஒரு நாள் இந்த பாப்பாவோட அம்மா ஒரு குரூப் கிட்ட இருந்து போதை மருந்தை திருடி, ஹீரோ அடகுக் கடைல ஒளிச்சு வெச்சுடுறாங்க. அந்த குரூப், போதைக் கும்பல் மட்டுமில்லை, உறுப்புகளைத் திருடி விக்குற ஒரு கும்பலும் கூட. போதை மருந்துக்காக அவங்க அம்மாவையும் பொண்ணையும் கடத்தப் போய், நம்ம ஹீரோகிட்ட வந்து நிக்குறாங்க. அங்க ஆரம்பிக்குது ரணகளம். அதுக்கப்புறம் எல்லாம் பயங்கர ஸ்பீட் தான். பாப்பாவைக் காப்பத்தினாரா ஹீரோ அப்படிங்குறது தான் படம்.
ஹீரோ வீட்டுக்கு வந்து ரவுடிங்க மிரட்டும் போது, அவங்கள விரட்ட ஒரு மேனரிஸம் வெச்சிருப்பார். மரண மாஸ். இதெல்லாம் தமிழ்ல யோசிப்பாங்களான்னே சந்தேகம் தான். சில இடங்கள்ல ரொம்ப ஒவர்னு தோணினாக் கூட நம்மளை மறந்து பாக்க ஆரம்பிச்சுடுவோம். சண்டை எல்லாம் செகண்ட் கணக்குல தான். ரொம்ப இளகின மனம் கொண்டவங்க, கடைசி சண்டைக்காட்சியப் பாக்க வேண்டாம். படம் முழுக்க கெட்ட வார்த்தைதான். நல்ல வேளை எனக்கு கொரியா மொழி புரியாது.
ஹீரோ போதை மருந்து சப்ளை பண்ற இடத்துக்கு போகும்போது, அவங்க இவரை வாங்க வந்தவர்னு நினைச்சு மரியாதையா நடந்துக்குறது, போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தப்பிக்குற சீன் எல்லாமே நச். இடைவேளை அப்போதான் ஹீரோ முகமே தெரியுது, அதுவரைக்கும் முடி வெச்சு மறைச்சிருப்பாங்க. இவ்வளவு அழகான ஹீரோவை (வோன் பின்) ஏன் இப்படி எல்லாம் பண்ணனும்?
அப்புறம் அந்தப் பாப்பா. சின்னக் குழந்தைதான். ஆனா என்னமா நடிச்சுருக்கு. அந்தப் பொண்ணு நம்ம ஹீரோ கிட்ட “என்னைத் தெரியும்னு சொல்ல அசிங்கமா இருந்ததுல்ல? எல்லாருக்கும் அப்படித்தான். என் டீச்சர், என் கூட படிக்குற பசங்க எல்லாருக்கும் அப்படித் தான். ஆனா அதுக்காக நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஏன்னா உன்னையும் வெறுத்தா நான் நேசிக்க இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க” அப்படின்னு அழுதுகிட்டே சொல்லும்போது நமக்கு என்னவோ பண்ணிடும்.
அதனால, இந்த சனிக்கிழமை நைட் போரடிச்சாலோ, இல்லை என்ன படம் பாக்குறதுனு யோசிச்சுட்டு இருந்தாலோ தைரியமா, இந்தப் படத்தை தரவிறக்கிப் பாருங்க. ரெண்டு மணி நேரம் சும்மா சிட்டாப் பறக்கும்.
எப்படி மாறினான்?
ரஞ்சிதோட அண்ணனுக்கு எப்படின்னே புரியல முதல்ல. ஓரு புத்தாண்டப்போ தான் அவரோட பிரண்ட் அவர்கிட்ட சொன்னான். “உன் தம்பி தம் அடிக்குறாண்டா.” பேசிப் பாத்தார். ஆனா ரஞ்சித் பிடி குடுத்தே பேசலை. ரெண்டு மூணு வாரம் பேசாம எல்லாம் இருந்து பாத்தார், ஆனா வழக்கம் போல பேசியே கவுத்துட்டான்.
“அண்ணே! தம் அடிக்குறவன் எல்லாம் கெட்டவன் இல்லை. நீங்க கண்ட கண்ட இலக்கியம் எல்லாம் படிச்சுட்டு வந்து நைட் பூரா தூங்கவிடாம பேசிட்டே இருப்பீங்க. நான் கேக்காட்டி கூட நிறுத்துனு அடம் பிடிச்சுருக்கேனா? அப்புறம் ஏன் என் வழியில வர்றீங்க? என்னை நானாவே ஏத்துக்க உங்களால முடியாதா?” அப்படி இப்படினு பேசி சரி பண்ணிட்டான்.
நைட் ஷிப்ட் பாக்கும்போது ஆரம்பிச்சதுனு அண்ணனுக்கு தெரியும். ரெண்டு நாளைக்கு ஒண்ணு, ஒரு நாளைக்கு ஒண்ணுனு இருந்தது, போக போக அதிகமாக ஆரம்பிச்சது. அண்ணன் மறுபடியும் பேச ஆரம்பிச்சார்.
“ரஞ்சித்! ஒரு நாளைக்கு அம்பது ரூபா இதுக்காக செலவு பண்ற. அதைக் கொஞ்சம் குறைச்சீன்னா, மாசத்துக்கு 750 ரூபா லாபம். எவ்வளவு நல்ல விஷயம் பண்ணலாம். நிறைய நல்ல புஸ்தகம் வாங்கலாம். நம்ம ரெண்டு பேரும் சேந்து ஒரு நல்ல ஹோட்டல்ல போய் சாப்பிடலாம். யோசிடா.”
“அண்ணே இன்னும் ஒரு வருஷத்துல புரமோஷன் கிடைச்சிடும்”
“கிடைச்சதும் நிறுத்திடுவியா?”
“இல்லை, நான் தம் அடிச்சு காலி பண்ணது போக நீங்க சொன்னது எல்லாம் பண்ண நேரமும், பணமும் இருக்கும்.”
அண்ணன் அதோட சொல்றதை விட்டுட்டார். வீட்டுல தான் இப்படி ரஞ்சித்துக்கு பிரச்சினைன்னு பாத்தா ஆபீஸ்ல அதுக்கு மேல.
“என்ன தான் மிட்டாய் வாய்ல போட்டாலும் நாத்தம் வருதுடா” பக்கத்துல உக்காந்துருக்குறவன் டெய்லி சொல்லுவான்.
“தள்ளி உக்காந்துக்க போடா”.
என்ன தான் அவசர மீட்டிங்கா இருந்தாலும், இவன் வெளியில போயிருக்கான்னு தெரிஞ்சா, இவனோட மேனேஜர், இவன் வந்ததுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் கூப்பிட்டு பேசுவார். பாவம் மனுஷனுக்கு இந்த ஸ்மெல்லே அலர்ஜி.
கூட வேலை பாக்குறவங்களுக்கும் ரஞ்சித்தோட பதில் இது தான். “நான் தம் அடிக்குறது என்னோட தனிப்பட்ட விருப்பம். நாத்தம் அடிக்குதுனு சொல்றவன் என் கூட பேச வேண்டாம். சுற்றுசூழல் பத்தி பேசுறவன், ஒரு மாசம் சைக்கிள்ல வந்துட்டு அதுக்கப்புறம் என்கிட்ட வந்து பேசு. யாருக்காகவும் என்னால மாற முடியாது.”
சமயத்துல சின்ன விஷயத்துக்கு மத்தவங்க எல்லாம் ரொம்ப ரியாக்ட் பண்ற மாதிரி ரஞ்சித்துக்கு தோணும். ஆனா பெட்டிக் கடைல நிக்குற கூட்டத்த பாத்து மனசு அமைதியாகிடும்.
இன்னைக்கு காலைல அண்ணன் வெளியில கிளம்பும் போது தான் நேத்தே காசு எடுத்துட்டு வர சொன்னது ஞாபகம் வந்தது ரஞ்சித்துக்கு. இப்போ இல்லைனு சொன்னா ரொம்ப டென்ஷன் ஆகிடுவார். புது வருசம் வேற.
“என்னடா, நான் கேட்டது என்னாச்சு.” அண்ணனே வந்துட்டார்.
“அண்ணே! நீங்களே எப்பவோ ஒரு தடவை வெளில போறீங்க. என் டெபிட் கார்ட் எடுத்துக்குங்க. உங்களுக்கு எவ்வளவு தேவையோ செலவு பண்ணிட்டு பாக்கி தாங்க. பிரச்சினையில்லை.”
“நேத்து காசு எடுத்துட்டு வர மறந்துட்டியா?”
“அதெல்லாம் இல்லை. உங்க மேல ஒரு பாசத்துல பண்ணா, இப்படி எல்லாம் சொல்றது நல்லாயில்லை.”
“உனக்கு?”
“நான் எங்கயும் போகலை. என்கிட்ட ஒரு 130 ரூவா இருக்கு. அதைத் தாண்டி எனக்கு எந்த செலவும் இல்லை. நீங்க கிளம்புங்க நேரமாகுது”
அண்ணன் கிளம்புன பத்தாவது நிமிஷம் ஒரு நட்புகிட்டயிருந்து போன்.
“மச்சான், உடனே கிளம்பி திருமங்கலம் வா!”
“என்னாத்துக்கு?”
“நான் கம்ப்யூட்டர் வாங்க போறேன். கொஞ்சம் கூட வா”
சரின்னு வண்டி எடுத்துட்டு கிளம்பி பாதி வழியில போறதுக்கு முன்னாடி, வண்டி முக்க ஆரம்பிச்சுட்டுது. அட சனிக்கிழமை. வண்டிக்கு பெட்ரோல் போடணும். நேரா பங்குக்கு போய் பெட்ரோல் ஒரு நூறு ரூபாய்க்கு போட்டு, நட்பு சொன்ன எடத்துக்கு போய் நின்னா எவனையும் காணம்.
வண்டிய நிப்பாடிட்டு, பெட்டிக் கடைல போய் அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் வாங்கி பத்த வெச்சான். வந்துட்டேயிருக்கேன்னு நட்புகிட்டயிருந்து குறுஞ்செய்தி நடுவுல வந்திருந்தது.
“தம்பி” தோளுக்கு பின்னால ஒரு குரல் கேட்டு திரும்பினான் ரஞ்சித்.
கூப்பிட்டவௌக்கு ஒரு 65 வயசிருக்கும். கையில ஒரு பிளாஸ்டிக் கவர் வெச்சிருந்த்தார். அதுல இருந்த துணி பைக்கு அடங்காம கொஞ்சம் வெளில தெரிஞ்சது. ஒரு கிழிஞ்ச டீசர்ட், பல நாள் அழுக்கேறின வேட்டி. பொதுவா இந்த மாதிரி இதுவரைக்கு கூப்பிட்டவங்க எல்லாம், காசு தான் கேட்டாங்க. ஆனா இவர் கண்ல இருந்த ஏதோ ஒண்ணு இவர் காசுக்காக கூப்பிடலைனு சொல்லிச்சு.
”சொல்லுங்க”
“ரெட் ஹில்ஸ் எந்தப் பக்கம் போகணும்?”
“ரைட்ல திரும்புனா, ஒரு சிக்னல் வரும், அதுக்கு அடுத்தாப்புல ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். அங்க ஏறிக்குங்க.”
“பஸ் இல்ல தம்பி, நடந்து போக வழி சொல்ல முடியுமா?”
“என்னங்க ஊருக்கு புதுசா, இல்லை காமெடி புரோக்ராம் எதுவும் பண்றீங்களா? பத்து மணி வெயில்ல பதினெட்டு வயசு பையன் கூட அவ்வளவு தூரம் நடந்து போக மாட்டான். பேசாம பஸ்ல போங்க.” ரஞ்சித் சொல்லிட்டு இருக்கும் போதே பிரண்ட் வந்துட்டான்.
“மச்சான், வண்டி பஞ்சர்டா, உன் வண்டி எடுத்துட்டு போறேன், டியுப் மாத்தணும்” சொல்லிட்டே வண்டி எடுத்துட்டு போயிட்டான். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும். இன்னொரு தம் வாங்கலாம்னு சொல்லி பாத்தா பெரியவர் அங்கயே நின்னுகிட்டு இருந்தார்.
“இன்னும் கிளம்பலையா நீங்க?”
“தம்பி இன்னும் வழி சொல்லலையே!”
“நாந்தான் சிக்குனேனா இன்னைக்கு.”
“தம்பி எனக்கு வெளியூர். இங்க சென்னைக்கு காலைல தான் வந்தேன். யார்கிட்டயாவது வழி கேட்டா நான் சொல்ல வர்றதைக் கூட கேக்க மட்டேங்குறாங்க. இந்த ஊர்ல எல்லாரும் எங்கேயோ அவசரமா போய்கிட்டே இருக்காங்க. நான் பக்கத்துல போனாலே பிச்சைக்காரன்னு நினைச்சு விரட்டுறாங்க.” சொல்லிட்டு இருக்கும்போதே கண் கலங்கிருச்சு. சில நேரங்கள்ல சென்னை நரகம் தான்.
“இங்க அப்படித்தாங்க. எக்மோர்ல இருந்தே பஸ் இருந்திருக்குமே?”
“காசு இல்லை தம்பி. ரெட் ஹில்ஸ்ல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. அங்க போய் இன்னைக்கு வேலை பாத்தாத்தான் காசு. ஊர்ல தங்கை மகன் டிக்கட் எடுத்து குடுத்தான். மேல காசு கேக்க கூச்சமா இருந்தது. அதான் எக்மோர்ல இருந்து நடந்தே வந்துட்டேன்.”
“என்னங்க நீங்க. இங்க இருக்குறவங்க எல்லாரும் கெட்டவங்க இல்லை. நீங்க கேட்டிருந்தீங்கன்னா யாராச்சும் உதவி பண்ணியிருப்பாங்க. சரி சாப்டீங்களா?”
“அங்க போய் தான் தம்பி. வழி சொன்னா நல்லா இருக்கும்”
“நீங்க வாங்க முதல்ல, நான் வழி சொல்றேன்”பஸ் ஸ்டாப்புக்கு பெரியவரைக் கூப்பிட்டு நடக்க ஆரம்பிச்சான். வாகன நெரிசல் ரொம்ப அதிகமா இருந்தது. ரோட்டைக் கடக்க கையப் பிடிச்சுக் கூப்பிட்டு போகும்போது பெரியவர் அழ ஆரம்பிச்சுட்டார்.
“என்ன சார், ஏன் அழறீங்க”
“தெரியலை தம்பி, என்னமோ இந்த ஊர் கொஞ்சம் பயமா இருக்கு. என் பையன காசெல்லாம் போட்டு படிக்க வெச்சேன். நிலம் எல்லாம் வித்துட்டேன். சென்னைல தான் நாலு வருஷம் படிச்சான். ஊருக்கு வர்ற வழியில பஸ் விபத்துல போய் சேந்துட்டான். பொண்டாட்டி எப்பவோ போய் சேந்துட்டா. கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான்னு நினைச்ச மகனும் போய் சேந்துட்டான். ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்காகத் தான் இந்த வயசுலயும் வேலைக்கு போறேன்.”
“விடுங்க சார். எல்லார் வாழ்க்கைலயும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்யும். நீங்க மனசை விடாதீங்க. நான் பஸ் ஏத்தி விட்டு டிக்கட் எடுக்குறேன். நீங்க போய் வேலைல சேருங்க முதல்ல.”
“தம்பி என்னை எல்லாரும் பிச்சைக்காரன் மாதிரி பாத்தாங்கனு தான் சொன்னேன். நீங்க என்னை பிச்சைக்காரனாவே ஆக்கிடுவீங்க போல இருக்கே!”
“உங்க தங்கை பையனா என்னை நினைச்சுக்குங்க. போதுமா?”
பெரியவர் ரொம்ப நேரம் பேசவேயில்லை. அமைதியா நடந்து வந்தார். அப்போ அப்போ தனக்குத்தானே பேசிகிட்டார். இந்த மாதிரி சமயத்துல எதுவும் பேசவோ கேக்கவே கூடாதுன்னு அண்ணன் சொல்லியிருக்கார். அதனால ரஞ்சித் அமைதியா வந்தான். பஸ் ஸ்டாப்ல ஒரே கூட்டம்.
“ரெட் ஹில்ஸ் பஸ் இங்க தான வரும்?”
“இன்னைக்கு அங்க ஏதோ பிரச்சினை பண்ணிட்டானுங்க. பஸ் போகாதாம். வெள்ளை ஷேர் ஆட்டோல தான் போகணும்.”
ரெண்டு ஷேர் ஆட்டோ 5 ஷேர் ஆட்டோ கூட்டத்த ஏத்திட்டு போச்சு. அடுத்தாப்புல வந்த வண்டில ஏறினப்போ டிரைவர்
“ரெட் ஹில்ஸ் ஒண்டி தான் போகும். முப்பது ரூபா. ஓகேனா ஏறுங்க.”னு கத்திட்டு இருந்தான்.
எவ்வளவு தான் தடவிப் பாத்தும் 25 ரூபா தான் இருந்தது. எப்படி? ஆங் 100 ரூவா பெட்ரோல், 5 ரூவா தம். சே.. இந்த ஆள் கடைக்கு போறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி பாத்திருக்க கூடாதா? பெரியவர்ட்ட சொன்னான்.
“டிரைவர், என்னை 25 ரூவா வரைக்கும் எங்க போகுமோ அங்க இறக்கி விட்டிருங்க.”னு கேட்டார்.
“பெருசு, நீ உக்கார்ற எடத்துல, இன்னொருத்தர் உக்காந்தா, எனக்கு 5 ரூவா கூட கிடைக்கும். அப்படியே நேரா நடந்து போ, 4 மைல்ல வந்த்துடும்”னு சொல்லிட்டு வண்டிய எடுத்துட்டு போயிட்டான்.
முதல் முறையா, யார் மேல எதுக்குனு தெரியாம ரஞ்சித்துக்கு கோவம் கோவமா வந்தது. ஆட்டோக்காரனை கண்டபடி திட்டினான்.
“விடுங்க தம்பி, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. இப்ப பரவாயில்லை. எனக்கு யார்கிட்டயோ பேசணும் போல இருந்திருக்கு. கொஞ்சம் வயசாயிடுச்சுன்னாலே பேச யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க கேட்டீங்க, நான் கொட்டினேன். மனசு இப்ப லேசாயிடுச்சு. ஆட்டோக்காரன் சொன்ன மாதிரியே நேரா நடந்து போயிடுறேன்.”
எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு டீ கூட சாப்பிடாம நடந்து போன அந்த பெரியவரை பாக்கும்போது, விரலுக்கிடையில இருந்த வாசம் நாத்தமா குமட்டிச்சு ரஞ்சித்துக்கு.
மழைக்காலங்கள் எனக்கு பிடிப்பதில்லை!
நாங்கள் சந்திக்க நேரும் போதெல்லாம், மழை பெய்திருக்கிறது.
அன்று, மொட்டை மாடியில் நின்று கைகள் நீட்டி காதல் சொன்ன போதும்,
பின்பு, இரண்டு அடி இடைவெளி விட்டு மலர்கள் நிறைந்த பாதையில் நடந்த போதும்,
சென்னை வந்து அவள் செல்கையில் வழியனுப்ப நெல்லை எக்ஸ்பிரஸ் ஜன்னலின் வழி விரல் பற்றிக் கொண்டு இருந்த போதும்,
“வரும்போதே மழைய கூட்டிகிட்டு வருவியா? ” என்று அவள் கேட்ட போதும், மழை மிகவும் பிடித்திருந்தது.
அவள் செல்பேசியில் ஒலிக்கும் நியூயார்க் நகரம் எங்களுக்கும் குளிருக்கும் உடைய தொடர்பை சொல்கிறது என்றே எண்ணினேன்.
.மழைக்காலங்கள் என் வாழ்வில், ஏன் பலர் வாழ்வில் மறக்க முடியாத சில நினைவுகளை விட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. காதல் சொல்லி கண்ணால் பேசி நகரும் போது மேலே விழும் மழைத்துளிக்கு இணையான ஆசீர்வாதம் இருக்கவே முடியாது. சில சமயங்கள் என வாழ்வில் மழை, சில சங்கேத குறியீடுகளை அள்ளித் தெளித்துள்ளது.
பாலோ கோயலோ சொல்வதைப் போல, உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு ஏதோ சொல்லத் துடிக்கின்றன. கேட்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். என் காதல் அவளிடம் துவங்கியது ஒரு மழைக்காலம். மழையும் குளிரும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் வீதியில் உலா வந்தன. அப்பொழுது அவள் தன் வீட்டிலுருந்து என்னை பார்க்கும் பொழுது அடித்தது ஒரு சாரல். ஒரு வேளை அந்த சாரல் வராமல் இருந்திருந்தால், அந்தப் பார்வை அவ்வளவு தூரம் என்னை பாதித்திருக்காதோ என்னவோ..
அவள் பாட்டி வீட்டுக்கு அவள் சென்ற போது அவளைப் பார்க்க முடியுமா முடியாதா எனத் தெரியாமல், ஒரு குக்கிராமத்தில் சுற்றிய பொழுது, குடைக்கும் வலிக்காமல், நிற்கவும் நிற்காமல் பெய்த மழை அவளுக்கான என் பதட்டமான தேடலுக்கு துணை நின்றது.
இனி சந்திக்க வேண்டாம், என அவள் சொல்லச் சொல்ல அவளுக்காக பேருந்து நிலையம் ஒடும் போது பெய்த அடைமழையை விட என் மன உணர்ச்சியை சரியாக சொல்ல எதுவாலும், எந்த எழுத்தாலும் முடியாது.
காலங்கள் கடந்து சென்றாலும், கூச்சமில்லாமல் என்னை வாட்டிய மழையும் குளிரும் மீண்டும் என் வாசலில் உலா செல்லும் போது.. சீ சீ எனக்கு மழைக்காலங்கள் பிடிப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
அடுத்தவர் வாழ்க்கை..
நம்ம ஆட்களுக்கு அடுத்தவனை வேவு பாக்குறதுன்னா அவ்வளவு குஷி. அவன் சாதாரணமா செய்யுற விஷயத்த கூட எவ்வளவு ஊத முடியுமோ அவ்வளவு ஊதுறது. சில பேர், நாம பாக்குறோம்னு தெரிஞ்சா போடுவாங்க பாருங்க சீனு.. தாங்க முடியாது. ஆனா சில பேருக்கு அது தான் வேலையே. சத்தியமா ஒரு மாசத்துக்கு மேல பிடிச்சு அந்த வேலைய செய்ய முடியாது.
அப்படி ஒருத்தரை பத்தி வேவு பாக்க வெச்ச ஆள், அந்த மனுஷன காப்பாத்துறார். எப்படி அப்படின்ற படம் தான், “The Lives of Others”. இது ஒரு ஜெர்மன் படம். 1980கள்ல கிழக்கு மேற்கு ஜெர்மனி பிரிஞ்சிருந்தப்ப நடந்த விஷயங்கள சொல்லி இருக்காங்க.

வெய்ஸ்லர்னு ஒரு இன்ஸ்பெக்டர் தன் நண்பனை மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச்சு போக உதவியா இருந்த ஒருத்தனை விசாரிக்குறதுல படம் ஆரம்பிக்குது. அவனை தூங்க விடாம தொடர்ந்து கேள்வி கேட்டு அவனை மிரட்டி பதில் வாங்குறார். அதை அகாடமில இருக்குற பசங்களுக்கும் சொல்லித் தரார். வெய்ஸ்லர் ஒரு தனிமையான மனுஷன். வீடு துப்புறவா இருக்கும். யார் கூடவும் பெருசா பேசுறதில்ல. அப்போ அவரோட சீனியர் ஒருத்தர் வந்து ஒரு நாடகம் பாக்க கூட்டிட்டு போறார்.
நாடகம் எழுதினவர் பேரு டிரேமேன். அவரை பாத்தா நம்ம வெய்ஸ்லருக்கு சத்தமில்லாம மேற்கு ஜெர்மனிக்கு சப்போர்ட் பண்ற ஆள் மாதிரி தெரியுது. ஆனா சீனியர் ஒத்துக்க மாட்டேங்குறார். அந்த நாடகத்துல டிரேமேனோட காதலி கிறிஸ்டா நடிச்சிருக்காங்க. அந்த நாடகம் பாக்க வந்த மந்திரி ஒருத்தர், கிறிஸ்டா மேல ஆசைப்படுறார். அப்போ கிழக்கு ஜெர்மனியில பயங்கர கலாசார ஆதிக்கம். அரசாங்கத்துக்கு எதிராவோ இல்லை மேற்கு ஜெர்மனிக்கு ஆதரவாவோ யாராவது பேசினாலோ எழுதினாலோ அவங்களை உடனே கைது பண்றது இல்லை வேற வழில டார்ச்சர் பண்றதுன்னு அநியாயம் பண்றாங்க. அதனால தன் பவர யூஸ் பண்ணி இந்த மந்திரி, சீனியர டிரேமேனை வேவு பாக்க சொல்றார். சீனியர் இந்த வேலைய வெய்ஸ்லருக்கு தரார்.
அப்போலேருந்து வெய்ஸ்லர் டிரேமேனை நோட்டம் விடுறார். அவங்க வீட்டை அங்குல அங்குலமா வயர் பொருத்தி வீட்ல எங்க இருந்து பேசினாலும் போலீசுக்கு கேக்குற மாதிரி செட் பண்றாங்க. பகல் முழுசும் வெய்ஸ்லரே கேக்குறார். நாள் முடிவுல அதை ஒரு ரிப்போர்ட்டா டைப் பண்ணி எடுத்துக்குறார். இதுக்கு நடுவுல வேவு பாக்க வெச்சது அரசாங்கத்துக்காக இல்லை, மந்திரிக்கு அந்த நடிகை மேல உள்ள ஆசையில அப்படின்னு வெய்ஸ்லருக்கு தெரிய வருது. ஆனா சீனியர் அதை எல்லாம் கண்டுக்க தயாராயில்லை. முடிஞ்சா அதை பத்தியும் ஒரு கண் வைக்க சொல்லி சொல்றார்.
நல்லவரா இருக்குற டிரேமேன் மேல வெய்ஸ்லருக்கு ஒரு அபிப்ராயம் வருது அது மட்டுமில்லாம ஒரு பரிதாபமும் வருது. ஒரு தடவை வேற வழி இல்லாம மந்திரி ஆசைக்கு சம்மதிச்சு அவர் கார்ல இருந்து இறங்கி வர்ற கிறிஸ்டாவ டிரேமேன் கிட்ட மாட்டியும் குடுக்குறார். (பேசாம தான். எப்படின்னு படத்துல பாருங்க). ஆனா அவங்க சண்டை போட்டுக்கலை. அடுத்த தடவை அவங்க மந்திரிய பாக்க போகும் போது டிரேமேன் நாகரீகமா தடுக்குறார். ஆனா கிறிஸ்டா போறாங்க. இதை எல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு இருக்குற வெய்ஸ்லர், அவங்க கிட்ட பேசி திரும்ப வீட்டுக்கு போக வைக்குறார்.
இனி இவங்களை கண்காணிக்க தேவை இல்லைனு இவர் சொல்லும்போது, டிரேமேனோட நண்பர் ஒருத்தர் இறந்து போறார். அந்த கடுப்புல நம்ம எழுத்தாளர், கிழக்கு ஜெர்மனிய காய்ச்சி எடுத்து ஒரு கட்டுரை எழுதுறார். கட்டுரை பிரசுரிக்குற பத்திரிக்கை ஆசிரியர், கைல எழுதுனா மாட்டிக்குவ தலைவா, அப்படின்னு, ஒரு டைப்ரைட்டர் மறைச்சு கொண்டு வரார் (அப்போ அது எல்லாம் பெரிய குத்தம் போல இருக்கு.). அந்த டைப் ரட்டரை வீட்டுல குழி தோண்டி புதைக்கெல்லாம் செய்யறாங்க. இது எல்லாம் நம்ம வெய்ஸ்லருக்கு தெரியும் ஆனா யார்கிட்டயும் அவர் சொல்லலை. அந்த கட்டுரையும் வந்துடுது, நம்ம சீனியர் போலீஸ எல்லாரும் வறுத்து எடுக்குறாங்க.
கிறிஸ்டா வர்றதில்லைனு கடுப்பான மந்திரி, டிரேமேன் தான் அந்த கட்டுரைய எழுதினார்னு போற போக்குல போட்டு போறார். ஒரு தடவை போய் வீட்ல தேடி பாக்குறாங்க எதுவும் அகப்பட மாட்டேங்குது. எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு கிறிஸ்டாவ அரெஸ்ட் பண்ணி விசாரணை வல்லவரான வெய்ஸ்லர விசாரிக்க சொல்றாங்க. வேற வழியில்லாம கிறிஸ்டா டைப் ரைட்டர் இருக்குற இடத்த சொல்லிடுறாங்க. எப்படியாவது இவங்க ரெண்டு பேரை காப்பத்தணும்னு நினைக்குற வெய்ஸ்லர், வீட்டை உடைச்சு டைப் ரைட்டர தன் கார்ல வெச்சுடுறார். வீட்ட மறுபடி சோதனை போட போலீஸ்காரங்க வராங்க. தன் கிட்ட எந்த தப்பும் இல்லாத மாதிரி டிரேமேன் இருக்க, தன் கணவர் மாட்டிக்குறத பாக்க முடியாத கிறிஸ்டா வெளிய ஓடி லாரில அடிபடுறாங்க. இதை பாக்குற வெய்ஸ்லர், அவங்க கிட்ட போய் தான் தான் டைப் ரைட்டர எடுத்ததா சொல்லும்போது கிறிஸ்டா இறந்துடறாங்க.
தன் மனைவிதான் தன்னைக் காப்பாத்த டைப் ரைட்டர எடுத்ததா நினைக்குற டிரேமேன், குலுங்கி அழுறார். இப்ப தேடுதல் பிளாப் ஆனதுக்கு காரணம் வெய்ஸ்லர் தான்னு சீனியருக்கு தெரியும். ஆனா ஆதாரம் இல்லை. அதனால அவருக்கு பணி தரக்குறைவு செஞ்சு 20 வருஷத்துக்கு பதவி உயர்வு கிடைக்காத மாதிரி பண்ணிடுறார்.
எழுத்தாளர் டிரேமேனுக்கு வெய்ஸ்லரோட தியாகம் தெரிஞ்சதா? அவர் எப்படி தன் நன்றிய காமிச்சார்னு படம் பாத்து தெரிஞ்சுக்குங்க.
வெய்ஸ்லரா நடிச்ச உல்ரிச் முஹெ பத்தி கண்டிப்பா சொல்லணும். இந்த படத்துக்கு முன்னாடி அவர் பெரிய ஆள் எல்லாம் கிடையாது போல இருக்கு. ஆனா அப்படி ஒரு நடிப்பு. படம் முழுக்குஅ ஒரு கண் இமை அசையணுமே, ஒரு புன்னைகை வரணுமே. ம்ஹும். அப்படி ஒரு அசாதரணமான நடிப்பு. தன் நண்பன் செத்து போகும்போது டிரேமேன் இசைக்கும் சோக கீதம் கேக்கும் போது அவரையும் அறியாம அவர் கண்ல தண்ணி வர்ற சீன் டாப் கிளாஸ். பாவம் மனுஷன் இறந்துட்டார்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு பயங்கர பலம். தேவை இல்லாம ஒரு சீன் கிடையாது. அமைதியான காட்சிகளா இருந்தாலும் சீட் நுனில நம்மள உக்கார வெச்சிருக்காங்க. படம் ஆஸ்கர் வாங்குச்சு. படத்தோட டிரைலர் இங்க.
படிச்சது பிடிச்சிருந்தா சொல்லிட்டு போங்க. சந்தோஷப்படுவேன்ல.
கண்களின் ரகசியங்கள்!
இது வரைக்கும் பெருசா சினிமா விமர்சனம் எலாம் செஞ்சது கிடையாது. ஆனா ரொம்ப நாளா ஹாலி பாலி, ஜெய், கருந்தேள் இவங்க வலைப்பூ எல்லாம் பாத்து பழக்கம். யாரும் இது வரைக்கும் இந்த படம் பத்தி எழுதி இருக்காங்களானு தெரியலை. நான் பாத்து எழுதணும்னு நினைச்ச படம், The secret in their eyes. என்னோட விமர்சனம் எல்லாம் தியேட்டர்ல பாப்கார்ன் விக்குறவன் கதை சொல்ற மாதிரி தான் இருக்கும். என்ன செய்ய அவ்வளவு தான் வரும்.
காமெடி என்னன்னா. வேற ஏதோ படத்த தேடப் போய் இந்தப் படம் தரவிறக்கம் செஞ்சுட்டேன். இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தான்.
கதை என்னன்னா, பியூனஸ் ஏர்ஸ்ல ஒரு பொண்ணு கொடூரமான முறைல கற்பழித்து கொலை செய்யபடுறாங்க. அதை பெஞ்சமின் அப்படின்னு ஒரு வக்கீல், விசாரிக்குறார். அப்போ அவருக்கும் அந்த பொண்ணோட கணவனான மொராலஸ்க்கும் ஒரு நட்பு உருவாகுது. பப்ளிக் பிராசிக்யூட்டர் மாதிரி ஒருத்தர் ரெண்டு டம்மி பீஸை கொலைகாரங்கனு சொல்றார். ஆனா பாத்த உடனே அவங்க தப்பு பண்ணலைனு பெஞ்சமினுக்கு தெரிஞ்சுடுது. ஒரு நாள் ராத்திரி மொராலஸ் வீட்ல உக்காந்து பேசிட்டு இருக்கும்போது இறந்து போன பொண்ணோட பழைய போட்டோ ஆல்பம் பாக்குறார் பெஞ்சமின். அதுல ஒருத்தன், இந்த பொண்ணையே உத்து பாத்துட்டு இருக்குறதை பாத்து அவன் மேல சந்தேகப்படுறார்.
சொன்னா மாதிரி அவனும் கொலை நடந்த அன்னிக்கு அதே ஊர்ல தான் இருந்திருக்கான். அவனை பிடிக்க படாத பாடு பட்டு அவங்க அம்மா வீட்டுல எல்லாம் ஏறி குதிச்சு, அவன் எழுதுன லெட்டரை எல்லாம், எடுத்துட்டு வந்து இவங்க வேலை பாக்குற ஜட்ஜ் கிட்ட மாட்டிகிறார் பெஞ்சமின். அந்த மெயின் பீஸ் இவங்க வர்றது தெரிஞ்சு எஸ் ஆயிட்டே இருக்கான். இவங்க பண்ண கயவாளித்தனத்தால கேஸ் குளோஸ் ஆயிடுது. பெஞ்சமினோட பாஸ் ஒரு அழகான பொண்ணு பேரு ஐரீன். அவங்க தான் நம்மாளு வேலை போகாம காப்பாத்துறாங்க.
ஒரு வருஷம் கழிச்சு, ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல மொராலஸ பாக்குறார் பெஞ்சமின். என்ன விஷயம்னா, வேலை முடிஞ்சதும் மொரால்ஸ் தினமும் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனா போய் உக்காந்து தன் மனைவிய கொன்னவன் வரானானு ஒரு வருஷமா தேடிகிட்டு இருக்கான். இதுல ரொம்ப பாதிக்கபடுற பெஞ்சமின், ஐரீண்ட பேசி கேசை திறக்க சொல்றார். ரெண்டு பேருக்கும் நடுவுல பரஸ்பர அன்பு இருக்குறதால அவங்களும் பண்றாங்க.
அப்போ அந்த வில்லன், எழுதுன லெட்டர்ல இருந்து அவன் ஒரு கால்பந்து வெறியன்னு தெரியுது. அடுத்த நாள் நடக்குற மேட்ச்ல பையன புடிச்சுடுறாங்க. அப்புறம் என்னாச்சு. மொராலஸ் சந்தோஷபட்டாரா? ஐரீன் பெஞ்சமின் வாழ்க்கை என்னவாகுது அப்படின்னு நீங்களும் என்னை மாதிரி படம் பாத்து தெரிஞ்சுக்குங்க. இந்த படம் 2010 ஆஸ்கர்ல சிறந்த வேற்று மொழிப்படமா தேர்வாகி வேட்டைக்காரன தோக்கடிச்சது..
படத்துல நிறைய டயலாக் அற்புதமா இருந்தது. ஐரீன் கருப்பு டிரஸ் போட்டு வரும்போது, ஹீரோவோட பிரண்ட் கமெண்ட் அடிப்பார் “இன்னைக்கு பாதிரி யாராவது இறந்துட்டாங்களா என்ன? தேவதை கருப்பு டிரஸ் போட்டு வருது?
அதுக்கு ஐரீன் “தேவதை மூணு கிலோ எடை கம்மியா தெரியணும்னா கருப்பு டிரஸ் போடும்”
படத்துக்கு பெரிய பலமே ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் தான். அப்புறம் பெஞ்சமினோட பிரண்ட்டா வர்றவர் நடிப்புல பின்னி இருப்பார். அப்போ அப்போ எனக்கு நாகேஷ் சார் ஞாபகம் வந்தது. அவர் பேரு கல்லிமோரோ பிரன்ஸெல்லா. நம்ம யூகி சேது சார் மாதிரி அங்க நையாண்டி தர்பார் நடத்துறவர். இவர் நடிக்குறார்னு தெரிஞ்சு, 2003ல பிடல் கேஸ்ட்ரோ அந்த படத்தை க்யூபால எடுக்க அனுமதி குடுத்தார்னு சொல்றாங்க. பெரிய ஆள் தான் போல இருக்கு.
ஒரு ரொமாண்டிக் திரில்லர் பாக்கணும்னு நினைச்சா தைரியமா இந்த படம் பாக்கலாம். பிடிக்கும்.
படத்தோட டிரைலர் இங்க.
முகம்
மனோ சார்! ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற பள்ளீக்கூடத்துல கணக்கு வாத்தியார். இன்னும் இவருக்கு கல்யாணம் ஆகலை. ஸ்கூல் ஹாஸ்டல்ல தான் இவர் தங்கி இருந்த்தார். ஞாயிறு மட்டும் மூணு கிலோ மீட்டர் தள்ளி இருக்குற டவுணுக்கு போய் படம் பாத்துட்டு வருவார்.
ஸ்கூல்ல இருந்து டவுணுக்கு போறதுக்கு ஒரு குறுக்கு வழி உண்டு. ஒரு முந்திரி தோப்பு வழியாப் போனா பக்கம். நைட் திரும்பும்போது பஸ் இருக்காது. அதனால கைல எப்பவுமே டார்ச் வெச்சிருப்பார்.
அன்னிக்கும் அப்படித்தான் படம் முடிஞ்சு வர பத்து மணி ஆகிடுச்சு. அந்த தோப்பு வழியாத்தான் வந்துகிட்டு இருந்தார். தூரத்துல ஒரு பையன் ஒரு கல் மேல உக்காந்து அழுதுகிட்டு இருந்தான்.
இந்த நேரத்தில ஹாஸ்டல்ல இருந்து வெளில யாரும் வரக் கூடாதே!
‘இங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க?” பதிலே இல்லை. சுத்திலும் எந்த சத்தமும் இல்லை. ரத்திரி காத்து மட்டும் தான். காத்துல பையன் அழுவுற சத்தம் மட்டும் கேட்டது.
“ஏண்டா அழ்ற?” பக்கத்துல போய் ஆறுதலா கேட்டார். பையன் எதையோ பாத்து பயந்த்துருக்கான். உடம்பெல்லாம் நடுங்கிட்டு இருந்தது.
“ஏய்! எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன் தெரியும்ல? பாருடா! நிமிந்து பாருடா என்னை!”
பையன் மெதுவா தலைய நிமித்தினான். சார் டார்ச் லைட்ட அவன் முகத்துல அடிச்சார். அதை ஒரு முகம்னே சொல்ல முடியாது. கண், காது, மூக்கு எதுவுமே இல்லை. மொட்டை தலைய திருப்பி வெச்ச மாதிரி இருந்தது.
இங்க தான் கதை முடியணும்! ஆனா முடியல.
கைல இருந்த டார்ச்ச கீழ போட்டு அலறிகிட்டே ஓட ஆரமிச்சார் மனோ சார்.
ஸ்கூல பாத்து வேகமா ஓடினார். தூரத்துல ஒரு டார்ச் வெளிச்சம் தெரிஞ்சது. வாட்ச் மேனா தான் இருக்கணும். அவன் தான்.
“என்னாச்சு சார்?”
“பயங்கரம்! பயங்கரமா ஒண்ணு பாத்தேன். தோப்புல ஒரு பையன் அழுதுகிட்டு இருந்தான். நம்ம ஸ்கூல் பையனானு பாத்தேன். பாத்தா அவனுக்கு முகமே இல்லை.”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா, மூக்கு, காது, கண்ணு எதுவும் இல்லை.”
“இது மாதிரியா?”
சொல்லிடு வாட்ச் மேன் டார்ச் லைட்ட தன் முகத்துல அடிச்சான். மூக்கு, காது, கண், ஏன் புருவம் கூட இல்லை. திடீர்னு டார்ச் லைட் அணைஞ்சது.
ரயில் பயணங்களில்…..
எனக்கு எப்பவுமே ரயில் பயணங்கள் பிடிக்கும். பொதுவா இரண்டாம் வகுப்பு பெட்டில பொறவன் அந்த தடவை கொழுப்பெடுத்து போய், 2ன்ட் ஏ.சி. டிக்கட் எடுத்து இருந்தேன். ஒரு ஆசைதான் எப்படி இருக்கும் அதுல போனா அப்படின்னு. பெருசா கற்பனை பண்ணிட்டு தான் போனேன், ஆனா அங்க ஒண்ணுமேயில்ல.. எனக்கு சப்புனு ஆகிப் போச்சு.
பொதுவா நான் போகும் போது, “தம்பி எனக்கு முட்டி வலி, நீங்க அப்பர் பெர்த் எடுத்துகுறீங்களா??? பெட்டி யாருதுங்க?? சாயா, டீ”
இதெல்லாம் கேட்டு கேட்டு பழகிடுச்சா, இதெல்லாம் இல்லாதப்போ நம்ம ஏதோ தப்பு பண்ணிட்டோம்னே தோணிச்சு.
மத்தபடி நான் யார்கிட்டனாலும் உடனே பேசிடுவேன். 2ன்ட் கிளாஸ், ஸ்லீப்பர் கோச்ல எல்லாம் யாரையும் விட்டதில்ல எல்லார் கிட்டயும் பேசிடுவேன். உடன் டிக்கட்னா இன்னும் குஷிதான். அப்படி இருந்தநான், இந்த ஏ.சி ல வந்து தனியா மாட்டிகிட்டேன். ஜன்னல் பக்கம் ஒரு பெருசு உக்காந்து இருந்தாப்ல. பேசலாம்னு போகும் போதே பெரிய இங்கிலீசு புஸ்தகம் ஒண்ண திறந்து வெச்சுட்டார்.. நான் பாக்காத இங்க்லீஷா?? உடனே அண்ணா நகர்ல பேரம் பேசி 40 ரூவாய்க்கு வாங்கின டிஸ்ப்ஷன் பாயிண்ட் எடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன் உள்ளார வந்தான்.
ஆள் பாக்க நீசத்தனமாதன் இருந்ததான். என்ன என்னை விட கொஞ்சம் குள்ளம். பரவாயில்ல விடுங்க.
“ஹாய்”
“ஹாய்”
“நீங்க எங்க திருவனந்தபுரம் போறீங்களா??”
“இல்லைங்க! திருநெல்வேலில இறங்கிடுவேன், நீங்க?”
“எனக்கு திருச்சிதான். சென்னைல ராணா வால்வ்ஸ் இருக்குல்ல அங்கதான் சீனியர் இஞ்சினியரா இருக்கேன். நீங்க?”
“நான் வெட்டிதான்”
“பாத்தா அப்படி தெரியலையே??”
“உங்கள பாத்தா கூட தன் இஞ்சினியர் மாதிரி தெரியலை, நான் எதுனா கேட்டனா?”
“கோவப்படாதீங்க சார்”
“இந்த சார் மோர் எல்லாம் வேணாம், நான் பிரசன்னா”
“நான் கார்த்திகேயன், சுருக்கமா மைக்”
“எப்படியா கார்த்திகேயன சுருக்கினா மைக் வரும்”
“அது நானே எனக்கு வெச்சுகிட்ட பேர்”
நல்லா வைக்குறீங்கடா மைக், ஸ்பீக்கர்னு பேர. கொஞ்ச நேரம் அந்த புக்கையே பாத்துகிட்டு இருந்தேன். ஒரு எழவும் புரியல, வீட்ல போய் அகராதி வெச்சு படிக்கணும்.
“என்னங்க அமைதி ஆகிட்டீங்க, நான் ரொம்ப போர் அடிக்குறேனா”
“இதுக்கு நான் பதிலா உண்மை சொல்லணுமா பொய் சொல்லணுமா?”
“நீங்க பதிலே சொல்ல வேண்டாம், என் வீக்னஸ் அதான் இப்படி எல்லாம் வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கு..”
“அப்படி என்ன வீக்னஸ்?”
“வேண்டாம் விடுங்க பிரசன்னா”
“இல்ல சொல்லுங்க”
“நான் எப்பவுமே இந்த ட்ரெயின்ல தான் ஊருக்கு போவேன். திருச்சி அப்படிங்குறதால நைட் 2 மணிக்கு ஸ்டேஷன் வரும். சரியா தூங்க முடியாது. ஒரு தடவை இதே மாதிரி தான் யாரும் இல்லாத கம்பார்ட்மெண்ட்ல போய்கிட்டிருந்தேன். பயங்கரமா தூக்கம் வந்தது.. அப்படியே கண்ணசந்துட்டேன். திடீர்னு டப்னு ஒரு சத்தம். என்னடானு பார்த்தா ஜன்னல் கண்ணாடில ஒரு கை, ரெண்டு தடவை தட்டிட்டு அப்புறம் காணாம போயிடுச்சு. யார்றானு வெளிய வந்து பாத்தா…”
“பாத்தா??”
“வண்டி ஆத்து பாலத்துக்கு மேல போய்கிட்டு இருந்தது”
“இது சாத்தியமேயில்லை”
“நானும் அப்படித் தான் நினைச்சேன். ஆனா திரும்ப ஒரு முகம். முகம் முழுக்க ரத்தம் என் முன்னாடி வந்து நின்னு, தண்ணில குதிச்சது”
“என்னயா சொல்ற??”
“ஆமாங்க, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கி மாஸ்டர் கிட்ட சொன்னேன். அவர் சொன்னார் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையன் ரெண்டு வருஷம் முன்னாடி தவறி விழுந்து செத்து போனான், அதுல இருந்து மாசத்துக்கு ஒரு தடவை இப்படி கம்ப்ளைய்ண்ட் வருதுன்னு சொன்னார்.”
“இப்ப இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொன்னீங்க?”
“சும்மா ஒரு அனுபவ பகிர்தல் தான், பிரசன்னா ஒரு சின்ன ஹெல்ப். திருச்சி வரும்போது என்ன கொஞ்சம் எழுப்பி விட்டுட முடியுமா?? நீங்க புக் படிச்சுகிட்டு இருக்கீங்கல்ல, தூங்கபோறீங்கன்னா என்கிட்ட சொல்லிடுங்க சரியா?”
“சரி மைக், அனேகமா தூங்கிடுவேன்னு தான் நினைக்குறேன்”
“பரவாயில்லை, குட் நைட்”
எங்க தூங்க. ஒரு சின்ன சத்தம் பெரிய சத்தம் கேட்டாலே வயிறு என்னமோ பண்ணுது. பாத்ரூமுக்கு தனியா போகவும் பயமா இருக்கு.. என்ன பண்ண??
இந்த ஏ.சி கோச் கூட பெரிய தொல்லை. ஜன்னல் கண்ணாடி வெச்சிருப்பாங்க. வெளில என்ன இருக்குன்னே தெரியாது. எனக்கு உள்ள பயம் + கடுப்பு. என் பேய் கதை மன்னன் நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான்.
சரி வெளில போய் நிப்பம், கொஞ்சம் நல்லா இருக்கும்னு போய் வெளில நின்னா… ஆத்து பாலம். ஆத்தாடினு உள்ள வந்துட்டேன். எதுக்கு வம்பு. இவனாவது உயிரோட இருக்கான். நான் எல்லாம் அப்படி பாத்தா ஸ்பாட் அவுட். அவ்வளவு பயந்த சுபாவம்..
ஆத்து பாலம் வந்துடுச்சுல்லா.. அடுத்து திருச்சி தான், பயல எழுப்புவம்.
“மைக்! திருச்சி வரப் போகுது எந்திரிங்க”
“ஆவ்! தாங்க்ஸ்” கொட்டாவி விட்டுகிட்டே சொன்னான்.
“அது சரி, என்ன மாதிரியே எல்லாரும் எழுப்பி விடுவாங்களா என்ன? அடுத்த தடவை, மொபைல் போன்ல ரெண்டு மணிக்கு அலாரம் வெச்சுடுய்யா. பிரச்சினை இல்லாம போகும்ல”
“எனக்கு அலாரம் வைக்குறது சுத்தமா பிடிக்காது.. ஆனா ஒவ்வொரு வாட்டியும் கரெக்டா எழுந்துப்பேன்.”
“எப்படி?”
“சும்மா மனசுல வர்ற எதாவது பேய் கதை சொல்லி கூட வர்ற ஆளை பயமுறுத்திடுவேன். அப்புறம் அவன எழுப்ப சொல்லிட்டு தூங்கிடுவேன். அவன் பயத்துல தூங்காம, கடமை உணர்ச்சியோட என்ன எழுப்பி விடுவான். இதுல அவனுக்கு ஒரு டென்ஷன் நமக்கு ஒரு ஆனந்தம். வரட்டா?”
அப்படினு சொல்லி கிளம்பிட்டான்.
நான் ஙேனு முழிச்சிகிட்டிருந்தேன்.
ஜனவரி 9, 2012

